2024 AD. அல்லது BC. எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.
*****
[அன்று]
சிலபல நாட்களாகவே தன் மனத்தை அரித்துக்கொண்டிருந்த ஒன்றை, தயங்கித் தயங்கி அன்று வகுப்பில் மதிய இடைவேளையின்போது அர்ஜூனிடம் கேட்டே விட்டான் கலைவாணன்.“அர்ஜூன் நீ ட்ரோன் ரேசுக்காக ஒரு அகாடமி போறல்ல, எனக்கு அங்க சேர சான்ஸ் கெடைக்குமா?”
“டேய், நீ ட்ரோன்லாம் fly பண்ணுவியா? இத்தன நாள் சொல்லவே இல்ல, எங்க கத்துக்கிட்ட?”
“இல்லடா, எங்க ஏரியா ஃபோட்டோக்ராபர் அண்ணன் ஒருத்தருக்கு வ்லாக் எடுக்க, மேரேஜ் ஃபங்ஷன்ஸுனு ஹெல்ப் பண்ண போவேன். அப்ப தான் அவரோட ட்ரோன் ஆப்பரேட் பண்ண கத்துக்கிட்டேன். போகப்போக கொஞ்ச நாள்ல அது மேல ரொம்ப craze ஆகிடுச்சு. அந்த அண்ணாவும் நெறய ஹெல்ப் பண்ணாரு. அவர்தான் drone racing league பத்தியும் அகாடமி பத்தியும் சொன்னாரு. இப்ப நான் பார்ட் டைமா வேலைக்கு போறதுலாம் கூட ரேஸ்ல கலந்துக்க நல்ல ட்ரோன் வாங்கறதுக்குதான். என்னதான் ட்ரோன் ஆப்பரேட் பண்ண தெரிஞ்சாலும் இண்டிவிஜுவல்சால ரேஸ்ல கலந்துக்க முடியாதுல்ல. ரேசுக்கு போகணும்னா அது அகாடமி வழியாதான் போகமுடியும்னு ரூல்ஸ் இருக்குல. அதான் உன் கிட்ட கேக்கணும்னு ரொம்ப நாளாவே தோணிட்டிருக்கு. அதே சமயம் உன் அகாடமில சேந்து உன் கூடவே ரேசுக்கு வந்தா வேணும்னே ஒனக்கு போட்டியா நா வரேன்னு நெனச்சிடுவியோனு தான் கேக்க தயக்கமாருந்துது.” மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்குள் அப்போது புழங்கிய ஒரு புதிய கெட்ட வார்த்தையால் அவனைத் திட்டி, “டேய் ச்சே, நான் எப்பிடி மச்சி ஒன்ன அந்த மாதிரி நெனப்பேன்? சப்போஸ் ரெண்டு பேர்ல ஒருத்தர்தான் போக முடியும்னா அது யார் நல்லா ட்ரோன் பறக்க விடுறாங்களோ அவங்க போகட்டும். இல்லனா அகாடமி யார சொல்லுதோ அவங்க போகட்டும். என்னப்போய் இப்டி நெனச்சிட்டியேடா.”
“சாரிடா. நீ தப்பா நெனைப்பன்னு சொல்லல, கேக்கறதுக்கு எனக்கு ஒரு தயக்கம். சாரிடா.”
“சரி விடு மச்சி, அட்லீஸ்ட் இப்பயாச்சும் ஒடைச்சு பேசினியே. எண்ட்ட சொல்லிட்டல்ல, டோண்ட் ஒர்ரீ, நா எங்க ட்ரோன் மாஸ்டர் கிட்ட சொல்றேன் உன் அட்மிஷனுக்கு. மாஸ்டர் செம்ம டைப். நமக்கு அவர்கூட செம்ம சிங்க். கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவார்.”
* * * *
[சில வருடங்களுக்கு முன்]
பள்ளிக்கூடத்தில் என்னதான் பலரோடு கூட்டாக விளையாடினாலும் கூட்டாளி என ஓரிருவர்தான் இருப்பார்கள் அல்லவா?கலைவாணனும் அர்ஜூனும் அப்படி ஓர் இருவர். இரண்டு வால்களுக்கும் காத்தாடி விடுவதில் பேரார்வம். ஒவ்வொரு வருடமும் காத்தாடி சீசன் வந்துவிட்டால் கலைவாணனின் ஹௌசிங்போர்டு வீட்டு மொட்டமாடியில்தான் இவர்களின் குடித்தனம். ஏரியா வானம் முழுக்க, நல்ல பாம்பு படமெடுப்பதுபோல தலையாட்டிக்கொண்டும் பட்டங்கள் மிதக்கும். டீல் விடும் பட்டங்கள் வால்முளைத்த வவ்வால்கள் போல, குறுக்குமறுக்குமாய் கிழித்துக்கொண்டு பறக்கும். கலைவாணனும் அர்ஜூனனும் செட்போட்டு தாங்களே காத்தாடி வடிவமைத்து ஏரியாக்காரர்களோடு போட்டி போடுவர்.
