ஒரு உறவின்முறை தாத்தா. எதோ தொழில் விசயமா கடன் கேட்டுருந்தார். அவருக்கு ஒரு வகையில நன்றிக்கடன் பட்டுருக்கோம்னு எப்பவும் தோணும். தங்கச்சி கல்யாணத்துக்கு டேடி வரல. அவர் ஸ்தானத்துலருந்து சாட்சி கையெழுத்து போட கல்யாண மேடைல கேட்டப்ப யார்ட்ட கேக்கறதுன்னு அப்ப இருந்த பரபரப்புல தெரியல. அப்போதைக்கு கல்யாணத்துக்கு வந்ததுல இவர்தான் குடும்பத்துல மூத்த வயசானவரா இருந்தார். கேட்டதும் நாம்போடுறேன்னு போட்டார். அதுக்கு பதில் மரியாதைய எப்படியாச்சும் செய்யணும்னு நெடுநாளா நெனச்சிட்டிருந்தேன். ஓரிரு வருசம் கழிச்சு அவர் கடனா கேட்டப்ப எதுவும் கேட்காம அவர் கேட்டத குடுத்ததும் தான் நம்ம மனசு கொஞ்சம் ஆறுதல் பட்டுச்சு. கேட்டவர் கடனாத்தான் கேட்டார். ஆறு மாசத்துல குடுத்துடுறேன்னு சொன்னார். நானும் கண்டுக்கல. ஆறு மாசம் ஒரு வருசமாச்சு. ஒரு வருசம் ரெண்டாச்சு. அவர எங்கயாச்சும் பாக்கறப்பலாம் கொஞ்ச நாள்ல குடுத்துடுறேன்னு சொல்லுவார். பரவால்ல இருக்கட்டும் விடுங்கனு சொன்னாலும் கேக்க மாட்டார். சரி எப்ப முடியுதோ அப்ப குடுங்கனு விட்டாச்சு. நடூல உடல் உபாதை காரணமா வேலைய விட்டு ஒரு ஆபரேசன் முடிஞ்சு உடல் தேறினதும் ஒரு வேலைய தேடிட்டிருந்தேன். ஆறு மாசம் போக்கு காட்டி கடைசியா ஒரு அமெரிக்க கம்பனில இங்கருந்தே பண்ற ரிமோட் வேல கெடச்சுது. ஆறு மாசமா வேல இல்லாதது வீட்டுக்கும் தெரியாது. எப்புடியோ சமாளிச்சு ஓட்டியாச்சு. இந்த புது வேலை சேந்து ஒரு மாசம் போல ஆச்சு. இதுக்கு நடுவுல அந்த தாத்தா காசு ரெடி பண்ணிட்டேன் வந்து வாங்கிக்கனு சொன்னாப்டி. ரிமோட் வேல US டைம்சோனுங்கறதால பகலெல்லாம் ஒறக்கம் நைட்டு முழுக்க வேலைனு போச்சு. அதனால பகல்ல வெளிய எங்கயும் போக முடியல. சனிஞாயிறு என்னைக்காச்சும் வந்து காச வாங்கிக்கறேன்னு சொன்னேன் அவர்ட்ட. அப்ப நம்ம வீடு இருந்தது எல்டாம்ஸ் ரோடுகிட்ட. தாத்தா இருந்தது வண்ணாரப்பேட்டைல. கையில காசிருந்தா எப்பிடியாச்சும் செலவாகிடுது அதனால இந்த வாரம் கட்டாயம் வந்து வாங்கிக்கனு சொன்னார். சரி சனிக்கெழம வந்து வாங்கிக்கறேன்னு சொன்னேன்.
காலைல மெட்ரோ புடிச்சு அவங்க வீட்டுக்கு போயி காச வாங்கிட்டு மெட்ரோலியே வந்துட்டா ஒரு மூனு மணி நேரத்துல வேல முடிஞ்சது. வீட்டுக்கு வந்து தூக்கத்த போட்டுரலாம்னு முடிவு பண்ணேன். வெள்ளி நைட்டு வேல முடிஞ்சு காலைல 8க்கு தூங்கி பத்துக்கு எந்திரிச்சு கெளம்பினேன். வீட்ட விட்டு கெளம்ப முன்ன தாத்தாவுக்கு போன் பண்ணி வந்துட்டிருக்கேனு சொன்னேன். மெட்ரோல மொபைல் எடுக்காதுன்றதால ஏற முன்ன போன் பண்ணிட்டேன். சரி மதியம் சாப்பாடு அங்கயே சாப்புடணும்னு சொன்னாப்டி. அதுலாம் அப்பறம் பாத்துக்கலாம்னு நான் மெட்ரோ ஏறிட்டேன். உள்ள போனதும் மொபைல் சிக்னல் கட்டாகிருச்சு. அப்பத்தான் மொதல் தடவையா வண்ணாரப்பேட்டைக்கி மெட்ரோல போறதால எங்க எறங்கி எப்பிடி வரணும்னு தெரியல. அதனால எறங்கினதும் தாத்தாவுக்கு போன் பண்ணினா கால் எடுக்கல. சரி கொஞ்ச நேரம் கழிச்சு அடிப்போம்னு பண்ணினா அப்பவும் ரெஸ்பான்ஸ் இல்ல. சரி கேட்டு கேட்டாச்சும் போயிரலாம்னு ஷேராட்டோல கேட்டு ஏறினா தாத்தாவோட பொண்ணு, சித்தி முறை, கால் பண்றாங்க. எங்கடா இருக்கனு கேட்டு. இந்தா ஒங்க வீட்டுக்குதான் வந்துட்டிருக்கேன்னதும் தாத்தா திடீர்னு மவுத்தாகிட்டாருன்னு அழுதுட்டே சொல்றாங்க.
ஒரு ஒரு மணி நேரம் முன்ன மெட்ரோ ஏறுறதுக்கு முன்ன பேசின ஆள் இப்ப இல்லன்றதே பெரிய அதிர்ச்சி. இதுல நான் போறது அவர்ட்ட குடுத்த கடன வாங்க. எவ்ளோ சங்கடமான நிலமை. எனக்கு என்ன பண்றதுனு தெரியல. வீட்டுக்குப் போனா கிடத்தி வச்சிருக்காங்க. அதுவும் அது ஒரு குருவிக்கூடு மாதிரி ஒரு பழங்கால இடுக்கலான வீடு. அங்க ஏற்கனவே சிலர் வந்துருந்தாங்க. எப்ப தகவல் கேள்விப்பட்டீங்க, கேட்டதும் வந்துட்டீங்களானு பொதுவா கேட்டாங்க. எனக்கு என்ன பதில் சொல்றதுனே தெரியல. அந்த சூழல்ல என்ன சொல்றது? என்னனு சொல்றது? பக்கத்துல ஒரு வேலை இருந்துது. அங்க வந்தப்ப தகவல் கேட்டு ஒடனே வந்துட்டேன்னு சொல்லி வச்சேன்.
இவர் குடும்பத்துல அப்ப இருந்த மூத்த ஆணுங்கறதாலயும் பழைய பார்ட்டிங்கறதாலயும் (பல நபர்கள் கொண்ட) பெரிய குடும்பத்த சேந்தவர்ங்குறதாலயும் சொந்த ஊர், வெளியூர்ல இருந்துலாம் மக்கள் வர ஆரமிச்சாங்க. கல்கத்தாவுலருந்துலாம் ப்லேன் புடிச்சு வந்துச்சு சில குடும்பம். இவர் தாய் வழி சொந்தம்ங்குறதால என் தாய்மாமாக்களும் அவங்கவங்க ஊர்லருந்து புறப்பட்டு வந்தாங்க. இதுக்கிடையில நான் அங்க போன காரியம் யாருக்கும் தெரியாது. முந்தின நைட் முழுக்க வேல பாத்ததும் டயர்டா இருந்துது. ஆனா அங்க வேலை செய்யவும் யாரும் இல்லங்குறதால நைட்டு வரைக்கும் இருக்க வேண்டியதாப் போச்சு. நைட்டு ஒத்தாசைக்கு ஆட்கள் வந்ததும் நான் வீட்டுக்கு கெளம்பிட்டேன், மறுநாள் மதியம் போல ஜனாசாவ எடுக்கறதா ஏற்பாடு. வெளியூர்கள்லருந்து ஆட்கள் வரதால எல்லாரும் வந்தப்பறம் எடுக்கறதா தீர்மானம். நான் மறுநாள் காலை வீட்லருக்கவங்களல்லாம் கூட்டிட்டு மறுபடி வந்துட்டேன். சரியான கூட்டம் வரப்போக இருந்துது. ஒருவழியா மதியம் ஆரமிச்சு, (நல்ல மழ வேற அன்னைக்கு) சாந்திரம் அடக்கம் பண்ணிட்டு வந்தாச்சு. தாத்தாவோட மகள் ஒருத்தங்க வாடகைக்கு இருந்த வீடு கொஞ்சம் பெருசுங்கறதாலயும் தாத்தாவோட வீட்டுக்குப் பக்கத்துல அது இருந்ததாலயும் கொஞ்சப்பேரு அங்க போயி ஓய்வெடுத்தோம். அவ்வளவு நேரம் அத்தனை நெருக்கத்துல ஜனாசாவோட இருந்தது அப்பதான். ஒடம்ப கழுவினது, கற்பூரம் வச்சதுனு ஒரு மாதிரி வினோதமான அனுபவம்.
