மாடர்ன் கேப்

 அவ்வூரை டவுன் எனச்சொன்னால் டவுன்கள் கோபித்துக்கொள்ளும். கிராமம் எனச் சொன்னால் அவ்வூரே கோபித்துக்கொள்ளும். இப்படி இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு ஊர். இலக்கணச் சுத்தமாக, ஓர் ஊர். 

பத்திரிகைகளிலும் செய்திகளிலும் வரவே வராத சில ஊர்கள் இருக்குமல்லவா? ஊடக வெளிச்சம் மறைக்கப்பட்டதால் அல்ல, குறிப்பிடத்தகுந்த எந்த நிகழ்வுமே நிகழாததால். அப்பேர்ப்பட்ட ஊரது. 


அண்மையில் அரும்பு மீசை விடத்துவங்கியவர்கள், அம்மீசையையே தங்களுக்கு முளைத்த சிறகாகக் கருதிச் செய்யும் முதல் தாக்குதலேஇதையல்லாம் ஊர்னு இழுத்து சொல்லாதிங்கடா, வேணும்னா உர்னு சுருக்கமா சொல்லிக்கோங்கஎன்பது தான். 


அத்தனை வசவுகளையும் பழிப்புரைகளையும் வாங்கிக்கொண்டு(ம்), தன்பாட்டுக்கு யார் வம்புக்கும் போகாமல் தேமேயெனக் கிடக்கும் அவ்வூர்.

சிறிது வசதி வாய்ப்புகள் வந்ததும் அதுவரை கும்பிட்டு வந்த குலசாமியைச் சற்று ஓரம்கட்டிவிட்டு posh-ஆன பாபாக்களுக்கு மிடில்க்ளாஸ்கள் மாறுவதுபோல, அவ்வூரில் கொஞ்சம் வளர்ந்ததும் மக்கள் செய்யும் முதல் காரியம் அவ்வூரைக் காலி செய்துவிட்டு கிளம்புவது.


அந்த ஊரின் லேண்ட்மார்க்குகள் எனச்சொன்னால் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த ஐயோபி என அழைக்கப்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. அதை விட்டால் தபால் அலுவலகம். அதைத் தபாலாபீஸ் எனவும், படிப்பு வாய்க்கப்பெற்றோர் போஸ்ட்டாப்பீஸ் எனவும் அழைப்பர். குறிக்க, போஸ்ட்டாப்பீஸ் என ஒற்றைச் சொல் தான், போஸ்ட் ஆபீஸ் அல்ல. Unopposed அன்னப்-போஸ்ட் என அழைப்பார்களல்லவா, அது போல.

அவர் ரொம்ப ஜோக் பண்ற ஆளுப்பாஎன அழைக்கப்பட்ட சிலர், “அதுக்கு ஏன் தபால்னு பேரு வந்துது தெரியுமா? அது தபால்னு வந்து உயரதாலஎனக்கூறி சுற்றி இருக்கும் நபர்களைச் சிரிக்க வைத்து மகிழ்வர். இங்கே விவரிக்கப்படும் காலக்கட்டம் எண்பதுகள் என்பதை நீங்கள் உணர்ந்தால் அஜ்ஜோக் தாத்தாக்களின் நகைச்சுவை நயத்தை உங்களால் புரிந்துகொள்ளவியலும்.

ஊரின் சுற்றுவட்டம்

லேண்ட்மார்க்குகள்

மக்களின் மனப்போக்குகள்

ப்ரியப்பெரியவர்களின் காமடி சென்சுகள்

சொல்லவேண்டிய அத்தனையும் ஆச்சா?
ஆம்.

இவையனைத்தும் premiseசே. இந்தக் கதை துவங்குவது அவ்வூரில் இருக்கும் பஸ்டாண்டில் இருந்த ஒரு ஓட்டலில். துவங்குவது என்பதுகூடச் சரியாக இராது. பற்றியது எனக்கூறுவதே ✅.

மாடர்ன் கேப் என பெயர்சூட்டப்பட்டு, அவ்வாறே அழைக்கப்பட்ட ஓட்டல். 

