(நண்பர் ஒருவர் அவரூரின் ஒரு பள்ளி விழா மலருக்கு அவசரகதியில் ஒரு கட்டுரை கேட்க, ஆபிஸ் போகும் நேரத்தில் ரயிலில் அடித்துக்கொடுத்த அவசரடி அட்வைசுக் கட்டுரை)
அன்பு மாணவர்களே,
இன்றைய காலக்கட்டத்தில் ஆபத்தான விடயம் எது தெரியுமா? மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுப்பது. அதுவும் அன்பு மாணர்வகளே என ஆரம்பித்து ஐடியாக்கள் தர முனைவது. உங்களை நோக்கி அன்பு மாணவர்களே என ஒருவர் துவங்கியதுமே பலரின் மனக்குரல் எனப்படும் மைண்ட்வாய்ஸ் பூமர் பூமர் என ஒலிக்க ஆரம்பித்து விடும். அது உங்கள் மீதான குறை இல்லை. மாணவர்கள் எப்போதுமே அப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.
"இதுவரைக்கும் நான் பாத்ததுலயே ஒர்ஸ்ட் க்லாஸ்னா இதான். சொல்ற ஒரு பேச்சும் கேக்கறதில்ல" - உங்கள் வகுப்பறைக்கு வரும் ஆசிரியர்கள் இப்படிக்கூறுவதை கேட்காதவர்களே இருக்க முடியாதல்லவா?
அது எப்படி ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வகுப்பிலும் அவர்கள் இதையே கூறுகிறார்கள்? எதும் போகிற போக்கில் அடித்து விடுகிறார்களா என்றால் இல்லை. மாணவர்களைப் போல் விரைவாக எவால்வ் ஆகிறவர்கள் வேறில்லை. அவர்களிடத்திலிருந்துதான் புதுமைகள் துவங்கும், மாற்றுச் சிந்தனை, இயல்புகள் துளிர்விடும்.
இது உங்களுக்கு சாதகமாகப் பேசி கைதட்டல் வாங்கச் சொல்லவில்லை. இக்கட்டுரையும் "ஸ்டூடன்ஸ் பவர்னா என்ன தெரியுமா..." என பஞ்ச் பேசும் சினிமா இல்லை.
அது கிடக்கட்டும், ஏன் பல சமயங்களில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முட்டிக் கொள்கிறது? "பசங்கள டீச்சர்ஸ் புரிஞ்சுக்கவே மாட்டாங்களா?" எனப் பலமுறை நினைத்திருப்போம். (நான் நினைத்திருக்கிறேன், குறிப்பாக ஹோம் ஒர்க் எழுதிய நோட்டை மிகச்சரியாக மறந்து வீட்டில் வைத்துவிட்டு வரும்போதெல்லாம். அதுவும் என் ஆசிரியர்கள் நிறைய ஹோம் ஒர்க் தருவார்கள், நானும் நிறைய எழுதுவேன், நிறைய வீட்டில் மறந்தும் வைத்துவிட்டு வருவேன்.)
வீட்டுப்பாட விவரங்களை விடுவோம், பொதுவாகவே ஆசிரியர் பெற்றோர் முதலிய மூத்தவர்களின் பார்வைக்கும் மாணவர், பிள்ளைகள் முதலிய இளையவர்களின் பார்வைக்கும் பெரிய வித்தியாசமுண்டு. இதில் யாருடைய பார்வை சரி, எது தவறு என்ற பேச்சுக்கு இடமில்லை. சரியும் தவறும் இரண்டு புறமுமிருக்கும். பெரியர்கள் என்பதால் அவர்கள் எப்போதும் சரியாகத்தான் சொல்லுவார்கள் என்பதுமில்லை, இளைஞர்கள் என்பதால் பிள்ளைகள் தவறிழைப்பார்கள் என்பதும்.
ஊர்களுக்குச் செல்லும்போது பஸ்ஸிலோ, ரயிலிலோ அல்லது தனியாக வண்டி வைத்தோ மக்கள் செல்வதைப் பார்த்திருப்போம். அவர்கள் அவ்வாறு செல்லக்காரணம் என்னவென்று ஆய்ந்து யோசித்தால், அவர்களின் அப்போதைய தேவை, வசதி வாய்ப்பு எனப் பல காரணங்கள் கிடைக்கும். ஒரு ஊருக்குச் செல்ல எப்படி பல mode of transportட்டில் செல்லலாமோ அதேபோல்தான் வாழ்க்கையிலும் ஒவ்வொரு செயலைச் செய்யவும் பல்வேறு வழிகளுண்டு.
