ரைலு

         எச்செம் சார் காலை ப்ரேயர் கூட்டத்தில் அந்த அறிவிப்பைச் சொன்னதிலிருந்து காத்தூன் பாத்திமாவுக்கு இருப்புக்கொள்ளவில்லை. ”அடுத்த வாரம் மானாமதுர ரயிலடிக்கு பள்ளியிலிருந்து ஒரு நாள் சுற்றுலா போகப்போறோம். விருப்பமுள்ள மாணவர்கள் அவர்களின் வகுப்பாசிரியரிடம் பெயரைப்பதிவு செய்துகொள்ளவும்” என்றதும், மகிழ்ச்சியில் மாணவர் கூட்டம் “ஏஏஏஏ” என ஆர்ப்பரித்தது. உற்சாக மிகுதியில் சீட்டி அடித்த சிற்சில சில்வண்டுகள் பீட்டி வாத்தியின் மெல்லிய பிரம்படிக்கு இலக்காயின.

            மெற்றாஸிலிருந்து, ஊருக்கு வரும்போதெல்லாம் ரயிலைப்பற்றி கதை கதையாய்ச் சொல்லும் ரபீக் மாமுவின் சுவாரசியப்பேச்சில், ரயிலைக் காணாமலேயே தன் கற்பனையில் ஒரு ரயில் செய்திருந்தாள் காத்தூன். 

“நீள்ள்ள்ள்ளமா இருக்கும். முன்னாடி இழுவ இஞ்சின்லருந்து பொஹ பொஹையா வரும்.வெள்ளச்சட்ட போட்டு நைட்டு பெட்டில ஏறி உக்காந்தா காலைல கறுப்புச்சட்டையோடதான் எறங்குவோம். அம்புட்டுப் பொஹ. ரயிலு அப்பப்ப வீல் வீல்னு கத்தும். தடக்கு தடக்குனு சத்தத்தோட ஆடிக்கிட்டும் குலுங்கிக்கிட்டும் வரும். நம்மூரு டௌன்பஸ்ஸு இருக்குல்ல, அதுல போறதவிட கொள்ளப்பேரு போவாங்க.” ரபீக் மாமு சொல்லச் சொல்ல காத்தூனின் கற்பனை ரயில் வளரும், ஒளிரும், ஒலிரும், அதிரும். 

            காத்தூனின் ரயில் கொஞ்சம் விந்தையானது. அவ்வூர் டவுன் பஸ்ஸின் நிறம்தான் அதற்கும். (ரயிலின் நிறம் குறித்து ரபீக் மாமு எதுவும் சொல்லாததால்). ரயிலின் தலையில் ஒலியெழுப்புவதற்குப் பக்கத்து ஊர் மில்லில் உள்ளது போன்ற சங்கு பொருத்தப்பட்டிருக்கும். ரயில் முழுவதிலும் அவளின் உறவினர்களும், தோழிகளான மரியம், கச்சா,  அங்குமாரி ஆகியோரே இருப்பர். ரயிலின் மேல் புகைக்கூண்டும் உண்டு. ரயிலின் சக்கரம் மாட்டு வண்டியின் பெரிய சக்கரம் போல் இருக்கும் (ரயிலுக்கு பெருசா இரும்பு ரோதையிருக்கும் என ரபீக் ஒருமுறை சொன்னதிலிருந்து). இப்படி ஒவ்வொரு கதையாய்க் கேட்கையிலும் அவளின் ரயிலின் தோற்றமும் அவ்வப்போது மாறிக்கொண்டே வரும். 

தற்போது காத்தூனுக்கு உள்ள மிகப்பெரிய சவால், அவளின் அத்தாவிடம் எப்படி ரயிலடியைக் காண அனுமதி வாங்குவது.

காத்தூனின் அத்தா கோபக்காரர். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு எனும் பழமொழிக்கு ராம்னாட் ஜில்லாவிலேயே தன்னிகரில்லா ஒரே எடுத்துக்காட்டு. எதுவும் பிரச்சினை என்றாலோ, கோபம் வந்தாலோ முதலில் யாரையேனும் அடித்து நொறுக்கிவிட்டுத்தான் ”இப்ப இங்க என்ன பிரச்சினை?” என்ற யோசனையே அவருக்கு வரும். வெளியில் புலி என்றால் வீட்டில் அடிபட்ட புலி. வெளிப்பிரச்சினைக்கு ஊர்ப்பெரியவர் யாரேனும் இவரைக் கடிந்து கொண்டால் அந்தக்கோபம் மொத்தத்தையும், வீட்டில் உள்ள செம்பு, பானை, குவளையிலிருந்து, அம்மா, அண்ணன் வரை அடித்து நெளித்து இறக்கி வைப்பார்.