அக்காலத்தில் இருந்த ஒரு வழமை, பிற்காலத்தில் ஒரு எவல்யூசனை அடைந்தது. அது, ஓட்டல்களை ரெஸ்டாரண்ட் என அழைப்பது. கிறிஸ்துவுக்குப் பின்னான இரண்டாயிரம் ஆண்டு வரையில், பொதுவாகவே உண்ணுமிடமென்றால் அது ஓட்டல்தான். தங்குமிடமென்றால் லாட்ஜு. 


ரெஸ்டாரண்ட் எனும் சொல்லே மக்களராதியில் இல்லை. அது எப்போது புழக்கத்தில் வந்தது, மேலும் ஓட்டல் எனச் சொன்னால் மெலிதான கேலிமுறுவலோடு அதை ரெஸ்டாரண்ட் எனத் திருத்தும் அடாசிட்டி எல்லாம் எப்போது முளைத்தது என்பது நிச்சயம் ஆயப்படவேண்டிய ஒன்று. 


(ஊருக்குள் இருந்தால் ஓட்டல், ஊருக்குப்போகும் வழியில் இருந்தால் மோட்டல் - இது ரீடர்ஸ் டைஜஸ்டில் படித்ததாகச் சிலர் சொல்லிக்கொள்வதுண்டு.)


இப்படி அவ்வூர் ஓட்டல்களை, ஓட்டல் என்றே ராவாக (மில்ட்ரி ஓட்டல், அன்னபூர்ணா ஓட்டல்) அழைத்து வந்த மக்கள், ‘மாடர்ன் கேப்பைமட்டும்மாடன் கேப்என்றே அழைத்தனர். மாடன்கேப் ஓட்டலென்பதெல்லாம் இல்லை. 

இத்தனைக்கும் ஓட்டலின் முகப்பில், அதன் நெற்றிச் சுவரில் அடர் நீலநிற பெய்ண்ட் அடிக்கப்பட்டு, அதில் வெள்ளையும் கருப்புமாய்ச் சேர்ந்த மகாப்பெரிய 3D எழுத்துக்களில் ஓட்டல் மாடர்ன் கேப் என எழுதப்பட்டிருக்கும். இதில் ஓட்டல் என்பது 2Dயில் மிகுந்த ஒல்லியாகவும், மாடர்ன் கேப் என்பது மிகவும் பருமனாகவும் இருக்கும். எழுத்தின் முகம் வெண்மையாகவும் அதன் நிழல் கருப்பிலும் தெரியும்.

ஏன் இத்தனை விவரிப்பென்றால், ஏனைய ஓட்டல்களை ஓட்டல் ஓட்டல் என்றே பழக்கப்பட்ட மக்கள், ஓட்டல் மாடர்ன் கேப்பை மட்டும் ஓட்டல் தவிர்த்து மாடன்கேப் என்றே அழைத்தது ஓர் ஆச்சரியமே. (கேபில்டிவியை சன்டிவி என்று அழைத்த கூட்டம்.)

ஓட்டல் ஓட்டல் என்றதும் நினைவுக்கு வருகிறது. துடுக்குத்தன விடலைகள் எல்லாக் காலத்திலும் இருக்குமல்லவா? அவற்றில் சில, ஓட்டல் பற்றியும் தங்கள் நகைச்சுவைத் தமிழ்த்திறனை பறைசாற்றியும் "ஆட்டல் ஆட்டல் மாவாட்டல் அவ்வாட்டல் ஓட்டலில் ஆட்டப் படும்" என ஜோக்குறள் சொல்லிச் சிரிப்பது அந்தக் காலத்தில் மிகவும் பேமஸ். இதை ஓரிடத்தில் கேட்ட பீட்டாவகை விடலைகள் தங்கள் சுற்றத்தில் இதை ரீரிலீஸ் எனப்படும் மறுபதிப்புச் செய்து சிரித்து மகிழ்வர். அங்கே மகிழ்ச்சி புரண்டோடும். இதல்லாம் ஒரு ஜோக்காடா எனத்தோன்றுவோர் காலக்கட்டத்தை மீண்டுமொருமுறை நினைவுபடுத்திக் கொள்க. 