தனக்கும் அடுத்தவருக்கும் துன்பமிழைக்காத எந்த வழியும் சரியான வழியே.
மாணவர்களே, இந்த வரி வரை படித்தீர்களா அல்லது அய்யயோ இன்னொரு பூமர் எனப் பக்கத்தைத் திருப்பி விட்டீர்களா? இதுவரை படித்தீர்களென்றாலே நீங்கள் மாறுபட்டவர்தான். இன்று மக்கள் 15 நொடிகளுக்கு மேல் எதிலும் கவனம் செலுத்துவதில்லை வேறு சேனல், ரீல்ஸ், ஷார்ட்ஸ் மாற்றி விடுவர் என ஓர் ஆய்வு கவலையுடன் தெரிவிக்கிறது. இத்தகைய 15நொடியில் கவனச் சிதறல் கொண்ட மக்களால் சரியான முடிவுகள் எடுக்க முடிவதில்லை என்பதுதான் அந்த ஆய்வின் கவலைக்குக் காரணம்.
நீங்கள் 15 நொடியைத் தாண்டியும் இதைப் படித்ததற்கே வெற்றியில் வழியில் வந்துவிட்டீகள்.
சரி, back to our original question, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஏன் எப்போதும் டென்ஷன் டார்ச்சர்?
முன்னே சொன்னேனல்லவா? ஊருக்குச் செல்ல வெவ்வேறு வண்டிகளைத் தேர்ந்தெடுப்பது. பெற்றோர்கள் அப்போது அவர்களுக்குச் சரியானது எனத் தோன்றியதைச் செய்தார்கள். அவர்களுக்கு இன்னும் வசதி வந்தால் பஸ் ரயிலை விடுத்து விமானத்தில் செல்வார்கள் அல்லவா? விமானத்தில் செல்வோரும் வசதி குறைந்தால் மாற்று வழிகளில் செல்வர். இதில் சரியோ தவறோ இல்லைதானே? வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்தில் எது நியாயமெனத் தோன்றுகிறதோ அதுதான்.
சரி, இதில் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் ஏன் ஃபைட் ஏற்படுகிறது? அதை ஆங்கிலத்தில் generation gap மற்றும் perspective differences என்பர். பெற்றோரும் பிள்ளைகளும் உலகைப் பார்க்கும் முறையே வேறு. அவ்வளவு ஏன், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் முறையையே யோசியுங்கள், பெற்றோர் பிள்ளைகளைப் பார்க்க தலையைச் சற்றே குனிய வேண்டும், பிள்ளைகள் பெற்றோரைப் பார்க்க தலை நிமிர வேண்டும். இப்படி ஒருவரை ஒருவர் பார்ப்பதற்கே வெவ்வேறு முறை இருக்கையில் மீதி விடயங்களைச் சொல்ல வேண்டுமா?
சரி இதில் யார் சரி, யார் தவறு? முன்பே சொன்னதுதான், it depends. Both can be right on their own ways. முதலில் எல்லா விடயங்களும் சரி தவறு என்று இரண்டு பக்கம் மட்டுமே இருக்கும் எனச் சொல்லமுடியாது.
திருக்குறளில் சொல்லப்பட்டதுபோல், குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல். இரண்டில் எது மிகுதியோ, அதைப் பொறுத்து எந்த முடிவை எடுப்பது எனத் தீர்மானிக்கலாம்.
"எல்லாம் சரி, ஆனா ஒவ்வொரு விசயத்தையும் எப்பிடி சரி தப்புன்னு கண்டுபுடிக்கறது?" எனச் சிலர் கேட்கலாம். (பலர் கேட்டால் மகிழ்ச்சியடைவேன்.)