வீட்டில் ஒரே ஒரு பொருள் கூட அதை வாங்கியபோது இருந்த வடிவத்தில் இருக்காது. உலோக வஸ்துக்களாய் இருந்தால் நசுங்கிய நிலையிலும், மர வஸ்துக்கள் உடைந்த - பிளந்த நிலையிலும், அம்மா மட்டும் எத்தனையோ தழும்புகள் இருந்தும் இன்னும் சிரித்த நிலையிலும் காணப்படும் ஓர் அபூர்வ வீடு காத்தூனுடையது. நினைவு தெரிந்து, காத்தூனை ஒரு முறை எதற்கோ முதுகிலும் முகத்திலும் அத்தா விளாசி எடுக்க, அத்தம்மா இடையில் புகுந்து, “அடுத்தவீட்டுக்கு போற பொட்டப்புள்ளைய மொடமாக்கி வெச்சா யாருடா பாக்குறது?” என்று தடுத்திராவிட்டால் இன்று காத்தூன் உயிரோடிருந்திருப்பாளா என்பது சந்தேகமே. இப்பேர்பட்ட அத்தாவிடம் எப்படி டூருக்கு அனுமதி வாங்க? அதைவிட டூருக்குப்பணமாய் ரெண்ருவ்வாய் எப்படி வாங்க? 

ஒருமுறை நோட்டுப் புஸ்தகம் வாங்க அண்ணன் காசு கேட்டதற்கு அவன் பைக்கட்டையே பிடுங்கி அடித்ததும், பின், நினைவு வரும்போதெல்லாம் அவனை அடித்துப் பிளந்ததும் அவளுக்கு நினைவு வந்தது.

செலவுக்கென அத்தா கொடுக்கும் அந்தக் காசை வைத்துத்தான் அம்மா வாரம் முழுவதையும் ஓட்ட வேண்டும். சில சமயம் மாதம் முழுவதும். கையிருப்பு தீர்ந்து, சந்தைக்கோ, மளிகைக்கோ காசு கேட்டால் அன்று வீடு சுக்குநூறாகும். அவருக்கே தோன்றினால் கொடுப்பார். கொடுப்பதை வாங்கி வைத்துக்கொண்டு அடுத்து அவர் தரும் வரை செலவைச் சமாளிக்க வேண்டும். இத்தனைக்கும் அவர்கள் ஏழை எல்லாம் இல்லை. அத்தாவிற்கு அது என்னமோ ஒரு வீம்பு. வீட்டைச் சமாளிக்க அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி, அந்தக் கணக்கைப் பொடிப்பொடி எழுத்துக்களில் அம்மா சிட்டைகளில் எழுதி வைத்திருப்பாள். நல்லநாள் பெருநாட்களில் சேரும் பெர்நாக்காசைச் சேர்த்து அவர்களின் கடனை அடைப்பாள்.
“இந்த வருசத்தோட இந்தப்(புள்)ளைய பள்ளிக்கொடத்துலருந்து நிறுத்தணும். போதும் படிச்சுக்கிலிச்சது. மதர்ஸால சேத்து ஓத வெச்சு காலாலத்துல கொமர கரசேக்கனும்” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார்.

அன்று மாலை வீட்டுக்கு வந்து ரயிலடி விஷயத்தை அம்மாவிடம் சொல்லி அத்தாவிடம் எப்படியாவது அனுமதி வாங்கித்தரச் சொன்னாள்.

“ஏண்டீ? ஒங்கத்தா என்னய அடிச்சு நாளாச்சுன்னு நீனா அவருக்குப் புதுசா எடுத்துக்குடுக்குறியா? போடியங்குட்டு. மகரி நேரமாச்சு, சாவல கூண்டுக்குள்ள புடிச்சு அட...” என்று அடுத்த வேலைக்கு நகர்ந்து விட்டாள்.

அன்று கனவில், முழுக்க சேவல்களால் நிரம்பிய ரயில், அத்தா இரு கைகளாலும் தன்னையும் அம்மாவையும் அடித்துக்கொண்டே செல்லும் ரயில், அவளின் பள்ளிப்பிள்ளைகளும், அத்தம்மாவும் இதைப்பார்த்து சிரிக்கும் ரயில் எனப் பல்வேறு ரயில்கள் வந்தன.

