பன்னீரில்

ஒரு கதைய எப்பிடி வேணாலும் ஆரமிக்கலாம். இந்தக் கதைய… 1. அப்போது மாமாவுக்கு கல்யாணமாகிற வயசு, எனக்கு, ‘ஸ்கூலுக்கு ப்போமாட்டேன்’ என டவுசர் மாட்டாமல் அடம் பிடிக்கிற வயசு. 2. வழக்கம்போல் அன்றும் மாமா வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். நான் படுக்கையில் அரைக் கண் விழித்தவாறு சீசனுக்கு வாங்கிய ஒருபா கோழிக்குஞ்சை நெஞ்சில் அணைத்தபடி படுத்திருந்தேன். இப்பிடி பல்வகைகளில் ஆரம்பிக்கலாம். ஆகவே கீழ்க்கண்டவாறு… ஒருத்தரோட பரிட்சயமோ ஞாபகமோ முதல் முதல்ல எப்படி ஆரம்பிச்சதுன்னு கொஞ்சம் ஆறமர உக்காந்து யோசிச்சதுண்டா? உசேன் (கூப்பிட: ஒசே(ன்)) மாமான்னதும் சட்டுனு தோணுற விசயம் என்னன்னு யோசிச்சா ரெண்டே ரெண்டுதான் நெனவு வருது. அ, ஃபேரன்லவ்லி கிரீம் வாசன ஆ. பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல பாட்டு. இப்ப க்லோ&லவ்லினு பொலிடிகல் கரக்ட்னஸுக்காக பேரு மாத்திட்டாலும் அடுத்த ஒரு ஜெனரேசனுக்கு அது ஃபேரன்லவ்லிதான். If I had a dollar everytimeனு சொல்லுவாங்க, அந்த மாதிரி ஒவ்வொருக்கா ஃபேரன்லவ்லி வாங்கறப்பவும் மாமாவுக்கு ஒரு டாலர் கிட்டியிருந்தா இன்னேரம் ஒரு சங்கர் படத்துல ரஜினி விஜய் ரெண்டு பேரையும் சேத்து நடிக்க வெக்கிறளவுக்கு காசு கைல இருந்துருக்கும். மாமாவ (தாய் மாம்) நெனைக்கறப்பலாம் அது காலைல நாஷ்டா சாப்டுட்டு வேலைக்கி கெளம்பறப்ப, ஆரஞ்சு கலர் மரச்சட்டகம் வச்ச கண்ணாடி முன்னாடி நிண்டு மூஞ்சில அங்கங்க அம்ம வார்த்தாப்ல ஃபேரன்லவ்லிய பொட்டு வச்சு அப்பறம் தேய்தேய்னு மொகத்த தேய்க்கிறதுதான் ஞாபகம் வருது. அந்தக்காலத்துல, அந்தக்ரீம தேச்சா வெள்ளையாயிரலாம்னு ஒரு நம்பிக்க பல்லூர்கள்ல உலவிட்டிருந்துச்சு. அதுல ஓரூர் எங்க ஊராவும் இருந்ததாலயும், மாமாவுக்கு காப்பிக்கொட்ட நிறத் தோலுங்கறதாலயும், கருப்புனா கம்மினு தாழ்வு மனப்பான்மை இருந்ததாலயும் (அப்பலாம் கருப்புத்தான் எனக்குப்புடிச்ச கலருன்னு பணியாரக்குழி தொப்புளக் காட்டி மாளவிகா ஆடாத காலம்) மாமா தினமும் காலை ரவ்வுனு ரெண்டு வேளையும் கிரீம் பூசும். காலைல வேலைக்குப் போறப்ப பூசும்னு சொன்னதால அத ஆபிசர் ரேஞ்சுக்கு மனத்துல கற்பன பண்ணிருந்தா அழிச்சிருறது நல்லது. மாமா பள்ளிக்கொடம் முடிக்கலங்குறது நிச்சயமாத் தெரியும். ஆனா அங்க போச்சாங்குறதே பெரிய மர்மம். எதாச்சும் ஒரு மங்குன கலர் சட்ட, கைலி (பெரும்பாலும் நீலக்கலர் கட்டம்போட்ட). இதுதான் மாமாவோட கலர் ட்ரெஸ் யூனிஃபார்ம். டீக்கா இருக்கணும்னா அன்னக்கி வெள்ளக்கைலி உடுத்தும். மாமா