Posts

Showing posts from September, 2014

ஐயம்!

அன்புள்ள ரகுவுக்கு, இல்லை. அன்பெல்லாம் நம் மத்தியில் இல்லை. நீ என் எதிரி. எக்காலத்திலும் என்னால் மறக்கவோ மன்னிக்கவோ முடியா எதிரி. நீ செய்த அக்கிரமங்கள் கொஞ்சமா நஞ்சமா? நான் மன்னிப்பது இருக்கட்டும். முதலில் உன்னாலேயே உன்னை மன்னிக்க முடியுமா? யோசித்துப்பார். பார்வதியும் முத்துராமனும் ஓடிக்கொண்டிருந்தனர். ஓடிக்கொண்டிருந்தனருக்கு முன் ”மூச்சிரைக்க”வும், மூச்சிரைக்கவிற்கு முன் ”உயிரைக்கையில்பிடித்தபடி” எனவும் சொன்னால் அவர்கள் இருந்த சூழ்நிலைக்குச் சரியாக இருக்கும். காதல். வெவ்வேறு ஜாதி. முன்னதைப்பின்னது துரத்திக்கொண்டு இதோ அரிவாள்களும் கத்திகளும், இரண்டு பூக்களைக்கொய்ய. அடேய் தீயவனே. உனக்கு நினைவிருக்கிறதா? இருக்காது. உனக்கெப்படி இருக்கும்? ஒன்றா இரண்டா நீ செய்தவை, உன் நினைவில் தங்க?  நீச்சல் தெரியாத என்னைக் கொஞ்சங்கூட இரக்கமில்லாமல் கண்மாயில் தள்ளிவிட்டாயே? காப்பாற்றச்சொல்லி எத்தனையோ கெஞ்சியும் அரை அவுன்ஸ் கருணை காட்டினாயா நீ? உயிர்பிழைக்கக் கடுமையாய்ப்போராடி கையில் அகப்பட்ட செடிகொடிகளைப்பிடித்து கரையேறினேன். அன்று அவை மட்டும் இல்லாவிட்டால் அது என் கடைசி தினமாயிருந்திருக்கும்.