கடன்

 பரந்து விரிந்த அந்தக் களம் கடும் போர்க்களமாகக் காட்சியளித்தது. காரணம் அங்கு போர் நடந்திருந்தது. ஒரு போரை நடந்தது என்றா சொல்வது? போர் என்பது நடப்பதா? அல்லது நிகழ்வதா? அது மனிதக்குலம் தத்தமையே இகழ்வதன்றோ? எங்கு நோக்கினாலும் குருதி. துண்டுகளாக்கப்பட்ட கரங்கள், வெட்டி வீழ்த்தப்பட்டதால் அரையான கால்கள். உருவப்பட்ட குடல்கள், முனகிக்கொண்டிருக்கும் குற்றுயிர்கள். அது சாதாரண களமல்ல, ரணகளம்.

ஆங்காங்கே சில சிப்பாய்கள் தத்தமது இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் உச்ச வலியிலும் இறக்கவியலாத பலர், ஒரே மூச்சாகத் தங்கள் உயிரும் போய்விட்டால்தான் என்ன என அரற்றிக்கொண்டிருந்தனர். தண்ணீர் தண்ணீர் என கேவிக்கேவி அழும் குரல்கள் அந்தப் பிரதேசமெங்கும் கேட்டன.

அத்தனை பாலைக் களத்தில் எதைக் கொண்டு மோப்பம் பிடித்தனவோ, அதுகாறும் எங்கு ஒளிந்திருந்தனவோ தெரியவில்லை, ஓநாய்களும் நரிகளும் இன்னும் சில காட்டுவிலங்குகளும் குருதி தோய்ந்த சிப்பாய்களின் எஞ்சியிருக்கும் உடல்களைக் குதறிக்கொண்டிருந்தன. அத்தனைப் பெரிய போர் புரிந்து வீழ்ந்து கிடந்த மனித உடல்களை எந்தச் சண்டையும் சச்சரவுமின்றி தங்களுக்குள் பகிர்ந்துண்டு கொண்டிருந்தன அவ்விலங்குகள். வட்டமடித்த பருந்துகளும் ராஜாளிகளும் தங்கள் பங்கை தங்கள் பங்குக்கு ஆற்றிக்கொண்டிருந்தன.

அதுமட்டுமா? எரிந்துகொண்டிருக்கும் நிலையில் ஏகப்பட்ட தேர்கள், ரதங்கள், குதிரை வண்டிகள். எரியும் அந்த வண்டிகளிலிருந்து எழும்பும் புகை அந்தக் கொலைக் களத்தையே மறைத்தாலும் சூரியன் மறையவில்லை. அதற்குக் காரணமுமுண்டு.

நொறுங்கிய ஒரு தேரின் உடைந்த ஒரு சக்கரத்தில் சாய்ந்திருந்தான் அவன். அவன் என்பது யார்? அவன் உடலா? உடல்தான் அவனென்றால் அது தற்போது இறந்துகொண்டிருக்கிறது. செயல்தான் அவனென்றால் அது எப்போதும் உயர்ந்து கொண்டிருக்கிறது. மறைக்கும் புகையையும் மீறி அவனை நோக்கிச் சூரியன் தன்னைத்தானே சுட்டெரித்துக்கொண்டிருந்தது. தன் மகன் தன் முன்னாலேயே அடிபட்டு சிதைவுறுகிறானே, அவனை அள்ளித் தன் கரங்களால் அணைத்துக்கொள்ள முடியவில்லையே என வெதும்பித் தன் கதிர்க்கரங்களை அவனை நோக்கி அனுப்பியது சூரியன். அது நன்மை எதுவும் புரியாது அடிபட்டுக்கிடந்த அவனை இன்னும் வியர்த்தொழுக வைத்து சோர்வுறச்செய்தது.