தாத்தாவோட மனைவி பாட்டி என்ன தனியா கூப்புட்டு எனக்கு கடன திருப்பி குடுக்க தாத்தா வச்சிருந்த காசு மய்யத்துக்கு செலவாகிருச்சு, ஒரு வருசத்துல திருப்பி தந்துர்ரேன்னாங்க. நம்மள இப்பிடி நெனச்சிட்டாங்களேன்னு ஒரு பக்கம். ஒரு வேள நாம காசு வாங்கத்தான் இத்தன வேல பாக்குறோம்னு நெனச்சிருப்பாங்களோனு ஓவர் திங்க்கிங் ஒரு பக்கம். அந்தக்காசு ஒங்களுக்கு நா குடுத்ததா இருக்கட்டும். இனிமே அதப்பத்தி பேசாதீங்கனு பாட்டியோட தேவைக்கி அத வச்சுக்க சொல்லி அவங்க பையங்கிட்ட சொல்லிட்டேன். பாட்டி மகள் வீட்டு ஹால்ல எல்லாரும் பாய் விரிச்சு உக்காந்து பேசிட்டிருந்தோம். ஒவ்வொருத்தரா பழைய கதைலாம் பேசிட்டிருக்கப்ப சொந்த ஊர்லருந்து வந்திருந்த தாய்மாமா ஒருத்தர் பேச்சோட பேச்சா தாத்தா சனிக்கெழம மௌத்தாப்போயிருக்கார். சனிப்பொணம் தனியா போவாதுன்னு சொல்லுவாங்கன்னார். எனக்கு அப்ப மைண்டுல என்ன ஓடுச்சுன்னு தெரியல, லூசுக்கூதி மாதிரி பேசாத மாமானு வாய் விட்டே சொல்லிட்டேன். அவர் அம்மாவுக்கும் அண்ணன். அவர நீ, வா போனு தான் பேசுவேனே தவிர மரியாதை குறைவா எப்பவுமே சொன்னதில்ல. May be ரெண்டு நாளா இருந்த டயர்டோ மைண்டுல என்ன இருந்துச்சோ டக்குனு அப்பிடி வந்துருச்சு. நல்ல வேளையா பாட்டியோட மருமகன் ஒருத்தர் நம்மதுல அப்பிடிலாம் நம்பிக்கை இல்லைனு சொல்லி பேச்ச மாத்தி விட்டார். ஆனா எங்க ஊர சேந்த ஒரு வயசான பெத்தா மதுரைல அன்னைக்கு காலைல எறந்துட்டதா சொல்லி வாட்சப்ல மரண தகவல் வந்துருந்துச்சு. ஒரு வேள அந்த பெத்தாவாதான் இருக்கும், தனியா போகாம கூட கூட்டிட்டுப் போனதுன்னும் ஒருத்தர் சொன்னார். மாமா வந்ததோட கொஞ்சம் அது கடைக்கு சரக்கு ஆடர் போட்டுட்டு ஊருக்குப் போறதா ப்லான். பல ஊர்லருந்து வந்தவங்களும் கெளம்ப ஆரமிச்சிட்டாங்க. நானும் ஞாயிறு நைட்டு வீட்ல எல்லாரையும் தாத்தா வீட்டுலருந்து கூட்டிட்டு வந்துட்டேன். மறுநாள் வேலைங்குறதால திங்கள் பகல்ல கொஞ்சம் தூங்கிட்டேன். இந்த கம்பனி வேலைக்கு சேந்து ஒரு மாசம் + ரெண்டு மூனு நாள் இருக்கும். சம்பளம் வந்து அப்பதான் ரெண்டு நாள் ஆகிருந்துது. ரிமோட் வேலைய பொருத்தவரை நாம நம்பகமான ஆளுன்னு அவங்களுக்கு புரிய வெக்கணும். ஏன்னா நேரடிப் பரிட்சயமே இல்லாம வெறும் மெயிலும் வீடியோ காலும் மட்டுமே வச்சு அவ்ளோ பெரிய வேலைய நம்பி குடுக்கறான். சில லட்சங்கள் சம்பளமும். அதனால முதல் மூனு மாசம் நாயா பேயா வேல செஞ்சு நாம நம்பிக்கையான ஆளுதான்னு நிரூபிச்சிட்டா அதுக்கப்பறம் அது பாட்டுக்கு வண்டி ஓடும். இதுல எதும் பிசிறு தட்டுனா ஒடனே ஃபயர் பண்ணிருவானுக. ஏன்னா தப்பான ஆள வேலைக்கி வச்சிருக்க ஒவ்வொரு நாளும் அவனுகளுக்கு பெரிய நட்டம். அதனால நல்ல பேர் எடுக்கணும்னு எஸ்ட்டாவா எஃபர்ட் போட்டுட்டு இருந்தேன்.
திங்கக் கெழம நைட்டு ஏழு மணிக்கு வேல ஸ்டார்ட் ஆச்சு. ஸ்டேடண்ட்ப்ல வீக்கெண்ட் எப்பிடி போச்சுன்னு கேட்டதுக்கு நா இந்த தாத்தாவோட இறப்பு கதைய சொன்னேன். பாஸ் கொஞ்சம் அதிர்ச்சி ஆகி ஆறுதல் சொன்னாப்டி. மீட்டிங்லாம் முடிஞ்சு டெஸ்டிங் பண்ணிட்டிருக்கப்ப ஒரு ஒம்பதரை இருக்கும். எறந்தார்ல தாத்தா, அவரோட பையன் கால் பண்ணாப்டி. சரி கத்தம் ஓதுற விசயமா எதும் பண்றாப்ல போலனு எடுத்து பேசினேன். எடுத்ததும் எங்கருக்கன்னாப்டி. வீட்லதான், வேல செஞ்சுட்டு இருக்கேன்னேன். ஒடனே கெளம்பி எக்மோர் ஸ்டேசன் வான்னாப்டி. என்னாச்சுனு கேட்டா மாமா எறந்துட்டார்னு ஒரு இடி. எனக்கு ஒரு நிமிசம் எதுவுமே புரியவே இல்ல. ஆனா அப்போதைக்கு என்ன பண்றதுனும் கொழப்பம். ஆபிஸ்ல அப்பதான் வேல ஆரமிச்சிருக்கு. திங்கக்கெழம அவனுகளுக்கு பகல். வேலைக்கு சேந்து சம்பளம் வந்த ஒடனே பர்மிசன் கேட்டா என்ன நெனைப்பானுகனும் புரியல. ஒரு சின்ன எமர்ஜன்சி வெளிய போயிட்டு ஒன்னவர்ல வந்துர்ரேன்னு சொல்லிட்டு எக்மோர் கெளம்புனேன். வீட்ல எதுவும் சொல்லல. அம்மாவோட சொந்த அண்ணன். தாத்தா எறந்ததுக்கே அழுது ஊரக்கூட்டுச்சு. இத சொன்னா என்னாகும்னு தெரியாது. அதனால அதெல்லாம் பின்னால பாத்துக்கலாம்னு எக்மோருக்கு கெளம்பிட்டேன். போறப்பவே போன் பண்ணவருக்கு கால் பண்ணேன். அவரும் எக்மோருக்கு போயிட்டிருக்கதா சொன்னாப்டி. நைட்டு ரயில் ஏற மாமா ஸ்டேசன் பெஞ்ச்சுல உக்காந்துருந்ததாகவும் ரயில் வந்ததும் ஏறுறதுக்காக எழுந்து நின்னதும் சுருண்டு விழுந்து அங்கயே எறந்துட்டதாகவும் தகவல். மாமாவ ரயில் ஏத்த தாத்தாவோட பையன் வந்து விட்டுட்டு போனப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சு ரயில் ஏறிட்டாரானு கேக்க கால் பண்ண, அக்கம் பக்கத்துல இருந்தவங்க ஃபோன அட்டன் பண்ணி மாமா எறந்துட்ட சேதிய சொல்லிருக்காங்க. அந்தாள் பதறியடிச்சு மறுக்கா ஸ்டேசனுக்கு கெளம்பறப்ப எனக்கு போன் பண்ணி சொல்லிருக்காப்டி. நான் எக்மோருக்கு போறக்குள்ள அங்கருந்து பாடிய ராயப்பேட்டைக்கு கொண்டு போயிட்டதா சொன்னாங்க. ரயில்வே போலிஸ்தான் நீங்க ஒடனே கொண்டு போயிட்டா ஈசியா வேல முடியும், இல்லன்னா ஏகப்பட்ட ஃபார்மாலிடீஸ் இருக்கும்னு சொல்லிருக்காங்க. எக்மோர்லியே எறந்துட்டதா கன்ஃபார்மும் பண்ணிட்டாங்க. எக்மோர்லருந்து ராயப்பேட்டைக்கி போனேன். இதுக்கெடையில பல ஊர்கள்லருந்து கால் வர ஆரமிச்சிட்டுது. அதுவரைக்கும் மரண தகவல் சொல்லிப் பழக்கமே இல்ல.
