சிறுகுடலைப் பெருங்குடல் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குமளவுப் பசி ராஜிவுக்கு.
தலையும் கிறுகிறுத்தது.
சுட்டெரிக்கும் வெய்யில் சுட்டெரிக்கையிலேயே கண்கள் இருட்டுவதென்றால் என்னவென்று புரிந்தது.
கைகால்கள் தளர்ந்து இருமினால் சுருண்டு விழுந்துவிடும் நிலையில் இருந்தான்.
இதற்குமேலும் தாங்காது எனும் நிலையில் தவழ்ந்தபடி அடுக்களைக்குச் சென்று டிராயரைத் திறந்தான்.
குப்பைகள் குப்பைகள் மேலும் குப்பைகள் என இருக்க, அவற்றுக்கு மத்தியில் ஒரு யம் ரேமன். ஜப்பானிய உடனடி ரேமன்.
அதை எப்படி செய்வது எனும் செய்முறையைப் பார்த்தான்.
தோராயமாகத் தெரிந்தது. அல்லது மங்கலாகத் தெரிந்தது. பசி மயக்கம்.
தனது நுண்ணுணர்வையெல்லாம் கூர் தீட்டி. முதலில் என்ன செய்வது என்று பார்த்தான்.
பின் அடுத்து என்ன போட்டிருக்கிறது என உற்று நோக்க,
அதில் கொதிக்கும் நீரைக் கொட்ட வேண்டுமெனப் போட்டிருந்ததைக் கண்டபோதுதான் நீரைக் கொதிக்க வைக்கவேண்டுமென்பதுவே உரைத்தது அவனுக்கு. பசி வந்தால் பத்திருபது நூறு நூற்றைம்பதும் பறந்து போகும்.
யாரையும் நொந்துகொள்ளத் தெம்பு இல்லாமல், தன் ஓசீடியையும் பொருட்படுத்தாது ஒரு அழுக்கேறிய சட்டியில் தண்ணீர் பிடித்து அதை அடுப்பில் வைத்து கொதிக்கும் வரை காத்திருந்தான்.
ஒரு நூறு நூற்றாண்டு கடந்திருக்கும்.
தன் கொதிப்பைத் தெரிவித்து நீர் கொந்தளிக்கவும், அதை அடுப்பிலிருந்து இறக்கி ரேமனுக்குள் ஊற்றினான்.
பின் பார்த்த கட்டளையில்
டப்பாவின் வாயை மூன்று நிமிடம் அடைக்கச் சொல்லியிருந்தது. ஆனால் ஒட்டாத அவ்வாய் திறந்து திறந்து கொண்டது.
பின் தன் கையாலேயே அந்த வாயைப் பிடித்து மூடிக்கொண்டிருந்தான்.
சுய நினைவை இழக்கும் தருணம் அம்மூன்று நிமிடம் கடந்த பின், அடுத்தென்ன எனப்பார்த்தான்.
கலக்கி எஞ்சாய் பண்ணு என்றதும் தான் எஞ்சாய்மெண்ட்டுக்காக என்னவெல்லாம் செய்வோமென யோசித்தான். நடனம் மட்டுமே நினைவுக்கு வந்தது.
ரேமனை நன்கு கலக்கிவிட்டு நடனம் ஆடத்துவங்கினான். ஆடினான் ஆடினான் ஆடிக்கொண்டே இருந்தான். பசி குறைந்த பாடில்லை. ஒருகட்டத்தில் சக்தியனைத்தும் வடிந்து. மயங்கி விழுந்து மடிந்தே போனான்.
ப்ரிண்ட் செய்தவன் ஸ்டிர், ஈட் அண்ட் எஞ்சாய் என ஒரு வார்த்தை சேர்த்துப்போட்டிருக்கலாம்.
பசி வந்தால் பத்துநூறிருபதும் பறந்ததோடு உயிரும் பறந்தது.
Comments
Post a Comment
Pass a comment here...