தானம் நிதானம்

தெந்தமிழகத்துக்குப் போனாலே ஒரு மாதிரி ஜெனரஸாகிடும் மனசெல்லாம். கடகண்ணிகளுக்குப் போறப்பலாம் தாராளமயமாக்கித்தான் கைக்காசுகள குடுக்கறது. அதுலயும் யாசகம் கேக்கறவங்கள பாத்துட்டாப்போதும் ஓவர்வெல்மிங் தலைக்கேறி பர்சுக்குள்ள கையவுட்டு என்ன சிக்குதோ அத அப்பிடியே கண்ணுல பாக்காம குடுத்துடுறது. அதாவது ஒரு கை குடுக்கறது மறுகைக்கோ கண்ணுக்கோ தெரியாம பாத்துக்கிடுறாராம். அதனால இவரு தாராள சிவாஜி பையராம். அப்பிடி இவரே நெனச்சிக்கிடுவாராம். 

அதுலயும் யா. கேக்கறவங்க முதிய கிழவிகளா இருந்துறக்கூடாது, நம்மள மாரி ஒரு பையன் இருந்துருந்தா இப்பிடி இவங்க நடுரோட்ல நிக்க வேண்டி இருந்துருக்காதுல்லனு நெனச்சு பர்ச காலி பண்ணிடுவாப்டி. உச்சி வெயில்ல ஓவர்திங்கின் பிச்சிகிட்டுப்போச்சுன்னா, நம்ம மதரும் நாம இல்லன்னா இப்பிடி ஆகிடக்கூடும்தானேனு கற்பன பண்ணிட்டு காச அள்ளித் தெளிப்பாப்ல நண்பனார். இதுல ஏன் காச அள்ளித்தெளிப்பார்னு சொல்றேன்னா காசத்தான் தெளிப்பாப்டி. ருவ்வா நோட்டுலாம் பொத்துனாப்ல உள்ளறைக்குள்ள ஒறங்கும். ஒபீசிட்டி வந்த அஞ்சு ருவ்வாக்கள் இருக்குல்ல, அத கொத்தா அள்ளிக்குடுப்பார். குடுத்ததும் பர்சு வெய்ட்டு கொறயும்ல, அந்த பிசிக்ஸ். 

ஆண்டுகள் உருண்டோடின, அன்னார் அயலகம் ஓரகத்துக்கு நாடுபெயர்ந்தாப்டி. வீட்ட விட்டு ஒரு எட்டு வெளிய போறதில்ல. போனா ஈரோக்கள் ஈப்போல பறந்துடுற காரணகாரியத்தால். ஆனாலும் எத்தன நாள்தான் வீட்டுக்குள்ள முட்ட போடுறதுன்னு ஒருக்கா ஒருநா காலாற நடந்துட்டு வருவோம்னு பக்கத்துலருக்க மாலுக்கு நடையக்கட்டினாப்டி. அது இந்தூரு செண்ட்ரத்த ஒட்டி இருக்க மால். ஆகப்பெருசு. நம்மூருலதான் செண்ட்ரல்னா அது ஊருக்குப் போற ரைல்வேடேசன். இங்க ஒவ்வொரு ஊருக்கும் ஒரு செண்ட்ரம் இருக்கு. அதச்சுத்தி கடைகள் மற்றும் பல. சொல்லப்போனா மத்த எல்லா நாட்டுலயும் இதே அமைப்புலதான் திட்டமிட்டு ஊருகள் அமைக்கப்பட்டுருக்கு. நம்மூரு பூலவாக்குக்கு சில்க்போர்டொன்றே சாக்க்ஷி. 

நண்பனார் நடந்து போனாப்டியா, அப்ப வழியில ஒரு வெளிநாட்டுப்பாட்டி அந்த வழியின் ஓரமா நின்னுட்டிருந்தாங்க. வெளிநாட்டுப்பாட்டின்னதும் வெள்ளக்காரப்பாட்டினு நெனச்சுக்கக்கூடாது. மிடிலீஸ்டுப்பாட்டி. அவங்க வெளிநாட்டு லிஸ்ட்ல வருவாங்களேயொழிய வெள்ளக்காரங்களாக மாட்டாங்க. வெள்ளக்காரனுகளுக்குள்ளயே யாரு வெள்ளவெளேர்க்காரனுகனு ஒரு பஞ்சாயத்து தனியா ஓடிட்டிருக்கறது வேற விசயம்.