செருப்புக்கடையில வேல பாத்துது. வாரம் முழுமைக்கும் அங்கதான் வேல. வீக்கெண்ட் லீவுலாம் இல்ல. காலைல சாவிய கொண்டுட்டு கட தொறக்கப்போகும். மதியம் ஓனருக்கு சாப்பாடு வாங்க அவர் வீட்டுக்குப் போறப்ப வீட்டுக்கு வந்து அதுக்கும் சாப்பாடு வாங்கிக்கிடும். மறுக்கா ரவைக்கி கடையடைச்சுட்டு சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துரும். பிறகு குளியல், ஃபேரன்லவ்லி அப்பறம் எதாச்சும் பாட்டு ஓடும், பானசானிக் டேப்ரிகார்டர்ல. சாம்பாருக்காக தொவரம் பருப்ப தண்ணில அலசுனா அந்த மொதோத் தண்ணி ஒரு கலருக்கு மாறும், அந்த டேப்ரிகார்டும் அந்த கலர்லதான் இருக்கும். (பழுப்பு?) சாம்பாருக்குன்னு இல்ல, பொதுவா எதுக்கு அலசுனாலும் தொவரம் பருப்புத்தண்ணில அந்தக் கலர் வரும். [இது டேட்டா அக்யூரசிக்காக சொல்லப்படுகிறது.] டேப்ரிகாடுல ஒரு பாதி பக்கம் கேசட் போட வாய். மண்டைல சுச்சி அமுக்குனா மொதலயாட்டம் மெதுவா வாய் தொறக்கும். மறுபக்கம் ஒத்தப்பெரிய மொலை மாதிரி பாட்டு படிக்கிற ஸ்பீக்கர், கருப்பா வட்டமாருக்கும். அந்த பெரிய வட்டத்துக்குள்ள எட்டணா நாலணா சைசுக்கு சுத்திலும் உள்வட்டம். வாய்க்குள்ள கேசட்டப் போட்டு சுச்சிய அமுக்குனதும் பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்லச் பாட்டு ஓட ஆரமிக்கும்.பாட்டு கேக்கறப்ப தவிர மிச்ச நேரத்துல டேப்ரிகாட் அல்மாருக்குள்ள மொதோ சிலாப்புக்கு போயிரும். மாமா ஒரு பெரிய நுணுக்கமான இசை ரசிகர். பாட்டுக்கள துல்லியமா தேர்ந்தெடுத்து அதுல தொகையறா, பல்லவி, இடையிசை சரணம்னு அக்கக்கா பிரிச்சு சிலாகிக்கும்னுலாம் சொன்னா பொய்யி. ஆனா எங்க குடும்பத்துல, இத்தாண்டா மாப்ள இசைனு சொல்லாம சொல்லி இசைய அறிமுகப்படுத்துனதுன்னா அது ஒசேம்மாமாதான். அதும்போக, இன்னொரு விசயம் சொல்லலாம், ஆனா ஏற்கனவே பாரா பெருசாயிருச்சு, அட்டென்சன் ஸ்பேன் கஸ்டம், அதனால அது அடுத்த வரியில இருக்கு. காலைல கெளம்பறப்பவும் நைட்டு தூங்கப்போறப்பவும் அதுக்கு பாட்டு ஓடணும். இதுக்குன்னே டீடிகே கேசட்டுகளா வாங்கி பாட்டு பதிஞ்சு வச்சிருக்கும். பாட்டுக்கடைல “புதுக்கேஸ்ட்டு வந்துருக்கா?”ன்னு கேக்கும். அது என்னவோ, புது பாட்டு, படங்கள கேஸ்ட்டுன்னுதான் சொல்லிக் கேக்கும். நல்லா நெனவு தெரியறதுக்கு முந்தி கொஞ்சமா நெனவு தெரிஞ்சிருக்கும்ல? ‘தீயில கை வச்சா சுடும்’, ‘கோழிக்குஞ்ச மிதிச்சா செத்துரும்’, இப்பிடி அடிப்படை இயற்பியல் உயிரியல் விதிகள் தெரிஞ்ச ஒரு நெனவு-அறி-பருவமிருக்கும்ல? ஜட்டியின்றி கூச்சமின்றி சுத்த முடியிற அந்த கடேசிக்கட்ட