சமீபமாக ஒரு குறிப்பிட்ட போக்கு அதிகரித்திருக்கிறது. Dissect செய்து பார்த்தால் அடிமட்டத்தில் அவை நடைபெறுவது எல்லாம் சுய பிழைப்புவாதத்திற்காகத்தான் என்றாலும் இவற்றால் ஏற்படும் social impact அதிகம் என்பதால் இதைக் குறித்துப் பேச வேண்டி இருக்கிறது.
பொதுவாக எந்த மாஃபியாவும் தன்னை மாஃபியா எனக் கூறிக் கொள்ளமாட்டர். அது போலவே இந்த சோசியல் மாஃபியாக்களும். அவர்கள் செய்வதாகச் சொல்வதென்னவோ நெட்வொர்க் & மார்க்கெட்டிங்தான். ஆனால் அதைச் சமைக்கும் விதம்தான் பல்லிளிக்கிறது.
ஆதி காலம் தொட்டே எந்தவொரு தொழிலுக்கும் மார்க்கெட்டிங் தேவைப்பட்டிருக்கிறது. திருவிழாக்கூட்டங்களில் ரேடியோக் குழாய் அறிவிப்பில் தொடங்கி, பிட் நோட்டிஸ், சுவர் விளம்பரம், போஸ்டர், கட்டௌட் என அது காலத்துக்குத் தக்கவாறு evolve ஆகி வந்திருக்கிறது.
பிசினஸ்களின் objective தங்கள் brandடையோ சர்வீசையோ மக்கள் மனத்தில் ஒரு ஓரத்தில் நினைவில் நிறுத்துவது. இதைச் செய்து விட்டாலேயே தொழில் பாதி சக்சஸ். அதற்குத் தான் அவர்கள் மார்க்கெட்டிங்கை நாடுகிறார்கள்.
ஒரு சிறு self test:
சட்டென உங்கள் நினைவுக்கு வரும் பெய்ண்ட், டூத் ப்ரஷ், நைட்டி, சமையல் எண்ணெய், சிமெண்ட் ப்ராண்டுகளின் பெயர்கள் மூன்றைப் பட்டியலிடுங்கள்.
பட்டியலிட்டபின், கூகுலில் இந்தப் பொருட்களில் என்னென்ன ப்ராண்டுகள் எல்லாம் உள்ளன என்பதைத் தேடுங்கள்.
அவற்றில் நீங்கள் ஏற்கனவே அறிந்த, ஆனால் லிஸ்டில் சேர்க்காத ப்ராண்டுகள் எத்தனை என்பதைப் பாருங்கள்.
அவற்றில் ஏன் நீங்கள் எழுதிய இந்த மூன்று மட்டும் உடனே ஞாபகத்துக்கு வந்தது என்பதைச் சிந்தியுங்கள்.
அது மிக எளிதான காரணம் தான். ஒன்று, நீங்கள் அவற்றைப் பயன்படுத்துபவராக இருக்க வேண்டும், அல்லது அவற்றைக் குறித்து எங்கேனும் பார்த்தோ, படித்தோ, கேள்விப்பட்டோ இருக்க வேண்டும். ஒரு பொருளை, ஒரு குறிப்பிட்ட தருணத்தில் உங்கள் நினைவில் வரச்செய்கிறார்களல்லவா, அதுதான் மார்க்கெட்டிங்கின் சூட்சுமம்.
இப்படி உங்கள் நினைவில் நிறுத்த அவர்கள் எண்ணற்ற குட்டிக்கரணங்கள் அடிப்பதுண்டு. நீங்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காகத் திரும்பத் திரும்பத் திரும்பச் சொல்வது - remember காப்பர் டீ or the sun tv’s movie promos? நீங்கள் அந்த ரிபீட் விளம்பரத்தினால் எரிச்சலுற்றவர் என்றபோதும் ஒரு கட்டத்தில் நீங்களே அதை முணுமுணுக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
போலவே, கொடுக்கப்படும் பிட்நோட்டிசை உடனே எறிந்துவிட வாய்ப்புள்ளதால், ’இந்த நோட்டிசைக் கொண்டு வரும் நபர்களுக்கு இன்ன டிஸ்கௌண்ட் அல்லது சிறப்புப் பரிசு உண்டு’ என அதில் ப்ரிண்ட் செய்திருப்பதைக் காணலாம். பரிசைப் பெறும் பொருட்டு அந்த நோட்டிஸ் பாதுகாக்கப்படும், அந்த விளம்பரமும் மனதில் தங்கும்.