"ஸ்சாஆஆஆஅர்" என இழுத்து முழக்கிப்பேசும் கிரிஞ்சுக்குவியல் விசுவின் அரட்டை அரங்கமேகூட ஆரம்பிக்கப்படாத காலகட்டம். அவ்வளவு ஏன், செகண்ட் சேனல் என அழைக்கப்பட்ட டிடி மெட்ரோ கூட அப்போது இல்லை.

அவ்வூரின் சுற்றுப்பட்டில் ஏகப்பட்ட கிராமங்கள் இருந்தன. அங்கே செல்ல அரசு டவுன் பஸ்ஸுகளும் தனியார் பஸ்ஸுகளும் (ப்ரேட் பஸ்) வரும். இது தவிர, மெட்ராசுக்குச் செல்லும் 2 பேருந்துகள். அடடே! இத்தனைப் பேருந்துகளா என ஆச்சரியப்படவேண்டாம். 


காலை ஏழு மணிக்கு ஒரு திசையிலிருக்கும் கிராமங்களையெல்லாம் கவர் செய்து அடுத்த டவுனுக்குச் செல்லும் டவுன் பஸ் ஒன்று. 

ஒன்பது மணிக்கு மெட்ராசுக்குச் செல்லும் ஜே சர்வீஸ் என (ஆம் அவர் வைத்துக்கொண்டதுதான்) அழைக்கப்படும் பஸ்.


பிறகு பத்து மணிக்கு ஒரு பிரேட் பஸ்ஏழு மணிக்குப் புறப்பட்ட டௌன் பஸ் பதினொன்றுக்குத் திரும்பும். மீண்டும் பனிரெண்டுக்குப் புறப்படும். 


இரண்டு மணிக்கு ஒரு மெட்ராஸ் பஸ். மெட்ராஸ் என்பதை Met-Raas என சிலர் வாசிக்கக்கூடும்.  அதை அவ்வூரார் Me(d)raas என அழைப்பர். டி குறில் கூட அல்ல, சப்டில் (subtle). சிலர் வேகமாகக் கூறுவது மெராஸ்
பஸ் எனக் கேட்கும். ட் சைலண்ட்டாகி விடும்.

காலை ஒன்பது மணிக்கு ஒரு பஸ் மெராசுக்குப் புறப்பட்டதல்லவா? அது மாலை நான்கு மணிபோலத் திரும்பும். சில சமயம் ஐந்து கூட ஆகும். இடையில் பல ஊர் தொட்டுச் செல்வதாலும் வருவதாலும் அது புறப்படும் நேரம் மட்டுமே கணக்கு. எப்போது சேரும் என்பதெல்லாம் அன்றன்றைய ராசிபலன் பொறுத்தது.

இதற்கிடையில் டௌன் பஸ் நான்கு மணிக்குத் திரும்பி, நான்கரைக்கெல்லாம் புறப்பட்டுவிடும். அதில் பெரும்பாலும் நிறைந்திருப்பது அக்கம்பக்கத்திலிருந்து பள்ளிக்கு வரும் கிராம மாணவர்கள். காலையில் அவர்கள் எப்படிப் பள்ளிக்கு வருவார்கள் என்பது இப்போது வரை தெரியவில்லை. பள்ளிக்குத் தோதான நேரத்தில் காலையில் பஸ் எதுவும் வந்ததாகவும் நினைவில்லை. ஆகவே அவர்கள் பள்ளிக்கு வந்தால் ஏழு மணி டவுன் பஸ்ஸில்தான் வந்தாக வேண்டும். அல்லது நடை. அதிர்ஷ்டமிருந்தால் மாட்டு வண்டிகளும் டிராக்டர்களும். பெரும்பாலும் நடைதான். (பஸ் பாஸ் இல்லாத காலம், ஆட்சி)

நான்கரை டவுன் பஸ் புறப்பட்டதா? ஐந்து மணிக்கு ஒரு ப்ரேட் பஸ். அதை சுந்தரம் பஸ் என்றும் சொல்லுவர். நட்ட மத்தியானத்தில் ஒரு பாரதி பஸ்ஸும் உண்டு. இதை விட்டால் ஏழு மணிக்கு மீண்டும் டவுன்பஸ், அடுத்து எட்டரைக்கோ ஒன்பதுக்கோ மதியம் மெட்ராஸ் சென்ற பஸ் ஊர் திரும்புகின்ற வேளை, ஊரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான என்றதும் பெருமளவிலான கடைகள் கொண்ட ஊர் என நினைத்துவிடவேண்டாம். முப்பது கடை இருந்து அதில் பதினைந்து கடைகள் அடைக்கப்பட்டாலே அந்தக் கணிதம் பெரும்பால் தானே?

