இப்போதிருந்து இறக்கும்வரை
இனியொருவரை எத்தனை முறை பார்த்துவிடப்போகிறோம்?
அவரவருக்கு ஆயிரம் பணிகள்
இருக்கும் ஊர் நாட்டைப் பொறுத்து
இணைப்பாகக் கூடச் சிலபல சங்கிலிப்பிணைகள்.
அம்மா ஒரு பத்து முறை? இருபது?
பாட்டி மூன்று முறையைத் தாண்டினால் பெரிய சாதனை.
நண்பர்கள்?
உற்று, உறவு?
எத்தனைச் சந்திப்புகள் நிகழ்ந்துவிடும்?
இதையெல்லாம் விடக் கூத்து,
பெருங்கூத்து எது தெரியுமா?
தினமும்,
குறைந்தது ஒருமுறையாவது,
நினைத்து விடும் அந்த ஒருவரின் முகத்தை,
ஒரு முறை,
ஒரே ஒரு முறைகூட
இனி எப்போதும் சந்தித்து விடவே முடியாதென்பதுதான்.
வாழ்க்கைதான் எத்தனை வினோதமாகவும் விரோதமாகவும் ஆகியிருக்கிறது.
~
நாளை காலை ஒரு எட்டு எட்டைம்பதுக்கெல்லாம்
நாம் போய்ச்சேர்ந்த சேதி
அனைவருக்கும் போய்ச்சேர்ந்துவிடும்
பெரும்பாலும் மாலைக்குள் அடக்கம் இருக்கும்
கடந்தமுறை எப்படியோ
இந்த தடவை நிச்சயம் நாளை இன்னேரம்
எல்லாம் முடிந்திருக்கும்
இம்முறை வேறு வழியே இல்லை
ஊர் கண் விழிக்கையில்
நாம் நிச்சயம் கண் மூடியிருப்போம்
முன்பெப்போதும் இல்லாத
ஆகப்பெரும் துன்பமிது
கடப்பதென்பது முடியவே முடியாது
நம் நேரம் வந்தே விட்டது
வருடத்திற்கொரு முறை
இப்படியான
இருண்மையான
மரணக் குழிகள் வந்தே வந்து விடுகிறது
இப்போது வயதும் கூட
சக்தியும் தெம்பும்
விருப்பமும் கூட இல்லை
இப்படம் இன்றே கடைசி
ஒவ்வொரு முறையும்
அந்தக் குழி
இன்னும் அதிக அகலமாக
ஆழமாக
இருள் அடர்ந்ததாகவே
இருந்திருக்கின்றது
சென்ற முறை முட்படுக்கை எனில்
அடுத்த முறை அமிலக்குளியல்
அதற்கடுத்து எரிமலைக்குழம்பு நீச்சல்
ஒவ்வொரு முறையும் தப்பவே முடியாத
கருந்துளைக் கண்ணி
அடுத்த நாளின் சூரிய உதயத்தைப் பார்க்கப்போவதே இல்லை
எனக் கருதிய எண்ணற்ற நாள்களைக் கடந்து
இதோ இன்றும்
சுயத்தை மீறிய தக்கனப் பிழைக்கும்
அவ்வனிச்சைச்செயல்திறனை நினைக்கையில்
ஆச்சரியமாக இருக்கிறது.
இப்போதெல்லாம்
அச்சமாகவும்.
Comments
Post a Comment
Pass a comment here...