இன்று மனிதர்களின் average attention span எட்டு நொடிகளே என்கிறது ஆய்வு. ஆக, அந்த எட்டு நொடிக்குள் உங்களிடம் ஒன்றை விற்றாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
முன் காலத்தில், ஒரு பொருளை விற்கவும் வாங்கவும் ஒரு நீண்ட timeline இருந்தது. மார்க்கெட்டிங்குக்கும் அது ஒரு பொருளின் சேல்ஸாக convert ஆவதற்கும் இடையில் மிகப் பெரும் time gap இருந்தது.
தற்போது டெக்னாலஜியின் பயனாய் அந்த டைம் கேப் மிகச் சில நொடிகளாகக் குறைந்து விட்டது. நம் அட்டென்சனைப் பெற்றுவிட்டால் நொடிப் பொழுதில் ஒரு பொருளையோ சர்வீசையோ விற்று விடலாம். விற்கும் வரை தான் அவன் உங்களுக்கு அடிமை, அதை வாங்கியபின் நீங்கள் தான் அவனுக்கு அடிமை.
எடுத்துக்காட்டாக, மொபைல் நெட்வொர்க், டிடிஎச் plans, டிவி, அப்லையன்ஸ், பேங்க் சர்வீஸ் குறித்து நம் நண்பர்கள் பலர் சோமீயில் கெஞ்சிக்கொண்டும் திட்டிக்கொண்டும் போஸ்ட் போடுவதை நாம் பல முறை பார்த்திருப்போம்.
உங்களிடம் ஒன்றை விற்றுவிட்டால் அதற்குப்பின் you don’t exist in their world. அடுத்தவரிடம் விற்கப் போய் விடுவார்கள்.
ஒரு அக்கௌண்ட் ஆரம்பிக்க, மவுஸ் க்லிக்கில் எண்ணெய் தடவி விட்டதுபோல் சுளுவாக வேலைகளை முடிக்கும் கம்பெனிகள் நமது grievanceசுக்காக நேரில் வரச்சொல்லியும் ஆன்லைனில் அலைக்கழித்தும் எத்தனை கடுப்புகளைக் கிளப்புகின்றனர் என சிந்தியுங்கள்.
அவ்வளவு ஏன், நீங்கள் அக்கௌண்ட் வைத்திருக்கும் ஆப்களில் டீயாக்டிவேட் அல்லது அக்கௌண்ட் டிலிட் ஆப்சன் எங்கே இருக்கிறது என்று தேடுங்கள். அவ்வளவு சுலபத்தில் நீங்கள் அதைக் கண்டுபிடிக்க முடியாது. இதுவும் ஒரு user experience சைக்காலஜி சூட்சுமம் தான். இத்தனை படியேறி / தடைகளைத்தாண்டி ஒன்றைச் செய்யவேண்டுமா என tired ஆகியே பாதிப்பேர் அதை விட்டுவிடுவர்.
சரி, இதிலெங்கு மாஃபியா வந்தது?
Visualising Social Mafias:
பிதாமகன் படத்தில் ரயில் சீன் நினைவிருக்கிறதா? சோசியல் மாஃபியா என்பது வெகு-precisely அதுதான்.
நன்றாக கவனித்தீர்கள் என்றால், ரயில் சீன் முழுக்க சூர்யா அடிவயிற்றிலிருந்து சத்தமாகக் கத்திக்கொண்டிருப்பார். That is to grab everyone’s attention. அவரின் வியாபரத்திற்குக் குறுக்கீடாக வெவ்வேறு நபர்கள் வரும்போதும் மீண்டும் அப்பயணிகளை அலர்ட் செய்து தன் மேல் மீண்டும் கவனத்தைத் திருப்ப வைப்பார் (இது ஒரு ஷாட்டாகவே வரும்).
மொத்த கோச்சும் அமைதியாக இருக்கையில் ஒரே ஒரு சூர்யா மட்டும் அலறி விற்றபடி இருப்பார்.
ஒரு சின்ன கற்பனை - இப்போது அந்தக் கோச்சுக்குள் சூர்யாவைப் போலவே இன்னும் சில சூர்யாக்கள் விற்றுக் கொண்டிருக்கிறார்கள் எனக் கொள்க. பல சூர்யாக்கள் அதே கோச்சில் இருந்தால், ஒவ்வொருவரும் மக்களின் அட்டென்சன் தங்கள் மீது இருக்க என்னவெல்லாம் செய்வார்கள் என்பதையும் சற்று கற்பனை செய்து பாருங்கள்.
Now adding one more layer to it. கோச்சில் உள்ளோர் இந்த சூர்யாக்களை, அவர்களின் அலறல்களை கவனிக்காது அக்கம் பக்கத்திலும் தங்களுக்குத் தாங்களேவும் (சத்தமாகப்) பேசிக்கொண்டிருந்தால் அந்த சீன் எவ்வளவு chaotic & complexசாக ஆகும் என்பதைக் கற்பனை செய்யுங்கள்.
