Thursday, 6 October 2016

சுன்னத் கல்யாணம் ரிட்டன்ஸ்


வாழ்க்க ஒரு வட்டம்டான்னு வருங்கால முதல்வர் விஜை  ஒரு படத்துல சொல்லிருப்பாரு (CM ஆகிடுவார்ல?). அது உண்மதானோன்னு நெனைக்க வச்சிடுச்சு போன மாசத்துல ஒரு நாள். ஆமா! இருவது வருசங்கழிச்சு எஸ்டீடி ரிட்டன் ஆப் த ட்ராகனாச்சு.

அது என்னது ரிட்டன்ஸ்? அப்ப இதோட ப்ரீக்வல் என்னன்னு கேக்கறவங்க இங்க போய் பாத்துக்கங்க.

அடியேனின் மருமகனாருக்கு சுன்னத் கல்யாணம் செய்ய ஒரு டேட் பிக்ஸ் செஞ்சாங்க. மெற்றாஸ் க்ரஸண்ட் ஆஸ்பத்திரில. காலை ஏழரைக்கெல்லாம் வரச்சொன்னாங்க.

கசாப்புக்கடைக்குப் போறது தெரியாம கோழிக்குஞ்செல்லாம்… சாரி.. கோழியெல்லாம் குஷியாருக்குமே, அப்டி குதூகலமா இருந்தார் மருமகனார். அடியேய், ஒன்னோட குதூகலத்துல இன்னுங்கொகொஞ்ச நேரத்துல குச்சிய விட்டு ஆட்டப்போறாங்கடியோவ்னு நெனச்சிக்கிட்டேன். அதுவும் அவனுக்கு இருப்பதோ மிகச்சிறிய குதூகலம். கடுகு சிறுத்தாலும் அதில் உண்டாகும் காயம் பெரிதுதானே. பாவம் எப்படி சமாளிக்கப்போகிறானோ என்ற ஐயப்பாடும் இருந்தது. சொன்ன நேரத்துக்கு ஆஸ்பிட்டல் போனா அங்க ஈ காக்கா இல்ல. வெய்ட் பண்ணுங்க வருவாங்க என்று ஒரு புலூ சட்டைக்காரர் தெரிவித்தார். 

வெய்ட்டிய போது, முதன்முதலில் இந்த நுனிகழர்வுக் கலாச்சாரம் எப்படி ஆரம்பித்திருக்கும்னு யோசிச்சேன். ஆக்ச்சுவலி வெட்ட வெட்ட நகம் வளர்றதப் பாத்த ஒரு க்ராமத்து க்ரகாம்பெல், ‘சரி இதையும் பண்ணிப்பாப்போமே, சப்போஸ் வளந்தா மைனர் ***, மேஜர் *** ஆகி சுத்து வட்டாரத்துலயே ரெம்ப பேமசாயிடலாம்’னு செஞ்சிருக்கக்கூடும். மிஷன் ஃபெய்ல்டாய்ருக்கும். ப்லட் லாஸ்தான் மிச்சம்னு ஆப்ரேஷன அபார்ட் பண்ணிருப்பாப்டி. 

ஹிப்பீஸ் ஊர்ல மொட்டையடிச்சவன் வித்தியாசமாத் தெரிவான்ல, அப்டி அன்னாரின் ஆர்க்கிடெக்ச்சரல் சேஞ்ச் வாட்சாப்பில்லா வசந்தியாய் ஊர் பூராம் பரபரவென்று பார்வேடாயிருக்கும்ங்குறது அண்டர்ஸ்டாண்டபுள் தான. காமன்மேன்லாம் ‘இங்கேருடா புது பேஸன்’ என அவங்களும் பண்ணத்துவங்கி இருக்கலாம். அப்போல்லேர்ந்து தொட்டுத்தொடரும் ஒரு வெட்டுப்பாரம்பரியமா இது வந்துட்டிருக்கலாம். அதில் தடம் பதிக்கப்போகும் மருமானை வாஞ்சையோடு பார்த்தபடி இருந்தேன். (முந்தின வாக்கியத்து மொத வார்த்தைய அப்போலோலேர்ந்துன்னு படிச்சவன்லாம் கைதூக்குங்க). 

ரொம்ப போரடிச்சது. சர்கம்சிஷனுக்கு வெய்ட் செய்யும்போது கேட்க வேண்டிய Subtleலான சிக்ஸ் பாடல்கள்னு ஒரு லிஸ்ட் போட்டேன்:
  1. அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
  2. சின்ன சின்ன ஆசை…
  3. சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே… சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே…
  4. சின்ன சின்ன வண்ணக்குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா…
  5. சின்னத்தம்பி படத்திலிருந்து, “குயிலப்புடிச்சி கூண்டிலடச்சி கூவச்சொல்லுகிற உலகம், மயிலப்புடிச்சு கால ஒடச்சி ஆடச்சொல்லுகிற உலகம்”
  6. கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட… (அந்தப்பாட்ல ரஜினிசார் போட்டுருக்க செவப்பு துவாலத்துண்டுதான் ‘துண்டானவ’ங்களுக்கு பெரும்பாலும் ஒருவார யூனிஃபார்ம். அதான் இத சேத்தேன். வேற எந்த ரைமிங்குக்குமில்ல)
Last but not the least, “முக்காலா.. முக்காபுலா.. லேலா” இல்லாம எப்புடி?

டைம் ஆக ஆக, கூட்டம் வர ஆரமிச்சுது. தினுசு தினுசா மக்கள். பீப்பில் வாச்சிங் மாதிரி ஒரு சிறந்த டைம்பாஸ், விகடன் டைம்பாஸ் கூட இல்ல. 

ஒரு 5/6 வயசு பையனைத் தூக்கிட்டு ஒரு பேமிலி வந்துச்சு. அவங்க இன்னும் பழய மெத்தடுலயே இவ்வரலாற்றரிய நிகழ்வக் கொண்டாடுறவங்க போல. பையனுக்கு புது டிரெஸ்ஸு — குஞ்சம் வச்ச ஷெர்வானி, பகுடர் குல்லாயெல்லாம் போட்டு அமர்க்களப்படுத்திருந்தாங்க. ஆனா ஒன்னு, இந்த பாய்ங்க லாஜிக்க புரிஞ்சுக்கவே முடீல. தொறந்து கெடக்குற தலைக்கு தொப்பிய போட்டு மூடுறாங்க. தன்னால மூடிக்கெடக்க எடத்த வெட்டி தொறந்து உட்டுர்ராங்க. 

அப்புறம் கொஞ்ச நேரத்துல ஒரு Hindu ஃபேமிலி வந்தாங்க கைக்கொழந்தயத் தூக்கிட்டு. அதோட அப்பாட்ட பேச்சோட பேச்சா யாருக்கு சர்கம்சிஷன் ஒங்களுக்கான்னேன். அவர் சட்டுன்னு பதறிப்போய் ‘இல்லங்க பையனுக்கு’ன்னாரு . பாவம் வாய் தவறி ஆமாம்னு சொல்லிட்டா டக்குனு ஒருத்தர் வந்து இழுத்துட்டுப்போயி கபாப் போட்டு கைல குடுத்துருவார்னு பயந்துட்டார்போல. அவரோட கண்ல க்ஷண நேர மரண பயத்தப்பாத்தேன் (அந்த கொழந்தைக்கு அங்க இன்ஃபெக்‌ஷன் வராம இருக்க டாக்டர் பண்ணச்சொன்னாராம்). 

கூட்டம் சேரச்சேர கிய்யாமுய்யானு ஒரே சத்தம். ஒரு பாயம்மா அவங்க வீட்டுக்காரர்ட்ட புலம்பல். 

“மெடிக்கல் சிட்டைல புள்ள பேரு பயாஸுக்கு Fஃபு போடுறதுக்கு பதில் B போட்டுட்டாங்கங்க”

(அந்தம்மா Fayazங்குற பேரயே Bayasநு தான் சொல்லுது. அதக்கேட்டு ரசீது குடுக்குறவன் Bayasநு எழுதிருக்கான் பாவம். இந்தம்மாக்கு ழானாவும் வர்ல ஷாணாவும் வர்ல, ஆனா பேரு மட்டும் தேவேலிப்பி அரபில எழுதணுமாம்.)

அதுக்கு அந்த பாயம்மாவோட அஸ்பண்ட் பாயி, “சரி விடுடி, ஒரு எழுத்துதான மிஸ்டேக்கு”ன்னாரு.

ஆனா அந்தம்மா “அதெப்டிங்க உடமுடியும்? இதனால நாளைக்கி பையன் future பாதிச்சிருச்சுன்னா?” அப்டின்னுச்சு. அடேய்.. குஞ்ச கட் பண்ற ரசீதுல ஒங்களுக்கு என்னடா பீச்சர் இருக்குன்னு எனக்கு ஒரே கன்ப்பீசன்.

நேரம் ஆக ஆக கூட்டம் ஜாஸ்தியாச்சு. வரப்ப வெறும் வயித்தோட கொண்டு வாங்கன்னு சொல்லிருந்தாங்க. எனக்கு கபகபன்னு செம்ம பசி. டேய், வெறும் வயிறுன்னு சொன்னது ஆப்ரேசன் பண்ண வந்தவனடா, எல்ப்பரா ஆட்டோ புடிச்சுக் குடுக்க வந்தவன இல்ல.. கொழப்புறானுங்களேனு ஆகிப்போச்சு. வீட்ல யாருமே சாப்டாம வந்ததால தனியாப்போயி திங்கவும் மனசு வல்ல. சுத்துமுத்தி பாத்தேன். அங்கருந்த புள்ளைங்க ஒவ்வொன்னும் ஒவ்வொரு அக்கப்போர் பண்ணிட்டிருந்துதுங்க. எந்தக்குழந்தையாச்சும் சேட்டை பண்ணினா ‘இழுத்துட்டுப்போய் கட் பண்ணிருவேன்’னு சொல்ல லாஜிக்கலி மிகச்சரியான இடமா அது பட்டது. அப்புடி நடந்தா அந்தப் புள்ள அப்புறம் ஜென்மத்துக்கு எதும் தப்பு செய்யாது.

ஒரு ஆயம்மா வந்து, ‘கொழந்தயத் தூக்கிட்டு கொழந்தயோட அம்மா மட்டும் உள்ள வாங்க’ன்னாங்க. உடனே அங்க ஒரு பரபரப்பு. உள்ள போறப்ப கொழந்தைக்கு ப்ரேஸ்லெட் செய்ன் போட்டுருக்கக்கூடாதுன்னு சொன்னாங்க. செய்ன் போட்டுருந்த ஒரு பையன்கிட்டருந்து அவங்கம்மா கழட்ட, அவன் அழ, டொமினோஸ் எபெக்ட்டா அவனப்பாத்து எல்லா புள்ளயும் அழ, சடுதில அங்க ஒரே களேபரம். 

ஒரு பையன் ஓவரா வீலுவீலுன்னு வீறினான். சமூக சேவ செய்யலாம்னு அவங்கிட்டப்போயி, “தம்பி அழக்கூடாது. அழுதா எஸ்டா ஒன்ற இஞ்ச் கட் பண்ணிருவாங்க”ன்னு நாஞ்சொல்ல, அங்கருந்த ஒரு ஆண்ட்டிக்கு அந்த ஒன்ற இஞ்ச்சுங்குற வார்த்த என்னத்த ஞாபகப்படுத்துச்சோ, புருசனப்பாத்து பாத்து கலாய்க்குறாப்ல ஏளனமாச் சிரிச்சிது. அந்தாளு என்ன மொறைக்குறான். நல்லதுக்கே காலம் இல்லஜி.

புள்ளைங்களோட தாய்மார்ஸ் ஹாலுக்குள்ள போனாங்க.  நா ஆஸ்பத்திரில ரௌண்ட்ஸ் போனேன்.

                       
காமராஜர் காலத்துல கவர்மெண்ட் ஆஃப் மெட்ராஸ்

                       
நெருப்புல எதுடா சுத்தம் அசுத்தம்?

                       
பல் டாக்டர் வாசல்ல இந்த வெளம்பரம். யார்ராவன் சர்கம்சிஷன் டாக்டர் வாசல்ல என்ன இருந்துதுன்னு கேக்கறவன்?

                
தட் ஊருக்கெல்லாம் எஸ்டாவா துருத்திட்டிருக்குறத வெட்டுறியே செவ்வாழ, ஒங்கிட்ட இருக்குறத எப்ப திருத்தப்போற? மொமண்ட் in Name Board.

வெளிய சுத்திட்டு உள்ள வந்து பாத்தா பூரா வெய்ட்டர்ஸும் தல கவுந்து மொபைல நோண்டிட்டு இருந்தாங்க. எவ்ரிபடி. இனி வரக்கூடிய காலங்கள்ல எலும்பு தேய்மான டாக்டருக்கு நல்லா கல்லா கட்டும். மார்க் மை வேர்ட்ஸ்.

சரி மச்சான்கிட்ட எதாச்சும் மொக்க போடலாம்னு போனா அவரு கேண்டி க்ரஷ் வெளாண்டுட்டு இருந்தாரு. மச்சான், உள்ள மவனோட கேண்டியவே க்ரஷ் பண்ணப்போறாங்க, நமக்கு இப்ப இந்த ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிடீஸ் தேவையான்னு கேட்டா ‘போரடிக்கிது மாப்ள’ன்னு சொன்னாரு. அதுவுஞ்சரிதான்னு நா டிண்டர கிண்ட ஆரமிச்சுட்டேன்.
வீ ஆர் அத்லெடிக்ஸ் பேம்லி யூ க்நோ

திடீர்னு அங்க ஒரு சலசலப்பு. சர்கம்சிஸ ஹால தொறந்தாங்க. எல்லாப்புள்ளைகளும் அம்மா மடியில அழுதுட்டு கெடந்துதுங்க. அங்கங்க அம்மாக்களும் கூடப்போன பாட்டிகளும் ஒரே அழுக. எதோ கின்னஸ் ரெக்கார்டுக்காக வரிசையா ஒரே நேரத்துல வெட்டிப்போட்ட மாதிரி எல்லார் மடிலயும் புள்ளைங்க கெடந்துதுங்க. ஒவ்வொரு பையனோட <ஜெண்டில்மேன் பட ப்ரொட்யூசர்> மேலயும் மஞ்சக்கலர்ல சொலூஷன் ஊத்தி ஒரு ப்ரௌனிஷ் யெல்லோ ப்லாஸ்திரில சுத்தி இருந்துச்சு. பாக்கறதுக்கு Mini size ஷவர்மா மாதிரி இருந்துது. 

