கூர்க்கன்

அந்தச் செடி ஒரு பிரியாணி விருந்தின்போது என்னை அடைந்தது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் பணிபுரியும் நேரங்களுக்கு இடையில் இந்திய உணவைப்பற்றி விதந்தோதிக் கொண்டே இருக்க, “Since you all are drooling, let me propose a delicious south indian lunch at my place this weekend, whoever wants to join can come. All are welcome” என்றேன். 


இந்திய உணவு என்றதும் அவரவர் தத்தமது உற்சாகத்திற்கேற்ப தத்தங்கள் குரலில் உற்சாகவொலியெழுப்பினர். அவர்களின் உற்சாகக்crux, “that's awesome man, can't wait” என்றது.


பனிரெண்டு பேர் வருவதாக முடிவானது. ப்ரசீலியன், மெக்சிகள், வியட்னாமி, அர்ஹெந்தீனியர், நைஜீரியை, இரானியர், டச்சு, போர்த்துகீசியள், பங்களாதேஷி என உலகத்தட்டையின் ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் இருந்தனர் விருந்தினர் [உலகம் உருண்டை என்பது ஒரு hoax என்பது என் faith]. 


விருந்துக்கு வரப்போவது பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஒவ்வொரு நாட்டினரின் நாக்குகளுக்குமேற்றாற்போல் கார அளவு இருக்க, அவர்களின் நா-கார-தாங்குதிறன் குறித்து கேட்டுக்கொண்டேன்.


டச்சு நாக்குக்கு நம் சர்க்கரையே கூட காரம். மெக்சிகளுக்கு பச்சை மிளகாய் பஞ்சு மிட்டாய். இப்படி ஒவ்வொரு கன்றிக்கும் ஒரு punமொழி கூறலாம். தேவையற்ற வார்த்தை விரயம் – ‘தேவையற்ற வார்த்தை விரயம்’ என்பதில் ‘தேவையற்ற’ என்பதே ஒரு தேவையற்ற வார்த்தை விரயம் தான். 


விருந்து தினத்தன்று, அத்தனை விருந்தின நாவுகளுக்கும் தோராயமாகத் தோதுபடுமளவுக்கான கார ரேஷியோவில் ஏழெட்டு விதமான உணவுப் பண்டங்களைச் சமைத்து வைத்தேன். 


அன்றைய தினம் உண்டாடப்பட்ட உணவு, கொண்டாடப்பட்ட இசை போன்ற இன்னபிற விடயங்கள் இதற்கு மேலும் நமக்குத் தேவையற்றது. விருந்துக்கு வந்த சிலர், அன்பின் நிமித்தமாகச் சில பரிசுகளைக் கொண்டு வந்தனர். Non alcoholic wine, Chocolade (டச்சுச் சாக்கலேட், ஷொக்கொலாட என ஒலிக்க வேண்டும்), மலர்க்கொத்து மற்றும் ஒரு செடி. அந்தச் செடி. 


அந்தச் செடி, சிறிய தொட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அதன் அளவை வைத்துப் பார்த்தால் செடிகளின் உலகில் pre-kindergarten செல்லும் வயதிருக்கலாம் எனத் தோன்றியது. 


மாலையில் பள்ளியிலிருந்து அழைத்துச் செல்ல வந்த பெற்றோர்களைப் பார்த்ததும் கண்கள் மலருமே வாண்டுகளுக்கு, அதைப்போல ஒவ்வொரு இலையும் அகம் மலர்ந்திருந்தது. 


உறங்கிக் கொண்டிருக்கும் தாய் மாமனுக்கு மருமகக் குழந்தை உள்ளங்கையில் பூசிவிட்ட மருதாணி போல ஒவ்வொரு இலையின் மத்தியிலும் பீட் ரூட் நிறம். 


ஒரு சில இலைகளில் தெரிந்த இதழ்கள் போன்ற அமைப்பு, மேல் மற்றும் கீழுதட்டில் mirrored plumpness கொண்ட தன் உதட்டில் ஏஞ்சலினா ஜோலி அடர் ரத்த நிற லிப்ஸ்டிக்கணிந்து அழுந்த முத்தமிட்டது போல் இருந்தது.