Now adding even more complexity to it. அந்த ரயிலுக்கு வலது இடது புரத்தில் அதே வேகத்தில் மேலும் இரண்டு ரயில்கள் ஒரே திசையில் நகர, அதற்குள்ளும் சூர்யாக்கள் - கோச்சுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் மக்கள் - ஒரு ரயிலிலிருந்து மற்றொரு ரயிலிலிருக்கும் மக்களோடு பேசிக்கொள்ளும் மக்கள் - இன்னும் அதிக சூர்யாக்கள். இப்போது அந்த சீன் எப்படி இருக்கும் எனச் சிந்தியுங்கள்.
ஆக, மிகக்குறைந்த attention spanல், ஏகப்பட்ட, non stop loud noiseசுகளுக்கு மத்தியில், லட்சக்கணக்கில் கூட்டமிருக்கும் ஓரிடத்தில், குறி பார்த்து ஒரு மண்டையைப் பிடித்து சுகுராக மிளகாய் அரைக்க வேண்டும்.
குன்ஸாகப் புரிகிறதா? இதுதான் சோசியல் மீடியா மார்க்கெட்டிங். இன்றைய மார்க்கெட்டிங் எப்படி இயங்குகிறது என்ற தெளிவு வந்தால்தான் அதை ரிவர்ஸ் இஞ்சினியரிங் செய்து பார்க்க எளிதாக இருக்கும். அதற்குத்தான் இத்தனைப் புளிரசம். பொறுத்தருள்க.
இத்தனைக் கூச்சல்மிகு chaotic கூட்டத்திற்கு மத்தியில், விற்பனாவாதிகள் தங்கள் குரலைக் கேட்க வைக்க வேண்டுமெனில், அவர்கள் அதிக சப்தமாகக் கத்த வேண்டும். ஒருவர் மட்டும் கத்தினால் அது கேட்காமல் போய்விடக்கூடிய சாத்தியமுள்ளது. ஆகவே, பலரை பல்வேறு இடங்களில் நிறுத்தி வைத்து, ஒன்றாகக் (synchronous ஆகக்) கத்த வைக்க வேண்டும். அப்படிக் கூடிக் கத்தும் போது, அப்பெரும் கூட்டத்தில் தம் குரலை தனித்தொலிக்க வைக்க முடியும்.
இப்படித் தங்கள் குரலை ஒலிக்க வைக்க, தன்னைச் சுற்றி ஏகப்பட்ட ஏவலாள்களை வளர்ப்பர். அந்த ஏவலாளிகளுக்குப் பெயர் தான் சோமீ ஆர்மி என்பது. இதைச் செய்ய, ஏவுபவருக்கும், ஏவல் doggieகளுக்கும் ஏகப்பட்ட டீலிங்குகள் உண்டு (பரஸ்பர முதுகு சொறிதல்களும் அட்டீலிங்கில் அடக்கம்).
இது எப்படி சாத்தியப்படுகிறது?
உங்களில் பலர் ரிட்ச்சீ ஸ்ட்ரீட்டுக்கோ பர்மா பஜாருக்கோ சென்றிருக்கக்கூடும். அங்கே நாம் ஒரு பொருளை விலை விசாரித்துவிட்டு, வேறு கடைக்குச் சென்று அதே பொருளை விலை விசாரித்தால், முன்னர் சென்ற கடையில் என்ன விலை சொன்னார்களோ அதே ரேஞ்சில்தான் இங்கும் சொல்வார்கள். முன் சென்ற கடைக்கும் இந்தக் கடைக்கும் மத்தியில் எத்தனை தூரமிருப்பினும் சரி.
‘அட்டாட்ட சைய்யா அஸ்ஸிஸ்ஸி உய்யா’ என்று அவர்களுக்குள் ஒரு சங்கேத மொழியும் உண்டு. மாக்கான் ஒன்னு வருது, இந்த வெல சொல்லிருக்கேன், நீயும் அதையே மெய்ண்டன் பண்ணு, எஸ்ட்டாவ பிரிச்சுக்கலாம் என்பதான ஒரு சங்கேதம் அது. நீங்கள் ஒரு கடையிலிருந்து மற்றொரு கடைக்குச் செல்லுமுன் உங்களைப் பற்றின தகவலும் விலையும் பறந்து விடும். பிறகு நீங்கள் எங்கு சுற்றினாலும் அல்மோஸ்ட் அதே விலைக்குத்தான், அதே கடையிலோ அல்லது வேறு கடையிலோ வாங்கிச் செல்வீர்கள்.