ஒரு பாட்டிம்மா எம்ஜார் செத்தப்ப சில லேடிஸ் அழுதாப்ல பேரனோடத பாத்துப்பாத்து ஓவர் அழுகாச்சி. நம்ம மருமகன் சிரிச்சிக்கிட்டு கெடந்தான். எனக்கு ஒரே ஆச்சரியம். வலியில்லா கழித்தல்ல மெடிக்கல்ஸ் டெக்நால்ஜி இம்ப்ரூட் சோ மச் போலன்னு, "மகிழ்ச்சி" மோட்ல இருந்த அவன முன்னுதாரணமா வச்சு மத்த அழுதிட்டிருக்க கொழந்தைங்கள ஆற்றுப்படுத்துனேன். 'கு'றிப்பிட்ட ஸ்தலத்துல அவ்ளோ பெரிய களேபரம் நடந்திருந்தாலும் எந்தப்புள்ளைக்கும் நிலவியல் ரீதியிலான மாற்றம் எதுவுமே கண்ணுக்கு தெரியல. ஏதோ ஒன்னு மிஸ்ஸாகுதேன்னு உறுத்துச்சு. 

அங்க இருந்த நர்ஸாயாகிட்ட முடிஞ்சுதா கெளம்பலாமான்னு கேட்டேன். இப்பதான் அனஸ்தீசியா குடுத்துருக்கோம் ஆப்ரேஷனுக்கு இன்னும் ஒரு மணி நேரமாச்சும் ஆவும்னாங்க. 
இன்னும் போகியே போடல,  அதுக்குள்ள பொங்கப்பான பொங்கிருச்சுன்னு ஊளயிட்டுட்டுருக்குதுகளா இதுகன்னு அழுது வடிச்ச பாட்டிகிட்ட திரும்பி, 'ஏ கெளவி,  இன்னும் கட்டிங்கே நடக்கலயாம், ஆனா இருந்த ஒரு பாடியும் போச்சேன்னு அழுது ஊரக்கூட்றியா நீ? கடிச்சுவெக்கக்குள்ள ஓடிரு'ன்னுட்டு அங்கருந்து கெளம்பிட்டேன். சரியான அடேய் அடீய் அடடீய் மொமண்ட் ஆகிப்போச்சு.

எல்லாப்புள்ளைக்கும் அனஸ்தீசியா & டிஞ்சர் மாதிரி ஒன்னு போட்டு டோக்கனும் குடுத்துருந்தாங்க. நம்மவருக்கு டோக்கன் நம்பர் எட்டு. 
உன் டோக்கனோ எட்டு
அதனால்தான் உனக்கு இன்று வெட்டு
இப்டி ஒரு கவித சொன்னேன். பேசிக்கல்லி பாய்சுக்கு கொஞ்சம் இலக்கிய பரிச்சயம் கம்மின்றதால யாரும் இத சிலாகிக்கல. #சாரிஜெமோ

ஒன்னவர் கழிச்சு பில்டிங்கே அதிரும்படி ஒரு வீல் கேட்டுச்சு. ரைட்டே! சம்பவம் ஸ்டார்ட் ஆகிருச்சேன்னு ஹாலுக்குள்ள போனேன். அங்க வெய்ட்டிங்லருந்த ஒரு பையன் துறுதுறுன்னு செம்ம ஆர்வக்கோளாறு. கொஞ்சம் விட்டா மகாநதி க்லைமாக்ஸ் கமலாட்டம் அவனே வெட்டிக்குடுத்துருவான்போல. அடக்கவே முடியல.

எல்லா மதர்ஸ் முகமும் வெளுத்துப்போயிருந்துது. வெய்ட்டிங் ஹால்லருந்து உள்ள ஆப்ரேஷன் ரூமுக்கு புள்ளைங்கள தூக்கிட்டு (பறிச்சிக்கிட்டு, to be precise) போனாங்க அந்த ஆயம்மா. அவங்க ஹாலுக்கு வந்தாலே புள்ளைங்க எல்லாம் உச்சஸ்தாயில choir பாட ஆரமிச்சுதுங்க. கற்பாற நெஞ்சு எனக்கே லைட்டா கலங்கிருச்சு. But for the greater good இத ஏத்துக்கிடத்தான் வேணும்னு ஒடம்ப இரும்பாக்கிட்டேன். ஆயம்மா வந்து மருமான பிச்சு கூட்டிட்டுப் போனாங்க. பைஞ்சு நிமிசம். பத்து வருஷமாட்டம் போச்சு. கொஞ்ச நேரத்துல அலறலுக்குன்னே அளவெடுத்து செஞ்ச மருமகனோட ப்ரத்யேகக் குரல் கேட்டுச்சு. அப்புறம் அவன தூக்கிட்டு வந்தாங்க. அவனுக்கு எப்டி இருந்துதுன்னா... இந்தா இந்த போட்டோவாட்டம்...


யெஸ், ஸ்தலம் மட்டும் சிதிலமடஞ்சு ரெட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் கலர்ல 'மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்... கும் கும்'..ன்னு கெடந்துது. ஆத்தாமைல, மச்சாங்கிட்ட 'என்ன மச்சான் இப்பிடி பண்ணிப்புட்டானுங்க'னதுக்கு, விடு மாப்ள, காச்ச மரந்தான் கல்லடி படும்னாரு. அட, இங்க காய்க்க முந்தியே கத்தி பட்டுருச்சேன்னு ஆட்டோ புடிக்க கெளம்பினேன். வீட்டுக்கு வந்தும் பையன் சமாதானமே ஆகவில்லை. 

சாமாதானம் பண்ணியரே புண்ணியர் சமாதானம் 
ஆகமாட்டார் பட்டாங்கில் உள்ளபடி 
எனும் குறளுக்கு ஒப்ப ஒரே ஒப்பாரி.

மூன்று நாள் கழித்து கட்டு பிரிக்க வரச்சொல்லிருந்தாங்க. அப்ப அங்க சுமார் 8-10 வயசு பையனும் வந்துருந்தான். மேல்மருவத்தூர் அம்மா பகவானுக்கு பயணம் போறாப்ல இடுப்புல செவப்புத்துண்டு கட்டிட்டுருந்தான். எங்களுக்கு முந்தி அவன் உள்ள போனதும் கேட்டுது பாருங்க ஒரு சத்தம். அவங்க ரிலேட்டிவ்ஸ் அத்தன பேரையும் கூப்புடுறான், அய்யய்யோ கத்தி கொண்டு வராங்க, அய்யய்யோ புடிச்சு இழுக்கறாங்க, அய்யய்யோ திருகறாங்க அய்யய்யோ சாகடிக்கிறாங்கன்னு  உச்சபட்ச டெசிபல்ல அலறினான். கண்டிப்பா அந்த டாக்டருக்கு காது டமாரம் ஆகிருக்கும். நா உள்ள எட்டிப்பாத்து 'டேய், பச்சக் கொழந்தைங்களே ஒரு வார்த்த பேசாம அழுதுட்டு மட்டுந்தான் போகுது, நீ என்னடா ரன்னிங் கமெண்ட்ரி குடுத்துட்டுருக்க சின்னப்பயலே'ன்னுட்டு ஓடியாந்துட்டேன். ஆனா பாவம் அவனுக்கு கட்டம் கட்டி வெளாண்டுட்டுருந்தாங்க பாஸ். 

பொறவு நம்மாளும் போயி கட்டு பிரிச்சு 'விடியாத இரவென்று எதுவுமில்லை, பிரியாத இடமென்றும் எதுவுமில்லை'ய்ய்னு அழுதுட்டு வந்தார். அடுத்து ஒரு 12 வயசுப்பையன் க்யூல இருந்தான். ஏனோ எனக்கு பலாப்பழ காமடி நெனவு வந்துச்சு. 

இந்த சர்கம்சிஷன எவ்ளோ சின்ன வயசுல பண்றமோ அவ்ளோ நல்லது. சீக்கிரமா ஆறிடவும் செய்யும். கொழந்த பொறந்து ஒரு மாசத்துலருந்தே பண்ணலாமாம். ஒரு வாரத்துல மருமானுக்கு சரியாகி நல்லா ஓடி சேர் மேல ஏறி பொருட்களத் தள்ளி ஒடச்சு விளயாடு பாப்பாவாகிட்டார். சுபம் கபிலவஸ்து.

சம்பவம் நடந்த இடத்தைக்காண இங்கே க்லிக் செய்யவும். (குறிப்பு: மனோதிடம் இல்லாதோர், நெஞ்சுவலியுள்ளோர், கு...ழந்தை மனம் கொண்டோர், லேடிஸ் தவிர்த்துவிடவும்)Sunday, 12 June 2016

இரைவி

ஆபீஸ்ல அலைபேசி அழைப்புகள் வந்தா ODCக்கு வெளிய போய் பேசுவோம். அன்னைக்கு அடிக்கடி வெளிய போறதும் வரதுமா இருந்தார் ஒரு fresher (பெண்). 
“என்னாச்சு? ஒரு மாதிரி இருக்க?”
“ஒண்ணுமில்ல”
இதுங்க ஒன்னுமில்லன்னு சொன்னா ஒரு லோடு மேட்டர் இருக்குன்னு அர்த்தம். கொஞ்ச நேரம் கேப் விட்டு, “என்னப்பா, ரொம்ப டென்சனா இருக்கமாதிரி தெரியுது? எதும் ப்ரச்சனையா?”ன்னு ஆட்டோக்ராப் சேரனின் கேர்டேக்கிங் டோனில் கேட்டதும் கண் கலங்கிவிட்டாள். 
“அட அழாதம்மா கொழந்த, என்ன மேட்டர்னு சொல்லு.”
“நான் சொல்றத யார்ட்டயும் சொல்லக்கூடாது”
“மாட்டேன் சொல்லு”
“ஒங்கள நம்பித்தான் சொல்றேன்”
“விசயத்துக்கு வா”
“சத்தியம் பண்ணுங்க யார்கிட்டயும் சொல்லமாட்டேன்னு”
அவள் கை சாஃப்டாக இருந்தது.
“எனக்கு ஒரு நம்பர்லருந்து தப்புத்தப்பா மெசேஜ் வருது”
“ஓ… யார்ட்டருந்து?”
“தெரீல..”
“என்னன்னு மெசேஜ் வருது?”
“ரொம்ப அசிங்க அசிங்கமா”
“கால் எதும் வந்துச்சா?”
“இல்ல வரல. நா கால் பண்ணாலும் எடுக்கல”
“என்ன மெசேஜ்?”
“சொல்லக்கூச்சமா இருக்கு”
“அப்ப ஃபோனக்காட்டு நானே பாத்துக்குறேன்”
“ம்ம்ஹும்ம்.. வேணாம்.. ரொம்ப அசிங்கமா இருக்கு”
“அட என்னன்னு பாத்தாத்தான யாரு எப்டின்னு ஒரு ஐடியா வரும்?”
“நீங்க யார்கிட்டயும் சொல்லக்கூடாது”
“அட தெய்வமே, சொல்ல மாட்டேன் தெய்வமே. போனக்குடு தெய்வமே”

வரிசையாக SMSகள். X எனும் பெயரில் காண்டாக்ட்டை சேவ் செய்திருந்தாள். பெரும்பாலான மெசேஜ்களில் அவளின் அனாட்டமியையும் அவற்றில் தான் செய்ய விரும்பும் காரியங்களையும் வர்ணித்திருந்தார் அந்த X. “ஒரு ஆங்கிலப்படத்தில் வரும் பார்க் சீனைக் குறிப்பிட்டு, அதுபோல் உன்னை…” என்ற மெசேஜ் மட்டும் கொஞ்சம் தேறியது. மீதி அனைத்தும் மூன்றாம் தர முப்பதாம் தர கெட்ட கெட்ட மெசேஜுகள். அவை அன்னாரின் பாலியல் வறட்சி, கற்பனை வறட்சி, பாலியல் கற்பனை வறட்சி ஆகிய மூன்றையும் பறை சாற்றின.

“இவன Block பண்ணாம ஏன் காண்டாக்ட்ட சேவ் பண்ணி வெச்சிருக்க?”
“யார்னு தெரியாம எப்டி ப்லாக் பண்றது? யாராவது தெரிஞ்சவங்க வெளாடுறதா இருந்தா?”
“ஓ! ஒங்களுக்குத் தெரிஞ்சவங்கள்லாம் இப்டிதான் வெளாடுவாங்களா? அதுவும் வயசுப் பொண்ணுட்ட? குட் குட்” 
“கிண்டலடிக்காதீங்க”
“எப்போல்லேர்ந்து இப்டி வருது?”
“ரெண்டு வாரமா”
“யாராருக்கும்னு எதும் கெஸ் பண்ண முடிஞ்சதா?”
“நல்லாத்தெரிஞ்ச யாரோ.”
“எப்டி சொல்ற?”
“என் க்ளாஸ்மேட்ஸ் பேரெல்லாம் தெரிஞ்சிருக்கு.”