பருவம். அந்தப்பருவத்துலதான் மொதல் மொதலா பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல கேட்டது ஞாபகமிருக்கு. மாமாதான் அந்தப்பாட்ட காலைல கெளம்பறப்ப போட்டுட்டே இருக்கும். அப்ப இருந்த அந்த வயசோ அந்த காதோ இளையராஜாவுக்கு வழக்கப்பட்டதில்ல, அடடே இது ராஜாட்டருந்து கொஞ்சம் புதூ ரகப்பாட்டா இருக்கேன்னு கூர்ந்து கவனிக்க. அடிக்கடி வீட்டுல ஓடிட்டிருந்தது, அதனால மனசுல பதிஞ்சிருச்சு. மாமாவும் பாட்டுக்காக அத கேட்டுச்சா இல்ல நதியா வைரலானதால ரசிகனாகி கேட்டுச்சானு தெரியல. ஆனா தினமும் கேட்டுச்சு. அதுக்கப்பறம் அந்தப் பாட்டோட தொடர்பு அந்து போனாலும் எப்ப எங்க கேட்டாலும் ஒரு மில்லிநொடியில மனசு அந்தக்காலத்துக் காலைலக்கிப் போயிரும். செருப்புக்கடைக்கி போறது தவிர சில நாயித்துக்கெழமைகள்ல காலங்காத்தால கொளத்துக்கு தாமர பறிக்கவோ மீன் புடிக்கவோ கெளம்பிரும். கொஞ்சம் பெரிய அன்னக்கூட அளவுல ஒரு அலுமினிய பரிசல். அத பரிசல்னு சொல்லலாமானு கூட தெரியல. ஒருத்தர் மட்டுந்தான் ஒக்கார முடியும். ஒரு கோணிச்சாக்க எடுத்துக்கிடும். விடியமுன்ன போயிரும். காலைல வேல முடிச்சு வீட்டுக்கு நீஸ்தண்ணி குடிக்க வந்துரும். அந்த படக எங்க வாடகைக்கி வாங்கும், அதுல போயி என்ன புடிச்சு, எங்க விக்கும் எதுவும் தெரியாது. ஆனா இப்பிடி துணை யாவாரங்கள் ஏகப்பட்டது பண்ணிட்டே இருக்கும். வீட்டுலையே கூண்டு கட்டி கோழி, வாத்து, முயல் வளக்கும். வளந்ததும் வித்து அடுத்த செட்டு வாங்கி வளக்கும். இப்பிடி எது எதயோ வித்து காசாக்கிரும். [இப்பிடித்தான் கோழிக்குஞ்ச மிதிச்சா செத்துரும்னு அனுபவப் பாடம் கத்துக்கிட்டது. சீசனுக்கு வாங்குன ஒர்ருவா கோழிக்குஞ்ச ஒரு தடவ…] மாமாவோட யாவார தெறம ரொம்ப பேமஸ். “விக்கத்தெரிஞ்சவனுக்கு மூலதனம், அவங்கிட்ட இருக்க பணமோ விக்கிற பொருளோ இல்ல.” மத்த சொந்தக்காரவங்க, மாமனுக கேலியாக்கூட சொல்லுவாங்க, ஒசேங்கிட்ட எந்த வேல சொன்னாலும் அதுல எதாச்சும் கமிசனடிக்காம செய்ய மாட்டான்னு. கீபோடுல எல்லா கீயும் ஒரே மாதிரி இருந்தாலும் ஒவ்வொன்ன அமுக்கறப்ப வெவ்வேற எழுத்து வராப்லதான் மாமெங்களும். ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு டைப்பு. ஒசேம் மாமாதான் இருக்கறதுலயே கொஞ்சம் பூசுனாப்ல இருப்பாப்டி. முகமும் உருண்டையா உர்ளகெளங்கு மாதிரி இருக்கும். குரல் கம்பீரமானதுனும் சொல்ல முடியாது, குழைவானதுனும். செருப்புக்கடைலயும் விக்கிற எடங்கள்லயும் பேசிப்பேசிப் பழகினதால குரல் ஒரு மாதிரி பிசிறில்லாம இருக்கும். பேச்சுல