எனக்கு அப்ப சோகமாகி அழறதா, இல்ல ஆறுதல் சொல்றதா, அடுத்து என்ன பண்றது, குறிப்பா வேலையில என்ன சொல்றதுனு ஏகப்பட்ட குழப்பம். என் தங்கச்சிக்கும் செய்தி போயி அது கால் பண்ணுச்சு. என்னாச்சுண்ணேனு அது கேக்கறப்பவே எதுவும் ஆகலனு சொல்லிடுன்ற ஏக்கம் குரல்ல இருந்துது. அம்மா அதுக்குப் பின்னால இருந்து விசும்ப ஆரமிச்சிருச்சு. அது ஃபோன்ல கேட்டுது. செய்தி உண்மைனு சொன்னா முடிஞ்சது. தங்கச்சிட்ட மட்டும் விசயம் உண்மதான்னு சொல்லிட்டு அம்மாகிட்ட அப்பிடி எதும் இல்ல, மாமாக்கு திடீர்னு ஒடம்பு முடியாமப்போயி ஆஸ்பத்திரில சேத்துருக்காங்க. அங்கதான் போய்ட்டிருக்கேன்னு சொல்லிருன்னு சொன்னேன். அம்மாவ அழாம பாத்துக்கனு சொல்லிட்டு வச்சிட்டேன். அப்பவே பதினொன்ன தொட்டுருச்சு மணி. அந்த நேரத்துல அம்மா ஒப்பாரி வச்சா அக்கம் பக்கத்துல அவங்களுக்கு வேற தொந்தரவா இருக்கும்னு மனசுல ஒரு திரி. ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கி போனா அதுக்குள்ள அங்கருந்து பக்கத்து கபர்ஸ்தானுக்கு கொண்டு போய்ட்டாங்கனு தகவல். இந்த அலைச்சலே மண்டைய மெரட்டிருச்சு. ஆபிசுக்கு இன்னும் ஒரு மணி நேரம் மாதிரி ஆவும்னு சொல்லிட்டு கம்பனி ஓனருக்கு மட்டும் எதிர்பாராத ஒரு திடீர் டெத்து. என்னனு ஒன்னும் புரியல. பாத்துட்டு சொல்றேன், சப்போஸ் லேட்டானா மறுநாள் பகல்ல கூட முழிச்சிருந்து வேலைய முடிச்சு குடுத்துடுறேன்னு மெசேஜ் போட்டேன். சாவுன்னதும் அவனுக்கு என்ன மனசிரங்குச்சோ, ஒன்னும் பிரச்சினையில்ல பாத்துக்கோன்னான். அது ஒன்னு ஆறுதலானதும் ராயப்பேட்ட கபர்ஸ்தானுக்கு போனா அங்க தாத்தாவோட பையன் அப்பறம் சிலர் வந்துருந்தாங்க. பெஞ்சுலருந்து எந்திரிச்சவர் அங்கயே பட்டுனு மயங்கி விழுந்து அப்பவே மரணம். இதே தகவல் வெவ்வேற மாதிரி அங்கருந்தவங்க பேசிட்டிருந்தாங்க.
முந்தின நாள் தாத்தாவோட மகள் வீட்ல இருந்து பேசினோம்ல, அந்த மகளோட வீட்டுக்காரரும் அங்க இருந்தார். மாமா சனிப்பொணம் தனியா போகாதுன்னு சொன்னப்ப அவர்தான் நம்மதுல இந்த நம்பிக்கைலாம் இல்லனு சொன்னவர். அவர பாத்ததும் என்ன பேசுறதுனே தெரியல. அங்க எதோ ஒரு ஆம்புலன்ஸ் நின்னிட்டிருந்துச்சு. முந்தின ரெண்டு நாள் கதையெல்லாம் வருத்தமா பேசிட்டே இருந்தாப்டி. நான் அதுவரை மாமாவோட பாடிய பாக்கவே இல்ல. பள்ளிவாசல் உள்ள போயி கேட்டா இன்னும் பாடி வரலனு சொன்னாங்க. ஆஸ்பத்திரிலருந்து இன்னும் வரல போலனு நெனச்சுட்டிருந்தேன். தாத்தாவோட மருமகன் கிட்ட மாமாவோட பாடி எங்க இருக்கு, எப்ப வரும்னு கேட்டதுக்கு நாங்க நின்னு பேசிட்டிருந்த ஆம்புலன்ச காட்டி இதுல தான் இருக்கு போயி பாருங்கன்னார். எனக்கு திக்குனு ஆகிருச்சு, மாமாவோட பாடிக்கு பக்கத்துலருந்தா இவ்ளோ நேரம் பேசிட்டிருந்தோம்னு மனசுக்குள்ள அத என்ன உணர்வுன்னே சொல்ல தெரியல. ஆம்புலன்ஸ் பின் கதவ தொறந்தா மாமா சவமா கெடக்குறார். கண்ணு சொருகிப்போயி வாயிலருந்து கொஞ்சம் எச்சி ஒழுகி, எதோ ஆழ்ந்த தூக்கத்துல இருந்த மாதிரியும் இருந்துச்சு, எதோ ஒரு கோணிப்பை மூலைல கெடந்த மாதிரியும் இருந்துது. கைவிரல் எல்லாம் குஷ்டம் வந்தவங்க மாதிரி இறுகி மூடிட்டிருந்துது. மாமாவோட ஸ்டீல் வாட்ச் அப்பிடியே இருந்துது. இருக்கதுலியே ரொம்ப துடியான மாமா அது. அத அப்பிடி பாத்ததும் கைகாலெல்லாம் நடுங்க ஆரமிச்சிருச்சு.
