வேலைக்காரன் (2014)

இந்த வேலை தேடும் படலம் இருக்கிறதே, அதை முடிவதற்குள் தாவு தீருமா என்றால் தீரும். சில பேர் சொல்றான் தீராதுன்னு. அவன்லாம் இன்னும் காலேஜே முடிக்காதவனா இருப்பான். வேலைக்கும் நமக்கும் நடுவால நந்தி மாதிரி இருப்பது எச்சார்கள் எனப்படும் கங்காணி பாய்ஸ்தான். நந்தின்னதும் உருவத்துலயான்னு கேக்கப்படாது. என்ன காரணத்தினாலோ பெரும்பாலானவங்க ட்ரிபுள் எக்செல் சைஸ்தான்னாலும் உருவக்கேலி செய்வது தவறு.
மறைஞ்சு நின்னு சிக்னல்ல படார்னு பாஞ்சு புடிக்கிற ட்ராபிக் போலிஸ்கார்ஸவிட யூத்ஸ் அதிகமா கரிச்சுக்கொட்றது இந்த HRகளத்தான்.

அப்டி அவங்க என்னதாம்பாஸ் பண்றாங்க?

இவர்களின் லோலாய் ஆரம்பிப்பது வேலை வாய்ப்பு அறிவிப்பின் job descriptionல். மழுங்க மொட்டையடிக்கும் சலூன் வேலைக்கு நன்கு ஆடத்தெரிந்த செட்டிநாட்டு சமையல்காரர்ப்தேவை. சைக்கிளில் குரங்கு பெடரல் அடிக்கத்தெரிவது Must. அட்டானாவில் விட்டு கரகரப்ரியாவில் காரப்பொடி விற்கத்தெரிவது added advantage என அமாவாசைக்கும் ஆண்ட்ரியா ஜெரமியாவுக்கும் முடிச்சு போட்டு ஒரு விளம்பரம் வரும். உடனே சேரும் அடிமைக்கு முன்னுரிமை தந்து சென்னைக்கு மிக அருகில் மத்தியப்பிரதேச அமேசான் காட்டில் கண்டெடுக்கப்பட்ட பஞ்சதந்த்ர மந்த்ர யந்த்ரம் பரிசுன்னு போட்ருவாங்க. இதப்பாத்துட்டு, தெரிஞ்ச நாறவாய்க்கு தெரியாத கொள்ளி வாய் தேவலன்னு ஆல்ரெடி வேலைக்கு இருக்க அடிமைகளும், கழுத்து தர ரெடியா இருக்கேன், புடிச்சு கரகரன்னு அறுத்து உட்ருங்கன்னு வேலை இல்லாமல் தேடிட்டு இருக்க இடலாக்குடி ராசாக்களும் இந்த வலைல விழுவாங்க. அங்க ஆரம்பிக்கும் செவன் அண்ட் ஆஃப் கண்ட்ரீ சாட்டர்டே.

வடக்குப்பட்டி ராமசாமிக்கு குடுக்கவேண்டிய பணம் வேலைக்கு சேந்ததும்
வந்துடும்னு நம்பிக்கையோடு HRக்கு Resume mail அனுப்பிட்டு எப்படா மூணு நாள் முடியும், தென்ன ஓலைய விட்டு பறந்து போலாம்னு பாத்துட்டிருக்க just age attended புள்ள மாதிரி Mail boxஐயே பாத்துட்டு இருப்பாங்க.

பொறுமையின் எல்லைக்கே போன சிலர் பார்டர் தாண்டி பட்டா போடும் சீனா மாதிரி HRக்கு call பண்ணுவாங்க. ரிங் அடிக்கும் நேர்த்தில் Education loan, personal loan, "அப்புறம் தம்பீ, என்னதான் பண்றிங்க"ன்னு நம்ம வீடு  தேடி வந்து டீ சாப்ட்டு நம்ம backல தீ வெச்சுட்டு போற சொந்தக்காரர் மங்கூஸ் மண்டையன்கள் எல்லாம் மைண்ட்ல வந்து போகும். இத்தனை பிரச்சினையும் இதோ இந்த போன் காலில் தீர்ந்துவிடும்னு நம்பிக்கையோடு இருக்கும்போது நம்ம அழைப்பை ஏற்பார்கள்னா நினைக்கிறீங்க? ம்ம்ஹூம்...