வேலூர்நார்த்தாற்காட் வாடையடிக்கும். ஆனாலும் ஊர் சிலாங்கும் போயிருக்காது – "எங்குட்டும் போனாலும் போ, இங்ய வந்து சத்தாய்க்காத" – அது பேசுறத எந்த தமிழ்னும் வகைப்படுத்த முடியாது. இப்ப இருக்கறாப்ல, பில்லுல போட்டுருக்க காச மறுபேச்சு பேசாம கார்ட தேய்ச்சு குடுக்குற வழக்கம்லாம் நதியா பேமசாருந்த காலத்துல இல்ல. அப்ப எல்லா யாவாரமும் பேரந்தான். பேரம் பேசாம வாங்குனா, தான் ஏமாந்துட்டதா பொதுமக்கள் நம்பின காலம். யாவாரிகளும் வெல கொறச்சுக்குடுக்கறதுக்காகவே எஸ்டாவா வெல வச்சு வித்த காலம். பாட்டா செருப்பு ஜோடிய, கைதட்டுறாப்ல ஒன்னுக்கொன்ன பளார் பளார்னு அடிச்சு ‘நல்ல கோல்ட்டி. வெயில், கல்லு முள்ளு எல்லாம் தாங்கும்’னு விக்கிறத பாக்கவே எதோ பிலார்மனி கண்டக்டுநர் போல இருக்கும். மதியம் சாப்பாடு கொண்டு போகையில எப்பவாச்சும் என்னயும் கூட கூட்டிட்டுப்போகும். ஸ்கூலுக்குப் போவாம அடம்புடிச்சு வெளுத்துருப்பாங்க. வாங்குன மாத்து வலி பொறுக்காம அழுதுட்டு இருக்குற நாட்கள்ல ஒரு சேஞ்சிக்காக இவனும் வரட்டும்னு கூட்டிட்டுப் போவும். டேப்புவாலில ரசம், சோறு. கடிச்சுக்க கடைல வட வாங்கிக்க சொல்லுவாங்க. ஒர்ருவாய்க்கி நாலு ஆமவட கெடைக்கும். ஒருக்கா சப்புக்கொட்டி வாங்கி வாங்கித் தின்னது இன்னமும் நாக்குமெமரில இருக்கு. ரசசோத்துக்கு மசால்வட கிரேட் காம்போ. மாமா இப்பிடி மம்மேனியா ஒழைக்கிதே, பெரிய பணக்காரனாகி இருக்குமான்னா அதான் இல்ல. அவனவென் ஒத்த ஆம்பளப் புள்ளைய வச்சுக்கிட்டே தலையெடுத்துர்றாங்ய, இங்ய ஒன்னுக்கு ஏழு பேரு இருந்தும் இன்னமும் நிண்டுநிமுற முடியலியேன்னு அடிக்கடி மாமாவின் அம்மாவும் பெத்தம்மாவுமான பாத்துக்கனி சொல்லிச் சொல்லிக் காட்டுவாங்க. ஆனா இவனுக இன்னமும் குண்டி காய காரணமில்லாம இல்ல. வட்டி. பெருவட்டி. தாத்தன், குடும்பத் தலைவருக்கு ஓட்டக்கையி. ரெண்டு கையிம் இறுக்கிச் சேத்துப் புடிச்சாலும் அவர் கைலருந்து ஒழுகிட்டே இருக்கும். அத்தாப்பெரிய ஓட்ட. போதாக்கொறைக்கி எது ஒன்னுன்னாலும் ஒடனே சேட்டுட்ட வட்டிக்கி வாங்குறது. புள்ளைகளுக்கு ஜொரமா வட்டிக்கி வாங்கு. யாரும் புள்ள பெக்குறாங்களா, வட்டிக்கி வாங்கு. கல்யாணம் சீரா, வட்டிக்கி வாங்கு. கத்தம் பாத்தியாவா, வட்டிக்கி வாங்கு. ஒரு கட்டத்துல இவனுக ஒழச்சுக் கொட்றதே சேட்டுக்கு வட்டி கட்டவும், உயிர் வாழறதே அடுத்து வட்டிக்கி வாங்கவுங்கறாப்ல ஆகிருச்சு. படக்குனு வாங்கிருவானுக. அப்பறம் மாங்கு மாங்குனு உக்காந்து கட்டிட்டிருப்பானுக. இவனுக வாங்கி வாங்கியே சேட்டு பெரிய வீடா கட்டிட்டான். ஆரம்பத்துல மரக்கதவுல பெரிய இரும்பு