செடியை உற்றுப் பார்த்துக் கொண்டே மேற்சொன்ன உவமைகளையெல்லாம் மனத்தில் ஓட்டியபடி நான் இருக்க, “If you keep it in sunshade, it becomes more colorful, and if you remove it, the colors will fade” என்றாள் அதைப் பரிசாகக் கொடுத்த போர்த்துகீசியள். 


ஜெகதீசு சந்திரபோசு கூறியபடி, எல்லாச் செடிகளுக்கும் உயிர் இருப்பது உண்மைதான். ஆனால் அந்தப் போர்த்துகீசு சொன்னதைக் கேட்டதும் இந்தச் செடிக்கு இரண்டு மில்லிகிராம் அதிக உயிரும் அறிவும் இருப்பது போலத் தோன்றியது. (மனப்பிரம்மையல்ல, க்ரியேட்டிவ் விடுதலை)


வடதுருவத்தை எட்டிப்பிடிக்கும் தூரத்தில் இருக்கும் இந்தக் குளிர்நாட்டிற்கு நான் நகர்ந்தபின் எப்போதும் தனிமை மட்டுமே துணையாக இருக்க, தற்போது முதல் முறையாக ஒரு குற்றுயிர் வந்து சேர்ந்தது கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. Something to look after in life.  


அச்செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும், எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதெல்லாம் பரிசளித்தவள் சொல்ல, அவற்றைக் கவனமாகக் கேட்டுக்கொண்டேன். 


‘கண்கலங்காம பாத்துக்கறேன்’ என்பதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்வதென அந்த நேரத்தில் சட்டென வரவில்லையாதலால் (தமிழ் மீடியம் ஸ்கூல்), அவளின் அத்தனை பராமரிப்புக் குறிப்புக்கும் ஓகேக்களால் பதிலுரைத்தேன். 


அந்த நாள்வரை நினைத்ததை நினைத்த நேரத்தில் நினைத்தபடியெல்லாம் செய்துகொண்டிருந்த நான், அந்தச்செடி வந்ததும் முற்றிலும் மாறிவிட்டேன் எனக்கூறினால் அது அக்மார்க் பொய்யாகும். அப்படி பெரிய மாற்றம் எதுவும் வரவில்லை. உண்மையைச் சொன்னால், முதலிரண்டு வாரங்கள் பிரத்தியேகக் கவனத்தைப் பெற்ற அந்தச் செடி, அதற்குப் பின், வீட்டிலிருந்த மற்ற அஃறிணைப் பொருட்களைப் போலவே மாறிவிட்டது. இந்தப் பெருவீட்டில் நானே அவ்வப்போது ஒரு அஃறிணை தான். எப்போதும் உயிர்ப்போடு இருப்பது கொடுந்தனிமை மட்டுமே. 


வேலைக்குப் புறப்படும்போதோ சமைக்கும் போதோ அந்தச் செடியின் மீது கவனம் சென்றால் அதற்கு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றுவதுண்டு. சில நேரம் அதற்குச் சத்தான உணவளிக்க வேண்டுமெனக் கருதி அரிசி கழுவிய நீரை ஊற்றுவதுண்டு. [அப்படி அரிசி கழுவிய நீர் ஊற்றும்போது, விநோதமாக மனம் அரிசியை ஐஸ்வர்யாபச்சன் ராயாகவும் அச்செடியை அந்தகன் பிரசாந்தாகவும் கற்பனை செய்துகொள்ளும் - ஜீன்ஸ் வைரமுத்து ரெஃபரன்ஸ்]


ஆனால் என்ன காரணமோ, அரிசி கழுநீர் ஊற்றினால் அதிலிருந்து படியும் வெள்ளைக் கசடுகளை உண்ண எங்கிருந்தோ சிறு மென் ஈக்கள் வந்து மொய்க்கத் துவங்கின. 


என் வீட்டு ஹாலிலிருந்து வெளியே பார்க்க, கண்ணாடியால் சீல் செய்யப்பட்ட சாளரம் உண்டு. அதன் வழியே சூரிய ஒளி வீட்டிற்குள் வரும். அந்தச் சாளரத்தின் திண்டில் தான் செடியை வைத்திருந்தேன். சீல் செய்யப்பட்ட சன்னலாததால் செடியில் செட்டிலான பூச்சிகள் வெளியேற வேறு வழியில்லை. அப்பூச்சிகள் பெரும் தொந்தரவாக இருந்தன. (நாம் காணாத நேரத்தில் கணப் பொழுதில் நம் கண்களில் பாய்ந்தன.)