காலை ஒன்பது பஸ்ஸில் மெட்ராசுக்குச் சரக்குப் போடச் செல்லும் வியாபாரிகள் இரவு ஒன்பது பஸ்ஸில் முழுச் சரக்குப் பண்டலோடு, அல்லது லாரிலோடில் ஆர்டர் கொடுத்த மிச்சம் போக, சிறிய பண்டல்களோடு ஊர் திரும்புவர். அத்தோடு ஊர் அடங்கும்.

யார் வகுத்த திட்டமோ, நாள் முழுக்க, சரிவிகித சமானத்தில் பஸ்டாண்டுக்கு பஸ்ஸுகள் வந்தபடியும் போனபடியும் இருக்கும். இருப்பதென்னவோ ஒற்றைப்படை பஸ்கள்தான் எனினும், குறைந்தது இரண்டு டிரிப்படிப்பதால் நாள் முழுக்க பஸ்கள் இருந்ததுபோன்ற ஒரு தோற்றமயக்கம் தோன்றும். “நம்பூர் பஸ்டாண்டாண்ட எந்தட்டைம் போனாலும் ஒரு பஸ்ஸு நிக்கும்என்பது ஊரார்களின் சிற்சில தற்பெருமைகளில் ஒன்று. அது ஒருவகையில் உண்மையும் தான். எப்போதும் அங்கே ஒரு பஸ் தான் நிற்கும். இடப்பற்றாக்குறை என்றெல்லாம் இல்லை. அந்த ரூட்டின் சத்து, அல்லது அவ்வூர் மொழியிலேயே சொல்வதானால் பொழிசு அவ்வளவுதான்.

மக்கள் வரப்போக இருக்கும் கூட்டத்தை ஃப்லோட்டிங் க்ரௌடு என்பர். கிளாம்பாக்கம், டூரிஸ்ட்டு ஏரியாக்கள், முக்கிய சந்திப்புகள், பஸ்டாண்டுகள் ஆகியவற்றில் இந்தக் கூட்டம் அதிகம். ஃப்லோட்டிங் க்ரௌடின் ஒரு தலையாய தன்மை, பெரும்பாலும் புதிய தலைக்கட்டுகளையே பார்ப்பது. ரிபீட் கஸ்டமர் எனும் அமைப்பு அங்கே இருக்காது. ஆனால் இவ்வூர் பஸ்டாண்டில் இருப்பது ஃப்லோட்டிங் க்ரௌட் என்றாலுமே அது ஒரு ஸ்டேக்னண்ட் ஃபுலோ. க்ரௌடுதான்.

ஏகப்பெரும்பாலும் அதே கூட்டம். அதே உழவாளி, அதே மேஸ்திரி, அதே கூலித்தொழிலாளர், அதே பள்ளிச்சிறார். மிஞ்சிப்போனால் இருபது சதவிகிதம் புதிய தலைகள் இருக்கும். அதுகூட ஜாத்திரைகள், பண்டிகைகள், விதை/அறுப்புப்பருவம் போன்ற காலங்களில்தான். இல்லாவிட்டால் அதே தலைகளும் மொட்டைகளும்தான். திருப்பதியும் திருத்தணியும் அருகிலிருந்ததால் மொட்டைகளை அங்கே அடிக்கடிக் காணலாம்.