கலைவாணனுக்கு இயல்பிலேயே வந்ததா அல்லது நுணுக்க அறிவினால் கற்றானா என்பதை அவனேகூட அறிந்திருந்தானா தெரியவில்லை. காத்தாடியை மிக உயரத்தில் பறக்கவிடுவதிலிருந்து, காத்தாடியை டான்ஸ் ஆட வைப்பது, காத்தாடிகளின் க்ரூப் ஃபைட் வரை திறம் பெற்றிருந்தான். அவனறிந்த ஒவ்வொரு நுட்பத்தையும் அர்ஜூனுக்கும் பட்டம்விட்டுக்கொண்டே கற்றுக்கொடுத்தான். பட்டம் வாங்க காசு, அர்ஜூனுடையது, பறக்கவிடும் கலை, வாணனுடையது. கலைவாணனின் பெற்றோருக்கு பல வருடங்களாக குழந்தையின்றி, கோயில்கள், சாமியார்கள், மாற்று வைத்தியங்கள் அனைத்தையும் முயன்று பார்த்துவிட்டு, பிறகு ஆங்கில மருத்துவத்தின் உதவியால் பிறந்த ஒரே மகன் கலைவாணன். அவன் பாதுகாப்பில் கவனமும் கட்டுப்பாடும் அதிகம் அவனின் பெற்றோருக்கு. குறிப்பாக அவன் தந்தைக்கு. மிகுந்த கடினங்களுக்குப் பின் பிறந்த ஒரே பிள்ளை என்பதால் அவனுக்கு விபத்து எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாதென்ற முன்னெச்சரிக்கை. ஆகவே எந்த விளையாட்டுக்கும் அனுமதிக்காத அவன் பெற்றோர், நின்ற இடத்திலேயே இருப்பதால் பட்டம் விடுவதற்கு மட்டும் ஒத்துக்கொண்டனர். அதே சமயம், கையைக் கிழித்துவிடும் என்பதால் மாஞ்சா காத்தாடிக்குத் தடை. அதைத் தயார் செய்வது மட்டுமின்றி வேறு யாருடைய மாஞ்சா காத்தாடியையும்கூட வாங்கிப் பறக்கவிடக்கூடாது என்பதில் மிகுந்த கண்டிப்பு. ஏழாம் வகுப்பு வரை ஒவ்வொரு காத்தாடி சீசனிலும் அவர்களிருவரும் விட்ட காத்தாடிகள் ஏராளம். அர்ஜூனும் அதே ஏரியாவிலிருந்ததால் அங்கிருந்து கலைவாணனின் வீட்டுக்கு கால்மணியில் வந்துவிடமுடிந்தது. எட்டாம் வகுப்பு துவங்குகையில் அர்ஜூனின் குடும்பம் வேறு ஏரியாவில் வீடுவாங்கிக் கொண்டு சென்றுவிட்டபடியால் அதன்பின் காத்தாடியும், கலைவாணன் வீடும் அர்ஜூனுக்குத் தூரமானது.
* * * * கலைவாணனை வரும் ஞாயிறு காலை அகாடமிக்கு அழைத்துச் செல்வதாய் அர்ஜூன் கூறி, அதன்படியே செய்தான். அந்த ஞாயிறு காலை கலைவாணன் வீட்டுக்கு வந்து அவனின் பெற்றோர்களைச் சந்தித்துவிட்டு அங்கிருந்தே இருவரும் அர்ஜூனின் பைக்கில் அகாடமிக்குச் சென்றனர். அனைவராலும் மாஸ்டர் என அழைக்கப்படும் சாரி மாஸ்டர் அன்று அகாடமியில் இல்லை. ஆகவே அட்மிஷன் ஃபார்ம் மட்டும் எழுதிக்கொடுத்துவிட்டு அகாடமியைச் சுற்றிப் பார்க்கச் சென்றுவிட்டனர். சாரி மாஸ்டர்தான் அகாடமியில் சேர வருபவர்களை இண்டர்வ்யூ செய்து, சேர்க்கை குறித்த முடிவெடுப்பவர் என்பதால் அவர் டேபிலில் பூர்த்தி செய்த பாரத்தை வைத்துவிட்டனர்.
“இண்டர்நேஷனல் ரேஸ்ல்ல மச்சி, கரக்டான ஆளுங்கள செலக்ட் பண்ணாதான அகாடமிக்கும் க்ரெடிபிலிட்டி வரும். அதான் இண்டர்வ்யூலாம் வச்சு ஃபில்டரிங். எங்கப்பாவும் இதுல ஒரு பார்ட்னர்ன்றதால நமக்கு ஒன்னும் ப்ரச்சன இல்ல, எல்லாம் நேம்சேக் தான்” எனக்கூறி, ட்ரோன் விடும் இடத்துக்கு கலைவாணனை அழைத்துச் சென்றான் அர்ஜூன்.
அது ஒரு சினிமா செட் போலவும் உள்விளையாட்டரங்குபோலவும் இருந்தது. ஆங்காங்கே குழுக்களாக சிறார்களும் இளைஞர்களுமாக ட்ரோன் விட்டுப் பழகிக்கொண்டிருந்தனர். விர்ர்ர்ர்விர்ர்ர்ர்ர் எனும் பறக்கும் ட்ரோன்கள் எழுப்பும் ஒலி தேன்கூட்டிலிருந்து பத்தைம்பதுநூறு தேனீக்கள் தப்பி வந்துவிட்டது போல இருந்தது. ரேஸுக்கான ட்ரோன் விடுபவர்கள் கண்களில் goggles அணிந்து அதன் வழியே ட்ரோன் பறக்கும் வழியைப் பார்த்து பறக்கவிட்டுக்கொண்டிருந்தனர். ரேசுக்கான ட்ரோன்களிலிருந்து ஊழிக்காற்று போல ஒலி வந்தது. ரேசுக்கான பயிற்சி trackகில், ட்ரோன்கள் வளைந்து நெளிந்து புகுந்து செல்லும் வகையிலான குகை, மலை போன்ற தடுப்பமைப்புகள் இருந்தன. அதற்குள்ளாகவும், அதைச்சுற்றியும், இமைக்கும் நேரத்தில் சீறிப் பாய்ந்தன ட்ரோன்கள்.