அப்போது அங்கே ஒரு பெரிய உருவம் நடந்து வந்து கொண்டிருந்தது. திருத்தப்பட்டு மைபூசிய புருவம். மழிக்கப்பட்ட மீசை தாடி, லேசான தாமரைவர்ணம் பூசப்பட்ட கன்னக்கதுப்பு. உடலெங்கும் பசலைபூத்தது போன்ற பச்சை. முகத்தில் பச்சைகுத்தப்பட்டதுபோல் எப்போதும் ஒட்டியிருக்கும் புன்சிரிப்பு. சிதறிக்கிடந்த உடல்களையும் அந்தப்போர்க்களக் காட்சிகளையும் தலையை ஆட்டியபடி பார்த்துக்கொண்டே வந்த அவ்வுருவம், சக்கரத்தில் சாய்ந்திருந்தவனிடம் வந்து நின்றது. வாழைப்பழத்தில் சொருகி வைக்கப்பட்டு எரிந்து முடிந்த ஊதுவத்தியின் மிச்சக் குச்சிகள் போல் மூன்று அம்புகள் அவன் நெஞ்சில் குத்தப்பட்டிருந்தன. நெறுக்கிக் கட்டப்பட்ட சாமந்திப்பூ மாலைகளும் அந்த அம்புகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்தன.

மெதுவாக வந்த அந்தவுருவம் தேர்க்காலில் மரணவழியில் இருந்த அவனிடம் வந்து ஒரு தத்துவப்பாடலைப் பாடியது.

“உயிர்போகும் வேதனையில் இருக்கிறேன். இத்தனை தொலைவு வந்த நீர் பெருவலி தரும் இந்த அம்புகளை எடுக்காவிட்டாலும் வலிக்கு மேலும் அழுத்தம் தரும் இந்த மாலைகளையாவது நீக்குவீர் என எதிர்பார்த்தேன், ஆனால் நீர் இங்கே வந்து பாட்டுப்பாடுகிறீரே இது தர்மமா?” எனக்கேட்டான்.

“உன்னிடத்தில் தர்மம் கேட்டு வந்த என்னிடம் தர்மமா எனக்கேட்கிறாயே?” எனக் கேட்டது பச்சையுருவம்.

“தர்மம் தர என்னிடத்தில் என்ன உள்ளது? இதோ உன்னும் சற்று நேரத்தில் பிரியப்போகும் உயிரைத்தவிர?”

“ஏனில்லை? உன்னிடம் ஜிபே உள்ளது தானே, அதில் அனுப்பலாமே“

“ஆ! ஆ! ஆம். ஆம். இல்லையென்று வந்தவர்க்கு எப்படி நான் இல்லையென்பேன்? இதோ, உங்கள் யுபிஐ எண்ணைக் கூறுங்கள் என்னிடமிருக்கும் அனைத்தையும் அள்ளித் தருகிறேன்"

“எண்ணெல்லாம் தேவையில்லை” எனத் தன் உள்ளங்கையை விரிக்க, அதில் கியூஆர்க்கோடு மருதாணியிடப்பட்டிருந்தது.

அதைத் தன் செல்பேசிக் காமிராக்கண்களினால் வருடி தன்னிடமிருந்த அத்தனைத் தொகையையும் வகைதொகையின்றி அவருக்குத் தருமம் செய்தான்.

என்றைக்குமில்லாத திருநாளாக, அன்றைக்கென்று பார்த்து பெரிய ரிவார்டுகளாக அள்ளித்தெளித்தான் ஜிபேயாழ்வான். ரிவார்டுகளில் ரேபான் கண்ணாடியும் அடக்கம். அதை அணிதல் தன் தந்தைக்குச் செய்யும் மாறு என்பதை உணர்ந்த அவன், அதையும் பச்சையுருவத்துக்கே கொடுக்க, கண்ணாடி மட்டும் கொடுத்தால் தருமமாகுமா? மிச்சம் வந்த ரிவார்டும் எனக்குத்தந்தால் தகும் என்றது.

“எடுத்துக்கொள்ளுங்கள், அனைத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்" என வாரிக்கொடுத்தபின், அரவிந்தசுவாமியிடம் வந்து, இப்போது விடு கணையை என்றது பச்சையுருவம்.

அம்பு பாய்ந்தது. அவன் வீழ்ந்தான்.

அந்தக்களம் முழுதும் உச்சஸ்தாயியில் சீர்காழியின் குரல் ஒலித்தது.

Comments