அதனால் ஒருநாள் செடியிடம், 'ஒனக்கு அரிசித்தண்ணி ஊத்த விருப்பந்தான். ஆனா அரிசி சாப்ட்டா ஷுகர் வரும்னு டாக்டர்ஸ் சொல்றாங்க. அதனால மன்னிச்சுக்கோ இனிமே ப்லெய்ன் வாட்டர்தான்' எனக்கூறிவிட்டேன். 


அரிசி நீர்தான் ஊற்றவில்லையே தவிர அந்தச் செடிக்குத் தொடர்ந்து சத்தான டயட்டளிக்கப்பட்டது. ரசத்துக்குக் கரைத்துப் பிழிந்த புளியின் சக்கை, பயன்படுத்திய டீத்தூள் கொஞ்சம், வெட்டிய நகங்கள் இருமுறை, துணைக்கு இருக்கட்டுமென தக்காளியின் மிச்சங்கள், பூண்டுத்தோல், சீவிய இஞ்சித்தொலி எனப் பல போஷாக்கான உரத்தை அவ்வப்போது இட்டுக்கொண்டே வந்தேன். முன்னர் போட்ட உணவுரம் மக்கியபின் அடுத்த உரம். முற்றிலும் இயற்கை உரம். 


உரங்களோடு உரங்களாக நகம் வெட்டிப்போட்டது சோம்பலின் காரணமாக இல்லை. நகம் வெட்டுமிடத்திற்குப் பக்கத்திலேயேதான் குப்பைத் தொட்டியும் இருந்தது. வெட்டி அதில் போட்டிருக்கலாம். ஆனால் என்ன காரணமோ, அச்செடியின் மண், என் ‘முன்னாள் என்னை’ப் புசித்து, அதை அச்செடிக்குள் கலக்க வேண்டும் என வினோத ஆசை மேலிட்டது. அதனால்தான் நகவுரம். ஆனால் மற்ற உரங்கள் போல இல்லை நகங்கள். அவை அவ்வளவு எளிதாக மக்குவதாகத் தெரியவில்லை. அதனால் இரு முறைக்கு மேல் அதை இடவில்லை.


கண்ணாடி வழியே நிரம்பச் சூரியன் வந்ததாலும் ஊட்டமான உணவு வகைகளாலும் நெகுநெகுவென வளர்ந்தது அந்தச் செடி.


ஒரு வீக்கெண்டில், வீடு முழுவதும் தனிமை அப்பியிருந்தபோது, அந்தச் செடிக்கு ஒரு பெயர் இருக்குமே, அது என்னவாக இருக்கும் என்ற ஆவல் ஏற்பட்டது. கூகுளிடம், plant with pink என அடித்து, இல்லையே, அது பிங்க் அல்லவே எனத்தோன்றி, pinkகை அழித்து, ‘beetroot color leav’ என மாற்றியடிக்கையில், சட்டென அது மரூன் கலர் என நினைவு வர, மொத்தத்தையும் அழித்து, plant with maroon leaves எனத் தேட, கூகுள் தன் தேடுதிறன் பராக்கிரமத்தை, ‘About 9.100.000 results (0,40 seconds)’ எனக்கூறி, அதற்குக் கீழே Images for plant with maroon leaves என வரிசையாக அந்த வகைமைச் செடிகளின் படங்களைக் காட்சிப்படுத்தியிருந்தது. 


மேலும், இது குறித்து மக்கள் வேறு என்னவெல்லாம் தேடியிருக்கின்றனர் என்ற நமக்கு வேண்டாத, ஆனால் curios catகளுக்கு ஆர்வம் தூண்டக்கூடிய கேள்விகளை ‘People also ask’ என வரிசையிட்டிருந்தது. 


கூகுள் தந்த படங்களில் வெவ்வேறு வகையிலான மெரூன் நிற இலைகள் கொண்ட செடிகள் இருந்தன. அதில் நம் அந்தச் செடியைப் போன்ற தோற்றமளித்த ஒரு படத்தைச் சொடுக்க, அது திரையின் ஒரு புறத்தில் பெரிதாக விரிந்து, அந்தச் செடி குறித்த சுட்டிகள், மேலும் படங்களைக் காட்டின. அந்தப் படங்களில் ஒன்று நம் செடியைப் போலவே இருக்க, மேலும் இரண்டு தொடர் சொடுக்குதலில் மிகச்சரியாக அந்தச் செடி கண்பட்டது.