“இதுதான் மச்சி ட்ராக். கார் ரேஸ் மாதிரியேதான் ட்ரோன் ரேஸும். இந்த ட்ராக்ல ஓட்டறப்ப நடுவுல எங்கயும் மோதிட்டா முடிஞ்சது. பீஸ்பீஸாகிடும் ட்ரோன். Obstacles மேலயும் மோதாம, ரேஸ்லருக்க மத்த ட்ரோன் மேலயும் மோதாம, மத்த drones நம்ம மேல மோத வரப்ப தப்பிச்சு escapeபும் ஆகி, இது எல்லாத்துக்கும் மேல firstடும் வரணும். லாப் முடியறப்ப தலையெல்லாம் குத்த ஆரமிச்சிடும், வெரல் மரத்துப்போயிடும். ரேஸ் drone manoeuvre ரொம்ப ரொம்ப intense and stressful. At the same time இது super addictive. ட்ரோன் அடிக்ஷன் பத்தி ஒனக்கு சொல்லவேண்டிய தேவையே இல்ல. அடிக்டானதாலதான நீயே இங்க சேரணும்னு வந்துருக்க. முன்ன இந்த ரேஸ் பத்தி நெறய பேருக்கு தெரியாது. இப்ப பாப்புலராயிட்டிருக்க காம்படிஷன். அதனாலயே நமக்கும் நல்ல பிசினஸ். International levelல நடக்கற Drone Racing Leagueல கலந்துக்க எல்லா நாட்டுலேந்தும் வராங்க. ரொம்ப ப்ரெஸ்டீஜியஸ் ரேஸ் அது. F1க்கு அடுத்து ரொம்ப ஃபேமசான ரேஸ் இதான். இதுல கலந்துக்கறதே ஒரு கௌரவம், கெத்துன்னு ஆகிடுச்சு. இங்க Indian drone racing league இருக்கு. National level race. அதுல வின் பண்ணினா அவங்க இண்டர்நேஷனல் ரேஸ் DRLல participate பண்ணலாம்.”
ட்ரோன் ரேஸ் குறித்த தகவல்களை மடமடவெனக் கூறிக்கொண்டே அங்கிருந்த ஜூனியர் ட்ரெய்னர்களை கலைவாணனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் அர்ஜூன். ட்ரோன் விடும் தன் வயதொத்தவர்களையும் அவர்கள் ஆக்ரோஷமாய் விடும் ட்ரோன்களையும் ஆர்வமாய்ப் பார்த்தான் கலைவாணன். தன்னுடைய ட்ரோனை எடுத்து பறக்கவிட்டுக் காட்டினான் அர்ஜூன்.
“நார்மல் ட்ரோனுக்கும் ரேஸ் ட்ரோனுக்கும் நெறய டிஃபரன்ஸ் இருக்கு மச்சி. பேசிக் மனுவரிங் mostly same தான்னாலும் இதோட இண்டன்சிட்டி வேற. எக்ஸ்ட்றா ஃபீச்சர்ஸும் நெறய இருக்கு. இன்னொரு சேலஞ்ச் Goggles போட்டு வெளாடுறது. அது இன்னும் கொஞ்சம் tricky. வீடியோ கேம் joystick மாதிரிதான் மச்சி, droneன drone controllerரும். இது மேல கீழ போக, இது முன்னாடி பின்னாடி ரைட் லெஃப்ட். ரிட்டன் டு ஹோம், காத்தடிக்கிறப்ப எப்டி ஆப்பரேட் பண்றது, இண்டோர் அவுட்டோர்னு மேனுவரிங் அதெல்லாம் கத்துட்டா போதும். Eye to thumb coordination தான் ரொம்ப ரொம்ப முக்கியம். அததான் அதிகமா ட்ரெய்ன் பண்ணனும். குறிப்பா ரேசப்ப அந்த coordination தான் துல்லியமா இருக்கணும். ஒரு blink போதும் எல்லாம் நாசமாப்போக” இவை கலைவாணனுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயங்கள்தானெனினும் அர்ஜூன் ஆர்வமாகச் சொல்வதாலும் ஏதேனும் புதிய விஷயம் கற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதாலும் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டான்.
அவர்களருகே சிலர் ரேஸ் விட்டுப்பழகிக்கொண்டிருந்தனர். ஏர்ஃபோர்ஸ் விமானங்களின் போட்டி போல இருந்தது அந்த இடமே. அங்கு பறந்து கொண்டிருந்த ஏகப்பட்ட ரோன்கள் எழுப்பிய ஒலி எதும் அப்போகலிப்ஸ் ஏற்பட்டுவிட்டதோ எனத் தோன்றச் செய்தது. ரேஸ் ட்ரோன்கள் குறித்து சொல்லிக்கொண்டே வந்த அர்ஜூன் திடீரெனச் சிரித்தான். “ஏண்டா சிரிக்கிற?” எனக்கேட்ட கலைவாணனிடம், “இல்லடா எனக்கு ஆரம்பத்துல காத்தாடியே விடத் தெரியாது. நீதான் எனக்கு காத்தாடி செய்றதுலேந்து, பறக்கவிடுறது, டீல் விடுற வரைக்கும் சொல்லிக்குடுத்த, கொஞ்சம் வருஷம் கழிச்சு கட் பண்ணா இப்ப நா அத உனக்கு பண்ணிட்டிருக்கேன். காலம் எவ்ளோ வேகமா சுழலுது பாத்தீங்களா மீம் ஞாபகம் வந்துதுடா” எனக்கூறியதும் இருவரும் சேர்ந்து சிரித்தனர்.