மற்றொரு scenario. ஒரு கடையில், ஒரு பொருள் இருக்கிறதா எனக்கேட்டால் இல்லை என்று கூறவே மாட்டார்கள். தோ குடௌன்ல இருக்கு எடுத்துட்டு வரேன், என்ன மாடல் வேணும் என்று பேச்சை வளர்ப்பார்கள். இதற்கிடையில் அந்தப்பொருள் இருக்கும் கடைக்கு ஒரு பையனோ அல்லது தொலைபேசியோ பறக்கும். நாம் கேட்ட பொருளைக் கொணர்ந்து கொடுத்து விடுவார்கள். கமிஷனை அவர்கள் பிரித்துக்கொள்வார்கள்.
இந்த entire marketட்டுக்கும் இப்படி பல பொதுக்குணமும் ஒரு underlying understandingகும் ஓடிக்கொண்டே இருக்கும் (இது போன்ற இன்னும் பல உண்டு. மேற்சொன்னவை சாம்பிலுக்காக).
சோசியல் மாஃபியாக்களுக்குள்ளும் அப்படி ஒரு underlying network உண்டு.
இவன் இன்ன க்ரூப்போடு இருக்கிறான் என்று யாராலும் கண்டு பிடிக்கவே முடியாது. நம்மோடுதான் சுற்றிக்கொண்டே இருப்பார்கள், திடீரென்று ஒரு நாள் மாஃபியா க்ரூப்பிலிருந்து வெளிப்படுவார்கள்.
இந்த அண்டர்க்ரௌண்ட் (and சில நேரங்களில் வெளிப்படையான) நெட்வொர்க் எதற்கு உதவுகிறது?
Back to பிதாமகன். ஒரு சீனில், சுற்றியுள்ள கூட்டத்திற்கு ஒன்றை விளக்கிக் கொண்டிருக்கையில் சூர்யா கொஞ்சம் கேப் விடுவார். அப்போது பொதுமக்களிலொருவர் போல் அவர்களோடு கூட்டத்தில் கலந்து நிற்கும் கருணாஸ், “கம்பெனின்னா என்னண்ணே?” என ஒரு கேள்வி கேட்டு எடுத்துக்கொடுப்பார்.
இதுவேதான் இங்கேயும். ஒரே விசயத்தை ஒருவரே மீண்டும் மீண்டும் சொன்னால் அதை மக்கள் spam என இக்னோர் செய்யவும் hide/mute செய்யவும் வாய்ப்புள்ளதால், ஒருவர் சூத்திரத்தைச் சொல்ல, கேப் விட்டு வேறொருவர் இடிக்க, இன்னும் கேப் விட்டு அதையே மற்றொருவர் கிண்ட அப்படியே நம் தலையில் ஓமத்திரவத்தைக் கட்டி விட்டுச் செல்வர்.
முன்பே சொன்னது போல், இது பல லங்காக்கட்டை உருட்டும் சூர்யாக்கள் நிறைந்த இடமாதலால், தங்களின் விற்பனை மக்கள் மத்தியில் நின்று கொண்டே இருக்க, கேப் விட்டு விட்டு அதைப் பற்றிப் பேசிய வண்ணம் இருப்பர். இதனால் மக்களின் டைம்லைனில் அது மீண்டும் மீண்டும் வந்த வண்ணம் இருக்கும்.
ஒரு social media marketer (aka influencer) விற்கும் பொருளும் சர்வீசும் மாறிக்கொண்டே இருக்கும்.விற்பவை எல்லாமே randomமானவை (imagine the versatile fraud-ucts பிதாமகன் சூர்யா sells in the movie). அவர்கள் விற்கும் பொருளுக்கோ சர்வீசுக்கோ அவர்கள் எந்த responsibilityயும் எடுக்க மாட்டர். அவர்கள் விற்கும் பொருள் ஒவ்வொரு நாளும், வாரமும் மாறிக்கொண்டே இருக்கும். போலவே, இங்கே விற்பவை எல்லாமே time sensitive.
டிவி மார்க்கெட்டிங்கில் பார்த்தீர்களென்றால் ஒரு ப்ராண்டுக்காக விளம்பரம் செய்யும் நபர் அதன் போட்டி ப்ராண்டில் எப்போதும் வர மாட்டார் (அது அக்ரீமெண்டில் இருக்கும்). எ.கா: சச்சின் - பெப்ஸி
ஆனால் சோசியல் மீடியாவில் அப்படியெல்லாம் இல்லை. அதன் வேகத்திற்கும், மார்க்கெட்டின் வால்யூமுக்கும், கிடைக்கும் சொற்ப டைம் ஸ்பானுக்கும், காடு, மலை, கழுதை, குதிரை, பன்றி விட்டை என கண்டது கழியது அனைத்தையும் விற்க, தொடர்ந்து ஓலமிட்டவண்ணமே சுற்றி வருவார்கள் இந்த சோமீ விற்பனைப் பிரதிநிதிகள்.
