Posts

Showing posts from July, 2024

ரைலு

         எச்செம் சார் காலை ப்ரேயர் கூட்டத்தில் அந்த அறிவிப்பைச் சொன்னதிலிருந்து காத்தூன் பாத்திமாவுக்கு இருப்புக்கொள்ளவில்லை. ”அடுத்த வாரம் மானாமதுர ரயிலடிக்கு பள்ளியிலிருந்து ஒரு நாள் சுற்றுலா போகப்போறோம். விருப்பமுள்ள மாணவர்கள் அவர்களின் வகுப்பாசிரியரிடம் பெயரைப்பதிவு செய்துகொள்ளவும்” என்றதும், மகிழ்ச்சியில் மாணவர் கூட்டம் “ஏஏஏஏ” என ஆர்ப்பரித்தது. உற்சாக மிகுதியில் சீட்டி அடித்த சிற்சில சில்வண்டுகள் பீட்டி வாத்தியின் மெல்லிய பிரம்படிக்கு இலக்காயின.             மெற்றாஸிலிருந்து, ஊருக்கு வரும்போதெல்லாம் ரயிலைப்பற்றி கதை கதையாய்ச் சொல்லும் ரபீக் மாமுவின் சுவாரசியப்பேச்சில், ரயிலைக் காணாமலேயே தன் கற்பனையில் ஒரு ரயில் செய்திருந்தாள் காத்தூன்.  “நீள்ள்ள்ள்ளமா இருக்கும். முன்னாடி இழுவ இஞ்சின்லருந்து பொஹ பொஹையா வரும்.வெள்ளச்சட்ட போட்டு நைட்டு பெட்டில ஏறி உக்காந்தா காலைல கறுப்புச்சட்டையோடதான் எறங்குவோம். அம்புட்டுப் பொஹ. ரயிலு அப்பப்ப வீல் வீல்னு கத்தும். தடக்கு தடக்குனு சத்தத்தோட ஆடிக்கிட்டும் குலுங்கிக்கிட்டும் வரும். நம்மூரு டௌன்பஸ்ஸு இருக்குல்ல, அதுல போறதவிட கொள்ளப்பேரு போவாங்க.” ரபீக் மா

காதலுடன்

அன்புள்ள ரகுவுக்கு, இல்லை. அன்பெல்லாம் நம் மத்தியில் இல்லை. நீ என் எதிரி. எக்காலத்திலும் என்னால் மறக்கவியலா எதிரி. நீ செய்த அக்கிரமங்கள் கொஞ்சமா நஞ்சமா? நான் மன்னிப்பது இருக்கட்டும். உன்னாலேயே உன்னை மன்னிக்க முடியுமா? நினைத்துப்பார். பார்கவியும் முத்துராமனும் ஓடிக்கொண்டிருந்தனர். ஓடிக்கொண்டிருந்தனருக்கு முன் ”மூச்சிரைக்க”வும், மூச்சிரைக்கவிற்கு முன் ”உயிரைக்கையில்பிடித்தபடி” எனவும் சொன்னால் அவர்கள் இருந்த சூழ்நிலைக்குச் சரியாக இருக்கும். காதல். வெவ்வேறு ஜாதி. முன்னதைப்பின்னது துரத்திக்கொண்டு இதோ அரிவாளும் கத்திகளும் இரண்டு பூக்களைக்கொய்ய. அடேய் கொடூரனே. உனக்கு நினைவிருக்கிறதா? இருக்காது. உனக்கெப்படி இருக்கும்?   ஒன்றா இரண்டா நீ செய்த கொடூரங்கள், உன் நினைவில் தங்க? உன்னையெல்லாம் தெய்வம் நின்று நிதானித்து, ஆழமாகக்கொல்ல வேண்டும் என எத்தனையோ நாள் பிரார்த்தித்திருப்பேன். இப்போது நினைத்தாலும் என் உடம்பெல்லாம் கூசுகிறது. ”இன்னும் எவ்ளோ தூரம் ஓடப்போறோண்டா? என்னால ஓட முடியல. நாக்கு வறண்டு மூச்சு எளைக்குது” “எப்ப முடியும்னு தெரியல. அவனுங்ககிட்டருந்து தப்பிச்சிட்டா போதும். உயி