அந்தப்பாட்டியப் பாத்தா தோற்றத்துலயும் உருவ அமைப்புலயும் நம்ம நண்பரோட பாட்டி மாதிரியே இருந்தாங்க. வேகமா கடந்து போயிட்டிருந்த நண்பர கூப்டாங்க. அவங்க ஆங்கிலமும் பேசல டச்சும் பேசல, வேற எதோ ஒரு மொழியில பேசினாங்க. நண்பருக்கு டச்சு தெரியாது, ஆனா இதுதான் டச்சுன்னு தெரியும். அத வச்சு அது டச்சில்லனு கண்டுபுடிச்சாப்டி. அந்தப் பாட்டி எதோ கேக்க, அவங்க ரெண்டு பெரிய பையி வேற வச்சிருந்தாங்க தரைல (உரத்துக்கு வருமே ஒரு வெள்ள சாக்குப்பை, அந்த மெடீரியல்ல ரெண்டு பெரிய பையி). ஒரு வேள தூக்க முடியாம பையத்தூக்கச் சொல்லி கேக்கறாங்க போலனு பைதூக்கி விடவானு கேட்டாப்டி நண்பர். அதுக்கு அவங்க வேற எதோ சொன்னாங்க. எங்கயும் கூட்டிட்டுப்போயி விடனுமானு கேட்டாப்டி (மைண்டுக்குள்ள நடு ரோட்டுல பாட்டி ஒருத்தி லிப்டுன்னு கேட்டா டோன்மிஸ் பாட்டு வேற ஓடுது. சப்போஸ் வீட்ல விட சொல்லி, விடப்போறப்ப அந்த வீட்டுல ஒரு கோடீஸ்வர மிடிலீஸ்ட் பேத்தி இருந்து, அல்ஜீமர்னால இப்பிடி வழி மாறி போயிடுறாங்க, வீட்ல அத்தன பெண்ட்லி, மினிகூப்பர் நிக்குது அதயாச்சும் கொண்டுபோலாம்லனு சொல்லி, இவ்ளோ கஷ்டப்பட்டு கொண்டாந்து விட்டிருக்கீங்க, நாமளே ஏன் கல்யாணம் பண்ணிக்கக்கூடாதுனு அந்த தளிரிளம் பேத்தி சொன்னதும் மீ...) இப்பிடியான கனவுகள் ஓட, அதுக்குள்ள அந்த பாட்டி இன்னம் ஒரு பாராக்ராப் பேசிட்டாங்க. நமக்கு ஒரு லெக்கும் புரியல. சாப்பாடு எதனா வேணுமான்னதுக்கு அதுவும் வேணாம்னுட்டு மறுக்கா எதோ கேட்டாங்க. காசு கேட்டுருக்காங்கனு அப்பறந்தான் புரிஞ்சது. அடடே நம்ம பாட்டி வயசுல உள்ள பாட்டி, இப்பிடி குளிர்தேசத்துல வந்து கஸ்டப்படுறாங்க, பாவம் யார புள்ளைகளா பெத்தாங்களோனு நெனச்சு, பழக்க தோசத்துல பர்சுக்குள்ள கையவிட்டா நோட்டுகள் எதுமில்ல. ஆனா சில்லற காசுக கெடந்துது. ரிப்லெக்ஸ் ஆக்சன்ல மொத்த சில்லறையவும் எடுத்து அவங்க கைல குடுத்துட்டு ஒரு பாட்டி சொல்ல தட்டாத பேரனா எமோசனோட நடந்து போனேன். 

அப்பத்தான் ஒன்னு ஒரச்சுது. இந்தியா மாதிரியே இங்கயும் குண்டு குண்டு காசுகள போட்டு வச்சிருந்திருக்கேன். அத காலி பண்ணுவோம்னு அள்ளி குடுத்துருக்கேன். இந்தியால அத குடுத்துருந்தா அது முப்பது அம்பது ருவ்வாய்க்கு வந்துருக்கும். இங்க குடுத்தது பூராம் ஒரு யூரோ, ரெண்டு யூரோ பெருமதியில கிட்டத்தட்ட பாஞ்சிருவது யூரோ சுவாகா. எமோசனாவறதுலாம் ஓகே, ஆனா அதுலாம் ஐய்யன்னார்ல ஆகிக்கணும். யூரோவுல ஆனா குண்டிக்கைலி கூட மிஞ்சாது எனும் பேரறிவு அப்பத்தான் உரச்சது. 

வெளிநாட்டுக்கு போனதும் மாறிடுறாங்கனு சொல்லி கேள்விப்பட்டுருப்பீங்கல்ல, அது இப்பிடித்தான்.

-----

அனேகமா இந்த வருச இறுதியில, கண்டெண்ட் வெறி புடிச்சு சுத்தற யூடூபனுக shootingகில் கிடந்த டேபில், சேர்களின் ரௌண்ட் டேபில்னு நடத்துனாலும் ஆச்சரியமில்ல. 

----

check kindle books: https://muthaliblogs.blogspot.com/p/kindle-books.html

----

all we need is some-body to lean on! 




Comments