~ ~ ~
கண்டபடி மெசேஜ் வந்த அந்த நம்பரை அம்மணியார் Block செய்யாது விட்டதோடல்லாமல், காதல் கொப்புளிக்க மெசேஜ் அனுப்பும் அக்குறுந்தொகைப் புலவர் யார் எனக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உயர் நோக்கில், தொடர்ந்து இவர் நம்பரிலிருந்தும், இவரின் தோழிகளின் மொபைலிலிருந்தும் அவருக்கு அழைப்புகள் விடுத்திருக்கிறார். போதாக்குறைக்கு, “நீ யார்? தைரியமிருந்தா என் கால அட்டன் பண்ணிப் பேசு”, “அட்டன் பண்ணாம பயந்து ஓடுறியே, நீ உண்மைலயே வீரனா இருந்தா கால் எடு” எனும் குலை நடுங்கச்செய்யும் வீராவேச மெசேஜுகளையும் அவருக்கு அள்ளித்தெளித்திருக்கிறார். இதை ஆஃப்பாயிலிஸம் எனச் சொன்னால் அதை சில புரச்சிப் பெமினிஸ்டுகளும் ஏனைய ஆபாயில்களும் ஆட்சேபிக்கின்றனர்.

~~~
அம்மணி ஆபீசில் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம் கழித்து திடீரென்று இவ்வாறு மெசேஜ் வரத்துவங்கி இருக்கிறது. இது குறித்து இவளின் கல்லூரி வாத்தியார் ஒருவரிடம் அம்மணியார் வருந்திச்சொல்ல, அவர் இவளின் கல்லூரியில் இருந்த அராத்து பையன்களை அழைத்து கண்டித்து விட்டிருப்பதாய்ச் சொல்லியிருக்கிறார். அந்த நொடியே ‘பாகுபலி.. பாகுபலி.. பாகுபலி’ என இவள் மனத்தில் அன்னார் உயர்ந்திருக்கிறார். அவர் கண்டித்ததாய்ச் சொன்ன அடுத்த நாளிலிருந்து மெசேஜுகள் இன்னும் தீவிரம் அடைந்திருக்கின்றன. இதுவரை சரோஜாதேவி ரக பாலியல் மெசேஜுகளை மட்டும் தாங்கி வந்த SMS, தற்போது கொலை மற்றும் ஆஸிட் வீச்சு போன்ற மிரட்டல்களையும் கொண்டிருந்தது.

“அந்த வாத்யார்ட்ட சொன்னியாமே. அவன் பெரிய ஹீரோவா? அவனோட மூஞ்சில இன்னிக்கி 4 மணிக்கு ஆசிட் அடிக்கிறேன். சாயங்காலம் சன் நியூஸ் பாரு. மூஞ்சி வெந்துபோன அவனக்காட்டுவாங்க” என அடுத்த மெசேஜ்.

நாலு மணி கெடு அம்மணியை நிஜமாகவே பாதித்துவிட்டது போலும். மூன்றரை மணியிலிருந்தே அழ ஆரம்பித்து விட்டார். மிகச்சரியாக நான்கே கால் மணிக்கு அந்த வாத்தியார் எதேச்சையாகக் கால் செய்ய, அம்மணியார் நடந்தவைகளைக் கூற, அதற்கு அவர், “அவன் என் நேர்ல வரட்டும் பாத்துக்கறேன்” எனக் கூறியிருக்கிறார். 

இது போன்ற சப்ஜெக்டை ஆல்ரெடி டீல் செய்திருக்கும் அன்புச்செல்வன் மீது ஒரு நல்லபிப்ராயம் இருப்பதால், போலிசுக்குப் போலாம் என ஐடியா கொடுத்தேன். “எங்க வீட்ல தெரிஞ்சா என்ன கொன்னுடுவாங்க. போலிசுக்கு போனா பேப்பர் டிவிலலாம் எம்பேரு வரும். பெரிய ப்ரச்சனையாய்டும்” என மீண்டும் அழுகை.

“ஆமா, ஒங்க செக்சு மெசேஜ காட்றதுதான் மீடியாவுக்கு இப்ப பர்னிங் டாப்பிக். அவனவன் விஸ்வரூபத்துக்குத் தடை போட்டுட்டாங்கன்னு காண்டுல இருக்கான், இவ வேற.”
“நீங்க சீரியஸ்னஸ் தெரியாம வெளாடறீங்க”
“ஆமாமா, அவனுக்கு ஒன்னோட நம்பர் கெடச்சது பத்தாதுன்னு ப்ரென்சோட நம்பர்லருந்து வேற கால் பண்ணிருக்க. நீ மாட்னது போதலன்னு மத்த மொட்டைகளையும் மாட்டி விட்டிருக்க. அவன் அவளுகளையும் டார்ச்சர் பண்ணா என்னடி பண்ணுவ? வெளாடுறாங்களாம்.”
“என் நம்பர அட்டன் பண்ண மாட்றான். அதான் அவங்க போன்லருந்து கால் பண்ணேன். அவன் யார்னு கண்டுபுடிக்க வேணாமா?”
“ஏன் அவனக் கண்டுபுடிச்சு முத்தம் குடுக்கப்போறியா?”
“அசிங்கமாப் பேசாதீங்க”
“ஆமா, நாங்க அசிங்கமாப் பேசுறோம். உன் சாண்ட்விச்சில் என் சாசைத் தெளிக்க வேண்டும்னு மெசேஜ் அனுப்புறாரே உங்க X, அவரு ஐகிரிநந்தினி பாடுறாரு. ஓடிப்போயிரு.”
“இப்ப என்ன பண்றது?”

“Unknown நம்பர்லருந்து வர மெசேஜ் கால ரெஸ்பான்ட் பண்ணாம விட்டாலே பொண்ணுங்களுக்கு பாதிப் பிரச்சன கொறஞ்சுடும். அதுக்கு மேல எதும் தொடர்ந்து வந்தா அந்த நம்பர ப்லாக் பண்ணிட்டாப் போதும். ஆனா அத செய்ய மாட்டீங்க. உங்களோட curiosityயதான் அவனுங்க Baitடா யூஸ் பண்ணிக்கிறானுங்க. They are all just attention seekers. அந்த attention குடுக்காம அவனுகள ignore பண்ணாலே problem solved. கொஞ்சமே கொஞ்சம் அறிவிருந்தாக்கூட இந்த மாதிரி கான்வோக்கள வளர விட மாட்டீங்க. இதச்சொன்னா ஆணாதிக்கம்னுவீங்க.”
“அய்யோ இப்ப என்ன பண்றது?”
“இவ்ளோ நேரம் சொன்னது எதையுமே காதுல வாங்கலல்ல நீ?”
“அது அப்பறம் பாத்துக்கலாம்”
“சரி போலிஸ்ட்ட போவோம். ப்ரச்சன சால்வ் ஆய்டும்”
“போலிஸ்லாம் வேணாம். நீங்க ஒங்க நம்பர்லருந்து அவனுக்கு கால் பண்ணிப்பாருங்க. எடுக்குறானான்னு பாப்போம்.”
“ஒங்க தாத்தா பேரென்ன?”
“எதுக்கு?”
“சொல்லேன்”
“செல்வம்”
“செல்வத்தோட ஆன்செஸ்டர்லருந்து இழுத்து நாரநாரயாக்கேப்பேன் இன்னொருக்கா அவனுக்கு போன் பண்ணனும்னு சொன்னன்னா.”
“போலிஸ்க்குப் போனா டிவில வரும். ப்ராப்லம் ஆகும். வேற எதும் பண்ண முடியாதா?”
“ஒங்க கற்பனக் குதுரய கொஞ்சம் ஓரமா விட்ட போடுறதுக்கு கட்டி போடுங்க. நா சொல்றதக் கேட்டா கேளு. இல்லன்னா ஆள விடு.”
“சரி, எதாருந்தாலும் என் பேரு வெளிய வரக்கூடாது. எங்க வீட்டுக்குத் தெரியக்கூடாது”
“வீட்டுக்குத் தெரியக்கூடாதுன்னு நீங்க சொல்ற வேலை பூராமே அக்யூஸ்டு வேலயாத்தாண்டி இருக்கு. ஒங்களல்லாம் வெளுக்கணும்”

தெரிந்த மேனேஜர் ஒருவரிடம் இப்பிரச்சினையைச் சொன்னதற்கு சைபர் க்ரைமுக்குச் சென்றால் ஒரு வாரத்தில் மேட்டர் முடிந்துவிடும் என்றார். 

சைபர் க்ரைம் ஆபிஸ் எழும்பூரில் இருந்தது. அம்மணியும், அடியேனும், துணைக்கு பல்க்காய் இருந்த ப்ராஜெக்ட் நண்பர் ஒருவரும் காலை 10 மணிக்குச் சென்றோம். சைபர் க்ரைம் புகார்களை கமிஷ்னரே நேரடியாக வாங்குவதாகவும், அதனால் பாதிக்கப்பட்டவரோ / கம்ப்லைண்ட் கொடுப்பவரோ மட்டுமே ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பின் அனுமதிக்கப்படுவர் என்றனர். இவளிடம் கம்ப்லெய்ண்டை எழுதிக்கொடுத்து, என்ன சொல்ல வேண்டும் என்பதையும் டியூசன் எடுத்துவிட்டு “ஜெய் பஜ்ரங்பலி” என வெற்றித்திலகமிட்டு அனுப்பினோம். என்னதான் கம்ப்லைண்ட் கொடுக்க வந்தவராயினும் அத்தனை போலிஸ் காக்கிகள், போலிஸ் வண்டிகளைப் பார்த்தபோது சற்றே கிடுக்கமாய்த்தானிருந்தது. கமிஷ்னர் வர மதியம் இரண்டு மணியாகும் என்பதாகவும் அதுவரை அவளை ஒரு அறையில் அமர வைத்திருப்பதாகவும் கால் செய்தாள்.

“நா வேணும்னா திரும்ப வந்துடவா? எனக்கு பயமாருக்கு”
“நீ கம்ப்லைண்ட் குடுக்காம மட்டும் வந்து பாரு மவளே செத்த நீ”

காலை பட்டினியோடு வந்தது வயிற்றைப் பதம் பார்த்தது. உச்சி வெயில் தாகத்தையும் சேர்த்து வழங்க, கிறுகிறுவென வந்தது. இன்னும் நான்கு மணி நேரம் அங்கே எப்படித் தாக்குப்பிடிக்க என்று தெரியவில்லை.

டாக்டரின் எச்சிலெண்டாலும் மருந்துதான் என்பதற்கொப்ப, கமிஷ்னர் ஆபீசுக்கு வரும் யாரைப்பார்த்தாலும் போலிஸாகவே தெரிந்தது. யாரையுமே ரெண்டு நொடிகளுக்கு மேல் கண்ணுக்குக் கண்ணாகப் பார்க்க தைரியம் வரவில்லை. எப்போதும் நம்மை யாரோ உற்றுப்பார்த்துக் கொண்டே இருப்பதுபோல் ஒரு ப்ரமை. 

“தனியாருக்க பயமாருக்கு. முடிஞ்சா வாங்களேன்” எனக் கால் செய்தாள். 
என்னோடு வந்த நண்பனை செல்லச் சொன்னதற்கு, “மச்சி, நா முடி வெட்டல. ஒரு மாதிரி ரௌடி லுக்ல இருக்கேன். நீயே போயேன்” என சீரியஸாகச் சொன்னான். ‘ஹல்க்குன்னு நம்பி ஒரு பீஸ் போன பல்ப்ப கூட்டிட்டு வந்திருக்கிறேன்’ என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். கமிஷ்னர் ஆபிஸ் இருந்தது எட்டாவது மாடி. ரிசப்ஷன் கீழே க்ரௌண்ட் ஃப்லோரில். அதற்குள் செல்வதற்கும் செக்கிங் இருந்தது. நான் உள்ளே செல்ல முற்பட்டபோது ஒரு சஃபாரி அணிந்திருந்த செக்கிங் காவலர்,
“என்ன விசயம்?” என்றார்.
“கம்ப்லைண்ட் குடுக்க கலீக் போயிருக்காங்க. மேல கூப்புடுறாங்க. அதான்..”
“கம்ப்ளைண்ட் குடுக்குறவங்க மட்டும் தன் உள்ள போகணும். மத்தவங்க அலௌட் இல்ல”
“ஆமா சார். எழுதிக் குடுத்தோம். இப்ப கமிஷ்னர் வர லேட்டாவுமாம். அதான் அதப்பத்தி பேச கூப்புடுறாங்க” என வாய்க்கு வந்ததை உளறினேன். ஆல்ரெடி உதறல் எடுக்க ஆரமித்து விட்டது. எதோ நினைத்தவர், “சரி Bagகத் தொறங்க"” என்றார். உள்ளே வெள்ளைக்காகிதங்கள், Wallet மற்றும் தொ. பரமசிவத்தின் பண்பாட்டு அசைவுகள்.
“இது என்ன புக்கு தம்பி?”
அவர் தம்பி என்றதும் கொஞ்சம் தைரியம் வந்தது. “இது பாத்தீங்கன்னா தமிழ்ல ரொம்ப முக்கியமான புக். தொ. பரமசிவம் எழுதினது” (அன்று காலையில்தான் படிக்க ஆரமித்தேன். முன்னுரையைக் கூட இன்னும் தாண்டவில்லை).
“எதப்பத்தி சொல்லி இருக்கு?”
“நம்ம தமிழர்களோட விழுமியம், அறம், பண்டைய வாழ்க்கை முறை, எதையெல்லாம் இழந்துட்டு வரோம், இப்டி ஒரு நீண்ட ஆய்வு” எனச் சரளமாக ரிப்பன் விட்டேன். 
“நல்லது தம்பி” என்று கூறி உள்ளே அனுமதித்தார். தொ.ப-வுக்கு ஒரு நன்றியைப்போட்டு, நெருப்புடா!!! நெருங்குடா!!! எனும் பிஜிஎம் இல்லாமலேயே கெத்தாக உள்ளே நுழைந்தேன். போலிஸ் கெடுபிடியை ஜஸ்லைக்தட் ஒரு புக்கை வைத்து சமளித்த வீரதீரத்தை 140க்குள் சொல்லியே ஆகவேண்டுமென உள்ளம் பரபரத்தது. சரி மொத்தமா சொல்லிக்கலாம் என ஃப்ரீயாக விட்டுவிட்டேன்.

ரிசப்சனில் வரிசையாக சேர்கள் போடப்பட்டிருந்தன. அதற்கு எதிரே இருந்த டேபில்களில் ஆபிசர்கள் எதெதோ எழுதியபடி இருந்தனர். அங்கே அனுமதி பெற்று எட்டாவது மாடிக்குச் சென்றால் கமிஷ்னரைக் காணலாம். யாரை அணுகுவது என்று குழப்பம் ஏற்பட்டது. எல்லோரும் எதாவது ஒன்றில் பிசியாக இருந்தனர். ‘வாட்டீஸ்த ப்ரொசிஜர் டு கோ டு எய்ட்த் ஃப்லோர் ஆப் தி கமிஷ்னர்’ எனக்கேட்க ஒருவரும் இருப்பதாய்த் தெரியவில்லை. சரி என்னதான் ஆகுதுன்னு பாப்போம் என ஒரு (லேடி) ஆபிசரிடம் சென்று விவரத்தைச் சொன்னேன். 

“கம்ப்லைண்ட் குடுத்தாச்சா” என்றார். 
“காலைலயே குடுத்தாச்சு. அவங்க மேல இருக்காங்க. அவங்கள பாக்கப் போகணும்” என்றேன். 
“கம்ப்ளைண்ட் குடுக்கறவங்க மட்டும்தான் மேல போணும். தோ அப்டி உக்கார்” என்று கூறிவிட்டு மறுமொழிக்குக் கூட காத்திராமல் வேலையில் மூழ்கிவிட்டார். மேற்கொண்டு அவரிடம் எதும் டௌட் கேட்டால் சந்தேக கேஸ் போட்டுவிடுவாரோ என்று பயம் வந்துவிட்டது. பைக்குள்ளிருந்து தொ.பரமசிவன் ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர் எனச் சிரித்ததுபோல் தோன்றியது. அங்கிருந்த வெய்ட்டர்ஸ் சேரில் அமர்ந்திருந்தேன். 

மிஸ்ஸிடமிருந்து ஒரு மிஸ்கால் வந்திருந்தது.

“கவலப்படாத, நீ இருக்குற பில்டிங்லயே க்ரௌண்ட் ஃப்லோர்லதான் இருக்கேன். இதுக்கப்புறம் இங்க அலோ பண்ண மாட்றாங்க. நீ கீழ வந்ததும் என்னப் பாக்கலாம். ஒனக்கு கிட்டக்கதான் இருக்கேன். தைரியமா இரு” என மறுகாலிட்டேன்.

கமிஷ்னர் வந்ததும் கம்ப்லைண்ட் வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டாராம். ஒரு நிமிட வேலை. 

“என்ன சொன்னார் கமிஷ்னர்?”
“எதும் இல்ல. பேப்பர வாங்கிட்டு நாங்க பாக்கறோம்னு சொல்லி அனுப்பிட்டார்”
“அவ்ளோதானா?”
“ஆமா. கம்ப்லைண்ட் வாங்கினதுக்கு ஒரு ஸ்லிப் குடுத்தாங்க. எதாச்சும்னா இந்த நம்பர்ல காண்டக்ட் பண்ண சொன்னாங்க" என்று ஒரு acknowledgment receiptடை நீட்டினாள்.

அவளை நண்பனுடைய பைக்கில் ஆபீசுக்கு அனுப்பி வைத்துவிட்டு நான் பஸ் பிடித்தேன். அகோரப் பசி.

அன்று மாலை அந்த வாத்தியார் கால் செய்து தான் மீண்டும் காலேஜ் ரவிடிப் பையன்களை மிரட்டியதாய்ச் சொன்னார். நாங்கள் போலிஸ் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கிறோம் என இவள் சொன்னதற்கு, “கம்ப்ளைண்ட்லாம் ஏம்மா? வீண் ப்ரச்சன வரும். நாந்தான் பாத்துக்கறேன்னு சொன்னேன்ல” என்றிருக்கிறார். 

மறுநாள். Xசிடமிருந்து எதும் மெசேஜ் வந்ததா எனக் கேட்டதற்கு எதுவும் வரவில்லை என்றாள். அன்று மதியம் வேறொரு நம்பரிலிருந்து இவளுக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசியது ஒரு பெண். “நான் தப்பா மெசேஜ் அனுப்பிட்டேன். மன்னிச்சுடுங்க. போலிஸ்க்குலாம் போனா என் வேல போய்டும். blah blah blah.” என அழுது கால் கட்டானது.

அது யாரென்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே அந்த வாத்தியாரிடமிருந்து மற்றொரு கால் — “என் ஒய்ஃப் தாம்மா இப்டி மெசேஜ் பண்ணிருக்கா. அவ ஒரு சைக்கோ. சரியான சந்தேகப்ராணி. நீ போலிஸ்க்கு போய்ட்டன்னு அவகிட்ட எதேச்சையா சொன்னதும் உண்மைய ஒத்துக்கிட்டா.”

வாத்யார் கால் கட் செய்ததும் மீண்டும் ஒரு கால். அதே பெண்மணி. “அவரு முந்தி மாதிரி எங்கூட பாசமா இல்லம்மா. எப்பப்பாரு ஃபோன்லயேதான் இருக்காரு. யார் யார்ட்டயோ வாட்சப்ல பேசறாரு, வீட்ல எங்கிட்டயோ கொழந்த கிட்டயோ சரியாப் பேச மாட்றாரு. யார்கிட்ட பேசறீங்கன்னாலும் பதில் சொல்ல மாட்றாரு. அவருக்கு தெரியாம போன் எடுத்துப் பாத்தேன். எல்லா மெசேஜும் அழிச்சிருந்துது. உங்கிட்டருந்து வந்த மெசேஜ் மட்டும் இருந்துது. அதான் ஒன்ன பயமுறுத்தி போக வெச்சுட்டா அவர் எங்கிட்ட வந்துருவார்னு பண்ணிட்டேன். தயவு செஞ்சு கேஸ வாபஸ் வாங்கிடும்மா. ப்லீஸ்.” அழுகை.

