Dude - சிறுகதை


சால்ட்டின் பெற்றோர் அவனுக்கு அலயன்ஸ் பார்த்துவிட்டதுதான் எங்களின் வாட்சப், டெலிக்ராம், வீச்சாட் குரூப்பிலும் டாப்பிக். 

ஒவ்வொரு முறை வெகேஷனுக்குச் செல்லும்போதும் அவன் வீட்டுக்குச் செல்வது வழக்கம். எங்கள் க்லாஸ்மேட்டினர் ஒவ்வொருவரும் பிழைப்புக்காக ஒவ்வொரு ஊர், மாநிலம், நாடு தாண்டிச் சென்றுவிட, இப்போதும் ஊரில் இருக்கும் ஒரே நண்பன்/தொடர்பு அவன் மட்டும்தான். 


சென்ற முறை அவன் வீட்டுக்குச் சென்றபோது, "அவன் மனசுல யார்னா இருந்தாங்கன்னா சொல்லச் சொல்லுப்பா. இப்பிடியே எத்தன வருஷம் ஓட்டுறது?  நீங்கள்லாம் ஜோடி, குடும்பம்னு ஆகிட்டீங்க. அவன மட்டும் இன்னும் ஒண்டிக்கட்டையாவே இருக்கவிடப்போறீங்களா?" என அவன் அம்மா சொன்னது அவரது மகனுக்கான வேண்டுதலா அல்லது எங்களுக்கான சாபமா என்று புரிந்துகொள்ள முடியவில்லை. 


சால்ட்டுக்குக் கோபம். ஒரு மாதிரி வைராக்கியம் கூட. கல்லூரி படிக்கும்போதே அவனுக்கு ஒரு காதல் இருந்தது. ஆனால் மதத்தைக் காரணம் காட்டி அவன் வீட்டில் பிரித்து வைத்து விட்டனர். கல்லூரி முடித்து நல்ல வேலைகளில் சேர்ந்து எங்கள் செட்டில் முதல் மில்லியன் சம்பளம் வாங்குமளவுக்குத் தேர்ந்தவன் சால்ட்டு. முதலில் பெற்றோரைப் பழிவாங்க யாரையும் மணக்காதவன், ஒரு கட்டத்தில் தனியாய் இருப்பதே பழகி அப்படியே இருந்துகொண்டான். 


ஆரம்பத்தில் அவன் பெற்றோர், சால்ட்டுக்கு நம்ம ஜாதி மதத்துலதான் வரன் இருக்கணும் என்று தேடித்தேடி அலுக்க, அவன் தந்தை காலப்போக்கில் இளைத்து இளகிப்போனார். தற்போது அவர் வேறு ஜாதியாயிருந்தாலும் பரவாயில்லை எனச் சற்று தளர்த்திக்கொண்டிருக்கிறார். அவன் அம்மா வேற்று ஜாதியில் மணம் முடிக்க இப்பவும்  முட்டுக்கட்டையாகவே இருக்கும் நிலையில்தான் இப்படி ஒரு அலயன்ஸ் அமைந்த செய்தி. 


முதலில் நாங்கள் நம்பவில்லை. சால்ட்டே பத்திரிகை அனுப்பியதும்தான் நம்பிக்கை வந்தது. "எப்பிட்றா?" எனக்கேட்டதற்கு, "ஒரு வயசு வரைக்கும் தான் மச்சி இவங்க லோலாயம்லாம். நாம பாட்டுக்கு வருசங்கள தள்ளிட்டே போனோம்னு வெய்யி, தன்னால வழிக்கி வருவாங்க. இப்ப பாக்கற காலேஜ் ஸ்கூல் பசங்கள்ட்டலாம் நா இதான் சொல்லிட்டிருக்கேன். லவ்கிவ் பண்ணீங்கன்னா வீட்ல சொல்லாதீங்கடா, பல்லக்கடிச்சுட்டு ஒரு பாஞ்சு வருஷம் தனியா பிரிஞ்சிருந்தே ஓட்டிருங்க. எந்த வரன் கொண்டு வந்தாலும் புடிக்கிலனு சொல்லுங்க. லவ் பண்றத சொல்லாதீங்க. ஒரு கட்டத்துல அவங்களே ஓஞ்சு போயி யாரா இருந்தாலும் பரவால்லனு சொல்லுவாங்க. அப்போ நீங்க உங்க லவ்வர கொணாந்து கல்யாணம் பண்றத யாருமே தடுக்க மாட்டாங்க. இப்டியாச்சும் பண்ணிக்கிட்டானேனுதான் நெனப்பாங்க. பொறுத்தார் பூமி ஆள்பார். பொறுக்காதார் பொச்சுதான் ஆள்வார். இதான் நம்ம மப்பு மந்த்ரா" இப்ப எனக்கூறிச் சிரித்தான். 


