காதலுடன்



அன்புள்ள ரகுவுக்கு, இல்லை. அன்பெல்லாம் நம் மத்தியில் இல்லை. நீ என் எதிரி. எக்காலத்திலும் என்னால் மறக்கவியலா எதிரி. நீ செய்த அக்கிரமங்கள் கொஞ்சமா நஞ்சமா? நான் மன்னிப்பது இருக்கட்டும். உன்னாலேயே உன்னை மன்னிக்க முடியுமா? நினைத்துப்பார்.

பார்கவியும் முத்துராமனும் ஓடிக்கொண்டிருந்தனர். ஓடிக்கொண்டிருந்தனருக்கு முன் ”மூச்சிரைக்க”வும், மூச்சிரைக்கவிற்கு முன் ”உயிரைக்கையில்பிடித்தபடி” எனவும் சொன்னால் அவர்கள் இருந்த சூழ்நிலைக்குச் சரியாக இருக்கும். காதல். வெவ்வேறு ஜாதி. முன்னதைப்பின்னது துரத்திக்கொண்டு இதோ அரிவாளும் கத்திகளும் இரண்டு பூக்களைக்கொய்ய.

அடேய் கொடூரனே. உனக்கு நினைவிருக்கிறதா? இருக்காது. உனக்கெப்படி இருக்கும்?  ஒன்றா இரண்டா நீ செய்த கொடூரங்கள், உன் நினைவில் தங்க? உன்னையெல்லாம் தெய்வம் நின்று நிதானித்து, ஆழமாகக்கொல்ல வேண்டும் என எத்தனையோ நாள் பிரார்த்தித்திருப்பேன். இப்போது நினைத்தாலும் என் உடம்பெல்லாம் கூசுகிறது.

”இன்னும் எவ்ளோ தூரம் ஓடப்போறோண்டா? என்னால ஓட முடியல. நாக்கு வறண்டு மூச்சு எளைக்குது”
“எப்ப முடியும்னு தெரியல. அவனுங்ககிட்டருந்து தப்பிச்சிட்டா போதும். உயிர் இருக்குறவரைக்கும் ஓடுவோம்”
இத்தனை களேபரத்திலும் முத்துராமனுக்குள் ஒரு குளிர்ச்சி. அதைத்தந்தது அவன் பிடித்துக்கொண்டிருக்கும் பார்கவியின் (அவனுக்கு ப்பாரு/ப்பாரும்மா) மென்மையான கரம் (”என்னடி, இவ்ளோ மெத்துமெத்துன்னு இருக்கு? ஒரு தடவ தொட்டுப்பாக்கவா?) அந்தக்குளிர்ச்சி எத்தனையோ நினைவுகளைக்கிளறிவிட்டது. அதே நேரம் பின்னால் துரத்திக்கொண்டிருக்கும் அந்த அரிவாள்கள் குறித்த துர்சிந்தனையும் அவ்வப்போது எழுந்து அவனின் மைக்ரோ நொடி இன்பத்துக்குத் தடை போட்டது.

எனக்குத்தவளைகள் என்றால் பயம் எனத்தெரிந்தே என் புஸ்தகப்பையில் நீ தவளைகளைப்போட்டு அது தெரியாமல் நான் பைக்குள் கைவிட, அவை என் மீது தாவ, நான் அலற, அதைக்கண்டு அனைவரும் சிரிக்க, பயத்தில் எனக்கு ஒரு வாரம் ஜுரம் வந்து நான் பட்ட அவதி யாருக்குத்தெரியும்? அதற்காக நீ ஒரு மன்னிப்பாவது கேட்டாயா என்னிடம்? 

இந்த தடியர்களை எப்படி சமாளிப்பது? ச்சைக்… இந்தப்பன்னாடைங்களப்பத்தி இலக்கண சுத்தமா வேற நெனைக்கணுமா? இலக்கணம். கடற்கரை மணலில் உட்கார்ந்துகொண்டு என் பாரு சொல்லிக்கொடுத்தது.
“பாரும்மா… அந்தக்கொழந்தைங்க குதிச்சு குதிச்சு ஓடுறதப்பாறேன்”
“அடுக்குத்தொடர்”
“அப்டின்னா”
“இலக்கணக்குறிப்புடா. ஸ்கூல்ல படிச்சதில்ல? ஒரே வார்த்த ரெண்டுதடவ வரும் பிரிச்சாலும் பொருள் தரும். அதுக்குப்பேரு அடுக்குத்தொடர். பிரிச்சா பொருள் தரலன்னா இரட்டைக்கிளவி”
“ஓ…”
”என்னடா யோசிக்கிற?”
”ம்ம்… உங்கிட்ட எதுல்லாம் அடுக்குத்தொடர்னு… உன் கண்ணு… காது.. ஒதடு…அப்புறம்...”
“ம்ம்… செருப்பு”
“இல்ல.. அது இரட்டைக்கிளவி” என்ற முத்துராமனுக்கு காதலாய் ஒரு குத்துவிட்டாள்.