~~~
நம் victim அம்மணி காலேஜ் இறுதியாண்டு ப்ராஜெக்ட் செய்தது அவ்வாத்தியாரின் கைடன்சிலாம். அப்போதிருந்தே வாத்யாரோடு நல்ல Rapportடாம். வாத்தியார் காதல் திருமணம் செய்தவர். ஓர் ஒரு வயதுக் குழந்தையுமுண்டு. அவரின் மனைவியும் அதே கல்லூரியில் ஆசிரியை. கைடானதில் இருந்து நல்ல நல்ல வாட்சாப் ஃபார்வேடுகளும் தினசரி காலை 5 மணிக்கெல்லாம் குட்மார்னிங் மெசேஜுகளும் அனுப்புவாராம். அவர் மிகவும் நல்ல சாராம்.
 ~~~ 
“ஏண்டி காலங்காத்தால அஞ்சு மணிக்கு மெசேஜ் அனுப்பறான். இதுலயே நீ அலர்ட்டாகியிருக்க வேணாமா?”
“குட்மார்னிங் மெசேஜ், மோட்டிவேசன் forwards தான் அனுப்புவாரு. இதுல என்ன தப்பிருக்கு?”
“அவன் மெசேஜ் அனுப்புறது மேட்டரில்ல. எத்தன மணிக்கு அனுப்பறான். அதப்பார். விடிகாலைலகூட ஒன்னத்தான் நெனச்சிட்டிருக்கேன்னு subtleலா சொல்றான். நைட்டு மெசேஜ் பண்ணினா பொண்டாட்டி பக்கத்துல இருப்பா. செருப்பாலயே அடிப்பா. அதனால அவ தூங்கற டைம்ல அனுப்பறான். ஒனக்கு இதுலாம் மைண்ட்ல உதிக்கவே உதிக்காதா?”
“அவரு தப்பா எதுவும் பேசினதேயில்ல. நல்லாத்தான் பேசுவாரு”
“அவரு நல்லதாவே பேசட்டும். ஒரு ஸ்டூடண்ட்கிட்ட, அதுவும் பொம்பளப்புள்ளைட்ட, வாத்தியானுக்கு நடு ராத்திரி அஞ்சு மணிக்கி என்ன பேச்சு? உங்க வீட்ல தெரியுமா இந்த மேட்டரு?”
“தெரியாது.”
“ஏன், சொல்ல வேண்டியதுதான? எங்க சார் நல்ல சார், டெய்லி காலங்காத்தால எனக்கு இந்த நாள் இனிய நாள் மெசேஜ் அனுப்பறாரு, அப்புறம் நாங்க அடிக்கடி பேசிக்கிறோம்னு..?”
“…”
“சொல்ல மாட்டல்ல. அப்ப இதுல எதோ தப்பு இருக்குன்னு ஒனக்கே தெரியுது. தெரிஞ்சும் செய்ற. ஒங்களாலதான் நாட்ல காய்கறி வெல ஏறிட்டே போவுது”
“சும்மா திட்டாதீங்க. நாங்க என்ன பேசினோம்னு தெரியாம தப்பாப் பேசாதீங்க.”
“அம்மாத்தாயே, ஒங்க மிட்நைட் சாட்டுக்கு வக்காலத்து வாங்கி இதுக்கு மேல நீ பேசினா என் வாய் எதாச்சும் சொல்லிடும். அப்டியே கெளம்பு அதான் ஒனக்கு நல்லது.”
~~~
வாத்தியாரிடமிருந்து மேலும் மேலும் போன் கால்கள்.
“இத்தன நாளா வேற நம்பர்லருந்து என் ஒய்ஃப் தாம்மா அப்டி மெசேஜ் அனுப்பிருக்கா. இப்ப நீ போலிசுக்குப் போனா எங்க ரெண்டு பேர் வேலையும் போய்டும். வெளிய தல காட்ட முடியாது. கம்ப்லைண்ட் வாபஸ் வாங்கிடும்மா.”
அம்மணி உடனேயே, “பாவம் எங்க சார். அவங்க ஒய்ஃப் பண்ணதுக்கு அவரோட வேலயும் போய்டும். சின்னக் கொழந்த வேற இருக்கு. வாபஸ் வாங்கிடுவோம்” என்றாள்.
முந்தின தினம் பட்டினியோடு வெய்யிலில் நின்ற எரிச்சல் மொத்தமாக வெடித்தது.
“தப்பு பண்ணாங்கன்னா ஒரு தடவ தண்டன அனுபவிச்சுப் பாக்கட்டும். அப்பத்தான் அடுத்த பொண்ணுக்கு இப்டி பண்றதுக்கு எவனும் யோசிப்பான்”
“இல்ல இவங்க தான்னு காலேஜ்ல தெரிஞ்சா என்னயுந்தான சேர்த்துத் தப்பாப் பேசுவாங்க.”
“இத்தன நாள் பொண்டாட்டிதான் பண்றான்னே இவனால கண்டுபுடிக்க முடியலயாமா? எனக்கென்னமோ பேசுனது அந்தாளோட ஒய்ஃபான்னே சந்தேகமா இருக்கு. இவந்தான் எல்லாத்தையும் பண்ணிருக்கணும். போலிஸ் ஆக்ஷன் எடுக்கட்டும். யார் என்னன்னு ஒரு முடிவு தெரியும்.”

மணிக்கொருதரம் வாத்தி இவளுக்குப் போன் செய்து மனைவி மிகவும் மிரண்டு போயிருப்பதாகவும், அழுதுகொண்டேயிருப்பதாகவும், எல்லாத் தவறுகளுக்கும் தான் மன்னிப்புக் கேட்பதாகவும், கம்ப்ளைண்டை வாபஸ் வாங்கும்படியும் கூறியிருக்கிறார்.
“நாளைக்கு காலைல மொதல் வேலையா கம்ப்லைண்ட் ரிசீட்ல இருக்குற நம்பருக்கு அடிச்சு இந்த மாதிரி நடந்துதுன்னு சொல்லு”
“எனக்குப் பயமா இருக்கு. ஊர்ல எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குமா?”
“ஆமா, நாளிக்கி தட்ஸ்தமிழ் கவர்ஸ்டோரியே ஒன்னுதுதான்.”
“நாம கம்ப்லைண்ட வாபஸ் வாங்கிடுவோமே”
“நீ வாபஸ்னு மட்டும் இன்னொரு தடவ சொல்லிப்பாரு…”

மறுநாள்.

கமிஷ்னர் ஆபீசுக்கு அழைத்து நடந்தவைகளைக் கூறினாள். ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு நேரில் வரச்சொன்னார்கள். அதுவரை ஒழுங்காய்ப் பேசியவள், திடீரென “அந்த கம்ப்ளைண்ட வாபஸ் வாங்கிக்கறேன்” என்று தெரிவித்தாள். வந்த ஆத்திரத்தில் பொள்ளேர் என ஒன்று வைக்கலாம் போலிருந்தது. நல்லவேளையாக மறுமுனைப் போலிஸ், “வாபஸ்லாம் முடியாதும்மா. நேர்ல வாங்க” என்றார்.

போனைக் கட் செய்ததும் “ஒனக்காக பாவம் பாத்து பட்னியில வந்து நின்னேம்பாரு, என்ன செருப்பால அடிக்கணும்டி”.
பிறகு நண்பனிடம், “நீயே இதக்கட்டி மேச்சுக்கோ. இனிமே எனக்கும் இதுக்கும் சம்மந்தம் கெடயாது” என்று கூறி நகர்ந்துவிட்டேன்.

பின் அந்தக்கேஸை கண்டுகொள்ளவில்லை. ஒரு வாரம் கழித்து நண்பன் சொன்னான், “அவ ப்ரெண்டோட மாமா போலிஸாம். அவர்கிட்ட சொல்லி கேஸ வாபஸ் வாங்கச் சொல்லிட்டா. அவர் நான் பாத்துக்கறேன்”னுட்டாராம். 
ஃபைல் க்லோஸ்ட்.
~~~
முவ்விரண்டு மாதம் கழித்து ஒரு நாள் அதே நண்பன் சோகமாய்ச் சுற்றிக்கொண்டிருந்தான். (அவன் வேறொரு ப்ராஜெக்ட் மாறி விட்டதால் அவனை அடிக்கடி சந்திக்க முடியவில்லை.)
“என்னடா ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?”
“செத்துடலாம்னு தோணுதுடா?”
“ஏண்டா? இன்னும் ஒரு கல்யாணம் கசமுசாவக் கூடப் பாக்கல. அதுக்குள்ள ஏன் சாவணுங்கற?”
“நானும் சந்திரிக்காவும் லவ் பண்ணோம்”
“அடடே! கமிஷ்னர் ஆபிஸ்லருந்து பைக்ல வந்தப்பவே நெனச்சேன். இப்டி எதாச்சும் பத்திக்கும்னு. வாழ்க வளத்துடன். அப்புறம் என்ன ஆச்சு?”
“நீ விட்டுட்டுப்போனதுக்கப்புறம் நா அவகூட இருந்து ஹெல்ப் பண்ணேன்”
“ம்ம்ஹ்ம்”
“அப்போல்லேர்ந்து டெய்லி எங்கிட்ட பேசுவா. ஒருநாள் அவளே லவ் பண்றேன்னு சொன்னா”
“ம்ம்..”
“எனக்கு ஃபஸ்ட்டு தயக்கமா இருந்துது. வீட்ல ஒத்துக்க மாட்டாங்கன்னு. அதனால முடியாதுன்னு சொல்லிட்டேன்”
“அட! ம்ம்ம்”
“டெய்லி நைட் முழுக்க மெசெஜ் அனுப்புவா. என்னத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அழுவா. அடம் புடிப்பா. நீதான் என் புருஷன்னு சொன்னாடா”
“மேல சொல்லு”
“அப்புறம் நானும் அவள லவ் பண்ணினேன்.”
“கரைப்பார் கரைத்தால்.. ம்ம்.. அப்புறம்”
“நானே கூச்சப்படுற அளவுக்கு நைட்டெல்லாம் ரொமான்ஸாப் பேசுவா. ஒரு தடவ அவ ஃபோன்ல போட்டோஸ் பாக்கணும்னு கேட்டேன். தரமாட்டேனுட்டா. எல்லா ஆப்க்கும் லாக் போட்டு இது என் பர்சனல்னு சொன்னா.”
“interesting.”
“ஒரு நாள் எதேச்சையா அவ ஃபோன பாத்தப்ப வாட்சப்ல ஒரு மெசேஜ். உங்க ப்ராஜக்ட்ல இருக்கானே அர்ஜுன். அவனுக்கு அனுப்பிருக்கா. “BulBul நீ ஏன் ஆபீஸ் வரல? ஒன்னப்பாக்காம இங்க இருக்கவே முடியல. சீக்கிரம் வா புல்புல்” இப்புடி ஆரமிச்சு எங்கிட்ட சொன்ன பாதி மெசேஜு அவனுக்கும் அனுப்பிருக்காடா Bloody Bitch” எனக்கூறி அழ ஆரம்பித்துவிட்டான்.
“தப்பு. பெண்கள அப்டில்லாம் பேசக்கூடாது. ஒவ்வொரு பொண்ணும் சாமிடா” என்று கூறி அவனை டீ சாப்பிட அழைத்துச்சென்றேன்.
~~~


Tuesday, 31 May 2016

ஐலேட்சா ஐலெட்சா… - 2/2

இதோட முந்தின பார்ட்ட படிக்க “இங்க கிலிக்குங்க

மற்றொரு நாள், மற்றொரு ஓட்டல்ல ‘எழுதுற’ பரிச்ச. கிட்டத்தட்ட மூணு மூணர மணி நேரம். பரிச்சை ஆரம்பிக்கிறதுக்கு ஒரு மணி நேரம் முன்னமே போய்டணும்னு மெய்ல்ல சொன்னாங்க. நா புலூ & கருப்பு கலர்ல ஒரு பேனா, ஒரு பென்சிலு, பெரிய அழிலப்பர் ஒன்னு எடுத்துட்டுப் போனேன். இன்னைக்கு இன்னும் பெரிய கூட்டம் வந்துருந்துச்சு. தினுசு தினுசா திமுசு திமுசா ஆல் வயஸு, ஆல் சைஸுல லேடிஸ் வந்துருந்தாங்க. ஜென்சுகளும் ஆங்காங்கே காணப்பட்டதா நியூஸ்7 செய்திக் குறிப்பு சொல்லுது.