மறுநாள் வகுப்பில், டூருக்குச்செல்ல, பலர் தங்கள் பெயர்களைக் கொடுத்ததும் இவளுக்கு இன்னும் வருத்தமாக இருந்தது. அங்குமாரி, “நா ஒங்கம்மாட்ட வந்து கேக்கவாப்(பு)ள?” என்றாள்.


“போடி. எங்கத்தம்மா பாத்துச்சுன்னா ஒன்ன ஆஞ்சுபுடும். விடு. அல்லா நாடுனா நடக்கும் இன்சால்லா” என்றாள்.

ஒரு வாரம் ஓடியது.

இரவு, உணவு உண்டு கொண்டிருக்கும்போது, “காத்னே...?” என அழைத்தார் சிக்கந்தர்.

“ந்தா வந்துட்டேங்த்தா...”

“என்னமோ டூருக்கு போறியாமே?”

“இல்லங்த்தா.. பள்ளிக்கொடத்துல போறதா சொன்னாங்க. நா பேர்லாம் குடுக்கல” என்றாள் பயந்தபடி.

“ஒங்க டீச்சர சந்தக்கடைல பாத்தேன். வெவரத்த சொன்னாங்க. அவங்கள்ட்ட காசு குடுத்துருக்கேன். எப்பவும் அவங்களோடயே க்கவனமா இரி. தனியா எங்குட்டும் போய்ராத” என்றார்.

காத்தூனுக்கு உற்சாகம் கொள்ளவில்லை. ஆனாலும் பயம் ஒரு பக்கம் இருந்தது. முதலில் காத்தூனால் இதை நம்ப முடியவில்லை. டூருக்கு அனுமதி கொடுத்தால் என்ன செய்கிறாள் என்று பார்த்து அதைக்காரணமாய் வைத்து அத்தா அடிக்கப்போகிறாரோ என்ற பயம் ஒருபுறம். திடீரென்று மனசு மாறி டூருக்கு போக வேண்டாம் எனக் கூறிவிடுவாரோ என்ற சந்தேகம் ஒரு புறம். எது எப்படியோ, சொன்னவரை சந்தோஷம் என்று நினைத்து, “அல்ஹம்துலில்லா” என மனதுக்குள் பத்து முறை சொல்லி, அத்தா அடுத்து எதும் செய்துவிடுவதற்குள் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தாள்.

மறுநாள் பள்ளியில் ஏகக் குஷியில் வகுப்புத்தோழிகளிடம் இந்த விஷயத்தைச் சொல்ல, “ஒங்கத்தாவுக்கு திடீர்னு ஜின்னு அடிச்சிருச்சுப்புள்ள. அதேன் இப்புடி திடீர்னு மாறிட்டாங்க” எனக்கேலி பேசினாள் கச்சா.

டூர் தினம். 

மூன்று பேருந்து கொள்ளளவுள்ள மாணவர் கூட்டத்தை ஒரே பஸ்ஸில் ஏற்றி, குழந்தைகளின் கொக்கரிப்புக் கூக்குரலோடு, குண்டு குழிகளுக்குள் ஆங்காங்கே தென்பட்ட கொஞ்சநஞ்ச ரோட்டைத் தேடித்தேடித்துழாவியபடி ’அரசு நடுனிலைபள்ளி கமுதி கல்விச்சுற்றுலா’ என ஊதா மசியில் எழுதப்பட்ட வெள்ளை பேனரைக்கட்டிக்கொண்டு பஸ் ஊர்ந்தது.

முன் சீட்டுகளில் ஆசிரியர்களும், நடுவில் மாணவியரும், கடைசியில் மாணவர்களுமாக அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு சீட்டிலும், கொள்ளமுடியா சூட்கேசில் துணிகளை அடைப்பதுபோல் மாணவர்கள் அடைந்து கிடந்தனர். சில வானரங்கள் கம்பிக்குக் கம்பி தாவியபடி இருந்தன. அப்போது மாணவியர் தமது வீட்டு ரேடியோவில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் சில பிரபல சினிமாப் பாடல்களை பாடியாடினர். 

“கட்டோடு குழலாட ஆட… ஆட… கண்ணென்ற மீனாட ஆட.. ஆட…”

“நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…”

“சித்தாட கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…”

மாணவிகளை வம்பிழுக்க, மாணவர்களும் போட்டிப் பாடல்களைப் பாடினர். 