இப்படி இந்தக்கூட்டத்தை நம்பித்தான் மாடன்கேப் இயங்கி வந்தது. அப்போதெல்லாம் ஓட்டலில் சாப்பிடுவது என்பதே ஒரு சிறப்புநாள் செயல்பாடு. வீட்டு மகளிருக்கு உடல்நோய்ப்பட்டாலோ அல்லது வீட்டுத்தலைவர் வீட்டு மகளிரிடம் கோபித்துக்கொண்டாலோதான் ஓட்டல் சாப்பாடு. ‘ஓட்டலுக்குப்போய் சாப்டுவேன்என்பதை MCP ஆண்கள் ஒரு ப்லாக்மெய்லாகவே பயன்படுத்திய காலமது. 

இத்தனைக்கு மத்தியில் மாடர்ன் கேப் வெற்றிகரமாக இயங்கிவந்தது. சொல்ல மறந்துவிட்டேன், பஜார் ரோடு, பஸ்டாண்டு இதை இரண்டுக்கும் மத்தியஸ்தமாக பஸ்டாண்டு கட்டிடம். அதில் டீக்கடை, பொதுக்கழிப்பிடம், எஸ்டீடி பூத், வெற்றிலைபாக்குக்கடை, பூக்கடை, ரோஸ்மில்க் உட்பட்ட பங்க் கடை மற்றும் மாடர்ன் கேப். இதில் வெற்றிலைபாக்கும் பூவும் கடைகளல்ல, நபர்கள். இரண்டுக்கும் இன்ஃப்ரா ஒன்றுதான், இரண்டு நபர்கள், வெற்றிலைக்கு ஆண், பூவுக்குப் பெண், ஒரு மர ஸ்டூல், இரண்டு அகலக்கூடைகள். வட்டக்கிணற்றின் படிக்கட்டுகள் போல வெற்றிலைகள் சுழற்சியாக அடுக்கப்பட்டிருக்கும். வெள்ளை மலைப்பாம்பு சுருண்டு படுத்திருப்பதுபோல் மல்லிப்பூச்சரம் பூக்கூடைக்குள். அவ்வப்போது அதில் நீர் தெளிக்க, தலை சீவப்பட்ட வெள்ளைநிற எஞ்சின் ஆயில் கேன். மாடர்ன் கேபுக்கு இரண்டு வாயில்கள். ஒன்று பஜார் ரோடுப்பக்கம், மற்றொன்று பஸ்டாண்டிலிருக்கும். ஒரு முகப்பில் தமிழில் மாடர்ன் கேப் என்றும் மறுபுறத்தில் Modern Cafe என்றும் பிரம்மாண்டமாக எழுதப்பட்டிருக்கும்.

மாடர்ன் கேப் எப்போதும் கூட்டமாகவே இருக்கும் எனக் கூறிவிடமுடியாது. ஆனால் அது காலியாக இருந்து பார்த்ததேயில்லை. அக்கம்பக்க கிராமங்களிலிருந்தும் டவுன்களிலிருந்தும் மெராசுக்குச் செல்வோர் இவ்வூரின் வழியே சென்றாலும், இன்னபிற விவசாயக்கிராம, டவுன்களுக்குச் சென்றாலும் பஸ்டாண்ட் வழி செல்வதுவே அவர்களுக்கு சீட் கிடைக்க தோது என்பதால் மாடர்ன் கேப்பில் கூட்டமிருக்கும்.

பஸ்டாண்டிலிருந்து புறப்படும் எந்த பஸ்ஸிலும் ஒரு சீட்டு கூட மிச்சமிருக்காது, சொல்லப்போனால் படிக்கட்டு வரை நிரம்பியே செல்லும் என்பதை முந்தின பத்தியொன்றில் படித்ததாக எண்ணிக்கொள்ளுங்கள்.

மாடர்ன்கேப் அதன் மாடர்னான பெயருக்காக மட்டுமின்றி வேறு சில காரணங்களுக்காகவும் புகழ் பெற்றிருந்தது. அங்கே எல்லாமே அன்லிமிட்டட்தான். அன்லிமிட்டில் மீல்ஸ்தானே கேள்விப்பட்டிருக்கிறோம்? அங்கே டிப்பனின் சாம்பார் சட்னியில் கூட அன்லிமிட். இதிலென்ன பிரம்மாதம்? இதுகூட நிறைய ஓட்டல்களிலுண்டே என நீங்கள் எண்ணலாம். அங்குதான் கேட்ச்.