அன்று சிறிது நேரம் ட்ரோன் விட்டுப்பழகினர். கலைவாணனுக்கு அது ஒரு புதிய highயாக இருந்தது. வழக்கமான ட்ரோனுக்கும் ரேஸ் ட்ரோனுக்கும் இருந்த வித்தியாசம், அது கொடுத்த அட்ரினலின் பரவசம், விளக்க முடியாத ஒன்று. அன்று அவன் தூங்குவதரிது. * * * *
அடுத்த ஞாயிறும் வீட்டுக்கு வந்து அழைத்துச் சொல்வதாய்ச் சொன்ன அர்ஜூன் வரவே இல்லை. மறுநாள் வகுப்பில் கேட்டபோது, அட்மிஷன் இன்னும் நடக்கவில்லை என்றும், அடுத்து அட்மிஷன் போட்டதும்தான் வகுப்புக்கு வரமுடியும் என்று மாஸ்டர் சொன்னதாகவும் அதனால்தான் அவனை அழைத்துச் செல்ல வரவில்லை என்றும் அர்ஜூன் சொன்னான். அது தனக்கு பெரும் ஏமாற்றமளித்தாலும் அதற்கு மேல் அவனை கலைவாணன் வேறு எதுவும் கேட்டு தொந்தரவு செய்யவில்லை. “சரிடா, அட்மிஷன் ஓகே ஆனதும் சொல்லு” என்றான்.
அந்த வாரம் மாடல் தேர்வு இருந்ததால் இருவரும் வகுப்பில் வேறு எதுவும் இது குறித்துப் பேசிக்கொள்ளவில்லை. இரண்டு வாரங்கள் இப்படியே போனது. புதிய தகவல்கள் ஏதும் இல்லை. எனவே வேறு எதுவும் பிரச்சினையா என அர்ஜூனை கலைவாணன் கடைத்தெருவில் பார்த்தபோது கேட்டான்.
அதற்கு அர்ஜூன், “எனக்கு எப்டி சொல்றதுனு தெரியலடா. எங்க அகாடமியில உன்ன சேத்துக்க முடியாதுனு மாஸ்டர் சொல்லிட்டார். எங்க ப்ரீமியம் அகாடமில சேர்றதுக்கு பெரிய எடத்து ரெகமண்டேசனோட நெறய பேர் waiting listல இருக்காங்களாம். உன்னுது புது அப்லிகேஷன்னு சொல்லி ரிஜக்ட் பண்ணிட்டாருடா. உங்கிட்ட எனக்கு சொல்ல கூச்சமா இருந்துது. அதான் எப்டி சொல்றதுனு தெரியல. நீ இதுல எவ்ளோ passionateடா இருக்கனு நானும் எவ்ளவோ எடுத்து சொன்னேண்டா. அவர் ஒத்துக்கவே இல்ல. அவர் கொஞ்சம் strict. அகாடமில அவர் வெக்கறதுதான் சட்டம். அவர மீறி எதுவும் நடக்காது.” அர்ஜூன் சொன்னது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்தது கலைவாணனுக்கு.
“அர்ஜூன், ஒருவேள உன் ப்ரெண்டுன்றதால ஃபீஸ் கட்டாம ஓசில படிச்சிருவேன்னு நெனைச்சிட்டாராடா மாஸ்டர்? அப்டிலாம் இல்லடா, நா கண்டிப்பா எவ்ளோ ஃபீசோ அத குடுத்துடுறேண்டா.”
“டேய் மச்சி ஃபீஸ் மட்டும் இல்லடா மேட்டர். அது ப்ரஸ்டீஜியஸ் அகாடமி. சேர நெறய ரெகமண்டேஷன் தேவ. எங்கப்பா பார்ட்னர் தானனு நெனச்சுதான் நான் ரெஃபர் பண்ணது. ஆனாலும் ரிஜக்ட் பண்ணிட்டாருடா. நெக்ஸ்ட் வீக் அப்பா USலருந்து வந்துடுவார். வந்ததும் அவர வச்சு மூவ் பண்றேண்டா. சாரிடா.”
“டேய் நீ எதுக்குடா சாரி சொல்ற? என்னாலதான் உனக்கு இவ்ளோ கஷ்டம். நாந்தாண்டா சாரி சொல்லனும்.”
“டேய் நாம ரெண்டு பேருமே மாத்தி மாத்தி சாரி சொல்லத்தேவ இல்ல, மாஸ்டர் ஏன் அப்டி சொன்னார்னு தெரியல. எனக்கு நிச்சயமா தெரியும், இன்னும் அட்மிஷன் போட ஓப்பன் ஸ்லாட்ஸ் கொஞ்சம் இருக்கு. ஒரு வேள அத வேற யாருக்கும் ஆல்ரெடி குடுத்துட்டாங்களானு தெர்ல. உண்மைய சொல்லப்போனா ட்ரோன் மேல பேஷனோட அங்க கத்துக்க வரது கொஞ்சம் பேருதாண்டா. மீதி எல்லாரும் வீட்ல ப்ரெஷர் போடுறாங்கனு, இல்ல சீனுக்காக வரவங்க. ஃபுல்லா எலீட் ப்ரின்ஸ் அண்ட் ப்ரின்சஸ்.”
“யாரயோ மாதிரி சொல்ற, நீயும் எலைட் ப்ரின்ஸ் தான..”
“டேய் நா என்னிக்காவ்து அப்டி இருந்துருக்கனாடா Dawg”
“சும்மா கலாய்ச்சேண்டா. சரி வா ஒரு டீ சாப்டுவோம்.”
* * *
பள்ளிக் குழந்தைகள் டீச்சர் வகுப்புக்குள் வரும்போதும் அங்கிருந்து புறப்படும்போதும் குட்மார்னிங் அண்ட் தாங்க்யூ சொல்வது போல இவர்கள் இருவருக்கும் டீ. எங்கேனும் வெளியே சந்திக்கும்போதும் டீ, விடைபெறும்போதும் டீ, பேசிக்கொண்டே இருந்ததில் விடைபெற சற்று தாமதமானால் அதற்குள் ஒரு டீ.
“எங்க வீட்ல காஃபி சாப்ட்டு சாப்ட்டு அலுத்துருச்சுடா வெளிய வந்தாதான் டீயே” எனக்கூறி ஒன்றுக்கு இரண்டாய் வாங்கிக் குடிப்பான் அர்ஜூன்.
“அதெப்டிடா காஃபிய கழுவியும் ஊத்தற ஆனா அத டெய்லி குடிக்கவும் செய்ற?”