அதை Coleus plant எனச் சொல்கிறார்கள் பாட்டனியர்கள். அன்னாரின் முழுப்பெயர் Coleus scutellarioides.


அதன் பாட்டனிக் பெயர் தெரிந்தும் அதற்கென ஒரு பெட் பெயர் வைக்கத் தோன்றவில்லை. ஒரு பெயர் என்பது வெறும் பெயரா? அது ஒரு ஐடெண்டிடி அல்லவா? ஒரு அரசியல் அல்லவா? நான் ஒரு பெயர் வைக்க, அது ஒரு குறிப்பிட்ட ஜெண்டரைக் குறிக்க, அந்தச் செடியோ தன்னை அந்த ஜெண்டராக உணரவில்லையென்றால் அப்பெயர் ஒரு வன்முறை அல்லவா? ஏசு சாமியைக் கும்பிடும் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த கார், பஸ், கியர்பாக்ஸ், டயர் என அத்தனைக்கும் நாம் பூசையிடலாம். உயிரற்ற, அறிவற்ற அந்த வண்டிகள் அதைப் பொறுத்துக் கொள்ளும். உயிரும் அறிவும் கொண்ட இச்செடி அதைப் பொறுத்துக் கொள்ளுமா என்பதை நாம் அறியமாட்டோம் அல்லவா? ஆகவே அதை ஒரு பெட் பெயருக்குள் அடைக்காமல் விட்டுவிட்டேன். 


Pet என்றதும் ஒன்று நினைவுக்கு வருகிறது. Pet plantsகள் குறித்து ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். பின் வருவதை சிகப்புச்சட்டை மாறன் (எனக்கு கலர்ப்லைண்ட் உண்டு) சொல்வதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள் – <“இந்த வீட்டுக்குள்ள வச்சு வளக்குற செடிக இருக்குதுகளே, அதாவது indoorல சொகுசா வளக்கப்படுறது. அதுக சீட்டுக்கட்டு கார்டுகள அடுக்கி வச்சு கட்ண முக்கோண டவர் மாதிரி. அதுக்குப் பக்கத்துல நிண்டு யாரும் கொஞ்சம் சத்தமாத் தும்முனாக் கூடப் போதும். சீட்டுக்கட்டுடம் பொலபொலபொலனு உழுறாப்ல இந்தச் செடியும் நோய்ல உழுந்துரும்.


ஆனா வெளிப்பொறத்துல தன்னாலயே வளர்ற செடிக இருக்குதுகளே, அதுக குமரிமுனையோட, அதாவது கன்னியாகுமரி கடல்முனை, குமரிமுனைன்னதும் வேறெந்த முனைவவும் நெனச்சிடாதீங்க, அந்த குமரிமுனைல இருக்க திருவள்ளுவர் சிலை மாதிரி. சுனாமியே அடிச்சாலும் சரி அடுத்து என்ன கரண்ட்மழையானு கேட்டு கல்லா நிக்கிம்.”>


இத்தகைய இயல்பு கொண்டவைதான் pet செடிகளும் wild செடிகளும். என் வீட்டிலேயே பின்புறத் தோட்டத்திற்குச் செல்ல ஒரு கதவு உண்டு. (அது தோட்டமெல்லாம் இல்லை. கொல்லைப் புறம் என்று கூறலாம். ஆனால் கொல்லைகள் இன்று வழக்கொழிந்ததால், கொல்லை எனும் சொல்லும் கொஞ்சம் கொஞ்சமாக அஸ்தமிக்கத் துவங்கி விட்டது. தோட்டம் என்பது கூட மறைந்து, கார்டன் என்பதே க்ரிஸ்ப்பாகவும் எளிதில் புரியும் வண்ணமும் இருக்கிறது. ஆகவே கொல்லையாகிய தோட்டமாகிய கார்டனுக்குச் செல்ல, என் வீட்டுப் பின்புறத்தில் ஒரு கதவு உண்டு.) அந்தக் கதவைத் திறந்தால் தோட்டம் தெரியும். திறக்காவிட்டால் தெரியாது. ஏனெனில் அது மரத்தால் செய்யப்பட்ட கதவு. ஒளி மரத்தை ஊடுருவுவதில்லை. ஆகவே கதவுக்கு மறுபுறம் இருக்கும் காட்சிகள், கதவு திறக்கும் வரை இப்புறம் தெரிவதில்லை. Physics. 