அப்பவே நேரம் மிட்நைட்ட தாண்டிருச்சு. இன்னம் கொஞ்சம் தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க, ஊர்ல கொஞ்சம் பவர் இருக்கற ஆட்கள் எல்லாரும் வந்துட்டாங்க. மாமாவோட ஒடம்ப ஆம்புலன்சுல ஊருக்கு கொண்டு போகறதுனு முடிவாச்சு. ஆனா கூடப்போக யாரும் தயாரா இல்ல. அவங்கவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். இப்பிடி யாருமே எதிர்பாக்காத திடீர் நெலமையில அதுவும் அத்துவான ராத்திரியில என்ன பண்ணுவாங்க? பொதுவா மய்யத்துகளுக்கே போறத தவிர்த்துருவேன். கொஞ்ச நாளைக்கி அது ஒரு மாதிரி ஹாண்ட்டிங்கா இருக்கும் அவங்களோட அந்த கடைசி முகம். நாடிக்கட்டும் சரி, கஃபன் சுத்தப்பட்ட ஒடம்பும் சரி, ஒரு சில வாரத்துக்காவது மனநிலைய சிதைச்சிரும். ஆனா தாய்மாமாவ அப்பிடி விட்டுற முடியாது. நாமதான் போணும்னு புரிஞ்சுருச்சு. ஆனாலும் ஒரு தயக்கம் என்னன்னா கிட்டத்தட்ட 12 மணி நேரப் பயணம் ஆம்புலன்சுல எப்பிடி மாமாவோட ஒடம்பு பக்கத்துலயே இருந்துட்டு போறதுன்றது யோசிக்கவே முடியல. எவ்ளோதான் பாசம் ரத்தபந்தம்லாம் இருந்தாலும் பக்கத்துல ஒரு இறந்த உடலோட பயணம் பண்ணப்போறோம்ங்குறது கிடுகிடுக்க வச்சிது. இறந்த உடல்கள் மேல பொதுவாவே ஒரு இனம்புரியாத அத அவெர்ஷன்னு சொல்றதா பயம்னு சொல்றதா இல்ல தயக்கம்னானு தெரியல. லோ சுகர் வந்தா ஒரு கிறுகிறுப்பு வரும்ல, அந்த மாதிரி ஒரு மெண்டல் கிறுகிறுப்பு வரும் இறந்த உடம்புகள பாத்தா.
அந்த நேரத்துல ஒரு உணர்வு கொந்தளிப்புல நா போறேன் மாமாகூடனு சொல்லிட்டேன். ஆனா அங்கருந்த பெரியவங்க தனியா எப்பிடி போவன்னு கேட்டப்ப மச்சான கேட்டேன் நீ வரியான்னு (கேக்கல, சொன்னேன், நீ கூட வான்னு). முந்தின நாள் எறந்த தாத்தா ஒரு கல்யாணத்துக்கு சைன் போட்டாரே, அந்த கல்யாண மாப்ள. அவன் என்ன விட சின்னப் பையன் தான். ஆனா கேட்டதும் சரின்னுட்டான். அப்பறம் மாமாவுக்கு தோழமையான ஒரு சொந்தக்காரரும் வரேன்னு சொன்னார். ஆரம்பத்துல அவர்ட்டதான் கேட்டாங்க. பயந்து முடியாதுன்னுட்டார். இப்ப தொணைக்கு ஆள் இருக்குன்னு கொஞ்சம் தைரியம் வந்துருச்சு. எனக்கும் மூனு பேரா இருக்கோம்னு கொஞ்சம் ஆறுதல். ஆனாலும் எங்களுக்கு நடுவுல ஒரு பாடிதான் இருக்கப்போவுதுன்றது அப்பவும் வியர்டாதான் இருந்துது.
இதுக்கெடையில அவர் இறந்த செய்தி எல்லாருக்கும் அறிவிச்சாச்சு. வீட்டுக்கு போன் பண்ணி அம்மாவ அழாம பாத்துக்கனு தங்கச்சிட்ட சொல்லிட்டேன். ஆபிஸ் பாசுக்கு மெசேஜ் பண்னிட்டேன், இந்த மாதிரி ஒரு ஆக்சிடெண்ட் ஆகிருச்சு, பாடிய கொண்டு போறேன், இன்னக்கி லீவ் எடுத்துக்குறேன், நாளைலேந்து வேல செய்யிறேன்னு சொல்லிட்டேன். அந்த பாஸ் (அமெரிக்கன்னாலும்) தங்கமானவன். சப்போர்ட்டிவா பேசிட்டு ஒனக்கு தோதுப்படுறப்ப வேலைக்கு வான்னு சொல்லிட்டான். வீட்ல எல்லாரும் அன்னைக்கி அதிகாலை கெளம்பி வரதா ஏற்பாடு. அவங்கட்ட என்னோட டிரெஸ் லேப்டாப் மொபைல் சார்ஜர்னு கொண்டு வர சொல்லிட்டேன். நாங்க அங்கருந்து அப்பிடியே ஊருக்கு கெளம்பறதா திட்டம்.
கூட வரேன்னு சொன்ன மாமாவோட தோழன் அவர் பையன் கிட்ட துணியும் அவரோட மொபைல் சார்ஜரும் கேட்டுருந்தார். அவன் வீட்ல தேடு தேடுனு தேடி கொண்டு வரதுக்கு ஒரு மணி நேரமாக்கிட்டான். இந்த நேரத்துல மெட்ராச சுத்தி இருந்த சொந்த பந்தங்கள் மாமாவோட நட்புகள்னு பலர் நடு ராத்திரியில கெளம்பி வர ஆரமிச்சிருந்தாங்க. அவங்க சிலர் வந்து பாக்கணும்ங்கறதுக்காக கொஞ்ச நேரம் வெய்ட் பண்ண வேண்டியதாப்போச்சு. இதுல சிலர் ஆந்திராலருந்து கெளம்பி வந்துட்டிருந்தாங்க. அவங்களுக்காக காத்திருந்ததுதான் ரொம்ப நேரமெடுத்துருச்சு. குளிப்பாட்டி கஃபன் கட்டினதோட இருக்கு ஒடம்பு. சீக்கிரமா கொண்டு போய்ட்டா ஊர்ல கொஞ்ச நேரம் வச்சிட்டு அடக்கம் பண்ணிரலாம், நேரம் ஆக ஆக மீதி வேலைகளும் நீளும். எல்லாருக்கும் அவதி வேற. ஆனா ஆந்திராலருந்து வரவங்க தோ வந்துட்டோம் தோ வந்துட்டோம்னு ரொம்ப லேட்டாக்கிட்டானுக. ஆந்திராக்காரங்க ரொம்ப தூரமா இருக்கு, சொந்த ஊருக்கு போக முடியாது, அதனால கெளம்பக்குள்ள மாமாவோட முகத்த ஒருக்கா பாக்கணும்னுட்டு வந்துட்டு இருந்தாங்க.
கடைசில ஒரு முடிவு பண்ணாங்க, ஆம்புலன்ஸ் பொறப்புடட்டும், ஆந்திராலருந்து வரவங்க தாம்பரம் பைபாஸ் வழியா வந்து பெருங்களத்தூர்ல வந்து பாத்துக்கட்டும்னு சொன்னாங்க. இதுல ஒருத்தர் சொன்ன ஆலோசனைதான் வினோதமா இருந்துச்சு. பெருங்களத்தூர்ல நிறுத்தி மாமாவோட முகத்த தொறந்து காட்டிட்டு அப்பறமா கொண்டு போங்க, வரவங்களும் பாத்த மாதிரி ஆகிரும்னாப்டி. அப்பத்தான் நாம செத்தாலும் இந்த மாதிரி ஐடியா சொல்றவன்லாம் இருப்பான்லனு தோணுச்சு. ஒரு கட்டத்துல கூட வரேன்னு சொன்ன மாமாவோட தோழர் சத்தம் போட ஆரமிச்சிட்டாரு. இப்பிடி ரோட்ல நிறுத்தி காட்டிட்டுலாம் இருக்க முடியாது, அவங்கள முடிஞ்சா ஊருக்கு வரச்சொல்லுங்க இல்லன்னா விடுங்க, வண்டி இங்க கெளம்புனா ஊருக்குதான் நேரா போகும், எங்கயும் யாருக்கும் நிக்காதுன்னு கொஞ்சம் உறுதியா சொன்னாப்டி. எல்லாரும் ஆமோதிச்சாங்க.