“அது ஒரு மாதிரி லவ்ஹேட் ரிலேஷன்ஷிப் மச்சி. டெய்லி குடிச்சு அது ஒரு ரொடீனாகிடுச்சு. எங்க வீட்ல டீக்கு அலௌட் இல்ல. ஃபில்டர் காஃபிதான். பாயாசம் மாதிரி திக்கா இருக்கும். டெய்லி மார்னிங் அதுல ஆரமிக்கலன்னா கைகால்லாம் நடுங்க ஆரமிச்சிடும் எங்க எல்லாருக்கும்.”
“நீ சொல்ற அந்த காஃபிய ஒருநாளாச்சும் குடிக்கணும்னு பாக்கறேன் வீட்டுக்கு பேச்சுக்கு கூட கூப்டவே மாட்றான் ஒருத்தன்.”
“டேய் பாட்டி ஊருக்கு போவாங்க. அப்ப கூட்டிட்டு போறேன். ரிலேடிவ்ஸ் தவிர வேற வந்தாலும் அவங்களுக்கு புடிக்காது. கொஞ்சம் ஆர்த்தடாக்ஸ்”
“ப்ராமிஸ்?”
“ப்ராமிஸ். சரி வா இன்னொரு டீயடிப்போம்.”
* * * *
அந்த வாரத்தில் அகாடமிக்குச் சென்ற அர்ஜூனிடத்தில் வழமைக்கு மாறாக அதிக நட்போடு பழகினார் மாஸ்டர். போட்டிக்கான என்கரேஜ்மெண்டுக்காக செய்கிறாரெனப் புரிந்துகொண்டான் அர்ஜூன். தனது தந்தை யூஎஸ்ஸ்லிருந்து வந்ததும் இரட்டை மகிழ்ச்சி அர்ஜூனுக்கு. ஒன்று அவன் கேட்ட லேட்டஸ்ட் ட்ரோனை அங்கிருந்து வாங்கி வந்தது, இரண்டு கலைவாணனின் அகாடமி அட்மிஷனுக்குப் பேச முடியும் என்பது. அவருக்கு ஜெட்லாக் போகும் வரை காத்திருந்து, ஒரு நாள் காலை ப்ரேக்ஃபாஸ்டின்போது நடந்தவற்றைச் சொன்னான்.
“சரி, நீ அவனுக்கு ரெகமண்ட் பண்ற, சப்போஸ் அவன் உன்ன பீட் பண்ணிட்டா என்ன பண்ணுவ அர்ஜூன்?“ எனக்கேட்டார் அவன் தந்தை அர்விந்த், சிரித்துக்கொண்டே.
“டாடி அவனாலலாம் என்ன பீட் பண்ணவே முடியாது. ஐ'ம் கான்ஃபிடண்ட் அபௌட் இட்.”
“அப்புறம் ஏன் அவன அகாடமில சேக்கணும்னு சொல்ற?”
“காம்ப்படிஷனுக்கு ஒரு ஆள் இருந்தாதான dad எனக்கும் ஒரு மோட்டிவேஷன் இருக்கும்? அகாடமில எல்லாரையும் பீட் பண்ணிட்டேன். அதுவே ஒரு ஓவர் கான்ஃபிடண்ட் ஆகிருச்சுன்னா? வீ ஆல்வேஸ் நீட் சம் ஒன் டு க்ராஸ்செக் இஃப் வி ஸ்டே ரிலவண்ட் நோ dad?”
மகனின் திட்டக்கூர்மையை பாராட்டும்விதமாகவும் அவனின் ஐடியாவை ஆமோதிக்கும் வகையிலும் தலையசைத்து ப்ரெட் டோஸ்ட்டைக் கடித்தார்.
* * * அவன் தந்தை சாரியோடு என்ன பேசினாரோ, மாஸ்டர் அர்ஜூனிடம் கலைவாணனை அகாடமியில் சேர்த்துக்கொள்வதாக உறுதியளித்தார். கலைவாணனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. மேகங்களுக்கு மேல் மிதந்தான். “எதிர்பார்க்கவே இல்லடா, அகாடமில எடம் கெடைக்கும்னு. இந்த ஆப்பர்ச்சூனிட்டிக்காக எப்டி thanks பண்றதுனே தெர்லடா. அங்குலுக்கும் என் சார்பா சொல்லிடு” என அதீத உற்சாகத்தோடு இருந்தான்.
பிற்பாடு அவனும் அர்ஜூனும் அகாடமியில் பயிற்சி பெறத் துவங்கினர். சேர்க்கைக்கு கடுமை காட்டினாலும் பயிற்சி கொடுப்பதில் எந்தப் பாகுபாடுமின்றி, இருவருக்கும் நல்ல முறையிலேயே பயிற்சி கொடுத்தார் மாஸ்டர். அர்ஜூன் சொன்னதுபோல், விளையாட்டாக ட்ரோன் விடுவதும் போட்டிக்காக விடுவதும் வேறாக இருந்தது.
கலைவாணனுக்கு கற்றுக்கொள்ள ஏகப்பட்ட படிப்பினைகள் இருந்தன.கண்ணுக்கும் கட்டைவிரலுக்குமான co-ordination அதிகம் தேவைப்பட்டது. எப்படி ரேஸ் கார் ஓட்டுநர்கள் சடுதியில் இயங்குவார்களோ, அவ்வியக்கத்தைக் கட்டைவிரலில் வெளிப்படுத்த வேண்டும். சிறப்பாக இயங்குவதென்பது விரைவாக மட்டும் இயங்குவதன்று, துல்லியமாகவும் இருக்க வேண்டும். காற்றின் போக்கை உணர்ந்து, ரேஸில் எதிர்ப்படும் தடைகளைக் கணக்கிட்டு, ஏனைய ட்ரோன்களோடு மோதிவிடாமலும், அவற்றைவிட வேகமாகவும் இயக்க வேண்டும். கண்கள், மூளை, இரு கட்டைவிரல்கள் ஆகிய மூன்றும் ஒருமித்து இயங்க வேண்டும். இவையனைத்தும் பாதி நொடிக்கும் குறைவான நேரத்தில் நடக்க வேண்டும். அதுதான் இதிலுள்ள பெரும் சவால். அதற்குத்தான் தொடர் பயிற்சி.