நான் இயல்பிலேயே பயந்த சுபாவம் என்பதை அறிந்த நீ, கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் என்னை அழவைத்துப்பார்த்தாய். உன்னோடு சேர்ந்து மற்றவர்களும் என்னை பயந்தாங்கொள்ளி என்று கேலிபேசினர். உன்னைக்கொல்ல உன் சைக்கிள் ப்ரேக் கட்டையை பிய்த்துப்போட்ட அன்று நீ சைக்கிளை எடுத்ததும் வீல் பன்ச்சர் ஆகி நீ உயிர்பிழைத்தது எப்போதோ நீ செய்த நன்மை. இல்லையில்லை அது உன் தாயோ தந்தையோ செய்த நன்மை. உனக்கும் நன்மைக்கும் ஏது சம்மந்தம்?
“ப்பாரும்மா… ஒன்னோட குணத்துக்கும் அழகுக்கும் எப்பேற்பட்ட நல்ல மாப்பிள்ளையெல்லாம் கெடப்பானுங்களே. இருக்குறதுலயே ஆகக்கழிசடை என்னப்போய் ஏன் காதலிச்ச?”
“என்னடா, உண்மைலயே காதலிக்கிறேனான்னு சந்தேகப்படுறியா?”
“ச்ச ச்ச இல்லடி .போயும் போயும் என்னப்போல ஒரு சைக்கோவ காதலிக்குறியேன்னு ஒம்மேல பரிதாபப்படுறேன்”
“அதேதான். நல்ல பசங்களுக்கு நெறய பொண்ணு கெடைக்கும். ஒன்ன மாதிரி சைக்கோவ பாத்துக்க பொண்ணு கெடைக்காதுல்ல. அதுக்குதான். பொதுசேவை” என்று கண்ணடித்தவள். இப்போது வியர்த்துவழியும் முகத்தோடும், எப்படியாவது தப்பிப்பிழைத்து வாழ்ந்துவிடமாட்டோமா என்ற ஏக்கம் நிறைந்த கண்களோடும் தெருநாய் போல ஓடிக்கொண்டிருக்கிறாள். அந்தக்கோலத்தில் பார்கவியைப்பார்த்ததும் அவனையறியாது கண்ணீர் வந்தது முத்துராமனுக்கு. அரிவாளர்கள் நெருங்கி விட்டதைக்கண்டு எஞ்சிய சக்தியையெல்லாம் சேர்த்துக்கொண்டு ஓடினர் இருவரும்.

பள்ளியின் இறுதிநாளில் உன்னிடம் நான் கேட்ட ஒரே வரம் இனி என் வாழ்நாளில் என் கண்முன்னே வந்துவிடாதே என்பதுதான். உனக்குத்தெரியாது, அவ்விரவு நான் எத்தனை நிம்மதியாகத்தூங்கினேன் என்று. இனி உன்னை சந்திக்கவேமாட்டோம் என்ற விஷயமே எனக்கு சொல்லமுடியாத இன்பத்தைத்தந்தது. அடுத்து உன்னை மட்டுமல்ல. உன் போன்ற நபரைக்கூட வாழ்க்கையில் பார்த்துவிடக்கூடாது என்ற வேண்டுதலோடு காலேஜில் சேர்ந்தேன். அங்கு என் வகுப்பில் உன்னைக்கண்ட அந்த நாளில்தான் கடவுள் மீது முதன்முறையாக நம்பிக்கையிழந்தேன். என்னை நானே எரியும் கொப்பறையில் தள்ளியதாய் உணர்ந்தேன். கல்லூரியிலாவது திருந்தியிருப்பாய் என நினைத்தேன். பள்ளியில் நம் வகுப்பு குமாரின் காசு திருடுபோனபோது என் பாக்சில் அது இருப்பதாக நீ அனைவரிடமும் சொல்லி, நான் பயத்தில் சீருடையிலேயே சிறுநீர் கழித்ததை கல்லூரி வகுப்பில் அனைவரிடமும் சொல்லி என்னை கூனிக்குறுக வைத்ததற்கு உன்னை என்ன செய்தால் தகும்?

”முத்து… முடீலடா. இதுக்குமேல என்னால ஓட முடியல. அவங்க என்ன கொன்னா கொன்னுக்கட்டும். நீ தப்பிச்சு போய்டு. நாம குடுத்து வைக்கல”
”பாரும்மா… வா நான் தூக்கிக்கிறேன். இன்னும் கொஞ்ச தூரம். அதோ அங்க பார் ஒரு வீடு. அங்க போய் ஒளிஞ்சுக்கலாம். கொஞ்சம் பொறுத்துக்கோடா”
அரிவாள் கோஷ்டி அவர்களுக்கு இன்னும் அருகில் வந்துவிட்டனர். மிகுந்த ஆத்திரத்தோடு “அந்தநாய்கள வெட்றா” என்று ஒருவன் கத்திக்கொண்டு வந்தான். பார்கவியும் முத்துவும் புதர் மண்டியிருந்த அந்த வீட்டிற்குள் சென்று கதவைத்தாழிட்டனர். உள்ளே கும்மிருட்டு. பாழடைந்த வீடு. மூன்று நாட்கள் யாரேனும் தொடர்ந்து இருமினால் உதிர்ந்துவிடும் நிலை. அவ்வளவு தூரம் ஓடி வந்ததால் கால்கள் தளர்ந்து இருவரும் கீழே சரிந்தனர். அவர்களை விரட்டி வந்தவர்களின் ஆக்ரோஷக்குரல் அந்த வீட்டை நெருங்கிக்கொண்டே வந்தது.