அந்தக் கார்டனில் சிற்சில செடிகளும், ஒரு டேபிலும் அதைச் சுற்றி  (நண்பர்கள் வந்தால் அமர்ந்து பேச) நான்கு சேர்களும் உண்டு. அடிக்கடிப் பெய்யும் மழையின் காரணமாக அப்பகுதியெங்கும் நீர்கோத்து பாசியும் மிக லேசாகப் படிந்திருக்கும். விடயம் அதுவல்ல. தோட்டத்திற்குச் செல்ல கதவு ஒன்றுண்டு என்றேனல்லவா? அந்தக் கதவு திறக்கும்போதே தரையில் புதர் போல் வளர்ந்திருக்கும் புற்களையும் செடிகளையும் அரைத்துக்கொண்டுதான் திறக்கும். 


ஒவ்வொரு முறை கதவைத் திறந்து மூடும்போதும், சீப்பு தலையைப் படிய வாருவது போல அந்தச் செடிகளின் மீது வாரிச்செல்லும். கதவையொட்டி கால் முட்டி அளவிற்கு வளர்ந்த ஒரு செடியுண்டு. அதை அடியோடு பெயர்த்தெடுப்பதுபோல் தான் நிரடிச் செல்லும் கதவு. வாரத்திற்கு மூன்று முறையேனும் தோட்டக் கதவு திறந்து மூடப்படும். முவ்விரண்டு மொத்தம் ஆறு முறை நாயடி பேயடி வாங்கியும் அந்தச் செடி கருகருகருப்பாயியில் பிரபுதேவா வளைந்து கொடுப்பதுபோல வளைந்து இன்றும் வாழ்ந்து வருகிறது. 


இப்போது அவரவர்கள் தத்தமது வீட்டுக்குள் வளர்க்கும் செடிகளோடு இதை ஒப்பிட்டுப்பாருங்கள்? நான் சொல்ல வருவது புரியும்.


வீட்டுக்குள் வளரும் செடிகள் 2கே கிட்சுகள் போல. வெளியே வளருபவை 80ஸ் கிட்சுகள். (இந்த ஒப்புமை ஏன் எதற்கு என விரிவாகச் சொன்னால் அந்த வரிகள் மட்டுறுத்தப்படும் என்பதற்காகத் தவிர்க்கப் படுகிறது. மேலும் ஆர்வமிருப்பவர்கள் “தலைவாரச் சொன்னதற்காக மாணவன்” என கூகுளிடவும்)


இப்போது ஏனிந்த pet vs wild என்ற எழுத்து வருகிறதென்றால், சில சமயங்களில் வேலையின் கரணமாகவோ கவனமின்மையின் காரணமாகவோ அதிமுக்கியமாக மறதியின் காரணமாகவோ செடிக்குத் தண்ணீரூற்ற மறந்துவிட நேரிடும். 


இங்கே என் ஞாபகவூனம் குறித்த சில வாக்கியங்கள்: காலையில் பசிபோக்க இருபது நிமிடங்கள் நின்றபடி நின்று சரிவிகிதாச்சாரத்தில் டீத்தூள், கிராம்பு, இடித்த இஞ்சி, உடைத்த ஏலக்காய், துருக்கித் தேன் (மட்டமாக இருக்கிறது, வாங்காதீர்கள்) ஆகியவற்றைப் பாலில் கலக்கி டீ போட்டு டேபிளில் வைத்தபின் லேப்டாப்பைத் திறந்து வேலையில் மூழ்கி, கண்ணெதிரே இருக்கும் அந்தட் டீயையே மறக்கும் அளவிற்கு சுதாரிப்பு எனக்கிருக்கிறது. அத்தகைய நான் செடிக்கு நீரூற்ற மறப்பது இயல்புதானே? இதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் கோபிக்கும் என் செடி. கோபிக்கும் என்றால், நிஜமாகவே கோபிக்கும். 