Hand eye co-ordinationனுக்கென்றே பல தனித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன.தொடர்ந்து கூர்ந்து நோக்குவதால் தலைவலிக்கும். விரல்கள் இரண்டும் வலி முற்றி மரத்துப்போகும். அப்போது நினைத்த வேகமும் துல்லியமும் கிடைக்காது. ட்ரோனைத் திருப்புவதிலோ உயர்த்தல் தாழ்த்துவதிலோ ஏற்படும் சிறு பிழை, அதைத் தொடர்ந்து பல தவறுகளுக்குக் காரணமாய் அமையும். எனவே உடல்வலிமை, குறிப்பாக கர வலிமை, இவற்றை இயக்க சோர்வடையாத மூளை வலிமை ஆகிய அனைத்தும் முக்கியம். அகாடமி கற்றுக்கொடுத்த நுட்பங்களைத் தாண்டி, தானே சொந்தமாகவும் பல புதிய உத்திகளைக் கண்டுபிடித்துக் கையாண்டான் கலைவாணன்.
அதைப்பார்த்து மாஸ்டரே வியந்து போனார். “எங்கடா கத்துட்ட இதுலாம்? அகாடமி இல்லாம தனியா வேற எங்கயும் கத்துக்கறியா?” என அவர் சந்தேகமாகவும் கேலியாகவும் கேட்டதற்கு, “நானே சொந்தமா நெறய ப்ராக்டிஸ் பண்ணி கண்டுபுடிச்சது தான் மாஸ்டர்” என்று கூறி தான் கண்டுபிடித்த அந்நுட்பங்களை அகாடமியில் பயின்ற ஏனையோருக்கும் கற்றுக்கொடுத்தான்.
* * *
“டேய் கெழவா (கலைவாணனுக்கு சாரி வைத்த பட்டப்பெயர்), நீ பேசாம ரேசுக்கு போறத விட்டுட்டு கோச் ஆகிடலாம்டா“ என சிரித்துக்கொண்டே நக்கல் தொனியில் சொன்னார் மாஸ்டர்.
“ஒரு இண்டர்நேஷனல் ரேஸ்ல ஜெயிச்சுட்டு அப்பறம் தான் மாஸ்டர் யோசிக்கணும். முதல்ல எனக்கு தெரியனும்ல்ல, என்னால ஜெயிக்க முடியுமான்னு.”
கலைவாணனின் புதிய யுத்திகளை அர்ஜூனும் சிரத்தையோடு கற்றுக்கொண்டான். “டேய், புதுசா வேற எதும் டெக்னிக் கத்துட்டன்னா சொல்லிக்குடுடா, திடீர்னு ரேஸப்போ கத்துக்கிட்ட வித்தைய காட்றேன்னு சர்ப்ரைஸ் பண்ணிடாத” என சிரித்துக்கொண்டே சொன்னான் அர்ஜூன். அவன் முகத்தில் சிரிப்பிருந்ததேயொழிய மனத்தில் அவ்வளவாக இல்லை.
அகாடமியில் பயிலும் பெரும்பாலானோருக்கு பிடித்தமானவனாக இருந்தான் கலைவாணன். அவனை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளாத சிலரில் அர்ஜூனும் சாரியும் சிலர். ஆனாலும் அதை வெளிப்படையாக காட்டிக்கொள்வதில்லை. அவர்களின் உள்குத்தல் பேச்சுக்களை உணர்ந்துகொள்ளுமளவுக்கு கலைவாணனுக்கு சூதும் போதவில்லை. தன் மாணவனால் சேர்க்கப்பட்டவன் அவனை மிஞ்சிப் போவதா என்ற எண்ணமோ அல்லது வேறு எதுவோ ஒரு காரணம், கலைவாணனை வெறுக்க வைத்தது. இத்தனைக்கும் அவன் ஒருநாள் விடாமல் பயிற்சிக்கு வருவதும், ஃபீஸ்கூட தப்பாமல் கட்டுவதும் அகாடமியிலிருந்து பங்குபெற்ற அத்தனை ட்ரோன் ரேஸ் போட்டியிலும் வெற்றியும் பெற்றே வந்தான். இருந்தும். ஏதோ ஒன்று, அவனை வெறுக்க சாரி மாஸ்டரிடம் இருந்தது. நாம் சேர்த்து விட்டவன் நம்மையே மிஞ்சுகிறானே என்ற பொறாமை அர்ஜூனுக்கு.
ஒரு கட்டத்தில், மீன் குஞ்சு பிறந்ததும் நீந்துவதுபோலானது கலைவாணனுக்கு ட்ரோன் விடுவது. சிறுவயதில் அவன் இழுப்புக்குக் கட்டுப்பட்டு காத்தாடிகள் எப்படி துள்ளிக் குதிக்குமோ, வானில் நாட்டியமெல்லாம் ஆடுமோ, அதுபோல தற்போது ட்ரோனை வைத்து ரேசோடு சேர்ந்த பற்பல சாகசங்கள் எல்லாம் காட்டினான்.