கோச்சுகிட்டு போன ஜில்லு லவ்வர்ஸ் சமாதானப்படுத்த விடாமுயற்சி செய்ற ஜக்கு பாய்ஃப்ரண்டு மாதிரி ஒரு 542 தடவ கால் பண்ணப்புறம் எடுப்பாங்க. நாம அலோ கூட சொல்லிருக்க மாட்டோம், im in a meeting, mail me your resumeன்னு சொல்லுவாங்க. அடேய் அப்ரண்டிஸ், கால் பண்ணதே resume mailக்கு நீ respond பண்ணலன்னுதாண்டான்னு சொல்லக்கூட கேப் கிடைக்காது. கட் பண்ணிடுவாங்க. அப்புடி என்னா மீட்டிங்னு கொஞ்சம் அப்டிக்கா எட்டிப்பாத்தா candy crushல லைஃப் கேட்டு பிச்சையெடுத்துட்டு இருப்பாங்க. இல்லன்னா மத்த வெட்டி எச்சார்களோடு மொக்க்க்க்க மோகன் ஜோக்குக்கு ஆர்ஜே பாலாஜி ஜோக் மாதிரி செவுடனுக்கும் கேக்குற டெசிபல்ல சிரிச்சுட்டு இருப்பாங்க. (எச்சார்களின் ப்ரத்யேக சிரிப்பொலி பற்றி யாராச்சும் பிஎச்டி பண்ணிருக்காங்களா? அந்த வில்லன் சிரிப்புக்கு முன்னாடி PUCலாம் LKG).

இவ்வளவு தடையை மீறி ஒரு நாள் 9மணிக்கு இண்டர்வ்யூ ஷெட்யூல் ஆகும். முன் ஜாக்கிரதை முருகதாசா 8 மணிக்கே நாம போனா ஷார்ப்பு ஷங்கரா 7 மணிக்கே 600 பேர் வந்து லைனில் நிற்பாங்க. நமக்கு பார்த்திபன கண்ட வடிவேலு கணக்கா பக்கோன்னு ஆகும். சரியாக 10.30க்கு வந்து ஒரு எச்சார் சொல்வார், 12 மணிக்கு ஆரம்பிக்கும் என்று. சிலபல நார்த்திண்டீஸ் வாலாஸ் "திஸ் இஸ் நாட் ஃபேர் யார், அராம்சே நாதுராம்கோட்சே உஸ்கா புஸ்கா கரோ" என இந்திலிஷில் சண்டையிட நம் மக்கள் போன வாரம் HCDullலயும் இப்டிதாம்பாஸ் காண்டாக்கிட்டாங்க, உங்க கம்பெனில ஓப்பனிங் இருக்கா என வரிசையில் இருக்கும் ஏனைய அடிமைகளிடம் பரஸ்பரம் மெய்ல் ஐடி கேட்டு ரெசூம் தந்து தாம்பூலம் மாற்றிக்கொள்வர்.


இண்டர்வ்யூ கூட்டத்தில் நம் டீம்காரனிருந்தால் இன்னும் டேஞ்சர். "ஒம்மொகரைய பாக்க முடியாம தானடா இந்தக்கம்பெனிக்கு வந்தேன், இங்கயும் ஹச்சு டாகாட்டம் வந்து நிக்கிற, மூதேவி மூதேவி" என மைண்ட்வாய்சில் மட்டும் வைத்து, மௌத்வாய்சில் "ஹாய்.. இப்படி வந்து எனக்கு முன்னாடி நின்னுக்கோங்க பாஸ், அங்க வெயிலடிக்குது பாருங்க"ன்னு சோசியல் சர்வீஸ் செய்து வைப்போம்.
இதற்கிடையில் நாக்கு வறண்டு அயன் பண்ண சட்டையெல்லாம் கசங்கி தல சுத்த ஆரமிச்சுருக்கும். இந்த எச்சாருங்க நம்ம முன்னாடியே ஓசி டீ பிஸ்கட் சாப்டுங்க. இண்டர்வ்யூக்கு இப்ப இன்னும் கூட்டம் சேந்து டாஸ்மாக் மேளா மாதிரி ஆகிடும். அவதி தாங்காம, கட எப்ப சார் தொறப்பீங்கன்னு போய் கேட்டா, நாம என்னமோ இவங்கட்ட கடன் வாங்கிட்டு திருப்பித்தராத மாதிரியும் இவங்க நம்மால் ஜப்தி செய்ய வந்த பவுன்சர் மாதிரி ஒரு லுக் விட்டுட்டு சுகர் பேசண்டுக கணக்கான குறுக்கும் நெடுக்கும் நடப்பாங்க (பிசியாமாம்).