பொதுவாக, நீரில்லாத செடி தளர்ந்து சூம்பிப்போயிருக்கும். அதிலிருக்கும் இலைகளனைத்தும் ப-வைக் குப்புறப் போட்டாற்போல் கவிழ்ந்து கிடக்கும். மயக்கமுற்ற ஒருவனைக் கையிலேந்தித் தூக்கி வந்தால் அவனின் தலைகள் (இரண்டு தலை கொண்டவன்), கை மற்றும் கால்கள் எப்படி தொங்கிப்போயிருக்குமோ அப்படித்தானே செடியின் இலைகள் தொங்கிப்போயிருக்கும்? 


உணவின்றி மயங்கிச் சரிபவன் பப்பரக்காவெனதானே விழுவான்? ஆனால் இது அப்படிச் செய்யாது, எப்போதும் மலர்ந்த இதழோடு பார்த்த என்னை, நான் நீரூற்ற மறக்கையிலெல்லாம் பார்க்கப் புறக்கணித்து, ஒவ்வொரு இலையிலும் என் மீது கோபித்துக்கொண்டு தன் முகத்தைத் திருப்பிக்கொள்ளும். நான் பொய் சொல்லவில்லை மக்களே, பார்க்க படத்தை. 




இதற்கு உயிர், அறிவு மட்டுமல்ல, உணர்வும் இருப்பது அப்போதிருந்துதான் உணர்ந்துகொண்டேன். இப்படியொரு நொடித்த முகத்தைக் காண எந்த மனத்துக்குத்தான் மனமிருக்கும்? அதன்பின் அதற்கு நீரூற்ற மறக்காததோ. நீர் மட்டுமல்லாது, பசும்பாலும் ஊற்றத் துவங்கியதுமொ முக்கியமில்லை. வேலைக்குக் கிளம்புகையில் அதைச் செல்லமாகத் தட்டிவிட்டு bye சொல்வது, வீட்டுக்கு வந்ததும் அதைக் கசக்கிவிடாமல் கட்டியணைப்பது, நேரம் போகாதபோது அதனுடன் பேசி வம்பிழுப்பது எனக் கொஞ்சம் கொஞ்சமாக அதனுடன் interaction அதிகரித்தது. வீட்டுக்குள் என்னைத் தவிர மற்றொருவர் இருப்பது போன்று மனம் உணர ஆரம்பித்தது. 



“சரி ஒங்கிட்ட பேசுறனே, ஒனக்கு அது எதாச்சும் புரியுதா?”


… 


“என்ன மரமாட்டம் நிக்கற, எதாச்சும் பதில் சொல்லு…”



“மொளச்சு மூணு எல விடல, அதுக்குள்ள இறுமாப்பப்பாரு, கேட்டுட்டே இருக்கேன், அசையிதானு பாரேன்…”



“ஒருவேள நா பேசுறது புரியலையோ? ஒனக்கு என்ன மொழி புரியும்? கல் தோன்றா மண் தோன்றா முன் தோன்றிய தமிழ் புரியாதா ஒனக்கு?”



எந்தச்சலனமுமின்றி வான் பார்த்து நின்றது அச்செடி. 


‘குழந்தைகள் மொழியைப் பயில்வது அதன் பெற்றோரை வைத்தா அல்லது அது வளரும் சுற்றத்தை வைத்தா? இந்தச் செடியைப் பரிசளித்தவள் போர்ச்சுகீசு பேசுவாள், ஒரு வேளை இதற்கு அந்த மொழி பேசினால்தான் புரியுமோ? அல்லது அவள் பாய்ப்ரெண்டு பிரிட்டிஷ். அவர்களிருவரும் வீட்டில் ஆங்கிலம் தான் பேசுவர், ஆகவே ஆங்கிலம் தான் அண்டர்ஸ்டேண்ட் ஆகுமோ? இவை எல்லாவற்றிற்கும் முன் இது டச்சுக்கடையில் வாங்கப்பட்டது. எனவே அதிகமாகக் கேட்டது டச்சாகத்தானிருக்குமோ? Moet ik Nederlands spreken? ஆனால் இவையெல்லாம் இச்செடி நர்சரி இன்குபேட்டரில் இருந்தபோது நடந்தவை. கண் விழித்ததும்தான் என்னிடம் வந்துவிட்டதே? அதன்பின் அது கேட்டதெல்லாம் தேவா வித்யாசாகர் ஏஆர் ரஹ்மான் பாடல்கள் மற்றும் தமிழ் தானே? குழந்தைகள் வளரும்போது கேட்கும் மொழிதானே பழகுவர்? அப்ப ஒனக்கு அதிகம் தெரிஞ்சதும் தமிழாத்தான் இருக்கணும்’ என மனத்திற்குள்ளேயே சிறிய நீயாநானா நடத்தப்பட்டது.