“ரேஸ்ல தோத்துப்போனாலும் ஒனக்கு ப்ரட்ச்சனையே இல்ல, ரோட்ல ட்ரோன் சர்க்கஸ் காட்டிகூட பொழச்சுக்குவ ஹாஹாஹா” என அவனைப் பாராட்டுவதுபோல் மாஸ்டர் பேசிய உள்குத்தை உணராது, “தோத்தா என்ன சார், அடுத்த போட்டில பாத்துக்கலாம்” என்றான் அப்பாவியாக. அவனின் தொடர் வெற்றிகள் தேசிய அளவில் விளையாடி வெல்வது வரை சென்றது. அவனோடு டீமில் இருந்ததால் அர்ஜூனுக்கும்.
ஒருநாள் மாலை, அனைவரும் எதிர்பார்த்திருந்த இண்டர்நேஷனல் ரேசான DRLலின் அறிவிப்பு வந்ததும் பரபரப்பு தொற்றிக்கொண்டது அனைவரிடத்திலும். தேசிய அளவில் வெற்றி பெற்றதால் சீனியர் டீமில் இவர்கள் இருவரும் செல்லத் தகுதி பெற்றனர். ஜூனியர் லெவலில் வேறொரு வட இந்திய அகாடமியின் ரேசர்கள் வெற்றி பெற்றதால் இவர்களின் அகாடமிக்கு வாய்ப்பு கிட்டவில்லை. வெளிநாட்டுக்குச் செல்ல பாஸ்போட் எடுப்பது, போட்டிக்குத்தேவையான ஆவணங்கள், உடைமைகள் வாங்குவது ஆகிய வேலைகளை விரைந்து செய்ய ஆரம்பித்தான் கலைவாணன். அர்ஜூனிடம் ஏற்கனவே பாஸ்போட் இத்யாதிகள் இருந்ததால் அவனுக்கு எளிதாக முடிந்தது. கலைவாணன் ஒவ்வொரு ஆவணத்துக்கும், ஒவ்வொரு அலுவலகத்துக்கும், அதிலுள்ள ஒவ்வொரு கௌண்ட்டர்களுக்கும் அலைந்தான். அகாடமியின் லாபக் குறைவைக் காரணம் காட்டி, செலவினங்களைக் குறைக்க, இண்டர்நேசனல் போட்டிக்குச் செல்ல, அகாடமியிலிருந்து இருவருக்கு மட்டுமே செலவுகள் ஏற்றுக்கொள்ளப்படும் எனும் புதிய விதி அமலுக்கு வந்ததால், போட்டிக்குச்செல்லும் அர்ஜூனுக்கும் கோச்சான சாரி மாஸ்டருக்கும் செலவினங்களை அகாடமி ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.
கலைவாணனுக்கு ஸ்பான்சர் தேட வேண்டிய வேலையும் சேர்ந்து கொண்டது. அப்படி ஸ்பான்சர் கிடைக்காத பட்சத்தில் சொந்தப்பணத்தில் தான் செல்ல வேண்டிய கட்டாயம். போட்டிக்கு ஸ்பான்சர்கள் கிடைக்க எதுவும் உதவி செய்ய முடியுமா என சாரி மாஸ்டரைக் கேட்டபோது, சாரிப்பா, அகாடமி ரூல்ஸ் திடீர்னு இந்த வருஷத்துலருந்து ரெண்டு பேருக்குதான்னு மாத்திட்டாங்க. ச்ச அது மட்டும் மூனு பேருக்குன்னு மட்டும் இருந்திருந்தா எவ்ளோ நல்லாருக்கும், உன்னையும் சேர்த்துக்கலாம். இப்ப ஒனக்கு ஹெல்ப் பண்ண முடியாம ஆகிடுச்சுன்றத என்னால தாங்கிக்கவே முடியல என உச்சுக்கொட்டியதை உணர்வுபெயர்த்தால் நயவஞ்சகம் என அகராதிகள் சொல்லும். ஆனால் அதை நமக்காக எவ்ளோ வருத்தப்படுறாரு மாஸ்டர் என கலைவாணனின் எளிய மனது எண்ணிக்கொண்டது.
கலைவாணனின் சுற்றத்தில் இந்த ரேஸ் குறித்து அறிந்தவர்கள் யாரும் அதிகம் இல்லை என்பதாலும் வசதிகளும் அதிகாரம், ஆளுமையுமுள்ள நபர்களின் தொடர்புகள் அவனுக்கு இல்லை என்பதாலும் தேவையான பணத்தை அவனால் புரட்ட முடியவில்லை. பெரும் விரக்திக்கு உள்ளானான் கலைவாணன். அவன் தந்தையும் தெரிந்தவர்களிடத்தில் கூடுமானளவு கடன் வாங்கிப்பார்த்தார். ஆனாலும் பற்றக்குறை. போட்டிக்கு விண்ணப்பிக்க ஒரே நாள் இருக்கையில் சாரி மாஸ்டர் கலைவாணனை அழைத்து, அர்ஜூனின் தந்தை வெளியே தெரியாமல் அவனுக்கு உதவ விரும்புவதாகவும் அவனுக்கான பணத்தை கடனாக அளிப்பதாகவும் சொன்னதும்தான் நிம்மதி வந்தது. ஆனால் இது குறித்து அர்ஜூனுக்குக்கூட எதுவும் தெரியக்கூடாது என சத்தியம் வாங்கிக்கொண்டார். அர்ஜூனிடம் மறைப்பது அவனுக்கு நெருடலை ஏற்படுத்தினாலும், சரி போட்டியில் வென்ற பின் அதற்குக் காரணம் அவன் தந்தைதான் என வெற்றியை அவர் காலடியில் சமர்ப்பித்தால் அர்ஜூனும் அகமகிழ்வான்தானே என மனதுக்குள் நினைத்துக்கொண்டான். அர்ஜூன் எதுவும் கேட்டால் ஸ்பான்ஸர் கிடைத்துவிட்டது எனச் சொல்லச் சொன்னார் சாரி மாஸ்டர். அதன்படியே அவனும் செய்தான்.