அப்போதெல்லாம் ஓட்டலில் சாப்பாடு வாங்கச் சென்றால் இப்போதுபோல வெறுங்கையில் மணியை ஆட்டிக்கொண்டு செல்லமாட்டர் பொதுமக்கள்.

பார்சல் வாங்க ஒரு பை (அல்லது ஒயர்கூடை), சட்னி சாம்பாருக்கு தனி டிப்பன் பாக்ஸ் அல்லது தூக்குச்சட்டி. பார்சல் கட்டும் இடத்தில் தையலிலையில் இட்லி தோசை முதலியவைகள் கட்டப்படும், கொஞ்சம் பெரிய ஓட்டலென்றால் பேப்பரின்மேல் தையலிலை, அதன்மேல் சாப்பாடு. தூக்கையும் டப்பாவையும் கொடுத்தால் அதில் சாம்பார் சட்னி ஊற்றப்படும். சாப்பாடு வாங்கச்சென்றது வாண்டுகள் என்றால் தூக்குவாளியை இறுக மூடி, நல்லாப்புடிச்சுக்கோ போற வழில கீழ கொட்டிடாத என்ற அக்கறை எச்சரிக்கையும் தரப்படும்.

[

ஒரு நகைச்சுவைக் காட்சி: "சாப்பாடு பார்சல கீழ கொட்டிடமாட்டல்ல?" - கட்டிக்கொடுப்பவர்.

"
மாட்டேன்" - வாண்டு

"
சாப்பாட தலகீழ கொட்னா என்ன ஆகும்?"

"
ங்ங் மண்ணாகிடும்."

"
இல்ல, டுபாப்சா ஆகிடும் ஹஹாஹ்ஹாஆ"
]


இப்படி இருந்த காலங்கள், இன்றோ அத்தனையத்தன்னையும் ப்லாஸ்டிக். அத்தனைக்கத்தனைக்கும் ப்லாஸ்டிக். உணவு, இசை, காதல் அத்தனையும் ப்லாஸ்டிக். ச்சைக் மற்றும் Sigh.

மாடர்ன் கேப்பின் கேட்ச் என்னவென்றால், பார்சல் வாங்கிக்கொள்ளப்போனால், அதற்கும்கூட அன்லிமிட் சட்னி சாம்பார் கொடுப்பதுதான். இரண்டு இட்லி வாங்கிக்கொண்டு இரண்டு மூன்று தூக்குவாளிகள் கொடுத்தால் அது நிறைய சாம்பார்சட்னி ஊற்றிக்கொடுப்பார்கள். எல்லா டேபில்களிலும் சாம்பார் சட்னி வாளிகள் எப்போதுமிருக்கும். எவ்வளவு வேண்டுமோ ஊற்றிக்கொள்ளலாம். அதே சமயம், ஓசிக்குக் கொடுப்பதால் தரமோ ருசியோ குறையில்லை.

இப்படி ஒரு ஆஃபர் இருந்தால் இன்று வ்லாகர்களும் க்ராமர்களும் எடுக்கும் படையில் செங்கிஸ்கண்ணன் தோற்றுவிடுவானல்லவா? அன்று அப்படியெல்லாம் இல்லை. தேவையிருப்பவர்கள் மட்டும் சென்று வாங்கிக்கொள்வர். இன்னுமொருபடி மேலே சொல்வதானால், ஐந்து ரூபாய்க்கு வெறும் சாம்பார் மட்டும் கேட்டு வரும் வாண்டுகளுக்கு இரண்டு இட்லியும் கெட்டிச்சட்னியும் (தையலிலை) கட்டிக்கொடுக்கும் மனத்தாராளம் மாடர்ன்கேப் முதலாளிக்கு இருந்தது.