“சரி அதெல்லாம் விடு, இப்ப ஒனக்கு நா பேசுறது புரியுதுன்னா லைட்டா அசையேன்"



“செடிலாம் அசையாதுன்னு சொல்லவும் முடியாது. தொட்டாச்சிணுங்கிலாம் அசையுதுல்ல. தண்ணி ஊத்தலன்னா மூஞ்சத்திருப்பத்தெரியுதுல்ல, இப்ப லௌவ் பண்றப்ப அசஞ்சு குடுத்தா என்ன?”



“சரி, அசையத்தான் முடியல, கலராச்சும் மாறிக்காட்டேன்"



என்ன பேசினாலும் சரி, அசைவேனா என்றது அச்செடி. நாட்கள் செல்லச்செல்ல, நான் அச்செடியோடு பேசும் தருணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. என்ன பேசினாலும் அது மறுபேச்சு பேசுவதாக இல்லை. இருந்தும் நானும் விடவில்லை. பிடிகொடுக்காத காதலின் பின்னால் தானே விடாமல் செல்வோம்? அதுதானே மனிதச் சிதைவு? 


தண்ணீர் ஊற்றும்போதும், அதைக் கடக்கும்போதெல்லாம் ஏதேனும் ஓரிரு வார்த்தை பேசாமல் மறுவேலைக்குச் செல்வதில்லை. 


ஒருநாள் உறக்கத்திலிருக்கையில் ஏதேதோ கொடூரக்கனவு. எதிலிருந்தோ உயிர்தப்பிச் செல்லும் பெருமுனைப்பு. ஆனால் தப்பமுடியாமல் எதற்குள்ளோ சிக்கித்தவித்தேன். அப்போது திடீரென கனவிற்குள் ஓரொலி. குரலெதுவும் ஒலிக்கவில்லை, ஆனால் மனதுக்குள் அந்தக்குரல் சொல்ல விழைவது உரைத்தது. 


‘நீ பேசுறது அதுக்கு புரியலன்னு நெனைக்குற. அது உங்கிட்ட பேசமாட்டுதுன்னு நெனைக்கற. ஒனக்குத் தெரிஞ்ச வகைல நீ அதுட்ட பேசுற. அதே மாதிரி ஒனக்குப் புரியறாப்ல அது நிறத்தாலயோ அசைஞ்சோ பதில் பேசணும்னு நெனைக்கற, அதுகளோட communication இதெல்லாம் இல்லாம வேறையா இருந்தா? அந்த முறை ஒனக்குப் புரிஞ்சுக்க முடியாம இருந்தா? இத்தன நாளும் அந்தச் செடி ஒனக்கு பதிலுக்கு பதில் அதோட வழியில பேசிட்டுதான் இருந்தா?’ இது உரைத்ததும் சட்டெனத் தூக்கம் கலைந்தது. கையை மடக்கி அதன் மேல் குப்புறப்படுத்திருந்ததால் கைமுழுவதும் மின்சார ஜிவ். மிகமிகமிக அதிகத் தண்ணீர் தாகம். அருகிலிருந்த போத்தலைத் திறந்து நீரருந்தியபின், எழுந்து சென்று செடிக்கும் கொஞ்சம் ஊற்றலாமெனப் போனேன். 


‘வேணாம், நீயும் இப்ப தூங்குவ. தண்ணி ஊத்தினா ஒனக்கு தூக்கம் கலையும். காலைல ஊத்தறேன்' எனக்கூறி மீண்டும் அறைக்குத் திரும்பினேன். நுழையுமுன் அச்செடியை எட்டி ஒருமுறை பார்த்தேன். ஃபேண்டசி படங்களில் இப்படித்தானே நாம் கவனிக்காதபோது நமக்குப் பின் ஏதேனும் மேஜிக் நடக்கும். அப்படி எதுவும் நடக்கிறதா என எட்டிப்பார்த்த நான் அந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ந்தேன் எனச் சொன்னால் அது பொய். அப்படி ஒரு எளவும் நடக்கவில்லை. நான் மீண்டும் படுத்து தூக்கத்தைத் தொடர்ந்தேன். 


