தரும ராஜா!

பொழுது சலனமேதுமின்றி அமைதியாகப் புலர்ந்தது. சூரிய மகராஜன் தன் கதிரென்னும் படையினரைப் பூலோகத்தின் மீது பரவச் செய்தான். தரும ராஜா (எ) தருமன் குளித்து, சூரியனை நமஸ்கரித்துத் தன் அங்க வஸ்த்திரங்களையும் அணிகலன்களையும் அணிந்தான். அப்போது அங்கு வந்த அவனின் மனைவியும், ராணி என அன்போடு அனைவராலும் அழைக்கப்படும் ராணி தேவி என்கிற திரௌபதி தேவி தன் கணவன் தன்னை அலங்கரித்துக் கொள்வதைப் பார்த்தாள். தருமனுக்கு நல்ல ஆஜானபாகுவான உடற்கட்டு. பத்து நூறு பேர் துரத்தினாலும் தளராத மனோதிடம். கிரீடத்தையும் கவசத்தையும் இன்னபிற அங்கிகளையும் அவன் அணிந்தபின் வரும் கம்பீரத்தோடு அவனை யாரேனும் பார்த்தால் உலகுக்கே அவன் ராஜா என்பதாகச் சொல்வர். கணவனையே வைத்த கண் வாங்காது பார்த்தவள், இன்று எங்கே நகர்வலம் என்பதைப்போல் கையையும் தலையையும் அசைத்துக்கேட்டாள்.


இங்கு ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். அவள் பாட்டி, தாய் போல ராணி திரௌபதி தேவியும் பிறவி ஊமை.  முற்காலத்தில் ராணியின் முன்னோர்கள் காட்டில் கடும் தபசு புரிந்த சில முனிவர்களுக்கு இடையூறு விளைவிக்க, அவர்கள் தந்த சாபத்தால் அவ்வம்சப் பெண்களுக்குப் பேச்சுத்திறன் இல்லாமல் போனது என்ற காரணம் தலைமுறை தலைமுறையாய்ச் சொல்லப்பட்டது. ஊமைக் குறைபாடும் தலைமுறைக்கும் (பெண்களுக்கு மட்டும்) இருந்தது.


எங்கே செல்கிறீர்கள் என்ற தன் மனைவியின் சைகைக் கேள்விக்கு, “அஸ்தினாபுரம்” என்று தன் வெண்கலக்குரலால் பதில் சொன்னான் தருமன். தருமனைப்போல் குரலுடையவர் அந்தப் பகுதியிலேயே யாருமில்லை. அவன் பாடும்போது கேட்டால் கணீரென்று அத்துணை இனிமையாயிருக்கும்.

தருமன் வாரத்துக்கு இரண்டு தினங்கள் இப்படி ஒவ்வொரு பகுதிக்கும் செல்வதுண்டு. மீதி ஐந்து நாட்கள் இன்னபிற வேலைகளைச் செய்வான். அரசாதி அரசனே ஆனாலும் தன் சவத்தைத் தானே தூக்க முடியாதல்லவா? இவன் எம்மாத்திரம்? அவன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் அடுத்தவர்களைச் சார்ந்தே இருந்தது.


“நான் புறப்படுகிறேன்” என்பதுபோல மனைவிக்குச் சைகை காண்பித்தான். அவனின் வாளை எடுத்துக் கொடுத்து கண்களாலேயே மறுமொழி சொல்லி வழியனுப்பினாள் ராணி. ஊருக்கே ராணியென்றாலும் கணவனுக்கு மனையாளல்லவா?


தருமன் வீதியை அடையவும் அவன் நண்பன் உடன் சேரவும் சரியாக இருந்தது. அன்றைய திட்டப்படி அஸ்தினாபுரத்திற்குச் செல்ல உயர்நீதிமன்றத்துக்குச் சென்று 152ஆம் எண் பேருந்தில் ஏறி இருவரும் அஸ்தினாபுரத்தை அடைந்தனர்.


அவன் நண்பன் அர்ஜுன் தட்டேந்த, தருமன் தன் வெண்கலக்குரலால் பாட ஆரம்பித்தான், “ராம ராம ராம ராம ராம ராம ஹர ஹரே, க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹர ஹரே”


Comments

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

சுன்னத் கல்யாணம் ரிட்டன்ஸ்

இரைவி