“சட்டி சுட்டதடா கை விட்டதடா”

“போனால் போகட்டும் போடா”

ஒரு வழியாக, இரண்டு மணி நேரப் பிரயாணத்துக்குப் பின் மானாமதுரை ரயிலடிக்குப் பேருந்து வந்து சேர்ந்தது. பிள்ளைகள் யாரையும் இறங்கக்கூடாதென்று கட்டளையிட்டு, எச்செம் சாரும் மற்றொரு சாரும் ஸ்டேசனுக்குள் செல்ல, கணக்கு டீச்சரும் தமிழய்யாவும் கீழே இறங்கிப் பேசிக்கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் திரும்பிய எச்சம் சார், மற்றவர்களிடம் ஏதோ சொல்ல, பீட்டி சார் பேருந்துக்குள் வந்து, ”ஒவ்வொருத்தரா எறங்கி, அவங்கவங்க வவுப்புப்படி வரிசைல நில்லுங்க” என்றார்.

காத்தூன் அங்கே தெரிந்த ஒவ்வொன்றையும் கண்கள் அகல பார்த்துக் கொண்டிருந்தாள். விழுது விடத்துவங்கிய ரயிலடி ஆலமரமும், தொடர்ந்து வீசிய காற்றும், அங்கு நிலவிய பேரமைதியும், கரைந்து கொண்டும் கீச்சிக் கொண்டும் பறந்த பறைவைகளையும் அசட்டை செய்தவளுக்கு, ரயிலடியின் ஒற்றைக்கட்டடம் பேருவகையைத் தந்தது. மானாமதுரை ஜங்சன் என கருப்பு எழுத்துகள் பதித்த மஞ்சள் நிறப்பலகை குதூகலம் தந்தது. ”கெயமுயகெயமுய” எனப்பேசியபடி இறங்கிய சில சிறுவர்களின் முதுகில் அடியைப்போட்டு வரிசையை ஒழுங்கு படுத்தினார் பீட்டி வாத்தியார். 

பின், எச்செம் சார் முன்னே செல்ல, மாணவ வரிசை, ரயில்வே ஸ்டேசன் கட்டிடத்தை நோக்கி நகர்ந்தது. உள்ளே வெள்ளை பேண்ட்டுச்சட்டை போட்டிருந்த ஒருவர், இவர்களை சிரித்த முகத்தோடு வரவேற்று, அந்தக் கட்டிடத்தின் உள்ளே கூட்டிச் சென்றார். வடக்கு தெற்கு அடிவானத்தின் இரு முனைகளையும் தொட்டிணைக்கும் நீண்ட இரும்புக் கருப்புத் தடத்தைக் காட்டி, இதுதேன் “தண்டவாளம்” இதுலதேன் ரயில் போவும் என்றார். பிள்ளைகள் ஆவலோடு எட்டிப்பார்த்து, ”ஏ.. இங்யாரு...தண்டாளமாண்டி...” என தங்களுக்குள் பேசிக்கொண்டன. “அந்தா அங்கன தெரியிது பார் ஒசரமா. அதேன் சிக்னல்லு. அதப் போட்டதும் ரயில் அங்குட்ருந்து வந்து இங்குட்டு போவும்” என ரயில் வந்து செல்லும் திசையைக் கைநீட்டிக் காட்டினார். காத்தூன் ரயில் வரும் எனச் சொல்லப்பட்ட திசையையே ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தாள். கூட்டத்திலிருந்து ஒரு தைரியச் சிறுவன், ”ரைலு எப்ப வரும்?” என்றான்.

“இன்னக்கி ரயிலு லேட். ராமேஸ்வரத்து ரயிலுல கோளாறாகிப்போச்சு. இங்ய வரதுக்கு ரவையாயிரும்” என்றார்.

எச்செம் சார் அங்கு வந்து, ”புள்ளையளா, ஒங்க கட்டிச்சாப்பாட்ட எடுத்துட்டு வந்து சாப்புடுங்க. எல்லாரும் இங்கனயே சாப்புட்டு ஊருக்கு கெளம்பறோம்” என்றார்.

மாணவர்கள் ஆங்காங்கே வட்டமாய் அமர்ந்து தங்கள் சோற்றுக் கட்டைப் பிரிக்க ஆரம்பித்திருந்தனர்.

”கோளாறு வர்ற ரைலப்பத்தி ரபீக் மாமு ஏன் சொன்னதேயில்ல?” என நினைக்கத் துவங்கினாள் காத்தூன். அன்றிலிருந்து அவள் கனவில் ரயில்கள் வருவதில்லை.

Comments

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

சுன்னத் கல்யாணம் ரிட்டன்ஸ்

இரைவி