மறுநாள் ஆம்ஸ்டர்டாமிலிருக்கும் ஒரு மியூசியத்திற்குச் செல்வதற்காகப் புறப்பட்டேன். புறப்படுமுன் பையில் சாப்பிட நொறுக்குத்தீனி, நீர், குடை இன்னபிற இத்யாதிகளை அந்தச் செடி பார்க்கவே எடுத்து வைத்தேன். 



“என்ன பாக்குற? நா ஊருக்குப் போறேன்"



“நீதான் பேசவே மாட்றியே. தனியா ரொம்ப போரடிக்கிது. ஊர்லந்து வர ஒரு மாசம் ஆவும். அதுவர ஒனக்குத் தண்ணியும் கெடயாது ஒண்ணும் கெடயாது.”


… 


“ஒரு மாசம் தப்பிப் பொழச்சன்னா பாப்போம். நானும் அத்தன தடவ பேசிப்பாக்குறேன் கட்டிப்புடிக்கிறேன். கொஞ்சமாச்சும் எதாச்சும் பதிலுக்கு பேசுறியா? இல்ல எதாச்சும் சிக்னலாச்சும் குடுக்கறியா? எதூமே இல்ல. நா தனியாவே பேசிட்டிருக்கதுக்கு நீ எதுக்கு. அதுக்கு நீ இல்லாமயேகூட பேசிட்டிருப்பனே? போ போ. ஒருமாசம் தனியாக் கெடந்தாதான் ஒனக்கு புத்தினு ஒன்னு இருந்தா வரும்.”



(எனக்குள் சத்தமாக) “ப்லேன் டிக்கட் எல்லாம் சேவ் பண்ணியாச்சுல்ல. ம்ம்ம். இருக்கு இருக்கு. அப்பறம் ஊருக்கு போவ முடியாதமாதிரி ஆகிடும்"



“சரிப்பா கடைசியா கெளம்பறதுக்கு முன்ன கேக்கறேன். எதாச்சும் பேசுறதா இருந்தா பேசு. ஊருக்குப் போனா ஒரு மாசமாகிரும். அப்பறம் பாக்க முடியுமோ முடியாதோ”



“ஆக, எதுவும் அசஞ்சு குடுக்க மாட்டீங்க. அப்டிதான? சரி போ. நா கெளம்பறேன், போகமுன்ன கடைசியா ஒருக்கா தண்ணி ஊத்திட்டுப்போறேன்” என ஒரு டம்ளர் நீரூற்றினேன். 


பையை முதுகில் மாட்டியபின், “கெளம்பறேன்" என அதனிடம் சொல்லி ஒருமுறை Adieu அணை அணைத்தேன். 


ட்ரெய்னுக்கு நேரமானதால் வேகமாகக் கிளம்பி ஸ்டேசனை நோக்கி நடக்கத் துவங்கிய இரண்டாவது நிமிடம் ஒரு கடப்பாரையை காது வழியே தலையில் இறக்கியதுபோன்ற ஒரு வலி. அத்தனைப் பெரிய காதுத் தலைவலியை அதுவரை அனுபவித்ததே இல்லை. ஒரு கணம் நிலைகுலைந்து தலையைப் பிடித்தபடி ரோட்டிலேயே சிறிது நேரம் அமர்ந்துவிட்டேன். தொடர்ந்து வலி அதிகரிக்க, திரும்ப வீட்டிற்கு நடந்து, கதவைத் திறந்து நுழைந்தேன். 


அதே இடத்தில், அசையாமல் அப்படியேதான் இருந்தது செடி. 


Btw, எங்கே அந்தத் தலைவலி?

 




உ.தி.ரி.க.ள் சிற்றிதழின் உலகளாவிய சிறுகதைப் போட்டி 2023ல் பரிசுபெற்ற கதை. 

Comments

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

சுன்னத் கல்யாணம் ரிட்டன்ஸ்

இரைவி