இதுக்கெடையில நேத்து இறந்து போன தாத்தாவோஅ மத்த மகள்கள், மகன், மருமகள் எல்லாரும் வந்துட்டாங்க. அடுத்தடுத்த நாள்ல ரெண்டு இறப்புன்றது எல்லாரையும் கலங்க வெச்சிருந்துச்சு, டயர்டாவும் ஆக்கியிருந்துது. சின்ன வயசுல பிரச்சனைகள் நடக்கறப்ப பெரியவங்க அத கையாளுவாங்க. சின்னப் பொடுசுகளா நாம அப்ப வெளாண்டுட்டும், திம்பண்டம் சாப்ட்டுட்டும் ஒரு கத கேக்கற மாதிரி இல்ல படம் பாக்கற மாதிரி அந்த பிரச்சனைகள பாப்போம். திடீர்னு ஒரு நாள் வாழ்க்கை நம்மள முன்னால நிப்பாட்டி நீதான் இத எல்லாம் ஃபேஸ் பண்ணனும்னு சடுதியில எறக்கிவிடுறப்பதான் நாம வளந்துட்டோம்னு ரியாலிட்டி மூஞ்சில அறையுது. என்னதான் மனசளவுல நாம வளராம இருந்தாலும் வாழ்க்கை யாரையுமே விட்டு வெக்கறதில்ல. நீ வளரு, வளராமப்போ, நா பிரச்சனைகள தரத நிப்பாட்ட மாட்டேன்னு தந்துட்டே இருக்கு.
ஊருக்கு கெளம்பலாம்னு மாமா ஒடம்ப ஐஸ் பெட்டியில வச்சாங்க. ஆம்புலன்சுல ஏத்தறதுக்காக பின் கதவ தொறந்து வச்சப்ப டிரைவர் பெட்டிய வண்டியோட சைடுல கொண்டு வரச்சொன்னார். அப்பத்தான் கவனிச்சேன், அந்த வண்டியில அடியில ஒரு திறப்பு இருக்குன்றதே. ஆம்னி பஸ்கள்ல பெட்டியெல்லாம் சைடுல ஏத்துவோம்ல, அந்த மாதிரி கேப் இருக்கு. அதுக்குள்ள வச்சுத்தான் ஒடம்ப எடுத்துட்டு போவாங்களாம். ஆம்புலன்ஸ் பின்னால உக்கார எல்லாருக்கும் எடம் இருக்கும். உண்மையிலயே இந்த இட ஏற்பாடு தந்த ரிலீஃப சொல்லி முடியாது. பக்கத்துல பாடிய வச்சுட்டே எப்பிடி போகப்போறோம், தூங்கக்கூட முடியாதேன்னு இருந்துது. இப்ப அது இல்லன்னதும் ஒரு நிம்மதி.
பெட்டிய சைடுல ஏத்தினதும் நாங்க மூனு பேரும் ஆம்புலன்ஸ் பின்னால ஏறிக்கிட்டோம். எங்களோட காலுக்குக் கீழ, தாழ் தளத்துல மாமாவோட ஒடம்பு இருக்குன்றது ஒரு மாதிரி பாதம்லாம் கூசுச்சு. அதிகாலை ரெண்டோ மூனோ மணி இருக்கும். ஆம்புலன்ஸ் புறப்பட்டுச்சு. சைரன்லாம் இல்லாம வெறும் லைட்டு மட்டும் வச்சுட்டு. வாழ்க்கையில ஒரு இக்கட்டான கட்டத்துல உதவி செஞ்ச மாமாவுக்கு பதில் கடமை செய்ய ஒரு வாய்ப்பு கெடச்சதா மனசு சொல்லிக்கிச்சு.
இந்த மாதிரியான ஒரு அனுபவம் எல்லாருக்கும் அமையுமானு தெரியல. அமையவும் கூடாதுனு வேண்டிக்கறேன். ஆனா அது ஒரு வினோதமான எப்படினு விவரிக்க முடியாத அனுபவம். பல புது விஷயம் தெரிஞ்சுக்க முடிஞ்சது. சிலபல பெர்ஸ்பெக்டிவ மாத்துச்சு. அந்தப்பயணத்துல தெரிஞ்சுகிட்ட ஒரு விசயம் எந்த டோல்கேட்லயும் ஆம்புலன்சுக்கு காசு வாங்கல. மேல லைட்டெரிஞ்சா உள்ள பேஷண்ட்டோ பாடியோ இருக்கறதா பொருளாம். டோல்கேட்ல நிப்பாட்ட மாட்டாங்களாம். ஆம்புலன்ஸ் டிரைவரும் கிலீனரும் முன்னால உக்காந்துட்டாங்க. நாங்க இருக்குற எடத்துல ஒரு மெலிசான லைட் எரிஞ்சுட்டு இருந்துச்சு. பொதுவா ஊருக்கு போறப்ப பாட்டுக்கேட்டுட்டு போற மாதிரி இதுல போக முடியாது.
படுக்கவும் முடியல. எல்லாருக்கும் மொபைல் சார்ஜும் சாவற நெலமைல இருந்துச்சு. அதனால போனும் நோண்ட முடியல. ஏகப்பட்ட மெசேஜ் வந்துட்டே இருந்ததால மொபைல் டேட்டாவும் அமத்தியாச்சு. மூனு பேருக்கும் சோகம் ஒரு மாதிரி தேங்கி டயர்ட்னஸ் வந்துருச்சு. பொதுவா சில விசயங்கள் கேக்கறதும் பேசறதுமா இருந்தோம். ஆனா அது அப்போதைய அந்த ஆக்வர்டான தருணத்த தள்றதுக்காத்தான் இருந்துது. மாமா அன்னைக்கு காலைல கூட வரவரோட கடையில தான் ரொம்ப நேரம் இருந்ததாலயும் முந்தின நைட்டு தாத்தாவ அடக்கம் பண்ணிட்டு அவர் வீட்டுலதான் தங்கினதாலயும் அவருக்கு சொல்ல இந்தக் கதைகள் இருந்துது. அதனால தாத்தாவோட மய்யம் துவங்கி மாமா விசயம் குறித்து வந்த முதல் ஃபோன்லருந்து அப்பறம் என்னென்ன ஆச்சுன்னு ஒவ்வொருத்தரோட டைம்லைனயா சொல்லிட்டு வந்தோம். பாவம் அவர் எங்கள விட வயசான ஆளுங்கறதால டயர்டாகி கொஞ்ச நேரம் தூங்கறேன்னு படுத்துட்டார்.
நம்ம காலுக்கு கீழ ஒரு பாடி இருக்குது. எப்பிடி ஒரு ப்லோர் மேல படுக்க முடியுது இவரால ஆச்சரியமா இருந்துது. ஒருவேள அவர் வயசுக்கு நாம வரப்ப நாமளும் இப்பிடித்தான் இருப்போம் போலனு மனசு சொல்லிக்கிச்சு. விழுப்புரம் தாண்டி திருச்சி கிட்ட ஒரு எடத்துல டீ சாப்புட வண்டிய நிறுத்துனாப்டி டிரைவர். வாழ்க்கையோட மற்றொரு விவரிக்க முடியாத விநோத தருணம் அது. வண்டியில ஒரு பாடிய வச்சுட்டு நாம எறங்கி டீ சாப்புடுறது. அவ்ளதான் வாழ்க்கைனு உணர முடிஞ்சது. பத்து கல்யாணம் கத்துக்குடுக்காதத ஒரு சாவு கத்துக்குடுத்துரும்னு தோணுச்சு.
டீ குடிச்சுட்டு டிரைவரும் கிலீனரும் யூரினுக்காக ஒதுங்குனாங்க. எனக்கு அந்த நேரத்துல என்ன கிறுக்கு வந்துதுனு தெரியல. சப்போஸ் மாமா இன்னம் உயிரோட இருந்து நாம கவனிக்காம விட்டுருந்தோம்னா என்ன பண்றதுனு ஒரு எண்ணம். ஆம்புலன்சுல பெட்டிய வச்ச அந்த எடத்துல போயி மரம் மாதிரி நின்னுட்டுருந்தேன். எதும் சத்தம் கேக்குதான்னு உத்து கேட்டுட்டிருந்தேன். இப்ப நெனச்சா நாம எப்பேர்ப்பட்ட கிறுக்குப்பயனு தோணுது. ஆனா அந்த நேரத்துல ஏன் அப்பிடி பண்னேன்னு தெரியல. ஹைவேஸ்ல வேக வேகமா கடந்து போற வண்டிக சத்தம்தான் கேட்டுச்சு. வேற எதுவும் இல்ல.
