சாஸ்வதம்

ஆனந்தக்கண்ணனுக்கு இரண்டு அதிர்ச்சிகள். 

செந்திலிடமிருந்து “hi dude” என்று வந்திருந்த வாட்சப் நோட்டிபிகேசன். குரூப்பில் அவசரத்தேவைகளுக்கு கேட்கும் கேள்விகளைக்கூட கண்டும் பதில் சொல்லாமல் seen zoneல் போடுபவன் இப்போது தனி மெசேஜ், அதுவும் அதிகாலையிலேயே அனுப்பியிருப்பது. 

“என்னடா ஒடம்புகிடம்பு எதும் சரியில்லையா? புதுசா திடீர்னு மெசேஜ் எல்லாம் அனுப்புற?”

“இல்ல டூட் சும்மாதான்.”

“டேய் கடன்கிடன் கேக்கப்போறன்னா இப்பவே சொல்லிடுறேன். என் அக்கௌண்ட் பாழடஞ்சு போயி வவ்வால் எல்லாம் தொங்க ஆரமிச்சிருச்சு. பைசாக்காசு இல்ல கைல.” 

“டேய் ஃப்ரெண்டாச்சேன்னு விசாரிக்க அனுப்புனேண்டா.” 

“அவ்ளோ நல்லவன் இல்லியே நீலாம். சரி விஷயத்துக்கு வா.” 

“டூட் மெசேஜ்ல வேணாம். நேர்ல மீட் பண்ணலாமா?”

“எங்க?” 

“ககனர்ஸ் காஃபிஷாப்ல.”

“டேய், எதாச்சும் MLMல சேந்திருந்தன்னா, அதப்பத்தி பேசப்போறன்னா இப்பவே ஆள உடு.”

“எப்பப்பாத்தாலும் நெகடிவா பேசாதடா. இது ஒரு முக்கியமான விஷயம். நேர்ல வா சொல்றேன்.” 

[விவரணைகளை விரும்புவோர் அடுத்த பத்தியைப் படிக்கவும். வேண்டாதோர் தவிர்த்துவிட்டு அதற்கு அடுத்த பத்திக்குச் செல்லவும்]

அடுத்த பத்தி: தினம்தோறும் துடைக்கப்படுவதால் பலகிராம் பளிச்கள் அதிகமாகவே தெரிந்தது அந்தக் காஃபிஷாப்பில். வெளியே முப்பது டிகிரி சி-க்கும் அதிகமாக வெயில் தகித்துக்கொண்டிருக்க, உள்ளே முவ்வைந்து டிகிரி குளிர்காற்றைத் தொடர்ந்து நிரப்பிச் சத்தமின்றி கஸிந்து கொண்டிருந்தது ஏஸி. இந்தத் தற்காலிகக் குளிரின் கதகப்புக்காகவோ அல்லது ஹார்மோன்கள் செய்யும் வேலைக்காகவோ நெருங்கி, மிக நெருங்கித் தத்தமது உடல்களை ஒருவருக்கொருவர் ஒட்டியுரசி சூடாக்கிக்கொண்டிருந்தனர் அங்கே காப்பியையும் யாரும் தங்களைக் கவனிக்கத பொழுதில் முத்தங்களையும் பருகிக்கொண்டிருந்த விடலைகள். இந்த ஜோடியை ஏற்கனவே வேறொரு ஜோடியோடு இங்கே இதே கடையிலேயே பார்த்திருக்கிறேனே என மனத்தில் தோன்றினாலும் வெளிக்காட்டாது புன்னகையை எப்போதும் உதட்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் baristaக்கள். ஒவ்வொரு டேபிலிலும் ஒவ்வொரு கதை ஓடிக்கொண்டிருந்தாலும் பெரும்பாலும் அதே கதை, டேபில் மட்டும் வேறு. ஆங்கிலத்தில் இதை சேம் ஷ்ஷி.. சரி விடுங்கள்.

அதற்கு அடுத்த பத்தி:

செந்தில் முன்கூட்டியே வந்து ஆனந்தனுக்காகக் காத்திருந்தான். 