பார் போட்டு கட சாத்தினவன், கடைக்கும் கடைக்கி மேல இருந்த அவன் வீட்டுக்கும் இரும்புக் கேட்டு போடுறளவு வசதியாய்ட்டான். அந்த ஊருல அதிக காசு இருந்தது பேங்கு, அதுக்கடுத்து அந்த மார்வாடிசேட்டுட்டதான். தாத்தங்கிட்டருந்து மாமாவுக்கும் இப்பிடி எதுக்கெடுத்தாலும் வட்டிக்கி வாங்குற பழக்கம் ஒட்டிகிச்சு. அப்பத்தான் மாமாவுக்கு கல்யாணமாச்சு. பஸ்ஸு புடிச்சு போற தூரத்துல ஒரு ஊருல பொண்ணு. எல்லாரும் போயி கல்யாணம் பண்ணி மாமிய கூட்டிட்டு வந்தாங்க. மாமாவோட ரூம்ல ஜரிகை டெகரேசன்லாம் பண்ணி ரூமே கமகமனு ஆகிருச்சு, புதுசா போட்ட பவுடரா இல்ல செண்ட்டானு தெரியல. அப்ப வேற ஒரு புதுக்கேஸ்ட்டு வாங்கிருச்சு மாமா. அந்தக் கேசட்டுல அடிக்கடி கேட்ட பாட்டு ஆத்தீ இது வாத்துக்கூட்டம்னு ஒரு பாட்டு, அப்பறம் சந்தன மார்பிலேனு ஒரு பாட்டு. இது ரெண்டுதான் அதிகம் ஓடின ஞாபகமிருக்கு. என்னதான் ரெண்டொருமூனு புள்ளைக பெத்துருந்தாலும் சந்தன மார்பிலே போட்டு காஜித்தனம் பண்றளவுக்கு மாமாவுக்கு வெவரமில்லங்குறதால இத மாமாவோட இசைவேட்கைல மட்டுமே சேக்கலாம். அதுக்கப்பறம் ஒரு நள்ளிரவு எதோ குடும்பத்தகராறு நடக்க, பீங்காந்தட்ட தரைல போட்டாப்ல ஒவ்வொரு ஜோடியும் ஒவ்வொரு லெக்குல செதறுச்சு. அதுவரைக்கிம் கிட்டத்தட்ட ஒரு டெசன் ஆட்களும் ஏழெட்டு குஞ்சுகுளுவானுகளும் எப்பிடி அந்த வீட்டுல இருந்தாங்கன்றதே இப்ப யோசிச்சுப் பாத்தாலும் ஆச்சரியமாருக்கு. இத்தனைக்கிம் அத்தனபேத்துக்கும் இருந்தது ஒத்த கக்கூசுதான். அத ஒட்டுனாப்ல கும்மிருட்டு பாத்ரூம்பு. மாமா மாமியோட வேற ஒரு ஊருக்குப் போயி வாடகைக்கி கட புடிச்சு தொழில் பண்ணதா தகவலா தெரிய வந்துச்சு. – காதல் ரோஜாவே – ஹேல்பாப் வால் நட்சத்திரம் – க்ரிஷ்ணா நதி நீர் இணைப்பு – கொம்பு முளைத்த பேய்க்குழந்தை – புள்ளையார் பால் குடி அடுத்த சில வருசம் இப்பிடி கலவையான செய்திகளோட போச்சு. இதுக்கு நடுவுல மாமாவோட பொண்ணுக வயசுக்கு வந்த செய்தியும் மகனுக ஒழுங்கா ஸ்கூலுக்கு போறதில்லனும் காதுக்கு எட்டும். கட யாவாரம் தோதா நடந்தாலும் வாய்க்கும் வயித்துக்கும் தான் போவுது, இன்னம் வாடக கட, வாடக வீட்டுலதான் இருக்குறதாவும் மாமாவுக்கு அப்பறம் கட போட்டவனுகலாம் சொந்த வீடு கடைனு போயிட்டதாவும் பெத்தம்மா சொல்லிச் சொல்லி மாயும். ஆனா வசதி இல்லாட்டியும் ஊருக்குள்ள நல்ல தொடர்பு, பேரு வாங்கி வச்சிருந்துச்சு மாமா. எல்லாரும் பாயிபாயின்னு உரிமையா பழகிட்டிருந்துருக்காங்க. தொழில் போக அந்த ஊர்லயும் மாமா ஒரு மார்வாடி சேட்டுக்கு வட்டிக்கி வேல பாத்துட்டு