முதலாளியின் மகன் டில்லிக்குச் சென்று படித்துவிட்டுத் திரும்புவதாக ஒரு செய்தி வந்தது. முதலில் அம்மகன் டில்லியில்தான் படித்தாரா என்பது சந்தேகமே. வடக்கில் ஒரு பெரிய கல்லூரியில் படிக்கிறான் என்பது உண்மை, ஆனால் அது எந்த ஊர் எனச் சரியாகத் தெரியாததால் டில்லி என ஒருமித்த முடிவுக்கு வந்தனர் இதுகுறித்து பேசுபவர்கள். அதே போல என்ன படித்தார் என்பதுவும். ஓட்லுக்கு படிக்கிறாம்ப்பா எனச் சிலரும் யேபாரம் பத்தி பட்ச்சிதாம்ப்பா எனச் சிலரும் ஆக மொத்தம் வணிகம் சம்மந்தப்பட்ட ஒன்று என்ற அடுத்த ஒருமித்து. ஒருசிலர் அந்தப்பையன் அமெரிக்கால படிக்கிறானாம்ப்பா என்று கூடப் பேசுவதுண்டு.

இதுதான் விதியா அல்லது கதைக்கு இசைவாக இருப்பதற்காகவா தெரியவில்லை, முதலாளி திடீரென ஒருநாள் இறந்துபோனார். திடீரென. அதிகாலையில். வீட்டில். படுக்கையிலேயே. அதிக தொலைத் தொடர்புகள் இல்லாத காலத்திலேயே எப்படித் அத்தகவல் அனைவருக்கும் பரவியது எனத் தெரியவில்லை. ஊர் முழுக்க இந்தச் செய்தி பேசப்பட்டது. அவருடலுக்கு மரியாதை செய்துவிட்டு வந்து ஏனைய வியாபாரிகள் கடையை அன்று தாமதமாகவே திறந்தனர். மற்ற ஓட்டல்காரர்கள் பாதிக்கதவு மூடியும் ஷட்டரை பாதி இழுத்துவிட்டும் எஞ்சியிருந்த கதவிடுக்கு வழியே அன்றைய வியாபாரத்தைத் தொடர்ந்தனர். மரியாதைக்கு மரியாதையும் ஆகிற்று, ஏற்கனவே செய்துவைத்த பண்டங்கள் வீணாகாத மாதிரியும்.

அவர் மகன் வந்து சேர இரண்டு நாட்கள் ஆனன. “அமெரிக்காலருந்து அவ்ளோ தொலோலந்து வர்துக்கு லேட்டாகும்ப்பாஎனவும்டெல்லிலருந்து ட்ரெய்ன்ல வரவாணாவா?” என ஒரு பிரிவும் மகனின் துவக்க ஸ்டேசன் குறித்து இருபிரிவாகப் பிரிந்து விவாதித்துக்கொண்டிருந்தனர். இழவு இன்னும் எடுக்காத வீட்டில் வேறு என்னதான் பேசி நேரநகர்வைச் செய்ய முடியும்? அவர்களைச் சொல்லக் குற்றமேதும் இல்லை.

மகன் வந்ததும் இரண்டுநாளாய் ஓய்ந்திருந்த அழுகையொலி மீண்டுமொருமுறை எழுந்து அமைந்தது. வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்ததில் இறுதி ஊர்வலம் துவங்க, அவரின் உடல் பஜார்வழியே மாடர்ன்கேப்பைக் கடந்து எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது மரியாதை நிமித்தம் பஜார் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஊர்வலத்தில் வியாபாரிகளும் கலந்துகொண்டனர்.
அதுநாள் வரை ஞாயிற்றுக் கிழமைகளில் கூட விடுமுறை விடப்படாத மாடர்ன்கேப் மூன்று நாட்கள் அடைத்துக் கிடந்தது.


நான்காம் நாள் அதிகாலையில் கடை திறக்கப்பட்டது. மகன் கல்லாப்பெட்டியில். பதினாறாம் காரியம் முடிந்தபின் கடையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார் மகன். கடை முழுவதும் வெள்ளையடிப்பதில் (மஞ்சள் பெய்ண்ட்) துவங்கியது அது.

அதுகாறும், சுவர்கள் கொண்டிருந்த வெண்பெய்ண்ட்டுகள் மங்கிப்போய் ஒரு சோம்பேறிக்குணத்தைக் கொண்டிருந்த நிலை புதுப்பெய்ண்ட்டடித்ததும் பளிச்சென்று சுறுசுறுப்பானது.