ஆனந்தனைப் பார்த்ததும், “என்னடா லேட்டா வர?” என்றான். 

“டேய் <நாம் நாள்தோறும் பல இடங்களில் காதில்வாங்கும் ஒரு கெட்ட வார்த்தையைச் சொல்லி>, பத்தரைக்கி வரச்சொன்ன, பத்திருபத்தஞ்சுக்கே வண்ட்டேன். இது ஒனக்கு லேட்டா <மீண்டும் அதே நாம் நாள்தோறும் பல இடங்களில் காதில்வாங்கும் ஒரு கெட்ட வார்த்தை>”.

“சரி விடு டூட். எப்பிடி இருக்க? அதெல்லாம் நல்லாதான் இருப்ப. ஒனக்கென்னப்பா..” 

“டேய் நீ என்ன நலம் விசாரிக்கிறியா இல்ல கூப்ட்டு வச்சு கலாய்க்கிறியா?” 

“கோச்சுக்காத டூட். என்ன சாப்டுற? மொதல்ல அத சொல்லு. என்னோட ட்ரீட்டு.”

“எதே ஒன் ட்ரீட்டா? டேய் எதும் மண்டைல அடிகிடி பட்டுருச்சா? இப்பிடிலாம் நீ பேசிப்பழக மாட்டியே. என்ன இது அபூர்வம்?”

“நமக்குள்ள என்னடா?“

“நீ காரணமில்லாம எதும் செய்யமாட்டியே. ரீசன் தெரிஞ்சப்புறம் வச்சுக்கறேன். இப்ப ஒரு கேப்சிகம் சேண்ட்விச்சும் காஃபியும் மட்டும் சொல்லு. மீதி அத முடிச்சுட்டு வாங்கிக்கறேன்.”

“எவ்ளோ வேணாலும் சாப்டு. மை ட்ரீட்டு.”

இவன் ஆக்டிவிட்டீசே சரியில்லையே எனச் சிந்தித்தபடி அவனைச் சந்தேகத்தோடு பார்த்தான் ஆனந்தன். பரிஸ்டாக்களிடமிருந்து கொஞ்சம் புஞ்சிரி சிரிப்பைக் கடன் வாங்கித் தானும் புன்சிரித்தபடி இருந்தான் செந்தில்நாதன். 

 அவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் எடுத்த நபர் நகர்ந்ததும், “டூட் ஒரு கான்ஃபிடன்ஷியல் மேட்டர்" என்றான் செந்தில். 

“என்னடா, ஆபிஸ்ல எதும் ஏடாகூடமா கைவச்சு மாட்டிகிட்டியா?” எனக்கேட்டான் ஆனந்தன். 

“டே(ய்) அதில்லடா, நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும். ஹெல்ப் கூட இல்ல, ஒரு பொருள வித்துக்குடுக்கணும். பிசினஸ் பார்ட்னர்ஷிப் மாதிரி வச்சுக்கோவேன்”

“புரியுதுடா, மாசா மாசம் சோப்பு பேஸ்ட் டிடர்ஜண்ட் லிக்விட் எல்லாம் வாங்கணும். நா மட்டும் வாங்கினா பத்தாது எனக்குக் கீழ மூனு பேர வாங்க செய்யனும். அதான? முன்னாடியே சொன்னன்ல MLMமா இருந்தா கூப்டாதடா <ஒருநன்றியுள்ளவிலங்கின்பெயர்சொல்லி>னு”

“டேய் அவசரப்படாத. இப்ப நா ஒனக்கு சொல்றது ஒன்னால நம்ப முடியாமக்கூட போகலாம். ஆனா அது நடந்துருச்சு. எப்பிடி என்னனு அப்பறம் சொல்றேன். இப்போதைக்கு ஒரு ஹெல்ப். ஒனக்கு டைமண்ட்ஸ் வாங்கற ஆளுங்க யாரும் தெரியுமா?”

“டைமண்டா? யு மீன் வைரம்?”

“ஆமா.”