"அடப்பாவி!!!!" என்றிருந்தது. "ப்லானெல்லாம் சரிதாண்டா. ஆனா வயசு போகிடுதே?"


"என்ன பண்றது மச்சி. சில ஜீவராசி ஒரு வாரத்துல புள்ள பெத்துக்குது. சிலதுக்கு ரெண்டு வருஷம் ஆகும். எல்லாம் டிசைன்ல இருக்கு. Prestige படம் பாத்துருக்கியா? அதுல ஒரு மேஜிக் கெழவன் அவனோட ட்ரிக்குக்காக வாழ்க்க ஃபுல்லா கூன் போட்ட மாதிரியே நடிப்பானே. அந்த மாதிரி தவம் இது" எனக்கூறி, க்க்ர்ர்க்க்கும் என கனைத்துக்கொண்டான். அப்படிக்கனைத்தால் கஜலுக்கு வரப்போகிறான் என அர்த்தம். 


"கள்ளக்காதல வெறுக்குற அதே சொசைட்டிதான் அதப்பத்தி எதனா நியூஸ் வந்தா குறுகுறுப்பாகி அத மொதல்ல படிக்கறது. இங்கருக்க நெறய பேருக்கு தன்னோட ஸ்பௌஸ் கள்ளக்காதல் பண்றதுல ப்ரச்சன இல்ல, அது வெளிய தெரிஞ்சுட்டா என்னாகறதுன்றதாலதான் எதிர்க்கறாங்க. வெளியவே தெரிய வராதுன்னு அஷூரிட்டி இருந்துச்சுன்னு வைய்யி, என்னய தொந்தரவு பண்ணாம நீ என்ன வேணா பண்ணிக்கன்ற நெலமைலதான் பாதிப்பேரு இருக்கான். இவனுங்களும் இவனுங்க ஃபிலாசபியும்." 


ஒரு சில ரவுண்டுகள் உள்ளே போனால் இப்படித்தான் நான் லீனியராகப் பேச ஆரம்பித்துவிடுவான். சரி அவனும் rantட்டிவிட்டுப்போகட்டும் என விட்டுவிடுவோம். அன்று என்ன நிலையிலிருந்தானோ போட்டு பொரிந்து தள்ளிவிட்டான். 


"இவனுக லாஜிக்க பாத்துருக்கல்ல. ஆம்பளயும் பொம்பளயும் தான் கல்யாணம் பண்ணனும்னுவானுக. ஆனா ஒரு அன்மேரிட் கப்புல் வீடு ரெண்டலுக்கு கேட்டா தரமாட்டானுக. அதுவே கே-லெஸ்பியன எதிர்ப்பானுக. ஆனா அவங்களுக்கு ப்ரெண்ட்சுனு சொன்னா ஈசியா வீடு, ஓட்டல்ல ரூம் கெடைச்சுரும். த ஜோக் இஸ் நாட் ஆன் யூடா ஃபக்கர்ஸ், யு ஆர் த ஜோக் இன் இட்சல்ஃப்." 


ஓவராகிய அவனைப் பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு சேர்த்தோம். வீட்டில் இறக்கிவிட்டு வரும்போது எங்களுக்குள் மீண்டும் அவனைக் குறித்த பேச்சு வந்தது. "அவனுக்கு இருக்கற தெறமைக்கி வெளிநாட்டுக்குப் போயி செட்டிலாகி புடிச்ச மாதிரி வாழலாம்ல, எதுக்கு இங்கருந்து கஷ்டப்படுறான்?" 