அங்க இருந்த இன்விஜிலேட்டரம்மா முடியட்டும் விடியட்டும் Ad மாதிரி திரும்பத் திரும்ப “ரெஜிஸ்டர் பண்ணாதவங்க பண்ணிக்கங்க, ரெஸ்ரூம் போறவங்க போய்க்கங்க, எக்சாம் ஹாலுக்குள்ள போனதும் ரெஸ்ட்ரூம் போக அனுமதி இல்ல”ன்னு சொல்லிட்டே இருந்தாங்க. ஒரு கட்டத்துல ஒவ்வொருத்தர்ட்டயும் தனித்தனியா ரெஸ்ரூம் போறிங்களான்னு கேக்க ஆரமிச்சிட்டாங்க. கொஞ்சம் விட்டா பஸ்ஸு கெளம்பு முந்தி டயரத் தட்டிப் பாக்குற டிரைவராட்டம் எல்லார் அடி வயித்தயும் தட்டிப்பாத்து பாத்ரூமுக்கு அனுப்பிருவாங்களோன்னு எனக்கு டுர்ராகிருச்சு. 

போதாக்கொறைக்கு அங்கன சுத்திட்டிருந்த வெய்ட்டருக தண்ணி மேல தண்ணியா குடுத்துட்டே இருந்தாங்க. Belongings, எலெக்ட்றானிக் ஐட்டம்ஸ், Bagகுலாம் குடுத்து டோக்கன் போடுங்கன்னு சொன்னாங்க. நா மொபைல குடுத்தப்ப “வேற எதும் வச்சிருக்கீங்களா?”ன்னு கேட்டாங்க. பென்சில் பேனாக்கள காமிச்சேன். எரேசர் மேல நம்ம தானைத் தங்கச்சி, பேரு, கொலம் கோத்திரம்லாம் எழுதி வெச்சிருந்ததால அத எடுத்துட்டுப் போகக் கூடாதுன்னுட்டானுங்க. ‘டேய் எங்கிட்டருக்குறதே ஒத்த லப்பரு. அதயும் வாங்கிட்டா எச்சி தொட்டா அழிக்க?’ன்னு யோசிச்சேன். சரி எப்டியும் பேனாலதான எழுதப் போறோம் அழிப்பான் என்னத்துக்குன்னு விட்டுக் குடுத்துட்டேன். அப்பவே லைட்டா வடக்குப்பட்டி ராமசாமி சௌண்டு மைண்ட்ல கேட்டுச்சு. நல்ல காரியத்துக்குப் போறப்ப இப்டி தடங்கல் சகஜம்னு பகுத்தறிவாப் பேசி மனசத் தேத்திக்கிட்டு போய் ஒக்காந்தேன். மறுக்கா அந்த, ‘வண்டி பத்து நிமிசம் நிக்கும் டீ சாப்டுறவங்க சாப்டலாம் பாத்ரூம் போறவங்க போகலாம்’ விக்கிரவாண்டி ஆண்ட்டி எல்லாரையும் ஒன்னுக்கிருக்கச் சொல்லி ஊக்குவிச்சிட்டு இருந்தார்.

சரி ஒருக்கா போய்ட்டு வரலாமேன்னு RR உள்ள போனா எமக்கூட்டம். ஒரு கக்கூசுக்கிட்ட போனா உள்ளருந்து ஒரு பக்கி ஜிப்பப் போட்டமெனைக்கு வெளிய வருது. ‘அடக்கம்முனாட்டி, இந்த தரிசனத்துக்காகவாடா பத்தாயிரம் பீஸ் கட்டுனேன்’னு நெனச்சு நொந்துட்டே உள்ள போனேன். இங்கதான் முக்கியமான விசியம். அங்க இங்க கவனத்த சிதற விட்றாதீங்க. உள்ள வந்துட்டுப் போன அந்த எரும, ஃப்லஷ் பண்ணாம போயிருக்கு. பேசிக் ரெஸ்ரூம் எடிகொட் கூட இல்லாத கருமாண்டி, பரிச்ச எளுதி பாரீன் போறானாம். இவனுங்களாலதான் சார் தீவிரவாதம் வளருது. தலையெழுத்தேன்னு ஃப்லஷ் பண்ணி உட்டு, ‘போய்ட்டு’ வந்து சீட்ல ஒக்காந்தேன். அவுட்லெட் போனதால இன்லெட்டுக்கு ரெண்டு க்லாஸ் தண்ணி குடிச்சிக்கிட்டேன். கொஞ்ச நேரத்துல எக்சாம் ஹாலுக்குள்ள விட ஆரமிச்சாங்க. 

ஹால் வாசல்லயே இன்னொரு உஷேரக்கா பாஸ்போட்ட வாங்கி ஆள் அடையாளம் செக் பண்ணிட்டு அவங்கவங்க சீட்டுக்கு வழி சொல்லிட்டு இருந்துச்சு. கடைசிக் கார்னர் சேர் நமக்கு. ஒவ்வொருத்தரா உள்ள வர ஆரமிச்சாங்க. ஒரு ஆண்ட்டி ஓட்டுப்போட்டு செல்ஃபி போட்ட அத்தன பேருக்கும் குடுக்குற அளவு பென்சில்கள அள்ளிக்கிட்டு வந்துருந்துச்சு. அடக் கேனக்கிறுக்கின்னு மனசில நெனச்சுட்டு சுத்துமுத்தும் பாத்தேன். ‘தானா வளந்துப்புட்ட ஆறடி சந்தனக்கட்ட’ன்னு செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மயா ஒரு பப்ளிமாஸ் வந்து ஒக்காந்துச்சு. மனசுக்குள்ளயே மானசீகமா ஃப்லேம்ஸ் போட்டேன். லவ்வுன்னு வந்துச்சு.

இன்னும் பரிச்சைக்கு ஒன்னர மணி நேரம் இருந்துச்சு. போரடிக்கக்கூடாதுன்னு மீசிக் சிஸ்டத்துல instrumental போட்டு உட்டானுங்க. மொதப்பாட்டே “அடி ஆத்தாடி, இளமனசொன்னு ரெக்க கட்டி” அது என்னமோ குறியீடா சொல்ற மாதிரி இருந்துச்சு. #ராஜாடா. அடுத்து “நிலவே என்னிடம் நெருங்காதே” பாட்டு. #மெல்லிசைமன்னர்டா #எம்மெஸ்விடா. அடுத்து “அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி” #ரஹ்மான்டா #ஏகஇசைவன்டா #ரெண்டுஆஸ்கார்டா #ராசாளிடா #அதுடா #இதுடா
மூச்சா மேடம் வந்து இன்னும் யார்னா போணும்னா போய்ட்டு வந்துருங்க, எக்சாம் ஆரமிச்சதும் போக அலோ பண்ண மாட்டோம்னுச்சு. எனக்கு முன்னாடி ஒக்காந்துருந்த ஒருத்தர் கெளம்பிப் போயி எண்ணி அர நிமுசத்துக்குள்ள வந்துட்டாரு. சட்டுன்னு போலியோ டிராப்சு படிமம் ஒரு செகண்ட் மனசுல வந்து போச்சு.

கொஞ்ச நேரத்துல எல்லாருக்கும் ஒரு ஒயர்லெஸ் ஹெட்போன் குடுத்தாங்க. அங்க இருந்த இன்விஜிலேட்டர்சும் மாட்டிக்கிட்டாங்க. மைக்ல பேசுறது அது வழியா எல்லாருக்கும் கேட்டுச்சு. எல்லார் காதுலயும் ஹெட்போன பாக்க எதோ ஏலியன்ஸ் மாநாடாட்டம் இருந்துது.

அப்பதான் ஒரு அனௌன்ஸ்மெண்ட் பண்ணாங்க. Essayவத்தவிர மீதி எல்லா பதிலையும் பென்சில்ல மட்டுந்தான் எழுதணும்னு. இதப்பத்தி அவனுங்க அனுப்புன மெய்ல்லகூட மென்ஷன் பண்ணவே இல்ல கீரமுண்டைங்க. ஒத்த பென்சில், அதுவும் அழிலப்பரில்லாம. அசத்தலா தட் முத்தலிப் மொமண்ட் அப்பத்தான் ஆரமிச்சுது. கூர் கூரா கூரு கட்டி பென்சில்கள அள்ளிட்டு வந்துச்சே ஆண்ட்டி ஒன்னு, அது இல்ல, நாந்தான் இப்ப கூறுகெட்ட கூதரையாய்ட்டேன். சரி ஆபத்துக்கு பாபம் லேதுன்னு பென்சிலோட பட்டக்ஸயும் திருகி கூர்ப்பாக்கி வெச்சுக்கிட்டேன். கொஞ்ச நேரத்துல லிசனிங்குக்கான கொஸ்டின் பேப்பர் குடுத்தானுங்க. இதுக்கப்புறம் சுச்சாவுக்கு போக்கூடாதுன்னு அந்த ஆண்ட்டி சொன்னதுதான் தாமதம், எனக்கு “மடை திறந்து.. தாவும் சிறு அலை நான்”ன்னு urgent மூச்சா feeling வந்துருச்சு. ரெண்டாவது முத்தலிப் மொமண்ட்டும் சூப்பரா ஒர்க்கௌட் ஆய்ருச்சு.

லிசனிங் ஆடியோ க்லிப் ஓடத்தொடங்குச்சு. கொழகொழா இங்லிஷ்ல ஒரு மதர் சுப்பீரியர் நிறுத்தாம பேசிட்டுப் போச்சு. நாம ஆன்சர்கள போற போக்குல மார்க் பண்ணிக்கிட்டாத்தான் உண்டு. கொஞ்சம் டைமிங் மிஸ் பண்ணிட்டாலும் அடுத்த பதில் ஓடிரும். அதுக்குப்பொறவு அப்டியே dominos effect மாதிரி பூராம் வீணாய்ரும். அது முடிஞ்சு அடுத்து ரீடிங்குக்கு கொஸ்டின் பேப்பர் குடுத்தாங்க (அது பேப்பர் இல்ல. கொஸ்டின் புக்கு. குறுநாவல் சைசுக்கு இருந்துது). அதப்படிச்சு பாகங்களக் குறிக்கணும். தப்பான பதிலுக்கு நெகடிவ் மார்க் கெடயாது. OCR sheetலதான் shade பண்ணனும். நடுவுல எந்த பதிலையும் கேப் விடாம ஷேட் பண்றது நமக்குதான் நல்லது.

ஆன்சர ரீசெக் பண்ணதுல சிலது தப்போன்னு பட்டுச்சு. அத சரி பண்ணலாம்னு அங்க சுத்திட்டிருந்த மேடம்ட்ட ரப்பர் கேட்டேன். இந்த ஆப்கானிஸ்தான், ஈராக்லலாம் துப்பாக்கி பீரங்கித் தாக்குதல் நடந்த வீட்டு முகப்பு பாத்துருக்கீங்களா? அந்தளவு சிதிலமடைஞ்ச ஒரு ரப்பர கொண்டாந்து குடுத்துச்சு. ரப்பர்னா வெள்ள கலர்லதான இருக்கும்? இது அழுக்கு ஒட்டி நவாப்பழக்கலர்ல இருந்துச்சு. அத வெச்சு அழிச்சா பென்சில விட கருப்பா எழுதுச்சு. மூணாவது முத்தலிப் மொமண்ட்டும் சிறந்தோங்கியது.

அடுத்து கட்டுரை எழுதுதல். ரெண்டு கேள்வி வந்துச்சு. கட்டுரைய பேனாவிலயும் எழுதலாம்னாங்க. மணிரத்னம் பென்சில்லதான் ஸ்க்ரிப்ட் எழுதுவார், அதுவும் இங்லிஸ்லதான் எழுதுவார்னு அல்லி பதில்கள்ல படிச்ச ஞாபகம். மணிசார் செய்றார்னா அதுல எதாச்சும் அர்த்தம் இருக்கும், கிரியேட்டிவிட்டி ஊத்தெடுக்கும்னு நானும் பென்சில்லயே எழுத முடிவு செஞ்சேன். டிக்கியையும் பேனட்டையும் திருவித்திருவி குளுர்காலத்தில குத்தால அருவியில குளிச்ச குமரேசனோடது மாதிரி சுருங்கிப்போச்சு பென்சிலு. 

எக்சாம் முடிஞ்சுது. ‘ப்லீஸ் ஸ்டாப் ரைட்டிங்’னாங்க. அப்புறம் ‘ஐ சீ ஃப்யூ கேண்டிடேட்ஸ் ஆர் ஸ்டில் ரைட்டிங், ப்லீஸ் ஸ்டாப் ரைட்டிங்’னாங்க. அப்புறம் ‘மிஸ்டர் ப்லூ ஷர்ட் ஐம் அனௌன்சிங் ஃபார் ஆல் இன்க்லூடிங் யூ. ப்லிஸ் ஸ்டாப் ரைட்டிங்’னாங்க. அடுத்து அனேகமா ‘டேய் ரெட் டீ ஷர்ட் நாயே, சரியான ஆம்பளயா இருந்தா எழுதுறத நிப்பாட்டுடா’ன்னு சொல்ற ஏங்ரிமோடுல இருந்தாங்க. ஆனா அந்த அங்கில் நல்லவேளையா நிப்பாட்டிட்டாரு.

எழுதி முடிச்சுட்டு நம்ம பப்ளிமாஸ் செல்லக்குட்டி ஒடம்ப நெளிச்சுது பாருங்க… நா முறிஞ்சுட்டேன். தட் கேர்ளெல்லாம் நிச்சயம் அப்ராட் போக வெண்டிய பார்ட்டிதான். இண்டியா டசிண்ட் டிசர்வ் ஹர். பென்சில் கூர் ஆண்ட்டி எல்லா பென்சிலையும் மூட்ட கட்டிச்சு. கத்தி படத்த பாத்துருந்தா எஸ்ட்டா பென்சில மத்தவங்களுக்கு குடுத்து உதவிருக்கும் போல. கொட்டாய்ல அடச்சு வச்சு ரிலீஸ் செஞ்ச பன்னிக் குட்டிகளாட்டம் மொத்தக் கூட்டமும் கெளம்புச்சு. ரெண்டு வாரத்துல ரிசல்ட் வரும்னானுங்க.

அந்த ரெண்டு வார கேப்புல IELTS பத்தி நெறய நியூஸ் கேள்விப் பட்டேன். IELTS எழுதறவன் கண்டிப்பா ஒரு அவசியத் தேவைக்குதான் எழுதறான். இதுல வர மார்க் அவனுக்கு முக்கியம்ங்குறதால கம்மியா மார்க் எடுத்தா விட்டுடாம கண்டிப்பா திரும்ப எழுதுவான். படிக்கவோ, வேலைக்குப் போகவோ ஒவ்வொரு செக்சன்லயும் மினிமம் இவ்ளோ மார்க், மொத்தமா மினிமம் இவ்ளோ மார்க் எடுக்கணும்னு கண்டிசன்ஸ் இருக்கு. ஒரு செக்சன்ல மார்க் கொறஞ்சாலும் முழு எக்சாமும் மறுபடியும் எழுதணும். கொறஞ்ச மார்க் எடுத்த செக்சன மட்டும் இம்ப்ரூவ்மெண்ட் எழுத முடியாது. 