எல்லாரும் வந்ததும் மறுபடி வண்டியில ஏறினோம். இப்ப எதோ மாமா மேல ஏறினாப்ல ஒரு எண்ணம். பேசாம அடியில வெக்காம கூடவே வச்சு கொண்டு போயிருக்கலாமோனும் தோணுச்சு. வண்டி புறப்பட, டீ குடுத்த தெம்புல இன்னம் கொஞ்சம் நேரம் பேச்சு ஓடிட்டிருந்துச்சு. திங்களிரவுன்றதாலயா என்னனு தெரியல, டிராபிக் பெருசா இல்லாததால வண்டி எங்கயும் நிக்காம போயிட்டே இருந்துச்சு. எந்த டோல்கேட்லயும் டிராபிக் இல்ல. மிதமான வேகத்துல போய்ட்டே இருந்துது. காலைல வெளுக்கறாப்ல இருந்துது. எப்ப தூங்குனேன்னு தெரியல. உக்காந்தமேனிக்கே தூங்கிருக்கேன். மறுபடியும் டீ குடிக்க வண்டி நிறுத்துறப்ப குலுங்குனதுல முழிப்பு வந்துச்சு. எல்லாரும் டீ குடிச்சாங்க. எனக்கு பசியா இருந்தாலும் டீ குடிச்சா வயித்த கலக்குங்கறதால குடிக்கல. ஊருக்கு போய் சாப்ட்டுக்கறேன்னுட்டேன். ஊருக்கு போறவரை வயித்துக்கு எதுவும் ஆகிடக்கூடாதுன்ற துக்கம் வந்துருச்சு.
பயண அசதிலாம் சேந்து எல்லாரோட மூஞ்சியும் ஒரு மாதிரி வீங்கி இருந்துச்சு. அதுக்கப்பறம் பரஸ்பரம் பேசிக்க எதுவுமே இல்லாததால வெறுமையாத்தான் உக்காந்திருந்தோம். பகல் ஆரமிச்சிட்டதால போக்குவரத்தும் அதிகமாக, வண்டியும் மெதுவா போறாப்ல ஆச்சு. கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் யாரும் எதுவும் பேசிக்கல. எல்லாரும் வெளிய பாத்துட்டே அமைதியாப்போச்சு.
ஊர நெருங்க நெருங்க மனசுக்குள்ள மறுக்காவும் ஒரு இனம்சொல்ல முடியாத திக்னு ஒரு அழுத்தம். அங்க யார பாக்குறது, யார்லாம் இருப்பாங்க, எப்பிடி என்னனு சொல்றதுனு குழப்பம். அதிலும் மாமாவோட அம்மாவான பாட்டி இருப்பாங்களா, அவங்கள எப்பிடி எதிர்கொள்ளப்போறோம்னு நடுக்கம் வந்துருச்சு. தன்னோட மூத்த மகன ஜனாசாவா பாக்கறது ஒரு தாய்க்கு எப்பிடி இருக்கும்னு கற்பன பண்ணி பாக்க முடியல. மாமாவோட மகன்களுக்கு, மனைவிக்கு எல்லாருக்கும் என்ன பதில் சொல்லப்போறோம்னு புரியல. எதோ நா அவங்களுக்கு தீங்கு செஞ்ச மாதிரி மனசுக்குள்ள ஓடிட்டே இருந்துது. நா தப்பு பண்ணி அவங்களுக்கு தண்டனைய எறக்கறாப்லயும் ஒரு எண்ணம். ஊர் நெருங்க நெருங்க வயிறு கலக்க ஆரமிச்சுருச்சு. அது பயத்துலயா இல்ல வழக்கமான இயற்கை உபாதையானு தெரியல.
தொலைதூரத்துல ஊர் தெரிஞ்சுது. இன்னும் ஒரு ரெண்டு கிலோமீட்டர்ல ஊர் வந்துரும். ஒடம்புல நடுக்கம் வந்தது தெளிவா தெரிஞ்சுது. வண்டில இருக்க மத்தவங்கல்லாம் வேத்தாளு. ரத்த சொந்தம்னா நா ஒருத்தந்தான். எல்லாரும் என்ன கேப்பாங்க, அதுக்கு என்ன சொல்றதுனு மனசுல ஓட ஆரமிச்சுது. மனசு அசதியா சோகமா பாரமா இருந்துது. ஆனா அழுகை வரல. ஒரு மாதிரி மரத்துப்போனாப்ல.
ஊர் எல்லைய தொட்டதும் ரெண்டு யான ஏறி மிதிக்கிறாப்ல மனசு ஆச்சு. ஆம்புலன்ஸ் ஊருக்குள்ள நொழஞ்சதும் எல்லா பார்வையும் வண்டிக்குள்ள தான். உடல் வரதுக்காக ஏற்கனவே எல்லாரும் காத்துட்டிருந்தாங்க போல. வண்டியோடவே சிலர் வேக வேகமா ஓட்டமும் நடையுமா ஓடி வர ஆரமிச்சாங்க. சிலர் சைக்கிள் பைக்குல தொடர்ந்து வர ஆரமிச்சாங்க.
மாமா வீட்டு தெருவுக்குள்ள நொழஞ்சதும் வெளிய அத்தன அரசல் புரசல் சத்தம் கேட்டாலும் மைண்டுக்குள்ள ம்யூட் ஆனாப்ல இருந்துது. தெருவுக்குள்ள கூட்டம் கூடிட்டதால ஆம்புலன்சும் ஊர்ந்துதான் போக ஆரமிச்சுது. அதுக்குள்ள சுத்தி குழுமி இருந்த மக்கள் ஆம்புலன்ச சூழ்ந்து உள்ள எட்டிப்பாக்க ஆரமிச்சிட்டாங்க. எனக்கு சாதாரணமா இருக்க முடியல. அத்தன பேரும் நம்மள பாக்கறப்ப ஒரு மாதிரி இருந்துது. அவங்கள பாக்கறதா இல்ல உள்ள இருக்கவங்கள பாக்கவானு தெரியல. அப்ப எதுவும் பேசவும் முடியாது. நல்ல வேளையா அப்ப தல வலிக்கிறாப்ல இருந்துது. தலைய குனிஞ்சுட்டே கையால நெத்திய அமுக்கிட்டே இருந்தேன். கண்ணையும் மூடிக்கிட்டேன்.
வண்டி போயி மாமா வீட்டு வாசல்ல நின்னதும் இன்னம் கூட்டம் சேந்து தேனீ மாதிரி மொய்க்குது. எல்லாரும் எட்டி குதிச்சுலாம் உள்ள பாக்க ஆரமிச்சிட்டாங்க. உள்ள பெட்டி இல்லன்னதும் சலசலப்பு வேற. டிரைவர் எறங்கி வந்து பின் கதவ தொறந்ததும் அத்தனை முகங்கள் ஆர்வத்தோட எட்டிப்பாத்தத வாழ்நாள்ல மறக்க மாட்டேன். உள்ள எதுவுமே இல்லன்னதும் அவங்க முகத்துல உடனடியா ஒரு ஏமாற்றம். நாங்க எறங்கினதும் மாமாவோட மகன்கள் வந்து முசாபா பண்ணாங்க. டிரைவர் கூட்டத்த வெலக்கி சைடுல தொறந்து பெட்டிய இழுக்கவும் ஏகப்பட்ட கை முன்ன வந்து பெட்டிய வாங்கிக்கிச்சு. பெட்டிய வீட்டுக்குள்ள கொண்டு போனதும் பெண்களோட அழுகை கூக்குரல் ஆரமிச்சுது. எல்லாரும் அழுதாங்க. மாமா பசங்க, சொந்தக்காரங்க, அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க, மாமாவோட ஊர் நண்பர்கள் இப்பிடி எல்லாரும். மய்யத்துக்கு போய்ட்டு வரேன்னு சொல்லிப் போயிட்டு இப்பிடி வந்துருக்காரேனு தான் பெரும்பாலும் அழுகுரல்.