சரி, இதிலென்ன மாஃபியா?
Until here, இது மார்க்கெட்டிங்கின் ஒரு உத்தியாகத்தான் இருக்கிறது. இது எப்போது மாஃபியாவாக மாறுகிறது என்றால், தங்களின் நெட்வொர்க்கையும் லாபியிங்கையும் வைத்து தங்களுக்கு உடன்படாத மக்களையும், குறிப்பாக vulnerable மக்களையும், தங்களின் பிழைப்புவாதத்திற்கு பங்கம் ஏற்படுத்திவிடுவார்களோ என அவர்கள் அச்சப்படும் மக்களையும் (குறிப்பு: தங்கள் பிழைப்பில் ஒருவர் மண் அள்ளிப் போட வேண்டாம், போட்டு விடுவாரோ என்று இவர்கள் அச்சப்பட்டாலேயே போதும்), அவர்களின் presenceசை இல்லாமல் ஆக்குவது. இதில் presence என்பது ஒருவரின் social presenceசோ, வேலையோ, குடும்ப வாழ்க்கையோ, அவருக்குக் கிடைக்கும், கிடைத்த job opportunitiesசோ, அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தங்களின் நெட்வர்க்கையும் லாபியிங்கையும் வைத்து அவர்களை முடக்கும் வரை இவர்கள் ஓயமாட்டர். சோசியல் மாஃபியாக்களிடமிருக்கும் முக்கிய அம்சம் இந்த நெட்வொர்க்கிங்கும் லாபியிங்கும் தான்.
இவர்கள் எப்போதும் பவரில் உள்ளவர்களை வலிய தேடிச் சென்று தொடர்பை ஏற்படுத்திக் கொள்வர். அல்லது அவர்களோடு தொடர்பு இருப்பதைப் போலக் காட்டிக்கொள்வர். அல்லது அவர்களுக்கும் தமக்கும் ஏதேனும் பொதுவான விடயங்கள் இருந்தால் அதைத் தொடர்பு படுத்தி, தானும் அவரும் ஒன்றுதான் என்பதைச் சோமீயில் சிருஷ்டிப்பர்.
குறிப்பாக, பவரில் உள்ளவர்களோடு தங்களுக்கு இருக்கும் தொடர்பை மற்றவர்களுக்கு அடிக்கடி அடிக்கோடிட்டுக் காட்டிக்கொண்டே இருப்பர். இது மார்க்கட்டில் தங்களின் இருப்பை நிலை நிறுத்தவும் லாபியிங்குக்கும் அவர்களுக்கு உதவுகிறது.
தற்போது மில்லினியல்களுக்கு மத்தியில் பரவலாகி வரும் கேன்ஸல் கல்ச்சரும் இதற்குத் தோதாக அமைந்துவிட்டது ஒரு coincidental irony.
ஆங்கிலத்தில் what are you bringing to the table என்று ஒரு சொலவடை உண்டு. ஓரிடத்திற்கு, அல்லது ஒரு பிசினசுக்கு, ஒரு ரிலேசன்சிப்புக்கு, நாம் கொண்டு வரும் value (addition) என்ன என்பதைக் கேட்கும் கேள்வி அது.
அடிப்படையில் அறமற்ற, தமக்கென்று கொள்கை / நிலைப்பாடு ஏதுமில்லா, பிழைப்புவாதத்தை மட்டுமே கொண்டிருக்கும் வெற்று டப்பாக்களான இந்த மாஃபியாக்கள் எதைக் கொண்டு வர முடியும்? காலிப் பெருங்காய டப்பாவில் கூட பெருங்காய வாசமிருக்கும். இவர்கள் அதுகூட இல்லாத void டப்பா. தங்களால் எந்த மதிப்பும் கொண்டு வர முடியாது என்பது திண்ணமாகிவிட்டது. ஆனால் மார்க்கெட்டில் தங்கள் பிழைப்பை உறுதிப் படுத்திக்கொண்டே ஆக வேண்டிய நிலை, அப்போது அவர்கள் கையிலெடுக்கும் ஆயுதம் தான் இந்த மாஃபியாத்தனம். நம் குரல் கேட்க வேண்டுமா, சுற்றி இருக்கும் அத்தனை பேரின் குரலையும் நசுக்கு என்னும் simple strategy.