மறுநாள் போட்டிக்கு அவர்கள் US புறப்பட வேண்டி இருந்தது. அதற்கு முந்தின நாள் மாலை கலைவாணனை அகாடமிக்கு அழைத்து, சாரி மாஸ்டர் ஒரு வெள்ளைக்காகிதத்தில் அந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் அது முழுவதும் அகாடமியைச் சார்ந்ததே என்றும், அகாடமின் அனுமதியின்றி தான் எந்த ஸ்பான்சரோ, வேலையோ, விளம்பரமோ ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றும் எழுதி அதில் கையெழுத்திட்டு மேலும் இரண்டு கைநாட்டும் வைக்கச் சொன்னார். சாரி மாஸ்டரின் உதவியின்றி இந்தப் போட்டியிலேயே பங்குபெற்றிருக்க முடியாதே எனக்கருதிய கலைவாணன், தன் இரண்டு கட்டைவிரல்களையும் stamp padடில் அழுத்தி, கைநாட்டு மை தன் விரல் முழுக்க பதியச் செய்து, அந்தப் பேப்பரில் கைநாட்டிட்டான்.
“மாஸ்டர் இப்பிடி கேக்கறேன்னு ஒன்னும் தப்பா நெனச்சுக்கிடலியே” எனக்கேட்டார் சாரி மாஸ்டர்.
“ச்ச ச்ச இல்ல மாஸ்டர், உங்க ஹெல்புக்கெல்லாம் நா எப்பிடி thank பண்றதுன்னு நெனச்சிட்டிருந்தேன். நீங்களே ஒரு வழி காட்டிட்டீங்க” எனக்கூறி மிச்ச மையைத் தன் தலையில் தேய்த்துக்கொண்டான்.
மறுநாள் இரவு விமானம் என்பதால் வீட்டில் போட்டிக்குத் தேவையானவற்றை பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டிருக்கும்போது அவனுக்கு தலையில் சுருக்கென்ற வலி வந்தது. அவன் பெற்றோரிடத்தில் சொன்னதற்கு, போட்டிக்கு போக நெறயா அலஞ்சல்ல, அந்த அலைச்சல் டென்ஷனா இருக்கும் எனக்கூறி அவனை ரெஸ்ட் எடுக்கச் சொன்னனர். சற்று நேரத்தில் அவனின் தலைவலி அதிகரிக்க, உடன் கைவலியும் சேர்ந்துகொண்டது. வலி தீர தைலங்களையும் ஒத்தடங்களையும் அவனின் தாய் கொடுக்க, அது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. மேலும் ஒரு மணி நேரம் கழித்து விரல்களும் தலையில் சில பகுதியும் வெந்ததுபோலானது. பதறிப்போன அவன் பெற்றோர் என்ன நடந்தது எனக்கேட்க, கலைவாணனுமே என்ன நடக்கிறது என எதுவும் புரியாது விழித்தான். நேரம் செல்லச் செல்ல, அவனுக்கு வலி தாங்கவியலாத அளவு அதிகரித்து, துடிதுடித்துக் கதறினான்.
அவனை பெரியாஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல, டாக்டரிடம் பேசக்கூட முடியவில்லை. அப்போது அவன் இரண்டு கட்டைவிரல்களும் முழுவதுமாகக் கருத்து, தட்டினால் உதிர்ந்து விழுந்துவிடுவதும் பழுத்த பேரீச்சம்பழம் போலாகிவிட்டன. தலையின் சில பகுதிகளிலும் அதே நிலை. வலி தாங்கமுடியாமல் மயங்கிவிட்டான் கலைவாணன். அவனைப் பரிசோதித்த டாக்டர்கள் அவன் உயிரையும் கையையும் காப்பாற்ற இரண்டு விரல்களையும் நீக்கியே ஆக வேண்டும், மேலும் தலையில் பாதிக்கப்பட்ட பகுதியின் தோலை நீக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்த, கலைவாணனின் பெற்றோருக்கு கண்கள் இருண்டன.
இரண்டு நாட்கள் கழித்து அவனின் இரண்டு கட்டைவிரல்களும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டன. தலையில் பாதிப்படைந்த இடமும் சிறிது வெட்டியெடுக்கப்பட்டது. வெட்டப்பட்ட உடல்பகுதியை ஆய்வு செய்ததில் அவனுடைய கைவிரல்களிலும் தலையின் சில பகுதியிலும் Necrotox-3 எனும் கெமிக்கல் பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த கெமிக்கல் தோலில் பட்டால் முதலில் சிறிது நேரம் அரிப்பு ஏற்படுத்தி, பின் 3 மணி நேரத்தில் தோலின் செல்களைக் கொன்று அழுகச் செய்து, பின் 6 மணி நேரத்தில் உயிர் போகும் வலியைக் கொடுத்து தோல் முழுவதும் ஆசிட்டில் முக்கியதுபோல கரைந்தொழுகச் செய்துவிடும். அதை முற்றாக நீக்காத பட்சத்தில் இது ஏனைய பகுதிக்கும் பரவும் வாய்ப்பும், பெரும் துர்நாற்றமும் அப்பகுதியில் ஏற்படுத்தும். அந்த கெமிக்கல் அவன் கைநாட்டு இட்ட இங்கில் இருந்ததால் இரண்டு விரல்களும், விரல்களைத் தலையில் தேய்த்ததால் தலையும் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. விசாரித்ததில், மாஸ்டர் இதைச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு சிறு துறும்பு கூடப் படாமல் பாடுபட்டு வளர்த்த தன் மகனின் இரண்டு கட்டைவிரல்களையும் பலிகொடுத்த drone சாரியை கலைவாணனின் தந்தை என்ன செய்யப்போகிறார் என்பது நீங்கள் இக்கதையின் முதல்வரியை 2024 AD என வைத்தீர்களா இல்லை BC என்றா என்பதில் உள்ளது.
Comments
Post a Comment
Pass a comment here...