சரி தப்பு மட்டுமல்ல, எந்த விஷயத்தையும் தெரிந்துகொள்ள நமக்கிருக்கும் முதல் வழி கேள்வி கேட்பது. கேள்வி எனச்சொன்னால் க்ரிஞ்சாக இருக்கிறது எனில் அப்டேட் கேட்பது என வைத்துக்கொள்ளுங்கள்.
லோகேஷ் கனகராஜ் முதல் H. வினோத், வெற்றிமாறன், நெல்சன் வரை விடாமல் துரத்தித் துரத்தி அவர்கள் செல்லும் எல்லா இடங்களிலும் எப்படியெல்லாம் அப்டேட் கேட்கிறோம்? அதுபோல எல்லாவற்றிலும் அப்டேட் (கேள்வி) கேளுங்கள்.
இன்று நாம் அனுபவிக்கும் பல்வேறு வசதிகளுக்குக் காரணம் (மொபைல், வாட்சப், லேப்டாப், எலக்ட்ரிக் சைக்கில் etc) நேற்றைய மாணர்வகளின் கேள்விகளே. நாளைய உலகிற்கு கிடைக்கவிருக்கும் கண்டுபிடிப்புகள், வசதிகள் எல்லாம் இன்றைய மாணர்வகள் கேட்கப்போகும் கேள்விகளே. கேள்விகள் என்றதும் பூமி அளவிற்கான கேள்வியாய்த்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை (அப்படி இருந்தாலும் அதில் தவறொன்றுமில்லை). சின்னச் சின்னதாகத் துவங்கலாம். Like, இந்தப் பத்தியில் இருமுறை மாணவர்களின் என்பதற்குப் பதில் மாணர்வகளின் ர்ன எழுதப்பட்டுள்ளது. அது ஏன் தவறாக உள்ளது எனக் கேட்பதில் இருந்து கூடத் துவங்கலாம்.
உலகின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் காரணம் யாரோ ஒருவரோ ஒரு சமூகமோ கேள்வி கேட்காமல் இருந்ததுவே. அதேபோல் உலகின் அத்தனை சொகுசுகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் காரணம் ஒருவரின் கேள்வியே.
இன்று நீங்கள் தேடிக்கூடச் செல்லவேண்டியதில்லை, கூகுள், வானம் ஏன் நீலமா இருக்கு எனச் சும்மா கேட்டாலே மொபைல் அதை கேட்டு உங்களுக்குப் பதில் அளித்துவிடும்.
அதிகம் கேள்வி கேட்க கேட்க உங்கள் அறிவு மேலும் வளரும். லோகேஷோடு நிறுத்தி விடாமல் ஆசிரியர், பெற்றோர், பெரியவர்கள், அறிவியல், வரலாறு, அனைத்திடமும் அப்டேட் கேளுங்கள்.
புவியீர்ப்பு விசை அனைத்தையும் தன் புறம் இழுக்குமென்றால் ஏன் மேகங்கள் மிதக்கின்றன? ஏன் பூமியோடு வந்து ஒட்டிக்கொள்வதில்லை?
எல்லாவற்றையும் நசுக்கி விடும் ரயில் எப்படி தண்டவாளத்தை எதுவும் செய்வதில்லை?
பயத்தில் ஏன் வயிற்றைக்கலக்குகிறது? ஏன் தலைவலியோ தும்மலோ வருவதில்லை?
இந்தக் கட்டுரை எப்போது முடியும்?
ஏன் சூரியன் உச்சியில் இருக்கும்போது சிறியதாகத் தெரிகிறது?
நிலா ஏன் கூடவே வருகிறது?
தீ ஏன் எப்போதும் மேல் நோக்கியே எரிகிறது?
ஏன் இரண்டு பேருக்கு ஒரே கைரேகை இருப்பதில்லை?
உங்களுக்குத் திருப்தி தராத அப்டேட் வரும் வரை அப்டேட் கேட்பதை நிறுத்திவிடாதீர்கள். நீங்கள் கேட்கும் கேள்விக்கான விடை உலகத்தில் அதுவரை இல்லையென்றால் நீங்களே அதன் விடையாவீர்கள். வரலாறெங்கும் இதுதான் நிகழ்ந்திருக்கிறது.
அன்பு மாணவர்களே, அப்டேட் கேட்போமா?
=====
therapeutic
எல்மாவோ!
Comments
Post a Comment
Pass a comment here...