"தெரீலடா, அவனுக்கு எதோ ஒரு கோவம் அவங்கப்பாம்மா மேல. அவன அவனாவே ஏத்துக்கலனு."  


"எது எப்டியோ, இப்ப ஒரு வழியா அவங்கப்பாம்மாவே ஒரு அலயன்ஸ் அமச்சு வெச்சது நல்லதுதான். காலேஜ் டைம்ல அவங்க அவனுக்குப் பண்ணதுக்கு ஒரு ப்ராயச்சித்தம் மாதிரி இருக்கு." 


அவன் அம்மாவுக்குக் கால் செய்து வாழ்த்தினேன். 


"எல்லாரும் வந்துருங்கப்பா" என்றார். 


"நாங்க இல்லாமலா? மலையேறு நாட்டாம மனசக்காட்டு பூட்டாமன்னு பாட்டுப்போட்டு ஆடுறோம். ப்ரென்ஸ் எல்லாரையும் கூட்டிட்டு வர வேண்டியது என் பொறுப்பு ஆண்ட்டி. நீங்க கல்யாண வேலைகள பாருங்க" என்றேன். 


"சரிப்பா, இப்பதான் நிம்மதியாருக்கு" என்றார்.


எனக்கு வாய் சும்மா இருந்திருக்கலாம், "அப்பறம் ஆண்ட்டி, சால்ட்டுக்குப் பாத்துருக்க அலயன்ஸ் ஒங்க ஆளுங்கதானா?" எனக்கேட்டேன். 


சர்காசம் புரிந்துகொள்ளும் டீயென்னேவெல்லாம் அவருக்கு(ம் அவரின் ஜாதியினருக்குமே கூட) இல்லையாதலால், "ஆமப்பா, அங்க இங்க கஷ்டப்பட்டு கடைசில எங்க கூட்டத்துலயே அமஞ்சுடுச்சு. இவனுக்குன்னு காத்திருந்துருந்திருக்கு பாரேன்" எனப் புளங்காகிதம் அடைந்தார். 


புளங்கு ஆகிய அந்தக் காகிதத்தைக் கசக்கிவிட வேண்டாமெனக் கருதி, "சரி ஆண்ட்டி. கல்யாணத்துல சந்திப்போம்" என்றேன். 


கல்யாணம் மிக பிரம்மாண்டமாகவும் இல்லாமல், மினிமலிஸ்ட்டிக்காகவும் இல்லாமல் மீடியமிஸ்டிக்காக இருந்தது. வரவேற்பு, அலங்காரம் எல்லாம் நீட்டாக, பலப்பல வண்ணக்கலவைகளில் இருந்தன. இந்தக் கல்யாணத்தை வைத்து ரீயூனியனையும் போட்டிருந்தனர் நண்பர்கள். 


இரண்டு புரோகிதர்கள் கல்யாணச் சடங்குகளை நடத்த, திருமணம் முடிந்ததும் எல்லோரும் வரிசையாக நின்று மேடையேறிப் புகைப்படமும் ரீல்ஸ்களும் எடுத்துக்கொண்டனர். கூட்டம் நல்ல கூட்டம். 


நாங்கள் போட்டோ எடுக்கச் சென்றபோது, சால்ட்டு என்னிடம் கல்யாணத்துக்கு மது வந்திருப்பதாகக் கூறினான். மது அவனின் கல்லூரிக் காதல். ஆச்சரியமாக இருந்தது. முதல் பந்தியிலேயே அமர்ந்து மூச்சு முட்ட சாப்பிட்டுவிட்டு மேடையேறிய மதுவைத் தனது சரிபாதியிடம் அறிமுகப்படுத்தினான் சால்ட்டு. 


"Dude... இது மது, என்னோட காலேஜ் டைம் பாய்ஃப்ரெண்ட்." 


"ஹலோ நைஸ் டு மீட் யூ" என மதுவிடம் கைகுலுக்கினான் சால்ட்டின் துணை மிதுன்.




Comments