நெட்ல தேடினதுலயும் பரவலா விசாரிச்சதுலயும் இதுக்குள்ள பல ஃப்ராடு வேலைகள் நடக்குறது தெரிய வந்துச்சு. நெட்ல தொழாவிப்பாருங்க, IELTSச எவ்ளோ கழுவிக் கழுவி ஊத்திருக்கானுங்கன்னு. காசு பாக்கணும்னு வேணும்னே கொறச்சு மார்க் போட்டு மறுபடியும் எழுத வைக்குறதா பல குற்றச்சாட்டுகள் இருக்கு. IELTS score பல வெளிநாட்டு காலேஜ், கம்பெனிகள்ல முக்கியமா கவனிக்கப் படுதுங்குறதால கம்மி மார்க் எடுத்தவங்களுக்கு வேற வழியே இல்ல. அதுவும் ஸ்பீக்கிங்கும் ரைட்டிங்கும் மேனுவல் மதிப்பீடுங்குறதால முன்னப் பின்ன மார்க் கெடைக்க வாய்ப்பிருக்கு. ‘.5’ மார்க் கூட இதுல முக்கியம். ரெண்டாவது மூனாவது தடவ எழுதிதான் வேணுங்குற மார்க் கெடச்சவங்களும், எத்தன தடவ எழுதியும் ஒன்னும் பெயராம இன்னும் கோலம் போட்டுட்டு இருக்க முதிர்வர்ஜின்களும் இன்னும் இருக்காங்க.
ஒரு அசுபயோக தினத்தில் ரிசல்ட்டும் வந்துச்சு. அதில்ல மேட்டரு, கரெக்ட்டா ரிசல்ட் வந்து ஒரு வாரத்துல “நீங்க வெளிநாடு போறதுக்கு முயற்சி செய்றீங்களா, அதுக்கான எக்சாமுக்கான டிரெய்னிங் சேர்றீங்களா?”ன்னு கேட்டு ஒரு ஃபோன் வந்துது. அப்புறம் IELTS training இன்ஸ்டியூட்லருந்து மெய்ல்களும். ஆக, என் ரிசல்ட் முதற்கொண்டு ஒரு third partyக்கு தெரிஞ்சிருக்கு.

பிரிட்டிஷ் கௌன்சிலுக்கும் IDPக்கும் IELTSக்கும் நான் இங்லிஸ்ல சொல்ல விரும்புறது ஒன்னுதான்… WothaDei.

(நீங்களோ, வேற யாருமோ IELTS எழுதப்போறதா இருந்தா, எதும் டௌட் இருக்குன்னா மெயில் போடுங்க. என்னால ஆனத செய்றேன்)

Monday, 30 May 2016

ஐலேட்சா ஐலெட்சா…

“IELTS எழுதப்போறேன்” என ஒன்றுவிட்ட தங்கை ஒன்றிடம் சொன்னபோது, “ஓ ஐலெட்சாண்ணா.. எழுது எழுது ஆல்திபெஸ்ட்” என்றாள். “என்னது ஐலெட்சா?” என்றதற்கு, “ஆமாண்ணா, அத அப்டிதான் சொல்லணுமாம், என் ப்ரெண்டு ஒருத்தன் எழுதினான். அவன் சொன்னான்” என்றாள். “வெளிநாடு போயிருப்பானே” எனக்கேட்டேன். “இல்லண்ணா, 6.5தான் எடுத்தானாம். மறுபடியும் எழுத ப்ரிப்பேர் பண்றான்” என்றாள். அய்யீயெல்ட்டீயெஸ் எனும் டங்டுஸ்டரைவிட, ஐலெட்ஸ் கேட்ச்சியாக இருப்பதால் அதையே டைட்டிலாக வச்சாச். தங்கை சொல்மிக்க மந்திரமில்லை.

“ஆமா… நீ எதுக்கு இப்ப இந்த எக்சாம் எழுதப்போற?” எனக் கேட்பீர்களென்றால், நா ஒரு விஷயத்த எப்பப் பண்ணுவேன் எப்டி பண்ணுவேன்னு யார்க்கும் தெரியாது. ஆனா பண்ணக்கூடாத நேரத்துல கரெக்டா பண்ணுவேன்.

The International English Language Testing System (IELTS) is the world’s most popular high stakes English-language test, for study, work and migration, with more than 2.2 million tests taken each year’ என்பதாக, பழவேற்காடு ஏரியில் கண்டெடுக்கப்பட்ட செப்புத் தகடு ஒக்கட்டி செப்பிஸ்துந்தி.

வெளிநாட்டுக்கு, படிக்கவோ வேல செய்யவோ அல்லது ‘விடைகொடு எங்கள் நாடே’ன்னு போகவோ இந்த டெஸ்ட் அவசியம்(னு சொல்றாங்க). இதுல ரெண்டு மாட்யூல் இருக்கு. 
  • Academic (படிக்கப்போறவங்களுக்கு)
  • General (பணிக்குப்போறவங்களுக்கு)
அடியேன் ஆல்ரெடி படிக்காத படிப்பெல்லாம் படிச்சு கிழிச்சிட்டதால ஜெனரல்ல அப்ளை பண்ணி இருந்தேன். எக்சாம் ஃபீஸ் ருபீஸ் 11100 (குறியீடு! குறியீடு!!).

நடுக்குறிப்பு: இந்த எக்சாமுக்காக டாக்கிங்லிஸ், வாக்கிங்லிஸ், வாட்ச்சிங்லிஸ்னு ஒரே இங்கிலீஸா சுத்தினதால திஸ் ஆர்டிகல்ல நெறய ஃபாரின் லேங்வேஜஸ் வரும். ‘எக்சாம் பழக்கம் எழுதுற மட்டும்’ எனும் கோல்டுலாங்வேஜ கருத்தில்கொண்டு அஜஸ் செய்க.

ரிஜிஸ்டர் பண்ணினதும் ப்ரிட்டிஸ் கௌன்சில் கலர்கலரா ஒரு மெய்ல் அனுப்புவானுங்க. “தங்கள் பணம் கைவரப் பெற்றது. இத்துடன் தங்கள் பணத்துக்கான ரசீது சிட்டையை அனுப்பியுள்ளோம். தாங்கள் குறிப்பிட்ட வ்லாசத்துக்கு ஒரு ப்ரிப்ரேசன் மெட்டீரியலும், மங்கி குல்லாயும் அனுப்பி வப்போம், எதிர்பார்த்திருங்கள்”னு.

எதோ ஒரு பெரிய மிசன் அக்கம்ப்லிஷ் ஆனமாதிரி அன்னைக்கு நைட்டு தூக்கம் வரும். கனவுல வெளிநாடும், அங்க இருக்குற ஸ்டிரிப் க்லப்புகளும், அங்கயே ஒரு வெளிநாட்டு சம்மந்தம் அமையுறதும், பளிங்கு ரோடுகளும், அதுல நீங்க கார்ல வழுக்கிக்கிட்டு போறவங்கள பாக்குறதும், அப்ப ஒருத்தன் டுப்பாக்கில ரேண்டமா சுட்டுட்டு போறதும், அதுல ரெண்டு புல்லட் சாவகாசமா ஒங்க மண்டைல எறங்குறதும் வந்தா…நைட்டு மணி மூனரை, கரண்ட் இல்லாம வெக்கைல கெடக்குறீங்கன்னு அர்த்தம். இருட்டுக்குள்ளயே தடவி தண்ணியக் குடிச்சுட்டு தூக்கத்த கண்டினியூ பண்ணனும். ரெண்டாம் ஜாமக்கனவுல அடுத்த நாள் ஆபிஸ் வேலைக வந்து தொல்ல பண்ணினா பேக் டு நார்மல்னு synonym.

எக்சாமுக்கு எப்டி ப்ரிப்பேர் பண்ணணும்னு ஒரு நேரமேசை போட்டு, துன்னூறு பூசி ஒக்காந்தேன். இது சம்மந்தமான Appபுகள தரவிறக்கி, நடந்தா நௌனு, விழுந்தா வெர்பு, அலஞ்சா அட்ஜக்டிவ்னு கேரட்டராவே மாறிட்டேன். இங்லிஸ் அட்மாஸ்பியருக்கு சூட்டாகிக்கணும்னு, வந்த கஸ்டமர் கேர், க்ரெடிட் கார்ட், ரியலெஸ்டேட் போன் கால் எல்லாத்தயும் ஆற அமர பேசிப் பழகுனேன். இது பத்தாதுன்னு இன்னும் வெறியேத்திக்க இங்லிஸ் படங்களா மடிமேலியில ரெப்பிக்கிட்டேன். டார்வின் உட்பட, பல்வேறு நாத்திக அறிஞ்சர் பெருமக்கள் பிறந்த நாடுகள்னுதான் பேரு, டயலாகுல அதிகம் ரிப்பீட் ஆனது ‘ஓ என் கடவுளே’வும் ‘நான் வருகிறே’னும் தான்.

[ஸ்டார்ட்டப்புகள் கவனத்திற்கு: பார்த்த வரையில் IELTSசுக்கு இருக்கும் மொபைல் ஆப்புகள் பெரும்பாலும் சீனத்தயாரிப்புகளே. Look & Feeலாகட்டும், User Experienசாகட்டும், படு திராபையாக உள்ளன. தண்ணீர் குடிப்பதை நியாபகப்படுத்தவெல்லாம் ஆப் இருக்கிறதாம். இதற்கு ஒன்று செய்து சந்தையில் எதிர்ச்சாவல் விடப்படுமா என எதிர்பார்ப்பாவல்கள்.]

உதாரணத்துக்கு ஒரு IELTS Practice ஆப்ல குடுத்திருந்த உதாரணத்தப் பாருங்க:

(இந்த டெஸ்ட் குறித்து நெட்டாய்ந்ததுல நெறய காமடி. பல discussion forumகள்ல அக்குறும்பு பண்ணி வச்சிருக்கானுங்க. தேடிப்பாருங்க. It won't disappoint you.)

இந்த பரிட்சையில் மொத்தம் ஐந்து பிரிவுகள்.
1. படித்தல் — Reading
2. கேட்டல் — Listening
3. பேசுதல் — Speaking
4. எழுதுதல் — Writing 
5. இதெல்லாம் சுத்த ஐவாஸ்னு இறுதியில் உணர்தல் — Reel Realizing

பேசுதல் தனியாவும், படிக்கேட்டெழுதுதல் தனியாவும் நடக்கும். எக்சாம் பெரும்பாலும் ஒரு ஓட்டல்லதான் நடக்கும்.

ஒரு தேதியக் குறிப்பிட்டு, “ஃப்ரீயாருந்தா வாங்களேன் பேசிட்டிருக்கலாம்”னு மெய்ல் அனுப்பிருந்தானுங்க. சரி களுதய என்னான்னு பாத்துட்டு வரலாம்னு போனேன். நல்லா எம்மெல்லெம் மீட்டிங் நடக்குற எடமாட்டம் இருந்துது. வரவனெல்லாம் கஸ்கிஸ்கா பஸ்பிஸ்கா ஐயெல்டிஎஸ் விச் ஃப்லோர்கிஸ்கான்னு விசாரிச்சுட்டு இருந்தானுங்க. நமக்கு அட்மாஸ்பியர கவனிக்கிறது புடிக்கும்ங்குறதால அவனுங்க வரச் சொன்னதுக்கு ரெண்டு மணி நேரம் முன்னமே போய்ட்டேன். பலர் வெறப்பா பேண்ட் சர்ட் பெல்ட் ஷூவுன்னு வந்துருந்தாங்ய. நான் சீன்சு டீசர்ட்ட போட்டு ஒப்பேத்தியிருந்தேன். இருந்தாலும் நெஞ்சோரத்துல ஒரு பயம். “யூ ஆப் த, நாட் ஆப் த, வியர் ஆப் த, ஃபார்மல் ஆப் த, நோ ப்ரொபசனல் கொரியர்ஆப் த, கெட்டௌட் ஆப் த”ன்னு சொல்லிருவானுகளோன்னு. 

கொஞ்ச நேரம் கழிச்சு எக்சாம் நடக்குற ஃப்லோருக்குப் போனேன். மற்றுமொரு கஸ்கஸ் முஸ்முஸ்னு கால் மாத்திரை அளவிலேயே பேசிட்டு கொஞ்சூண்டு கூட்டம். எல்லார் கண்லயும், ‘ஏக் கிஸ்ஸான்.. ரஹ தாத்தா..’ இதுல ‘ரஹ, ஹ’ சரியாச் சொல்லிப்புடனும்னு ஐலெட் டிரீம்ஸு. 

அப்ப ஒரு புள்ள எங்கிட்ட வந்து எதோ கேட்டுச்சு. அந்தப் பொண்ணோட ஐடி கார்டுல USHERநு போட்டுருந்துச்சு. மல்லூஸ் ரம்யாவ ரெம்யாங்குற மாதிரி உஷாவ உஷே-ம்பானுங்க போல, உஷே ரவீந்திரன்ங்குறத USHERநு போட்டுருக்குன்னு நெனச்சேன். நா அதோட ஐடி கார்ட பாத்துட்டிருந்ததால என்ன சொல்லுச்சுன்னு கவனிக்கல (சத்தியமா ஐடி கார்ட மட்டுந்தான் பாத்தேன். அதோட ‘மனம்’ வாடிப்போயிருந்ததலாம் இல்ல). இப்டியாப்பட்ட சூழல்ல வந்து, “என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ, என்ன இன்னிக்கே கல்யாணம் பண்ணிக்குங்க அத்தான்”னா சொல்லிருக்கப்போவுது? கண்டிப்பா பரிச்ச சம்மந்தமாத்தான் எதோ கேட்டிருக்கும். So, நானும் ஈசியஸ்ட்டான பதிலான “எஸ்”னு சொன்னதும் ஒரு எடத்தக்காட்டுச்சு. அங்க ஒரு செக்யூரிட்டி லேடி (சொர்ணாக்காவோட மூத்தார் மகள்ன்னு சொன்னா கண்ண மூடிட்டு நம்பலாம். அப்டியொரு டைப்பிகல் திராவிடத் தமிழ் முகம்) வருகைய பதிவு பண்ணி மொபைலலாம் வாங்கி வச்சிட்டிருந்தாங்க. “பர்ஸையும் குடுக்கணுமா?”ன்னு கேட்டதுக்கு, “Not required. You can keep it with yourself”ன்னாங்க. “ஓ! இங்கருந்தே இங்லிஸ்லதான் பேசணுமா?”ன்னு எதார்த்தமா கேட்டதுக்கு சிரிச்சுட்டாங்க. அங்க விகடன் ரிப்போட்டர்ஸ் இருந்திருந்தா மக்களை சிரிக்க வைக்க இருபது வழிகள்னு ஓர் ஆர்ட்டிகில் எழுதிருப்பாங்க. ப்ச் மிஸ்ஸாய்டுச்சு.