நம் மீது ஒரு விமர்சனம் வருகிறதா? அதைப் பற்றி யாரையுமே பேசவே விடாது, சுற்றி இருக்கும் அத்தனை பேரையும் கூண்டில் ஏற்றுவோம். நமக்கெதிரானோரின் பேச்சை manipulate செய்து அவரை பொது எதிரியாகக் கட்டமைப்போம். அதற்கு உறுதுணையாக ஏனைய காலி டப்பா ஆர்மியையும் சேர்த்து, கேப் விடாது கூச்சலிட்டு ஒத்தூதச் செய்வோம்.
தங்கள் லாபியின் மூலமும், நெட்வொர்க்கின் பலத்தின் மூலமும் ஒருவரை massசாக harass செய்து அவருக்கு உளவியலாகவும், நேரடியாகவும் தொல்லைகள் தந்து ஒருவரை நிர்மூலமாக்குவது. இந்த இடத்தில்தான் அவர்கள் சோசியல் மீடியாவினர் என்பதிலிருந்து, சோசியல் மாஃபியாவாகின்றனர்.
ஒரு பத்து வயதுப் பெண் 400 பேர்களால் ஆறு மாதம் தொடர்ந்து வன்புணர்வு செய்யப்பட்ட செய்தியே இங்கு ஓரிரு நாளில் மறைந்துவிடுகிறது. எப்பேர்ப்பட்ட கொடும் செய்தியையும் இரண்டு நாட்களுக்கு மேல் பேசினால், “போரடிக்காதே” எனக்கூறி அடுத்தொரு ருசிகர ரேப்புக்குத் தாவி விடும் தன்மை கொண்டது சோசியல் மீடியா.
ஒவ்வொரு நொடியும் இத்தகைய uncertain and ultra random நியூஸ் வந்து குவியும் சோசியல் மீடியாவில், இந்த மாஃபியாக்களால் தனிப்படுத்தப்பட்டு, தாக்குதலுக்குள்ளாகும் யாருக்காகவும் ஆதரவாகப் பேச அவகாசமோ நேரமோ பொறுமையோ மற்றும் இத்தகைய venomous லாபிக் கூட்டத்துக்கு எதிராக நிற்கும் குதர்க்கத் திறனோ யாருக்கும் இருப்பதில்லை.
ஒருவரை ஒழித்துக் கட்ட வேண்டுமென இக்கூட்டம் தீர்மானித்து விட்டால், பல்முனைகளிலிருந்தும் நேரம் காலம் பாராது, மாஃபியாக்கூட்டத்திலிருந்து ஒருவர் பின் ஒருவராகவும் மொத்தமாகவும் தொடர் தாக்குதல் நடத்தி, தாக்கப்படுபவரையும், மிகக் குறிப்பாக அவரோடு சம்மந்தப்பட்டவர், சம்மந்தப்படாதவர், என்றோ பஸ்ஸில் ஒன்றாகப் பயணித்தவர், க்ரூப் ஃபோட்டோவில் photobomb ஆனவர் என ஒருவரையும் விடாது அத்தனை பேரின் மீதும் தாக்குதல் நடத்தி இவர்கள் செய்வது ஒரு mass virtual acid attack மற்றும் வன்புணர்வுக் கொலை.
ஒருவரின் sensitive personal விவரங்களை வெளியிடுவதிலிருந்து, வேலை செய்யும் நிறுவனத்திற்கு குடைச்சல் தருவது வரை இவர்களின் மாஃபியாத்தனத்தை வரிசைப் படுத்திக்கொண்டே போகலாம்.
எப்படித் தங்கள் survivalலுக்கு தன்னைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்களோ, அதே போல் அடுத்தவர்ளும் அவர்களின் சர்வைவலுக்கு ஒரு கூட்டத்தைச் சார்ந்து இருப்பர் என்பது இவர்களின் கணக்கு. அதனால்தான் இவர்கள் யாரையேனும் target செய்யும்போது, அவரோடு distanceசில் ஒருவர் சம்மந்தப்பட்டதாகத் தெரிந்தாலும் அவர்களையும் target செய்து harass செய்வார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று, அவரோடு சம்மந்தப்படாதவர்களையும் link செய்து அவர்கள் மீதும் கூட்டுத்தாக்குதல் நடத்துவார்கள். இது மற்றவர்களுக்கு இவர்கள் விடுக்கும் ஒரு எச்சரிக்கை. இவனுக்கு யாரும் சப்போர்ட்டுக்கு வந்தால் உங்களுக்கும் இதே நிலைதான் என்று. இக்கூட்டத்தின் தாக்குதலுக்குத் தயங்கியே பலர் பின் வாங்கிவிடுகின்றனர்.