"
பரவால்லபா பஷ்ட்ட்டு வந்ததுலாம் வேஷ்ட்டாவல. பையன் தொழில சுகுர்ரா புட்ச்சுகினாப்போல"


கடைக்கு உள்ளேயும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பார்சலோ அங்கு உண்ணவோ, எல்லாமே இனி செல்ப் சர்வீஸ்தான். முன்னரே பில் வாங்கிக்கொண்டு அதைக் கொண்டுபோய் கட்டுமிடத்தில் நீட்டினால் அவர்கள் சாப்பிடவா பார்சலா எனக்கேட்டு, பார்சலென்றால் தையலிலும் சாப்பிடவென்றால் தட்டிலும் போட்டுக் கொடுத்தனர்.

டேபில்கள் அமர்ந்து உண்ண மட்டும். குவளைகள் தவிர்த்து மீதி அனைத்தும் நீக்கப்பட்டன. சாம்பார் சட்னி வாளிகள் மட்டுமின்றி தண்ணீர் ஜக்குகள் கூட. காலியாகும் டேபில்களை உடனே துடைக்கவும் கேட்பவருக்கு தண்ணீர் ஊற்றவும் மட்டும் சர்வீஸுக்கு ஒரு சப்ளையர்.

அங்கு சாப்பிட வாங்கினாலும் அளவு சாம்பார்தான். பிறகு அழுந்தக் கேட்டால் மட்டும் கொஞ்சமாகக் கொண்டுவந்து தரப்பட்டது. அதுவும் சட்னி கேட்டால் சட்னி. சாம்பார் கேட்டால் சாம்பார்.

உணவு.பரிமாறலுக்கான வாழை இலைகள் நீக்கப்பட்டு ஸ்டீல் ப்லேட்டுகள் வந்தன. ப்லேட்டுகளிலும் குவளை ஜக்குகளிலும் MC திருடப்பட்டது எனவும் பொறிக்கப்பட்டது. 

மேலும் உணவு உண்ட தட்டை அவர்களே கழுவுமிடத்தில் போட்டுவிட்டு பேசினுக்குச் சென்று கைகழுவிக்கொள்ள வேண்டும். பேசினில் முன்பு ரின் சோப்பு இருக்கும், தற்போது வாசனையாக வேறொரு வெள்ளைச்சோப்பு.

பளிச் சுவர்கள், புதிய பளபள ப்லேட்டுகள் எல்லாம் வந்தும் நாளடைவில் கூட்டம் குறையத் துவங்கியது.

ஓட்டலின் வேலை நேரம் காலையிலும் இரவிலும் தலா ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டும் தொடர்ந்து வியாபாரம் படுத்து ஒரு கட்டத்தில் ஓட்டல் மூடவே பட்டது.

அத்தனை பேர்களின் விருப்பமான அந்த ஓட்டல் ஏன் மூடப்பட்டது என வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் நினைத்துப்பார்ப்பதுண்டு. ஒவ்வொரு காரணரத்தையும் பகுத்துப் பார்த்து இதுவா அதுவா இப்படி இருக்குமா ஒருவேளை அப்படி? என க்லோஷர் கிடைக்காத உறவு போல அதைப்பற்றி அடிக்கடி யோசிப்பதுண்டு.

ஓட்டல் முழுவதும் பெய்ண்டிங் வேலை நடந்ததல்லவா, அப்போது ஓட்டலின் பெயர் மாடர்ன் கேப்பிலிருந்துமாடர்ன் கஃபேஎனவும் அவர் மகனால் மாற்றப்பட்டது. கஃபே தான் சரியாம்.கேப் இல்லையாம்.

அந்த ஓட்டல் ஏன் நட்டமடைந்து மூடப்பட்டது என ஒவ்வொருவருக்கும் பல காரணங்கள் உண்டு. ஆனால் என்னைக்கேட்டால் அந்த ஓனர் மகன் ஓட்டல் பெயரை மாற்றியிருக்கக்கூடாது. ஓட்டல் வீழ அதுவே முதற் மற்றும் முக்கியக்காரணி என்பது என் தீர்க்கமான முடிவு.


Comments