அப்புறம் உள்ள ஒரு ரூம்ல போய் ஒக்காரச்சொன்னாங்க. அங்க ஆல்ரெடி எட்டுப்பத்து பேரு ஒக்காந்துருந்தாங்க. எல்லார் மூஞ்சிலயும் எதொ டெத்துக்கு வந்த இறுக்கம். ஒரு வேள இப்டி இருக்குறதுதான் ப்ரோட்டோகால்போல, நாமதான் கிறுக்கனாட்டம் இளிச்சிட்டு சுத்துறமோன்னு ஒரு perturbation வந்துருச்சு. அந்த அட்மாஸ்பியரே ரெம்ப ரெம்ப அமைதியா, சொல்லப்போனா மைனஸ் டெசிபல்ல இருந்துது. அமைதிய செக் பண்ண லைட்டா இருமிப் பாத்தேன், வளயல் கடைக்குள்ள லேடிஸ் புகுந்த மாதிரி பூதாகரமா கேட்டுச்சு. 

அங்கருந்த ரெண்டு பேர் கேண்டிடேட்ஸ் IDய வெரிஃபை பண்ணிட்டிருந்தாங்க. வரிசையா பேரக் கூப்ட்டு ஒரு அம்மணி பாஸ்போட்ட வாங்கி மூஞ்சிக்கு பக்கத்துல வச்சு ‘இவருக்கு பதில் இவர்னு’ சீரியல்ல வராப்ல எதும் ஆள்மாறாட்டம் நடந்துருக்கான்னு பாத்துச்சு. வரவங்களுக்கெல்லாம் ப்லாஸ்டிக்த்தனமா ஒரு குட்மார்னிங் வச்சுது (ப்லாஸ்டிக்த்தனம் உண்மை. ப்லாஸ்டிக்தனமான்னு தெரீல). அந்தம்மாக்கு பக்கத்துலயே ஒரு ஹல்க் (ஜிப்ரான் மாதிரி லுக்) போட்டோ எடுத்துட்டு இருந்தாப்ல. எனக்கு முன்ன போனவன்ட்ட “புட் யுவர் இண்டக்ஸ் பிங்கர் ஃபோர் டைம்ஸ் இன் திஸ்”னு ஒரு கருப்பு வெத்தலப்பெட்டி மிசின காமிச்சாப்டி. எனக்கு திடீர்னு எது இண்டக்ஸ் பிங்கர்னு மறந்நு போயி. நமக்குத் தெரிஞ்சதுலாம் தம்ப், ஃபோர் ஃபிங்கர், ஃபக்யூ ஃபிங்கர், ரிங் ஃபிங்கர், சுமால் ஃபிங்கர். இதுல இண்டக்ஸு எங்கடா இருக்குன்னு நெசமாவே அல்லு இல்ல. சரி, கட்ட வெரல்லருந்து வெப்போம், தப்புன்னு சொன்னான்னா “அழுக்கிருந்துச்சு தொடச்சேன்”னு சொல்லி அடுத்த வெரல வெச்சிடலாம்னு ப்லான் பண்ணி வெச்சிருந்தேன். நல்ல வேளையா ஆல்ரெடி போனவன திரும்ப வெரல வெக்கச்சொல்றப்ப எந்திரிச்சு நவுந்து ஒக்கார்ர சாக்குல பாத்துக்கிட்டேன். ஆள்காட்டியத்தாம்பா இண்டக்சுங்குறானுங்க. எத்தனை விரல்களடா அதற்குத்தான் எத்தனைப் பெயர்களடா!!!

அடுத்து அடியேனின் பேரக் கூப்ட்டுச்சு அம்மணி (பீட்டராண்ட்டீஸ் நம் பேரச் சொல்றப்ப சிலுக்கு ஸ்விம் சூட்ல ஆடுறாப்ல சிக்குன்னு இருக்கு என்பதைப் பதிவு செய்யக் கடமைப் பட்டுள்ளேன்). நாம்போனதும் அதே குட்மார்னிங், அதே செக்கிங். விச் மாட்யூல்னு கேட்டுச்சு. நா ஸ்பீக்கிங்னு சொன்னேன். ‘அடக்கூறுகெட்ட குக்கரு, வந்துருக்க எல்லாருமே ஸ்பீக்கிங்குக்குதான்டா’ன்னு ஒரு லுக்கு விட்டு, “General or Academic?”னு கேட்டுச்சு. மனசுக்குள்ள செல்ஃப்த்தூ துப்பி ‘எச்ச உட்டேன்’னும் சொல்லிட்டு ஜெனரல்ன்னேன். அந்தம்மாக்கு அப்பவே என் ரிசல்ட் தெரிஞ்சிருக்கும். அடுத்து கேமராமேன் ‘அப்டி குனி- இப்டி சரி- சைடுக்கா திரும்பு-குப்புறக்காக்கவுரு’ன்னு சொல்லி திரும்பத் திரும்ப போட்டோ எடுத்தாப்டி. வெரிஃபிகேசன் முடிஞ்சு வேறொரு ரேசன் க்யூவுக்கு அனுப்பினாங்க. அங்கருந்து ஒவ்வொரு ரூமுக்குள்ளயும் ஆட்கள பிரிச்சி பிரிச்சி அனுப்பிட்டிருந்தாங்க. நம்ம உஷே மோள் எங்கிட்ட, ‘இவிடே வரு முத்தே’ன்னு ஒரு சேர்ல ஒக்கார வெச்சுது. 

கொஞ்ச நேரத்துல தாடிய ஒட்ட ட்ரிம் செஞ்ச ஒரு ஆள் வந்து என்னக் கூப்ட்டாப்ல. உள்ள போனதும் தன்ன இண்ட்றோ செஞ்சுக்கிட்டு என்ன நடக்கும்னு லைட்டா க்லிம்ப்ஸ் குடுத்தான். பேர்லயே தெரிஞ்சிடுச்சு மல்லு கிரிஸ்டின்னு. அந்த டெஸ்ட் முழுக்க பேசறத ரெகார்ட் பண்ணுவாங்களாம். அதுவரைக்கும் நல்லாப் பேசிட்டு இருந்தவன் ரெகார்டர ஆன் செஞ்சதும் புதுப்பேட்ட அழகம்பெருமாள் மேடைப்பேச்சு மாதிரி வேற மோடுக்குப் போயிட்டான். ஆக்செண்ட்டும் அதுக்கு அவன் காட்டுற எக்ஸ்ப்ரெசனும் விநோதமா இருந்துது. ‘நீங்க ரசிச்ச படத்தப்பத்தி சொல்லுங்க’ன்னு சொன்னான். அப்பப் பாத்த படங்கள்ல எனக்கு மனதுக்கு உவந்ததா இருந்தது சண்டமாருதம் மட்டுந்தான். அதப்பத்தி பேசலாம்னு வாயெடுத்தேன். அப்பத்தான் ஒன்னு ஸ்ட்ரைக் ஆச்சு. ஆகா.. இது ஸ்டார் டிவி எக்சாமாச்சே, நாம பொன்னர் சங்கர் பத்திலாம் பேசினா ஆங்ரி ஆய்டுவானுங்களேன்னு சட்டுன்னு விப்லாஷ்னு சொல்லிட்டேன். படத்தோட கதை, குறியீடுகள் (நன்றி: இணையக் கொரியன், மிஷ்கின் & வெமல் பட வெறியர்கள்), டயலாகு, மொட்ட பாஸோட ஆக்டிங்னு பேசினேன். அப்புறம் சிறார்களுக்கான படங்கள் பத்தி கேட்டாப்டி. சமூகக் கட்டமைப்பு சிறார்கள எப்டிலாம் ஆழம் பாக்குதுங்குற கதைக்களனோட வந்த “ரதிநிர்வேதம்” எனும் காத்திரமான படத்தப்பத்தி பேசலாம்னு நெனச்சேன். சரி வந்த எடத்துல எதுக்கு ஊர்ப்பகைன்னு பிக்சாரும் குழந்தைமையும்னு ப்ரசங்கத்த மாத்திக்கிட்டேன். ரெம்ப ஆலிவுட் ஜானர்லயே பேசறேன்னு ஃபீல் பண்ணிருப்பான் போல, “ஏன் இண்டியால பெரும்பாலும் காதல் படங்களே வருது?”ன்னு கேட்டான். பொறுத்தது போதும், இதுக்கு மேல வாலச்சுருட்ட முடியாதுன்னு அழுத்தம் திருத்தமா “கமான், வி ஆர் ஃப்ரம் தி லேண்ட் ஆஃப் காமசூத்ரா. வி ஆர் ஆல் ரொமாண்டிக் பை பர்த் இட்செல்ஃப். ஒய் டு யூ திங்க் வி ஆர் தி செகண்ட் மோஸ்ட் பாப்புலேட்டட் கண்ட்றி இன் தி வேர்ல்ட்?”னு கேட்டேன். தெறிச்சிட்டான். அதுக்கப்புறம் ரீஜனல் படங்கள் குறித்து பேச்சுப்போச்சு. மாலிவுட்ட ஒசத்திப்பேசி எஸ்ட்டா மார்க் வாங்கிடலாமான்னு யோசிச்சேன். மார்கோ சோப் போட்டு மார்க் வாங்கற மார்க்கம் மறத்தமிழனுது இல்லன்னு அப்டி எதும் செய்யல. அந்தப்பரிச்ச அத்தோட முடிஞ்ச்சு.

அதுக்கப்புறம் என்னாச்சு? இங்க கிலிக்குங்க

Friday, 8 April 2016

பால்யகாலலு சகிலு

படிச்சது - அதாவது ஸ்கூலுக்குப் போனது, ஊத்துக்கோட்டைன்னு ஒரு ஊராட்சி. இப்போ பேரூராட்சியாகி இருக்கலாம். சுமார் ஏழு வருஷம் அங்க படிச்சதால பெரும்பாலான பள்ளிப் பால்யம் அங்கதான் சப்ட்ராக்ட் ஆச்சு.

அப்போ ஊத்துக்கோட்டை ஒரு குட்டியூண்டு, பரபரப்பு, அதிர்வு எதுவுமில்லாத ஒரு ப்ரெட்டியான பீஸ்ஃபுல் ஊர். ஊருக்கு வடக்குலயும் மேற்குலயும் ஆந்திராவ தொட்டுட்டு இருக்குற வித்தியாசமான தமிழக ஆந்திர பார்டர் பிரதேசம். வடக்குல சத்தியவேடு (விஸ்வரூபம் பாக்க மக்கள் படையெடுத்தாங்களே, தட் சேம் ப்லேஸ்). தெற்குல திருவள்ளூர். ஈஸ்ட்டுல பெரியபாளையம். வெஸ்டுல நாகலாபுரம். வெஸ்டோவெஸ்டுல வெங்கிடு ஏடுகொண்டலவாடு. எந்த வீட்டு மொட்டமாடிலருந்து பாத்தாலும் ராமகிரி மலை தெரியும். 2கிமீ தொலைவுல சுருட்டப்பள்ளி கிராமம். (அங்க ஒரு சிவன் கோயில் இருக்கு. ஒலகத்துலயே சிவன் சயன நிலைல இருக்குறது அங்கதான்). அங்க ஒரு குட்டி டேமும் இருக்கு. ஊர ஒட்டி ஆரணி ஆறு ஓடும். கொஞ்சம் தோண்டினாலே நல்ல தண்ணி ஊறும். ஊரச்சுத்தி வயக்காடு. உண்மைலயே சென்னைக்கு மிக அருகில்தான் (62ஆவது கிமீட்டர்ல மெட்ராஸ் முட்டும்). என்னடா திடீர்னு ரியல் எஸ்டேட்ல எறங்கிட்டானோன்னு நெனைக்காதீங்க. நடூ செண்டரான நல்ல எடத்துல இருக்க ஊர். ஏன் அந்த ஊர விட்டுட்டு வந்தோம்னு யோசிக்கிறேன்.

இன்னும் அந்த ஊரப்பத்தின பல டீடைல்கள் சொல்லலாம். மொத்தமா இதுலயே எறக்காம அப்பப்ப சொல்றேன். மெய்ன்ஸ்ட்ரீம்லருந்து கொஞ்சம் ஒரு அஞ்சு ஏழு வருசம் பின் தங்கிய லைஃப் ஸ்டைல் கொண்ட ஊரு அது. நாங்க அங்க இருந்தப்ப மொத்தம் 5 ஸ்கூல் இருந்துது. ஸ்கூல்ல தமிழ்ப் பசங்களுக்கு ஈடா குல்ட்ஸும் இருப்பாங்க. ஸ்கூல்ல தெலுங்கு மொழியும் இருக்கும். செகண்ட் லேங்வேஜா தெலுங்க தேர்ந்தெடுத்த குல்ட்ஸ் தமிழ் பீரியட் வரப்ப காலி பண்ணிட்டு அந்த க்லாசுக்கு போய்டுவாங்க. இந்தி பீரியட் வரப்ப தமிழ்ப்பசங்களும் காலி பண்ணிட்டு தவ்விக்குதிக்கப் பாப்போம், ஆனா இந்தி மிஸ் (ஆக்ச்சுவலி அவங்க செம்ம ஆயா. ஆனாலும் மிஸ்னு கூப்டச்சொல்லி மெட்ரிக்குலேசன் எடிகொயட்) ரௌண்ட் கட்டி ஏக் காவ் மே-ந்னு மேய்க்க ஆரமிச்சுடுவாங்க.

அப்ப நா எதோ ஒரு க்லாஸ் போயிட்டிருந்த சமயம். வெவரம்னா, இதான் வெவரம்னு புரிய ஆரமிச்சிருந்த பருவம். வழக்கம்போல ஹோம் ஒர்க் எழுதாததால, ஹிஸ்டிரி வாத்தி பொளபொளன்னு பொளந்து முடிச்சு எங்கள முட்டி போட வெச்சிருந்த டைம். திடுதிப்னு வராண்டாவுல சலசலப்பு. எச்செம், ஒரு அம்மாப்பா, ரெண்டு பொண்ணுங்க வந்திட்டிருந்தாங்க. அதுல ஒரு பொண்ணு எங்க வயசுல. பொண்ணுங்க ரெண்டும் கலர்கலரா ட்ரெஸ் போட்டு ஜிகுஜிகுன்னு இருந்துச்சுங்க. சேம் ஏஜ்ட் கேல்ஸ் முன்னாடி எப்டி நீல்டௌன் போட்டுட்டு இருக்குறதுன்னு ஷையாகி சட்டுன்னு எழுந்து நின்னுட்டோம். நாங்க எதோ மினிஸ்டர்ஸ் போலவும், எச்சம் எதோ சியெம் போலவும், அவரு வந்ததும் மரியாத நிமித்தமா நாங்க எழுந்தது போலவும் சிட்சிட்ங்குறமாதிரி கையாலயே சைகை காமிச்சார். “சிட்டிங்லருந்து ஸ்டேண்டிங்குக்கு வந்த மாதிரி உக்காருங்குறான். முட்டிப்போட்டுட்டு இருந்தோம்யா யோவ்”னு மனசுல நெனச்சுக்கிட்டோம். அப்ப ஒடனே ஒரு டௌட் வந்துடுச்சு. உக்காருன்னு சொல்றாரே, புது அட்மிசன் வந்த மகிழ்ச்சியில நம்மள உண்மைலயே உக்காரச்சொல்றாரா, இல்ல நீல்டௌன கண்டினியூ பண்ணச்சொல்றாரான்னு ஒரே கொழப்பம். ஆனா நல்ல வேளையா அதுக்குள்ள அவங்க எங்களக்கடந்து க்லாசுக்குள்ள போய்ட்டதால க்லாஸ் பசங்க எல்லாரும் அவங்களுக்கு standing oviation குடுக்க, நாங்களும் ovulationல கலந்துக்கிட்டோம்.

