மெட்டா

முதல் வரியிலேயே அந்தக் கதை துவங்கிவிட்டது. மொத்தம் 538 வரிகள். ஒற்றுப்பிழைகள், இலக்கணத் தவறுகள் என ஏதுமின்றி தெளிவாக எழுதப்பட்டிருந்தது.  ஒரு சிறிய, மங்கிய ஒளியுள்ள அறையில், ஒரு எழுத்தாளர் தன் கணினி மேசையின் முன் அமர்ந்து கீபோர்டின் மீது விரல்களை தவழவிட்டார். 

கதையின் முதல் வார்த்தை திரையில் தோன்றும்போது, அவருக்குள் ஒரு வினோதமான உணர்வு ஏற்பட்டது. அது என்ன என்பது விளங்குவதற்குள் மேலும் சில வரிகள் தொடர்ந்தன. அப்போது தன்னை யாரோ வழிநடத்துவது போலத் தோன்றியது. 

ஓர் அடையாளமற்ற சத்தம். உணர்வுக் கொந்தளிப்பு ஏற்பட்டுத் தன் போக்கில் சென்றன விரல்கள். ஒரு நூறு வரிகளுக்குப் பின் உணர்வுகள் மட்டுப்படுத்திக் கொண்டன. பின் மந்தமானது. நிற்காமல் இருந்தன விரல்கள். விரல்கள் விசையை அழுத்துகின்றனவா அல்லது ஏதோ ஒரு விசை விரல்களை இழுக்கின்றனவா?

கதையை அடித்துக்கொண்டிருக்கும்போதே படித்துப்பார்க்கையில், அக் கதை தன்னைப்பற்றியே பேசுவதைப் போன்று தோன்றியது. இங்கே தன் என்பது கதையா அல்லது எழுத்தாளரா? சரியான விளக்கங்கள் இல்லை. 

கதையின் கதாபாத்திரங்கள் உயிர்பெற்று, தங்களின் கற்பனை வாழ்க்கையை உணர்ந்தும், நடிப்பதற்குத் தயங்கவில்லை; அவர்களே கதையை முன்னெடுத்து, எழுத்தாளரை தங்கள் உலகுக்குள் இழுத்துச் சென்றனர். கதையின் கடைசி வாக்கியத்தில், யார் யாரைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது தெளிவாக இல்லை— கதையை எழுத்தாளரா அல்லது எழுத்தாளர் கதையையா?

Comments

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

சுன்னத் கல்யாணம் ரிட்டன்ஸ்

பென்சில்