“எங்க கெடச்சது ஒனக்கு? ரோட்ல கீழ எதும் கெடந்துதா? அது பொம்ம நகைல ஒட்டி வச்ச ப்லாஸ்டிக் கண்ணாடியா இருக்கப்போதுடா.”

“இல்லடா, அது வைரம் தான். நானே உண்டாக்கினது.” 

“டேய் இரு இரு. நீயே உண்டாக்கினியா? நீ எதும் இச்சாதாரி பாம்பா, மனுச உரூபத்துல சுத்துறியா? அதுங்கதான் வெஷத்த தேக்கி வச்சு ரத்தினக்கல்லா மாத்தும்னு சொல்லுவாங்க.” 

“அதுலாம் இல்லடா. நா சொல்லப்போறது ஒரு ஆச்சரியமான, ஆனா உன்னால நம்பவேமுடியாத மேட்டர்.”

“டேய் நீ ட்ரீட்டு உன்னுதுன்னு சொன்னதே எனக்கு இப்ப வரை நம்ப முடியாத மேட்டர்தான். பில்லு நீ குடுத்தாதான் அதுவே நிரூபணமாகும். இதுக்கும் மேல நம்பமுடியாத ஒன்னா?”

“எனக்கு ஒரு timelapse மிஷின் கெடச்சுதுடா.”

“எது இந்த கடந்தகாலம் ஃபியுச்சருக்குலாம் போலாம்னு சொல்லுவாங்களே. அதுவா?”

“இல்லடா, அது டைம் மிஷின். எனக்கு கெடச்சது time-lapse மிஷின். கேமரால இருக்கும்ல டைம் லாப்ஸ் ஆப்ஷன்.”

“ஆமா.”

“அது என்ன பண்ணும்? ஒரு முழு நாளும் ரெகார்ட் பண்ணத பத்து செகண்ட்ல ஓட விடலாம்ல.” 

“ஆமா.”

“அதே மாதிரிதான் டூட் இதுவும். பல நூறு வருஷத்த கொஞ்ச நேரத்துல கடக்க வச்சிடும்.” 

“சரி, அத வச்சு என்ன பண்ண முடியும்?”

“அப்டிக்கேளு டூட்.”

“ஒரு வெத போடுறோம். அது செடியா மொளச்சு மரமா வளந்து கனி கொடுக்க என்ன தேவை?”

“என்ன தேவை. மண்ணு, ஒரம், தண்ணி இதுலாம்.” 

“இது மட்டுமா?”

“வேற என்ன வேணும்?” 

“முக்கியமான ஒன்ன விட்டுட்ட.”

“முக்கியமா வேற என்ன இருக்கு? ஆங் சூரிய ஒளி. அதுலதான ஃபோட்டோசிந்தசிஸ் நடக்கும்.”

“ஆமா அதுவும் தான் ஆனா முக்கியமான இன்னொன்னு இருக்கு.” 

“டேய், இப்பிடி நொன்னொன்னு நொன்னொன்னுன்னு நீ அடுக்கிட்டே போறதுக்கு பதில் அது என்ன எழவுன்னு சொல்லித்தொலையேன்.” 

“டூட், இதுக்கு முக்கியமானது டைம் டூட். அது தான் இத்தனையும் தீர்மானிக்கறது. மண்ணு, தண்ணி, உரம், ஒளி எது எவ்ளோ இருந்தாலும் ஒரு விதை மரமாகறதுக்கு முக்கிய காரணம் அது எடுத்துக்கற டைம். வைரமுத்து கூட சொல்லிருக்காரு, நீரையும் சல்லடையில் அள்ளலாம், அது ஐஸ்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்னு. டைம் தான் டூட் சாஸ்வதமானது.” 

“சர்ரா, அதுக்கும் உன் வைரத்துக்கும் என்ன கனெக்‌ஷன்.” 

“எனக்கு ஒரு டைம்-லாப்ஸ் மிஷின் கெடச்சுது டூட். எப்பிடி எங்கன்றதுலாம் பின்னால ஒருநாள் சொல்றேன். அத வச்சு எதாச்சும் வேணுமான்னாங்க. யார்னும் வேற ஒருநாள் சொல்றேன்.”