இன்றைய யுகத்தைப் பற்றி நாம் அறிந்ததே. பெரும்பான்மைக்கு, மெய்ப்பொருள் காணும் அறிவெல்லாம் இல்லை. எந்த செய்தியில் கிளர்ச்சி கிடைக்கிறதோ அதன் பின் சென்று, அதையோ விவாதித்து, அதையே தீர்ப்பாகவும் எழுதி முடிக்கிற instant judges வாழ் சோமீ யுகமிது. இத்தகைய சூழலில், இவர்களால் மன நிம்மதியையும், வேலையையும், உற்றாரையும் இழந்த ஒரு vulnerable victim இந்த மாஃபியாக்களை எதிர்த்து என்ன செய்து விட முடியும்?
மாஃபியாக்கள் ஏன் இதைச் செய்கிறார்கள்?
Again, இது பிழைப்புவாதத்திற்காகத்தான். They feel very insecure. அவர்களின் இந்த பிசினஸ் மாடல் எப்போது வேண்டுமானாலும் திவாலாகலாம், as they do not bring anything valuable to the table. ஆகவே, இருக்குமட்டும் அள்ளிக் கட்டிவிட வேண்டும் என்ற முனைப்பு.
மேலும் முன்பே சொன்னது போல, ஒரே கோச்சிற்குள் ஏகப்பட்ட சூர்யாக்கள் உள்ளனர். ஆகவே அத்தனைக் கூட்டத்தில் தான் கவனிக்கப்பட வேண்டுமென்றால், ஒன்று, மற்றவர்களை விடச் சத்தமாகப் பேச வேண்டும். அல்லது தரமான பொருளை விற்க வேண்டும், அல்லது மற்றவர்கள் நம்மை மதித்து கவனிக்குமளவிற்கு ஒரு நற்பெயரைப் பெற்றிருக்க வேண்டும். நமக்கு எதற்குமே வக்கில்லை. ஆக, நமக்கிருப்பது ஒரே வழி, ஏனைய சூர்யாக்களின், பேசும் மக்களின் குரல் வளையை நெறித்து விட்டால், பிறகு நம் குரல் மட்டுமே கேட்கும். ஏனையோரை முற்றிலுமாக அழித்தொழித்து விட்டால் பிறகு monopolyயாக நாம் மட்டும் லங்காக்கட்டை உருட்டலாம். இதுதான் இந்த சோஷியல் மாஃபியாக்கள் செய்வது. They don’t just silence those who oppose them, but tarnish and make them vanish. அதுதான் அவர்களை லாபியிஸ்டுகள் எனக்கூறாது மாஃபியாக்கள் எனக்குறிப்பிடச் செய்கிறது.
நீங்கள் நன்றாக கவனித்துப்பார்த்தால் இவர்களுக்கென்று ஒரு பொதுவான behavioural pattern மற்றும் குணங்கள் இருக்கும்.
அவர்கள் ஆகப்பெரும் narcisstடுகளாக இருப்பர்
பவரில் இருப்பவரோடும் பிரபலத்தோடும் தாங்கள் எப்போதும் தொடர்பில் இருப்பதாகக் காட்டிக்கொண்டே இருப்பர்
தாங்கள் எப்போதும் trendyயாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகக் காட்டிக்கொண்டே இருப்பர்
Popular அடையும் எல்லாமுமே தங்கள் மூலமாகத்தான் ஆக வேண்டும் என்று முனைந்துகொண்டே இருப்பர்
பாப்புலரான / பாப்புலராகும் எல்லாவற்றோடும் தங்களை associate செய்து அதை மீண்டும் மீண்டும் பிரஸ்தாபித்துக்கொண்டே இருப்பர்
தாங்கள் சம்மந்தப்படாத ஏதேனும் பாப்புலர் அடைந்தால் அதை மட்டம் தட்டிப் பேசுவர் (அதன் மூலம் கிடைக்கும் இகழ் வெளிச்சத்தையும் தங்கள் பிசினசுக்கான கச்சாவாக்குவர்)
தங்களைச் சுற்றி எப்போதும் ஒரு (புதுப்புதுக்) கூட்டத்தை வளர்த்துக்கொண்டே இருப்பர்
அவர்களால் தனித்து இயங்கவே முடியாது
அடுத்தவரின் validationனுக்காக ஏங்கிக்கொண்டே இருப்பர்
தங்களுக்கு, தங்கள் பிழைப்புக்கு யாரெல்லாம், எதுவெல்லாம் insecurityயைத் தருகின்றனரோ அவர்களையெல்லாம், அவற்றையெல்லாம் ஏதேனும் ஒரு வழியை ஏற்படுத்தி invalidate / cancel செய்து விடுவர்.