எல்லாரும் வரிசயா க்லாசுக்குள்ள போக, நாங்க முட்டில ஒட்டிருந்த மணலத்தொடச்சு விட்டுட்டிருந்தோம். முட்டில மணல் குத்தி ஒரே அரிப்பு. “டேய் மாட்டுக்கார வேலா (எஸ்டீடி வாத்தி), ஒனக்கு இருக்குதுடா ஒரு நாளைக்கு"ன்னு மனசுக்குள்ள கறுவிக்கிட்டோம். அந்த வாத்திக்கு அந்தப்பேரு வெச்சதுக்குப் பின்னால ஒரு ரேஷனல் திங்கிங் லாஜிக் இருக்கு. அவர் வீட்ல நாலு எரும மாடு இருந்துது (ஆமா, அவர சேக்காம). லீவ் நாட்கள்ல அவர்தான் அதுகள மேய்க்க கொண்டு போவாரு. அதனால அந்தப்பேரு வெச்சாச்சு. முட்டி போட்டுட்டிருந்த நல்லவர் நாங்க நால்வரும் புதுசா வந்த அந்தப்பொண்ணயே பாத்துட்டு இருந்தோம்.

இந்தளவு பில்டப் உடுக்கறேனே, அப்ப அந்தப்பொண்ணு செம்மயா இருக்கும்னு திங்கிடாதீங்க. அவள்ட்ட பச்சக்குன்னு கவர்ந்த மொதல் விஷயம், அவளோட பேரு. அதுவரைக்கும் மலர்விழி, பாரதி, ஜமுனா, கலைவாணி, நித்யா இப்டியே சௌத் இண்டீஸ்த்தனமா பேரு பொழங்கிக்கிட்டிருந்த எங்க க்ளாசுக்கு, அவளோட பேரே ரொம்பப் புதுமையா இருந்துச்சு. நாங்க பாத்த Near to Modern பேருன்னா சரண்யா & அபிராமிதான். அப்புறம் ரெண்டு மூணு ப்ரியாக்கள் (தெருவுக்கு நாலு ப்ரியா கெடக்குதுக). இப்ப உங்களுக்கு அது ரொம்ப இத்துப்போன பேரா இருக்கலாம், அப்ப எங்களுக்கு அது கெத்தா தெரிஞ்சுது. அவ பேரு- ரேஷ்மா. ஆளு கருப்புன்னு சொல்லிட முடியாது, ரொம்பக்கருப்புன்னும் சொல்லிட முடியாது. இது ரெண்டுக்கும் இடைப்பட்ட பச்சை திராவிடக்கருப்பு. கருப்ப மறைக்கவோ, அழகக்கூட்டவோ, இல்ல என்ன எழவக்கூட்டவோ, மூஞ்சி முழுக்க பௌடர அப்பிட்டு வருவா. இப்ப கேமரா வாங்குனவன்லாம் கேவி ஆனந்துன்னு சொல்லிட்டு சுத்திட்டு இருக்கானுங்களே, அவனுங்க போட்டாப்புடிச்சு ஃபில்டர்ல ப்லாக்&ஒய்ட் சேத்தா ஒரு ஷேடு வருமே, அப்டி ஒரு டார்க் ஃபேஸ்ல க்ரே ஷேடோட வருவா. இதுல கண்ணுக்கு மையி வேற. ஆனாலும் அழகி. ஒரு கலை இருக்கும் அவகிட்ட. அரைகிராம் பேரழகி என்றாலும் மிகையாகாது.

அந்தப்பொண்ணுக்கு ஒரு தங்கச்சி. அவளும் அல்மோஸ்ட் இதே ஒப்பனைகளோட வருவா. ஆனா அவ சின்ன க்ளாஸ். இதுக்கெல்லாம் காரணம் யார்னு ரேஷ்மாவோட அம்மாவப்பாத்தா தெரிஞ்சுடும். ஒரு படத்துல சத்யராஜ் லேடிஸ் வேஷம் போட்டு வருவாரே, மாமன் மகள்னு நெனைக்குறேன்.  அதோட டிட்டோ. என்ன ஒன்னு, சத்யராஜ் ஒய்ட். இவங்க ப்லாக். ஆஜானுபாகுவா இருப்பாங்க. எப்பவும் ரெண்டு காதுலயும் ஈஃபில் டவர் மாதிரி டொலக்டொலக்னு பெரீய்ய கம்மல், அதே கிலோக்கணக்கு பௌடர், கண்மை, லிஸ்ப்டிக்னு ஒரு நடமாடும் அந்நேச்சுரல்ஸ் ஸ்பா & சலூனா இருந்தாங்க. குட்டி பதினாறடி பாயும்னு முன்னமே தெரிஞ்சு தாய் எட்டாத அடி ஆல்ரெடி பாஞ்சு வெச்சிருந்தாங்க.

உருவகேலில இவ்ளோ நேரம் ஈடிபட்டிருந்ததுக்காக உள்ளம் உருக, ரேஷுட்டயும் & ரேஷு மம்மிட்டயும் மன்னிப்புக்கேட்டுக்கொண்டு… இப்ப ஏன் ரேஷ்மாவப்பத்தி சொல்றேன்னா, எங்களுக்குப் பல புது விஷயங்கள அறிமுகப்படுத்தினதே ரேஷு & ஃபேம்லிதான்.

ஸ்கூல்ல மதிய நேரத்துல கொஞ்சப் பசங்க சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போயிடுவாங்க. மீதிப்பேரு டிஃபன் பாக்ஸ்ல எடுத்துட்டு வருவாங்க. மிச்சமீதி கொஞ்ச சிலர் தூக்குச்சட்டில சாப்பாடு எடுத்துட்டுப்போவோம். ரேஷ்மாவோட அம்மா டெய்லி மதியம் அவளுக்கு வீட்லருந்து ஃப்ரெஷ்ஷா சாப்பாடு கொண்டுவருவாங்க (யெஸ், இம்மியளவும் குறையாத மேக்கப்போட). அதுல என்னன்னா, சாப்பாடு எடுத்துட்டு வர்ரதுமில்லாம ரெண்டு பேருக்கும் ஊட்டி வேற விடுவாங்க. அப்டி ஒரு நாள் அவங்க வித்தியாசமான ஒரு சாப்பாடு கொண்டுவந்தாங்க. 

அதுவரைக்கும் எங்களப்பொறுத்தவர, ஜொரம் வந்தா மாடர்ன் ப்ரெட், அம்ம போட்டா எளனி, தாகம் எடுத்தா கொழாத்தண்ணி. இதுதான் கஸ்டம்ஸ் & கல்ச்சரா இருந்துச்சு அந்தக் குற்றூருக்கு. அவங்கம்மா ஒரு நாள் அவளுக்கு ப்ரெட்ல என்னமோ பண்ணி, அதுவும் மத்தியான சாப்பாட்டுக்குக் கொண்டு வந்தாங்க. அது என்னன்னு கேட்டதுக்கு “ப்ரெடாம்லேட்” அப்டின்னு சொன்னாங்க. “அந்த மாதிரி” பண்ண முட்டைக்குப் பேரு ஆம்லேட்டுங்குறதே செத்துப்போன எங்க தாத்தா மேல (இது அம்மாவோட அப்பா. அப்பாவோட அப்பா இன்னும் இருக்காரு.) சத்தியமா சொல்றேன், அப்பதான் தெரியும். அதுவரைக்கும் எங்க வம்சத்துல அதுக்குப்பேரு  “பொர்ச்சமுட்ட”. ப்ரெட்டையும் முட்டையையும் அஜுர நேரத்துல சாப்பாடா சாப்புடுற ஒரு ஜாதி இருக்குன்னே அவளப்பாத்துதான் தெரிஞ்சது. அப்புறம் டிசைனா இருக்குற வாட்டர்கேன்லதான் தண்ணி குடிப்பா. சில சமயம் பிஸ்லரித்தண்ணி. வெளிய இங்லிஸ் மீடியம்னு சொல்லிட்டு சுத்தினாலும் அல்மோஸ்ட் ஊர்நாட்டு வாழ்க்க வாழ்ந்த எங்களுக்கு ரேஷ்மா&கோ செஞ்சது, அவளோட ஸ்டைல் எல்லாமே புதுசா தெரிஞ்சது. நம்பினா நம்புங்க, முகத்துல ரெண்டு பக்கமும் கர்லி ஹேர் விட்டுட்டு வருவா (ஸ்கூலுக்கு!!) . கருப்பா இருந்தாலும் அவளோட இந்த ஸ்டைல்லாம் பாக்குறப்ப Aweந்னு இருக்கும். அல்லது அதுவரைக்கும் வேப்பெண்ணத்தலைகளயே பாத்துக் கடுத்ததால அவ ரொம்ப அழகாத்தெரிஞ்சாளான்னும் தெரியல (ரிலேட்டிவிட்டி!). 

ஊத்துக்கோட்டைல ஆரம்பத்துல இருந்தது ரெண்டே கொட்டாய். ஓரியண்டல், வேல் டாக்கீஸ். (Talkies காலத்து Doggiesசா நீன்னு கேட்டுடாதீங்க. நான் சின்ன வயசா இருக்கறச்சே ரஹ்மான்லாம் ஃபீல்டுக்கு வந்துட்டார். அயம் யங் ஒன்லி). அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ஏவிஎம் தியேட்டர்னு ஒன்னு வந்துது. அப்புறம் அதுக்கு பக்கத்துலயே குமாரி தியேட்டர் (அந்த ஊர்லயே பெரிய தேட்டர்). பொன்னுமணி, காயகல்பம், எங்க வீட்டு வேலன், இப்டியாப்பட்ட படங்களுக்குதான் எங்ககிட்ட ரீச் இருந்துது.

ஏவிஎம்ல தேவர்மகன் ரிலீஸ். செம்ம கூட்டம், ஔஸ் ஃபுல்லா ஓடுது ஷோ. எங்க வீட்ல அப்பாரு கமல் விசிறி. தாத்தாரு சிவாஜி ஏசி. அதனால குடும்ப சகிதமா படத்துக்குப் போனோம். தோரணம், கட்டௌட்லாம் வெச்சு தேட்டரே திருவிழாக்கோலம். நைட்ஷோக்குப் போனோம். அப்பாரு டிக்கட் எடுக்கப் போனவரு விறுவிறுன்னு ரிட்டன் வந்தாரு. மூஞ்சி கொஞ்சம் கடுகடுன்னு இருந்தாரு. சரி டிக்கெட் கெடைக்கல போலருக்குன்னு நெனச்சா, தாத்தாகிட்ட எதயோ குசுகுசுன்னு பேசினாரு. இப்ப கடுகடு தாத்தா மூஞ்சிக்கும் போயிடுச்சு. அது மேட்டர் என்னன்னா, எங்க அம்மாவோட அம்மா வீட்டு சைடு மக்களும் படத்துக்கு வந்துருக்குதுங்க. இவிங்யளுக்கும் அவிங்யளுக்கும் ஜென்மப்பக. “அதெப்டி அவனுங்க போற படத்துக்கு நாமளும் போக?” அப்டின்னு சொல்லி அங்கருந்து கெளம்பிட்டானுங்க. (அடேய்! உங்க போட்டிப்பகைக்கு வேற சப்ஜெக்டே கெடைக்கலியாடா???). தேட்டர் வரைக்கும் வந்துட்டு இவனுங்களுக்காக திரும்பிப் போய்ட்டோம்னு பிற்காலத்துல வரலாற்றாய்வாளர்கள் பக்கம் பக்கமா தீசிஸ் எழுதுவாங்கன்னு நெனச்சு, பக்கத்து குமாரி தேட்டர்ல ரஜினிப்படம். பாண்டியன்னு நெனைக்குறேன். சம்மந்தாருக்கு ஏட்டிக்கிப்போட்டியா சம்மந்தா சம்மந்தமில்லாம பண்றேன்னு அங்க கொண்டாந்து உட்டுட்டானுங்க. தலயெழுத்தேன்னு அன்னிக்கு குஸ்பு உய்யாலாலான்னு உய்வித்ததத்தான் பாக்க முடிஞ்சது. ஏன் சொல்றேன்னா, அட்லீஸ்ட் தே.மகன் போயிருந்தாலாச்சும் அதுல மௌத் கிஸ் இருக்குதாம். அதலாம் கத்துக்கிட்டுப்போயி ஹே பேப், அயம் ஆல்சோ ஒன் கட்டிங் எட்ஜ் டெக்நாலஜி கை ஒன்லி ரேஷ்மாட்ட சீன் போட்டிருக்கலாம். ஆனாலும் நாங்கள்லாம் இப்டி இஞ்சீ ஈ..டூப்..ப..ழ..கீனு பாடிட்டிருந்தப்ப அப்பவே ரேஷ்மா இங்லிஷ் பாட்டுலாம் பாடுவா. அதயிம் பேஏஏஏன்னு பாத்துட்டு இருப்போம். அப்புறம் பொண்ணுங்க பேண்ட் ஷர்ட் (அதுவும் ஜீன்ஸ்) போடுவாங்கன்னு அவளப்பாத்துதான் தெரிஞ்சது. வாக்மேன் அப்டின்னு ஒரு வஸ்து இருக்குறதும் அவதான் செங்கை எம்ஜியார் மாவட்டத்துக்கு அறிமுகப்படுத்தினா.

அவ தெலுங்குதான் ஆனாலும் தமிழ் க்ளாஸ் படிச்சா. ஸ்டைல் காட்டுவா ஆனா பிகு பண்ணதில்ல. எல்லார்கிட்டயும் நல்லா பேசுவா. க்ளாசுல இருந்த சிலபல வேப்பெண்ணக்கலயங்களுக்கு இவளப்புடிக்காது. திச் கர்ல்ச் ஆர் வெரி வெரி ஜெலஸ் யு க்நோ. ரேஷ்மா படிப்பில் குட்டி குட்டி ரேங்க்லாம் எடுக்காம, பதினஞ்சு, இருவதுன்னு நல்லா பெரிய ரேங்காதான் எடுப்பா. அதுவும் அவளுக்கு நல்லா எடுப்பாத்தான் இருக்கும். நாங்க ஆல்பாஸ் பண்ணாலே அது ஆல் இந்தியா ரேடியோல வர்ர மாதிரியான அரிய நிகழ்வா இருந்ததால அந்த சப்ஜெக்டுக்குள்ள நாம போக வேணாம். முழுப்பரிச்ச லீவு முடிஞ்சு அடுத்த போனப்ப அவ ஸ்கூலுக்கு வரல. அவங்க ஊர காலி பண்ணிட்டுப்போய்ட்டாங்கன்னு சொன்னாங்க. என்ன காரணம்னு தெரியல. ஒரே ஒரு வருஷம் மட்டும்தான் எங்களோட இருந்தா. அதுக்கப்புறம் அவளோட எந்தத் தகவலும் இல்ல. 

இதெல்லாம் இப்ப ஏன் சொல்றேன்? தோணிச்சு.


AddThis