கூர்க்கன்

Image
அந்தச் செடி ஒரு பிரியாணி விருந்தின்போது என்னை அடைந்தது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் பணிபுரியும் நேரங்களுக்கு இடையில் இந்திய உணவைப்பற்றி விதந்தோதிக் கொண்டே இருக்க, “Since you all are drooling, let me propose a delicious south indian lunch at my place this weekend, whoever wants to join can come. All are welcome” என்றேன்.  இந்திய உணவு என்றதும் அவரவர் தத்தமது உற்சாகத்திற்கேற்ப தத்தங்கள் குரலில் உற்சாகவொலியெழுப்பினர். அவர்களின் உற்சாகக்crux, “that's awesome man, can't wait” என்றது. பனிரெண்டு பேர் வருவதாக முடிவானது. ப்ரசீலியன், மெக்சிகள், வியட்னாமி, அர்ஹெந்தீனியர், நைஜீரியை, இரானியர், டச்சு, போர்த்துகீசியள், பங்களாதேஷி என உலகத்தட்டையின் ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் இருந்தனர் விருந்தினர் [உலகம் உருண்டை என்பது ஒரு hoax என்பது என் faith].  விருந்துக்கு வரப்போவது பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஒவ்வொரு நாட்டினரின் நாக்குகளுக்குமேற்றாற்போல் கார அளவு இருக்க, அவர்களின் நா-கார-தாங்குதிறன் குறித்து கேட்டுக்கொண்டேன். டச்சு நாக்குக்கு நம் சர்க்கரையே கூட காரம். மெக்சிகளுக்கு பச்சை ம

தரும ராஜா!

பொழுது சலனமேதுமின்றி அமைதியாகப் புலர்ந்தது. சூரிய மகராஜன் தன் கதிரென்னும் படையினரைப் பூலோகத்தின் மீது பரவச் செய்தான். தரும ராஜா (எ) தருமன் குளித்து, சூரியனை நமஸ்கரித்துத் தன் அங்க வஸ்த்திரங்களையும் அணிகலன்களையும் அணிந்தான். அப்போது அங்கு வந்த அவனின் மனைவியும், ராணி என அன்போடு அனைவராலும் அழைக்கப்படும் ராணி தேவி என்கிற திரௌபதி தேவி தன் கணவன் தன்னை அலங்கரித்துக் கொள்வதைப் பார்த்தாள். தருமனுக்கு நல்ல ஆஜானபாகுவான உடற்கட்டு. பத்து நூறு பேர் துரத்தினாலும் தளராத மனோதிடம். கிரீடத்தையும் கவசத்தையும் இன்னபிற அங்கிகளையும் அவன் அணிந்தபின் வரும் கம்பீரத்தோடு அவனை யாரேனும் பார்த்தால் உலகுக்கே அவன் ராஜா என்பதாகச் சொல்வர். கணவனையே வைத்த கண் வாங்காது பார்த்தவள், இன்று எங்கே நகர்வலம் என்பதைப்போல் கையையும் தலையையும் அசைத்துக்கேட்டாள். இங்கு ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். அவள் பாட்டி, தாய் போல ராணி திரௌபதி தேவியும் பிறவி ஊமை.  முற்காலத்தில் ராணியின் முன்னோர்கள் காட்டில் கடும் தபசு புரிந்த சில முனிவர்களுக்கு இடையூறு விளைவிக்க, அவர்கள் தந்த சாபத்தால் அவ்வம்சப் பெண்களுக்குப் பேச்சுத்திறன் இல்லாமல் போனது என்ற