அவர்களுக்கு முற்றிலும் சம்மந்தப்படாதவற்றிலெல்லாம் தாமாக ஆஜராகி ஒரு கருத்தைச் சொல்லுவதும் அதற்கு உடன்படாதோரைத் தூற்றுவதும் செய்தபடி இருப்பர்
நிறைய ஊளை வேலை பார்ப்பர்
அவர்களால் transparentடாக இயங்கவே முடியாது. அனைத்தையும் திரை மறைவிலும் முதுகுக்குப் பின்னாலும் மட்டுமே செய்வர்
தங்களைச் சுற்றி நிறைய ஏவல் நாய்களையும் அவற்றுக்குள் ஒரு hirearchyயும் வைத்திருப்பர்
இந்த ஏவல் கூட்டத்தை மாற்றிக்கொண்டே இருப்பர். பழையன கழித்தும் புதுப்புது ஆட்களை சேர்த்தபடியும் இருப்பர்.
புரட்சியோ, போராட்டமோ, கொண்டாட்டமோ, இயக்கமோ, அது தங்கள் மூலமாகவோ அல்லது தங்களை மையப்படுத்தியே அமைய வேண்டும் என நினைப்பர்
நிறைய பொய் சொல்வர், முன்னுக்குப் பின் முரணாகவே எப்போதும் பேசுவர்
யாரோடும் நேரடியாக மோதவே மாட்டர். எப்போதும் திரை மறைவு வேலைகளையே செய்வர்
நிறைய சிண்டு முடிவர்
யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டர், உண்மை பேசுபவர்களை தங்களை விட்டு விலக்கி வைப்பர்
எப்போதும் ஒரு delusional worldடிலேயே இருப்பர்
victim card play செய்வர்
ஒருவரின் இன்னலில், அடையும் இழப்பில் இன்பம் காணும் குரூர மனம் படைத்தவராக இருப்பர்.
ஒருவருக்கு தன்னால் நிகழ்ந்த இழப்பைப் பெருமையாகவும் மகிழ்வோடும் மற்றவர்களிடம் பகிர்வர். இதன் மூலம் மற்றவர்களுக்கு ஒரு மறைமுக எச்சரிக்கையும் விடுப்பர்
நீங்கள் கேட்கும் கேள்விக்கு அவர்கள் நேரடியாக பதிலளிக்கவே மாட்டர். கேட்ட கேள்வியை twist செய்து அதைத் திசை திருப்பி விடுவர்.
திருகுவேலை பார்த்து அதை தங்களின் விக்டிம் ப்லேவுக்கு உபயோகிப்பர்
ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு வகையான ஏவலாளியை வைத்திருப்பர்
இதற்கு என்னதான் தீர்வு?
Keep exposing and ignoring them. நாம் அவர்களின் போஸ்ட்டில் இடும் ஒவ்வொரு சொடுக்கும், impressionகளாக மாறி அதையே தன் பிசினஸ் பலமாகக் காட்டி காசு பறிக்கும் வழிப்பறிக்கூட்டமிது. அவைகளுக்கு அட்டென்சன் கொடுக்கக் கொடுக்க, அவை வீரியமாக எழும். அவைகளுக்குத் தரும் அட்டென்சன் எனும் ப்லக்கைப் பிடுங்கி விட்டால் புடுக்கறுந்த வராகம் போல் வீள்வீளெனக் கத்திக் கூப்பாடு போடும். காலம் நகர, அவைகள் மறைந்து போகும்.
இறுதியாக, யாரிவர்கள்?
இக்கட்டுரையில் எங்குமே இதோ இவர்தான் என யாரையும் குறிப்பிடாமல் அவர்களின் functional pattern குறித்து மட்டும்தானே குறிப்பிடப்பட்டுள்ளது? இக்கட்டுரை, சோசியல் மீடியா பயன்படுத்துவோர்க்கும் சோசியல் மீடியா மார்க்கெட்டிங்கில் இருப்போருக்கும் கூடத் தகவலாகத்தான் தெரியும். ஆனால் சிலருக்கு மட்டும் இது தங்களை நோக்கிச் சொல்வது போலவே ஒரு பிரம்மை ஏற்படும். பின், ஆங்காங்கே தாமாக முன் வந்து சில அனத்தல்கள் கேட்கும். அந்த வாலண்டரி குரல் குரங்குகளின் வால்களைப் பிடித்துச் சென்றால் அக்குரங்குகள் தஞ்சமடையும் இடம் சோசியல் மாஃபியாக்களின் கூ(ட்)டமென்றறிக.
Super
ReplyDeleteNice analysis
ReplyDeleteWell written article. Kudos
ReplyDeleteUnga Twitter id link kudu thala
ReplyDelete