“சரி.”

“அந்த மிஷின வச்சு என்ன பண்றதுன்னு யோசிச்சேன். ஒலகத்துலயே காஸ்ட்லியானது எனக்குத் தெரிஞ்சு, வைரம்தான். அது உண்டாக பலகோடி வருஷங்கள் ஆவும்னு கேள்விப்பட்டுருக்கேன்.” 

“கார்பன ஹை டெம்ப்பரேச்சர், ஹை ப்ரெஷர்ல பல்லாயிரக்கணக்கான வருஷம் வச்சிருந்தா அது வைரமா மாறும்னு. அப்போ டைம்லாப்ஸ் மிஷின வச்சு அந்த ஆயரக்கணக்கான வருஷத்த ஒரு மணி நேரத்துல கடந்து வைரத்த உண்டு பண்ண முடியுமானு கேட்டேன். முடியும்னாங்க. சரின்னு எறங்கிட்டேன் டூட்.” 

“சரிடா மொதல்ல அந்த வைரத்த காட்டு.” 

தன்னிடமிருந்த ஒரு பெரிய பையை எடுத்துப் பிரித்து, அதற்குள்ளிருந்த மற்றொரு பையைப் பிரித்து, அதற்குள்ளிருந்த மற்றொரு கவரைப் பிரித்து, இப்படி கிட்டத்தட்ட ஒரு பதினொரு பையைப் பிரித்து உள்ளே இருந்த விரலடக்க ப்லாஸ்டிக் பெட்டியைத் திறந்தான். அதற்குள் வெண்ணிறத்தில் இருந்த, பல நிறங்களை ஒளிரும், கடுகின் முப்பதில் ஒரு பகுதியளவேயான ஒரு தூசு இருந்தது.

“என்னடா இது?”

“இதான் டூட் அந்த வைரம்.” 

“டேய் ஒருத்தர் தும்முனா தெறிக்குமே எச்சி, அதுல இருக்க ஒரு துளி கூட கொஞ்சம் பெருசா இருக்கும்டா. வைரக்கல்லுன்னதும் எதோ பத்து கிலோ சைசுல காட்டுவன்னு நெனச்சேன். இது கல்லு இல்ல, காத்து. இது எதும் சாம்பிலா? வேற இன்னும் இருக்கா?”

“இல்ல டூட். அத ஒரே ஒரு தடவ தான் யூஸ் பண்ணிக்க முடியும்னாங்க. நான் டெஸ்ட் பண்றதுக்காக இத பண்ணிப்பாத்தேன்.” 

“என்ன பண்ண?”

“எரியிற மாதிரி ஒரு பொருள் கேட்டாங்க. எங்கிட்ட இருந்த சிகரெட்ட குடுத்தேன். அதப்போட்டு தான் வைரமாக்குனாங்க.” 

“ஓ இரும்ப தங்கமா மாத்துற மாதிரி சிகரட்ட வைரமாவா.” 

“ஆமா டூட்.” 

“எத்தன சிகரெட் தேவப்பட்டுச்சு இந்த வைரத்துக்கு?” 

“ஒன்னுதான் டூட். ஒரு சிகரட்டுக்கு ஒரு வைரம். எங்கிட்ட அப்ப ரெண்டு சிகரட் தான் இருந்துது. அதான் டூட் ஒன்னே ஒன்னு குடுத்தேன்.” 

“ஓ. அத வச்சு இந்த வைரம் வந்துதா?”

“ஆமா டூட்.”

டேய் டைம் மட்டுமில்ல. இன்னொன்னும் சாஸ்வதமானது. என்னது தெரியுமா?

“என்னது?”

“பழமொழி. தங்கத்துல திருவோடு கெடச்சாலும் அத வச்சு பிச்சதான் எடுப்பாங்கனு சொல்லுவாங்க தெரியுமா.”

“ஆமா டூட்.”

“அது நீதான்.”

Comments

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

சுன்னத் கல்யாணம் ரிட்டன்ஸ்

இரைவி