இந்த அலாவுதீன் தடைகளத்தாண்டினா அற்புத வெளக்கு கெடைக்கும்னு இண்டர்வ்யூக்கு போனா அங்க வெளக்குக்கு பதில் ரெண்டு வெளக்கெண்ணைங்க இருக்கும். "மச்சி, ஒருத்தன் சிக்கிருக்கான், எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாம்போல, ஃப்ரீயா இருந்தா வாயேன்"னு மொரட்டுவை அடி அடிப்பாங்க.
எங்க கம்பெனில நெறைய தேவையில்லாத ஆணி புடுங்கணும், ப்ரஷ்ஷர் போட்டு புடுங்க வெப்போம், அப்பாப்பிள்ளை மேனேஜ்மன்ட் வண்டி வண்டையா திட்டும் அதெல்லாம் சிரிச்சுட்டே கேட்டு மண்ணு மூட்டு மாதிரி இருக்கணும், செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களாம்பாங்க. நீங்க தேடுற அந்தக்கொழந்தையே நாந்தான் சார். ஷாட் நேம் கூட சுப்பி அலைஸ் கவரிமான் ராஜான்னதும் அவங்க கண்ல 0வாட்ஸ் பல்பெரியும். வெளிய வெய்ட் பண்ணுங்கம்பார். நாம வெளிய வந்ததும் கேப்டனக்கண்டதும் பாய்ந்தோடி கவரேஜ் பண்ணும் நிருபர்கள் போல ஏனைய போட்டியாளர்கள், "என்ன கேட்டாங்க? நார்மலா சிசேரியனா, இருக்காரா போய்ட்டாரா" என துளைத்துவிடுவர்.

இவையெல்லாம் கடந்து ஒரு 34 மணி நேரம் காத்திருந்து HR ரவுண்டுக்கு அழைக்கப்படுவோம். அங்கு கடவுளுக்கே Conduct certificate கொடுக்கும் நல்லவன்/ள் நான் தான் என்பதாக ஒருவர் இருப்பார். See, எங்களுக்கு allot பண்ணின காக்கா கடி பட்ஜெட்டுல குருவி கடி கடிச்சு நாங்க சம்பளமாக தருவோம், நீங்க சிர்ச்சா மாதிரியே மூஞ்ச வெச்சுட்டு அத வாங்கி அடிமையாகிடணும். சிட்டுக்குருவி லேகியத்துல கூட கிடைக்காத (career) growth எங்க கம்பெனில வேல செஞ்சா கெடைக்கும் என்பர். காலையிலிருந்து பட்ட அவதிகளின் உள் வெளிப்பாடாய் ஈயம் பூசிய மாதிரியும் பூசாத மாதிரியும் தலை ஆட்டி வைப்போம். அப்போது ஒரு திருவாசகம் உதிர்ப்பார்கள். "we will get back to you" என்று. ஒன்று மட்டும் தெரிந்துகொள்ளுங்கள் மக்களே, 80sல பொண்ணப்பாத்துட்டு ஊருக்கு போய் லெட்டர் போடுறேன்னு சொன்னவங்களும், we will get back to youனு சொன்னவங்களும் திரும்ப contact பண்ணதா சரித்திரம், பூகோளம் சமூகவியல் எதுவுமே இல்லை.

---

பி.ஸ்: (2014 காலத்தில் வேலை தேடிய அலுப்பில் எழுதி பப்லிகேஷ் செய்யாமலேயே draftடில் இருந்திருக்கிறது. இப்போது பார்த்தால் பத்து வருடத்தில் எவ்வளவு மாறியிருக்கிறது நமகு ஒகேபுலரி என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. இதெல்லாம் அப்பவே போட்டுருந்தா எவ்ளோ ROFLலா இருந்துருக்கும் தெரியுமா?)


------------------------------------------------------------------------------------------------


இதைத்தான் IELTS 8 கிரேடில் டிலெம்மா என்பார்கள். லோ கிரெடில் டைலமா என்பர்தம் மக்கள்.



------------------------------------------------------------------------------------------------

இதில் ஒரு பெருந்தவறுள்ளது.



எப்போதுக்கு அப்பறம் போடப்பட்டிருக்கும் கொஸ்டின் மார்க்கானது இறப்புகளுக்கப்புறம் வர வேண்டும். இதற்குத்தான் சொல்லப்படுகிறது, படிங்கடா பரமனுகளா என்று. 


------------------------------------------------------------------------------------------------

மிகமிகப்பிடித்த படம் யுத்தம் செய். அதை மீள்வாட்ச் செய்யும்போது கண்ணில் பட்டது. Hit like share comment if you see it. 



Comments