கல்லூரியின் முதல் இரண்டு ஆண்டுகள் நூற்றாண்டுகள் போலக்கழிந்தன. உன் சீண்டல்களும் சித்ரவதைகளும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அதுவரை நான் செய்துவந்த ப்ரார்த்தனைக்கெல்லாம் பலனாக பெரும் விபத்தொன்றில் சிக்கி ஒரு வருடம் படுக்கையில் கிடந்தாய். வகுப்பில் அனைவரும் உன்னைக்காண வந்தும் வராத என்னைப்பற்றி நீ விசாரித்தாய்க்கேள்விப்பட்டேன். நான் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன் கிடைத்த மகிழ்ச்சியில் குதித்தேன். நம்பமாட்டாய். அளவிலா மகிழ்ச்சியால் என்னால் சாப்பிடக்கூட முடியவில்லை. மனதும் வயிறும் அவ்வளவு நிறைந்திருந்தது. நீ படுக்கையாயிருந்த முதல் ஆறு மாதம் போனதே தெரியவில்லை. அடுத்த ஆறு மாதம் யுகம்போல் கழிந்தது. எதோ தனித்துவிடப்பட்டதாக, யாருமே என்னை கவனிக்காததாகத் தெரிந்தது.


”தட்தட்தட்தட்” – அவர்களிருவரும் தஞ்சம் புகுந்த அந்த வீட்டுக்கதவு தட்டப்பட்டது. உடைக்க முயற்சிசெய்யப்பட்டது என்று சொல்வது சரியான பதமாகும். ”நீங்க கதவ தொறக்க வேணாம். அப்டியே இருங்க. நாங்களே ஒடச்சுட்டு வந்து வெட்டுறோம். ஒங்கள வெட்டிக்கூறு போட்டாதான் அடுத்து யாருக்கும் காதலிக்க பயம் இருக்கும் – “தட்தட்தட்தட்”
இருவரும் பயத்தில் உறைந்து இறுகக்கட்டிக்கொண்டனர். அந்தக்கும்பலின் இடைவிடாத தாக்குதலால் கதவு கொஞ்சம் அசைந்துகொடுத்தது.

ஒரு வகையில் நீ எனக்கு நன்மை செய்திருப்பது உண்மைதான். பிறவிப்பயந்தாங்கொள்ளியான எனக்கு, நீ கொடுத்த தொந்திரவுகள் துன்பம் தந்தாலும் ஒரு கட்டத்தில் அலுத்துப்போய் தைரியம் வர ஆரம்பித்தது. வேறு எந்தப்பிரச்சினை வந்தாலும் எதிர்த்துத்துணிந்து நிற்கத்துவங்கினேன். பின் எனக்கு பயம் வந்தபோதெல்லாம் வேண்டுமென்றே உன் பார்வையில் பட்டு நீ என்னைச்சீண்டி அதனால் வந்த தைரியத்தைக்கொண்டு மேலும் மேலும் முன்னேறினேன். உன்னைக்காதலித்துக் கரம்பிடிக்கும் அளவுக்கு.

அந்தக்கும்பலிலிருந்த தடியனொருவன் இரண்டு இடி இடித்ததில் கதவு பிளந்து வழிவிட்டது. லாயம் திறந்துவிடப்பட்ட எருமைகள்போல் திமிதிமுவென அவர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள் உள்ளே வருவதற்குள் பார்கவியை எங்கோ ஒளித்து வைத்துவிட்டு ஒற்றையனாய் நின்றுகொண்டிருந்த முத்துராமனை வெட்ட முதல் அரிவாள் பாய்ந்தது.

பிரிய எதிரி ரகுவே, இக்கடிதத்துக்கு இடையிடையே நீ பார்த்தது நான் எழுதும் முதல் கதை. முத்துராமனும் என்போல பயந்தாங்கொள்ளி. இப்போது அவனுக்கு தைரியம் வர என் உதவி தேவை. எனக்கு தைரியம் வர உன் உதவி தேவை. மீண்டும் என்னை நீ வம்பிழு. எனக்குக்கோபம் வரும். வந்தால் தைரியம் வரும். வந்தால் அது முத்துராமனுக்குச்செல்லும். அவன் அவர்களை அடித்து நொறுக்குவான். பார்கவியின் கரம் பிடிப்பான்.

With Love,
Uma

Comments