பாடிய வந்து ஒப்படைச்சாச்சுன்னு எதோ ஃபார்ம்ல சைன் வாங்குனாப்டி ஆம்புலன்ஸ் டிரைவர். அப்பறம் அவருக்கு குடுக்க வேண்டிய காச குடுத்தோம். ஐஸ்பெட்டிய மட்டும் திரும்ப ஏத்திக்கிட்டு ஒடனே கெளம்பிட்டார். டீ நாஷ்டா சாப்ட்டு போங்கன்னதுக்கு போற வழியில சாப்டுக்கறோம்னுட்டு கெளம்பிட்டார். எக்ஸ்டா காசோ இல்ல வேற எதும் தொந்தரவோ எதுவுமே குடுக்கல. நல்ல மனுசன் அவரும் அந்த கிலீனரும். அவங்க பேரு கூட என்னனு கேக்கல.
ஜனாசா வீட்டுக்கு வந்துருச்சுன்னு ஊர் பள்ளியில அறிவிப்பு செஞ்சாங்க. ஊர்மக்கள் எல்லாரும் வந்து பாத்துட்டுப் போக ஆரமிச்சாங்க. மாமாவோட பசங்க வந்து என்ன ஆச்சுன்னு கேட்டானுக. அவரோட மூத்த பையனுக்கு கொஞ்சம் மனவளர்ச்சி இல்ல. அவன் சத்தமா கதறி அழுதிட்டிருந்தான். இளையவன் கொஞ்சம் அமைதியான ஆளு. அவன் தான் ஏற்பாடு செஞ்சுட்டிருந்தான். மத்த தாய்மாமாக்கள் வந்தாச்சானு கேட்டேன். வந்துட்டிருக்காங்கனு சொன்னாங்க.
எனக்கு நல்லா வயித்த கலக்க ஆரமிச்சிருச்சு. மாமா வீட்டுக்கு பக்கத்து வீட்ட காலி பண்ணி குடுத்துருந்தாங்க. அங்க போயி உபாதைய கழிச்சுட்டு ஃபோன் சார்ஜ் போட்டேன். ஆன் பண்ணதும் வதவதனு ஏகப்பட்ட மெசேஜ். எதயும் படிக்க தோணல. வீட்டுக்கு மட்டும் கால் பண்ணி அவங்க கெளம்பிட்டாங்கலா என்னனு கேட்டுக்கிட்டேன். இன்னொரு மச்சான் எல்லாரையும் கூப்ட்டுட்டு கார்ல வந்துட்டிருந்தார். அந்த டிரைவருக்கு ரூட்டு தெரியாம போனது ஒரு தனி கத. ஒரு வழியா மதியம் போல வந்து சேந்தாங்க.
பாட்டி கெளம்பிட்டாங்க இன்னும் வந்து சேரலன்னு சொன்னாங்க. பாட்டிகிட்ட இன்னும் எதுவும் சொல்லல, திடீர்னு ஒடம்புக்கு முடியாம போயிருச்சு. ஆஸ்பத்திரியில சேத்துருக்கோம். பாக்க போவோம்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டிருக்காங்கனு தகவல் சொன்னாங்க. அப்பவே ஒரு இடி எறங்குச்சு. முந்தின நாள் தங்கச்சி புருஷன் தவறிருக்கார். வயசானதால அவங்களால மெட்ராஸ் வந்து பாக்க முடியல. அதுவே அவங்க எப்பிடி எடுத்துக்கிட்டாங்கனு தெரியல. இப்ப பெத்த மகன். அதுவும் இவங்க எதுவும் சொல்லாம கூட்டிட்டு வராங்க. தெரிய வரப்ப என்ன நடக்கப்போவுதோனு அடுத்த ப்ரஷர் ஆரமிச்சிருச்சு. இதுல ஒரு மாமா வந்து மாம்மாக்கு நீதான் சொல்லனும். அவங்க வந்ததும் பக்குவமா சொல்லி கூட்டிட்டுப்போவனும்னு சொன்னாங்க.
இதுவரைக்கும் இல்லாத பெரிய இக்கட்டு இது. பாட்டிய எப்பிடி எதிர்கொள்ளப்போறோம்னு பயந்துட்டிருந்தவனுக்கு அவங்களுக்கு நீதான் சொல்லனும், இருக்கறதுலயே நீதான் மூத்த பேரன்னு சொல்லி அவங்களா ஒரு லாஜிக் கண்டுபுடிச்சு என் தலையில கட்டிட்டாங்க. பேசாம நெஞ்சடச்சு நின்னுட்டா இதுலருந்து விடுதலையாகிடலாமேனு தோண ஆரமிச்சுது.
இதுக்கு நடுவுல மறுக்கா ஊர்ல ஒருக்கா குளிப்பாட்டனும்னு ஒரு பிரச்சன ஓடுச்சு. ஆனா மெட்ராஸ்ல குளிக்க வெச்சு கஃபனும் கட்டி நீங்க வெறும் கபர்ல எறக்குனா மட்டும் போதும். வேற எதுவும் செய்ய வேணாம்னு சொல்லி விட்டிருந்தாங்க. அது அவங்களுக்குள்ள அப்பறமா எதோ பேசி ஒத்துக்கிட்டாங்க. எங்க வீட்ல எல்லாரும் வந்ததும் அவ்ளோ சோகத்துலயும் ஒரு ஆறுதலா இருந்துது. அம்மாதான் ரொப அழுகை. ஒரே அண்ணன். புரிஞ்சுக்க முடிஞ்சது. அதே ஊர்ல இருந்தும் அப்பா பாக்க வரல. அது தனியா ஒரு பஞ்சாயத்து ஓடிட்டு இருந்துது.
எனக்கு அப்ப மனசுல இருந்ததுலாம் பாட்டிய எப்பிடி எதிர்கொள்ளப்போறோம்னுதான். ஈரோட்டுலருந்து கெளம்பி வந்துட்டிருந்தாங்க. பாட்டி வந்த வண்டி தெருமுக்குல திரும்புனதும் இதயம் அடிச்ச வேகத்த சொல்லிமாளாது. தெருவுல நொழஞ்சதும் அங்க இருந்த கூட்டமும் வண்டி மெதுவா நகர்ந்ததுமே பாட்டிக்கு ஒரு மாதிரி சேதி சொல்லிருக்கும். வண்டியில வரப்ப முழுக்க என்ன ஆச்சு, எந்த ஆஸ்பத்திரினு கேள்வியா கேட்டுட்டு இருந்துருக்காங்க. அவங்களால நடக்க முடியாது. முடியாதவங்க. எதுக்குமே இப்பிடிலாம் வெளிய போவாதவங்கள இப்பிடி திடீர்னு கார் வச்சு கூட்டிட்டு போறாங்கன்றப்பவே அவங்களுக்கு மணியடிச்சிருக்கக்கூடும். ஆனாலும் மாமாவ எந்த ஆஸ்பத்திரில சேத்துருக்கு, பேச முடியுதாங்குறாப்ல கேள்விகளத்தான் கேட்டுட்டு வந்துருக்காங்க. தம்மகன் உயிரோடதான் இருக்கான்னு அவங்கள அவங்களே தேத்திக்கறதுக்காக கேட்டுக்கிட்ட கேள்வியோன்னு இப்ப தோணுது.