இருந்துருக்கு. ஜாத்தர, தீபாவளி பொங்கலுக்கு சரக்குப் போட வட்டிக்கி வாங்குறது, அத அடுத்த பண்டிகைக்கி சரக்குப் போட வட்டி வாங்கற வரைக்கிம் கட்டி முடிக்கிறது. இப்பிடியே போயிட்டிருந்துருக்கு. ரொம்ப நாணயஸ்தனாவும், சூதுவாதுபொகைகுடிகுட்டினு எதும் இல்லாததாலயும் ஊர்ல பொதுப்பொறுப்புகளும் மாமாவுக்கு வந்துருக்கு. யேபாரம்னு வண்ட்டா மட்டும் பாய் கறாராகிடுவாரு, பேசி சமாளிக்க முடியாது. ஆனா மத்தபடி நல்ல மனுசன்னு பேரு வாங்கிருந்துருக்கு. அக்கம்பக்கத்து வீட்டுகள்லயும் ஒன்னுமண்ணா பழகிருக்காங்க குடும்பமே. மாமாவுக்கு மேல மாமி அப்பிராணி. அவங்க இருந்த லைன் வீட்டுல யாரும் வெளியூர் போனா அவங்க வீட்டுப்புள்ளைகள இவங்க வீட்டுல நாள்கணக்குல விட்டுட்டுப் போறளவு பழக்கம் வளந்துருக்கு. மாமா அதோட மொதப் பொண்ணுக்கு கல்யாணம் நல்லா க்ரேண்டா செய்யணும்னு பழுக்க கடன் வாங்கிருக்கு. சேட்டுட்டனு இல்லாம கட, வீடு அக்கம் பக்கத்துல இருக்கவங்க, யாவாரிகனு இன்னம் ஏகப்பட்டவங்கட்ட. எப்பயும் வாங்குனா அடச்சிருவாரே, அதுவும் கல்யாணத்துக்குனு தான கேக்குறாருனு கேட்டவங்களும் குடுத்துருக்காங்க. ஜேஜேனு நடத்திக்காட்டுறேன் பாருன்னு ஆசையிலயோ இல்ல கெத்து காட்டணும்னோ அது இருந்த சின்ன ஊர உட்டுட்டு மெட்ராஸ்ல ஊர் ஒலகத்தையெல்லாம் கூட்டி கல்யாணம் வச்சுச்சு. கல்யாணத்துக்கும் ஊர்ப்பட்ட சனம். ஒவ்வொரு ஊருக்கும் நேர்ல தேடித்தேடிப்போயி பத்திரிக்க வச்சு கல்யாணத்துக்கு எல்லாரும் குடும்பத்தோட வந்தாலே வரணும்னு கண்டிசனா சொல்லிட்டு வந்துருக்கு. சொந்தக்காரங்க, தோஸ்த்துக, யாவாரிகனு கள கட்டிருச்சு கல்யாண சத்தரமே. மாப்புளைக்கி போட்ட அதே ரத்தச்செகப்புல சிலுசிலுனு மாமாவும் சட்ட போட்டுருந்ததுதான் எங்கயும் ஒரே பேச்சா இருந்துருக்கு. அடுத்த நாலஞ்சு கல்யாணங்கள்ல இந்தக் கல்யாணப் பேச்சுதான் இருந்துச்சு. அந்தளவுக்கு பேமசாச்சு. எங்கெங்க எத்தன லெச்சம் கடன் வாங்குச்சுன்னு தெரியல. அடுத்து ஆட்சி மாறுனதும் ஜிஎஸ்டி அது இதுனு மாத்தினதுல எல்லாத் தொழிலும் அடிபட்டுப்போச்சு. இதோடதும். வாங்குன கடனுக்கு வட்டியும் எகிறிருக்கு. குடுத்த எல்லாவனும் களுத்த நெறிக்கவே, என்ன செய்யிறதுனு தெரியாம கையப் பெசஞ்சு சொந்தக்காரனுக ஒவ்வொருத்தங்கிட்டயும் கைமாத்து கேட்டுருக்கு. ஏற்கனவே கல்யாணத்துக்கு இது பண்ணுன ஊதாரித்தனத்த பாத்து காண்டுல இருந்தவனுக இதான் சாக்குன்னு இருந்த மொத்த வன்மத்தையும் எறக்கிட்டானுக. கடைய இன்னொருத்தனுக்கு கைமாத்தி விட்டு கொஞ்சம் கடன அடச்சிது. ஆனாலும் கீரைய கிள்ளிப்போட்டாப்லதான் அந்த காசு காணுச்சு. வெளிநாட்டுக்குப் போனாதான் இனி இத அடைக்க முடியும்னு காலம் நெசமாவே போன காலத்துல சவூதிக்கி போறேன்னு மிச்சமிருந்த கொஞ்ச நகைய அடகு வச்சு (கல்யாணம் பண்ணிக்குடுத்த பொண்ணோடது, மாமியாருக்குத் தெரியாம வாங்கிருக்காப்டி), மீதி இருந்த கடைச் சரக்க வித்துட்டு வெளிநாட்டுக்கு கெளம்ப முடிவு செஞ்சுச்சு. அந்த ஊர்ல செலவு கட்டுபடி ஆவலன்னு குடும்பத்த கொண்டு போயி சொந்த கிராமத்துல விட்டுட்டு இது கெளம்பலாம்னு இருந்துச்சு. கடன் குடுத்தவங்கட்டலாம் இப்பிடி இப்பிடி பண்ணப்போறேன், வெளிநாட்டுக்குப் போனதும் ஒங்க காச கொஞ்சங்கொஞ்சமா அடச்சிர்ரேன்னு சத்தியம் பண்ணிக் குடுத்துருக்கு. க்லைமாக்ஸ்: கிட்டத்தட்ட இருவது வருசத்துக்கு மேல ஒண்ணுமண்ணா இருந்த ஊரு, இப்பிடி தனியா விட்டுட்டுப் பிரியணுமா, நீங்க போயி சம்பாதிக்கிறீங்க சரி, அண்ணியவும் புள்ளைகளையும் எதுக்கு காலி பண்ணி கூட்டிட்டுப் போறீங்க, அவங்கள பிரிஞ்சு எங்கனால இருக்க முடியாதுன்னு அக்கம்பக்கத்து வீட்டுலலாம் ஒரே அழுகையாம். நீங்க போங்க, அக்கா, புள்ளைகள நாங்க பாத்துக்கறோம்னு ஒரே லாலாலா பாடிருக்கானுகளாம். வீட்டுல ஒரே கேகேகேனு கூட்டமும் அழுவையுமா இருந்துச்சு, பூராப்பயலும் வந்து எங்க கடனுக்காக எதுக்கு பாய் இத்தன வர்ஷம் குடும்பமா இருக்கறத பிரிக்கறீங்கனு எல்லாவனும் அழுவாத கொறைனு பெத்தம்மா சொல்லிட்டிருந்துச்சு. மாமாவும் மாமி, புள்ளைகள அக்கம்பக்கத்து லைன் வீட்டு தயவுல விட்டுட்டு வெளிநாட்டுக்குப் போயிருச்சு. அங்க ஒரு பெட்ரோல் பல்க்குல வேல பாத்து கொஞ்சங்கொஞ்சமா காசனுப்பிட்டு இருக்கறதா கடேசியா சில வருசம் முன்ன கேட்ட சேதி. நாம எதஎதயோ வாழ்க்கைனு நெனச்சு வாழ்ந்துட்டிருக்கோம். ஆனா எளிய மனுசங்களோட அன்பு பாசம் நம்பிக்கை இதுலாம் எத்தன கோடி பணத்துனாலயும் வாங்கிட முடியாது. ஆமாதானே? அத்தன அருண் மாதேஸ்வரன் படங்களுக்கு மத்தியிலும் ஒரு விக்ரமன் படம் பூக்கத்தானே செய்கிறது? க்லைமாக்ஸ் நல்லாருந்துச்சா? இப்பிடி கடைய காலிபண்ணி வித்துட்டு, குடும்பத்தையும் ஊர்ல விடப்போறேன்னு கடங்குடுத்தவங்கட்ட சொன்னதும், காச வாங்கிட்டு ஊரகாலி பண்ணிட்டு ஓடப்பாக்குறியான்னு எல்லாவனும் வீட்டுக்கு வந்து பிரச்சன பண்ணதாகவும், மொத்த காசையும் அடச்சப்புறம்தான் குடும்பத்த கூட்டிட்டுப் போக விடுவோம்னு சொல்லி மாமா குடும்பத்தையே ஊரரஸ்ட் பண்ணி வச்சு, குடும்பத்த பணயமா எடுத்துக்கிட்டுதான் மாமாவ ப்லேன் ஏறவே விட்டானுகனு மற்றொரு க்லைமாக்ஸ் கதையும் உலவி வருது.

Comments

Post a Comment

Pass a comment here...