வீட்டு வாசல்ல வந்து வண்டி நின்னதும் அவங்களுக்கு முற்றா புரிஞ்சுருச்சு. எல்லாரும் எறங்கிட்டாங்க. அவங்க எறங்கல. அவங்கட்ட யாரும் எதுவும் சொல்லல. அவங்களே அழுவ ஆரமிச்சுட்டாங்க. நா வண்டிக்குள்ள போயி வாங்க மாம்மா மெதுவா எறங்குங்கன்னேன். இப்பிடி ஆகிருச்சுன்னு சொல்லவே இல்லியே எவனும். ஆஸ்பத்திரியில இருக்கான்னு தான சொல்லிக்கிட்டிருந்தானுக. எம்புள்ள போயிருச்சுங்கறத சொல்லவே இல்லியே எல்லாரும் சேந்து பொய் சொல்லிட்டாங்கனு எதெதோ பேசி பொலம்புறாங்க. அவங்களுக்கு அப்ப ஆத்தாமைய போக்க எதாச்சும் சொல்லி அழுவனும்னு புரிஞ்சுக்க முடிஞ்சது. நா அவங்க பக்கத்துல உக்காந்து சப்ர் செய்யிங்க மாம்மா பொறுமையா எறங்குங்கனு சொல்லிட்டிருந்தேன். அவங்க நா எறங்க மாட்டேன் எம்மவன இப்பிடி பாக்கவா காரு வச்சு ஏமாத்தி கூட்டிட்டு வந்தாய்ங்கன்னு கோவமும் அழுகையுமா அரற்றுனாங்க. என்னய ஏமாத்திட்டாங்க்யனு திரும்பத்திரும்ப சொல்லிட்டிருந்தாங்க. எனக்கு அவங்ககிட்ட நா எதும் சொல்ல தேவை இல்லாம தன்னால நடந்துட்ட சின்ன பெருமூச்சு ஒரு பக்கம் இருந்தாலும் அவங்கள இப்ப என்ன சொல்லி வண்டியில இருந்து எறக்குறதுனு தெரியல. எல்லாவனும் வண்டியச்சுத்தி நின்னு பாத்துட்டிருக்கானுக. அப்ப என்ன தோணுச்சோ, மாம்மா வண்டி தெருவுல நிக்கிது பின்னால நெறய வண்டிக நிக்கிது, நீங்க எறங்குதான்ன டிரைவர் வண்டி எடுக்க முடியும். அவர் வேலைய ஏன் கெடுக்கனும். சப்ர் செய்ங்க எறங்குனனு எதெதோ சொல்லி பத்தரமா எறக்குனேன். தாங்கிப்புடிச்சபடி எறங்குனாங்க. வீட்டுக்குள்ள போனதும் பையன் ஒடம்ப பாத்து மறுக்கா ஓலம். அவங்களப்பாத்து மத்தவங்களும் அழுகை. புதுசா ஒவ்வொருத்தரும் வந்து வந்து பாக்குறப்பயும் அழுகைச்சத்தம் ஏறி ஏறி அடங்குச்சு.
ஒருவழியா மாம்மாவ வீட்டுக்குள்ள விட்டுட்டு நா வெளிய வந்துட்டேன். அடக்க ஏற்பாடுகள்லாம் துரிதமா நடந்துட்டு இருந்துது. நாங்க ரிட்டன் போற ஏற்பாடுகளும் பண்ணிட்டிருந்தேன். அடுத்த நாள் பாத்தியா ஓதிட்டு நைட்டு கெளம்பறதா திட்டம். தத்கல்ல எல்லாருக்கும் டிக்கட் கெடைக்கல. அதனால வீட்ல எல்லாருக்கும் ரயில்ல போட்டுட்டு நா பஸ்ல போட்டுகிட்டேன்.
சாந்திரம் மாமா ஜனாசாவ கொண்டு போக சந்தூக்கு வந்துச்சு. அது வந்ததும் அதப்பாத்து ஒரு மாமா திடீர்னு அழ ஆரமிச்சிட்டார். அண்ணன கொண்டு போக சந்தூக்கு வந்துருச்சு. இனிமே அவ்ளோதான்னு சொல்லி.
சாந்தரம் அசருக்கப்பறம் மாமா உடல் அடக்கம் செய்யப்பட்டுச்சு. கபர்ஸ்தான்ல மாமாவுக்காக மன்னிப்புகள் கேட்கப்பட்டுச்சு. அவர் யார்கிட்டயும் கடன் வாங்கியிருந்தா அத அடைக்கும் பொறுப்ப தான் ஏத்துக்கறதா இன்னொரு மாமா வாக்குறுதி குடுத்தார். அப்பறம் ஊர்மக்கள் எல்லாரும் குடும்பத்தாருக்கு வந்து ஆறுதலும் முசாபாவும் செஞ்சுட்டு கலஞ்சு போனாங்க.
மகரிக்கப்பறம் வீட்ல ஒரு பாத்தியா ஓதுனாங்க. ஊருக்கு வந்த சிலர் கெளம்பினாங்க. நானும் உடன் வந்த மச்சானும் அந்த இன்னொருத்தரும் ரொம்ப அசதியால தூங்கிட்டோம். மறுநாள் மதியம் கத்தம் ஓதி எல்லாருக்கும் விருந்து. அது முடிஞ்சு நைட்டு அவங்கவங்க ஊர் கெளம்பினோம்.
பாட்டி (இப்ப ரொம்ப நார்மலா இருந்தாங்க. எத்தனையோ பாத்தவங்கன்றதால இந்த மனச்சமநிலை வாய்ச்சிருக்கு போல), மாமாவோட மனைவி, பசங்க எல்லாருக்கும் ஆறுதல் சொல்லிட்டு கெளம்பிட்டோம். நான் பாஸ்கிட்ட அன்னைக்கு நைட்டு பஸ்ல வேலை செய்றதா சொல்லி வேலைய ஆரமிச்சிட்டேன்.
ரெண்டு வருசம் கழிச்சு வெளிநாட்டு வேல கெடச்சதும் அந்தக் கம்பனில வேலைய விடுறப்ப ஃபேர்வெல்லுல அந்த மொதலாளிகிட்ட பேசுறப்ப இந்த எமர்ஜன்சி டைம்ல கரிசனத்தோட நடந்ததுக்கு நன்றின்னு சொன்னேன். அது எப்பிடி வேலைக்கு சேந்த ரெண்டு மூனு வாரத்துல இப்பிடி நான் சொன்னதும் எதும் சந்தேகப்படாம எல்லா உதவியும் செஞ்சனு கேட்டேன். அப்பத்தான் பாசும் அவன் ஒஃய்பும் (அந்தம்மாவும் ஃபௌண்டர்தான்.) ஒரு விஷயத்த சொன்னாங்க. உன்கிட்ட ஒரு விஷயம் மறச்சுட்டோம். இது எதுவும் ஜிங்ஸா இல்ல கெட்ட சகுனமானு தெரியல. நம்ம ஆபிஸ்ல வேலைக்கி சேர்ற எல்லாருக்கும் சேந்ததும் எதாச்சும் ஒரு ஆக்சிடெண்ட் ஆகும். டிசைனர் ஒருத்தி வேலைக்கி சேந்த புதுசுல குதிரைலருந்து விழுந்து சில மாசம் ஆஸ்பத்திரியில கெடந்தா. டெவலப்பர் ஒருத்தனுக்கு கார் ஆக்சிடெண்ட் ஆச்சு. இன்னொருத்தனுக்கு ஒடம்பு முடியாமப்போயி அவனும் ஆஸ்பத்திரில கெடந்தான். இது எல்லாமே அவங்க வேலைக்கு சேந்த ஒரு மாசத்துல நடந்தது. இதுக்கெல்லாம் மேல சேல்ஸ் ஹெட்டுன்னு ஒருத்தன் சேந்தான், அவங்க பேமிலி போன (சொந்த) சின்ன ப்லேன் ஆக்சிடெண்ட் ஆகி அவங்க அம்மா ஸ்டெப் ஃபாதர் எல்லாரும் ப்லேன் க்ராஷ்ல எறந்துட்டாங்க. அவன் டிப்ரசாகி வேலைய விட்டே போயிட்டான். இதுவும் அவன் சேந்து ஒரு மாசத்துல நடந்தது. நீ சேந்தப்பவே எனக்கும் என் ஒய்ஃபுக்கும் ஒரு பயம், எதும் ஆகிடுமோன்னு. உங்கிட்ட சொல்லவும் தயக்கமா இருந்துது. ஆனா நாங்க பயந்தமாதிரியே நீயும் ஒரு ஆக்சிடெண்ட் சொன்னதும் எங்களுக்கு தூக்கிவாரிப்போட்டுருச்சு. ஆனா ஒரே நல்லது ஒனக்கு எதுவும் ஆகலன்றதுதான். அதுவே பெரிய நிம்மதி. இத்தன நாளா சொல்ல சந்தர்ப்பம் கெடைக்கல, இப்ப சொன்னாலும் எதும் இல்ல. அதான் சொல்றேன்னான். வாழ்க்கையில மறக்கவே முடியாத அப்பப்ப தொந்தரவு பண்ற நிகழ்வு அந்த மூனு நாளும். எங்கயாச்சும் கொட்டிட்டாலாச்சும் அதுலருந்து வெளியேறிட முடியுமானு பாக்கறேன்.
Comments
Post a Comment
Pass a comment here...