ட்ட்டட டப் ட்ட்டட டப் ட்ட்டட டப் ட்ட்டட டப் ட்ட்டட டப் ட்ட்டட டப்
குதிரைகள் தங்கள் கால்குளம்பால் ஓசையெழுப்பி மெரினாவின் மணலைத்தெறிக்கவைத்து விரைந்த காட்சியை மிகவும் ஆச்சர்யத்தோடு பார்த்தாள் ஹெலன்.
“அம்மா அம்மா அங்க பாருங்க எவ்ளோப்பெரிய குர்துர குடுகுடுன்னு ஓடுது. எப்டி இவ்ளோ ஃபாஸ்ட்டா ஓடுது? கால் வலிக்காதா?”
“குர்துர சொல்லக்கூடாது, குதுரன்னு சொல்லனும்” என்றாள் அம்மா
“ஆமாண்டி, நல்லா சொல்லிக்குடு குதுர கதுரன்னு... பூர்ணிம்மா.. குதிரைன்னு சொல்லனும் அத” என்றார் அப்பா.
”குதிரை குதிரை” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் ஷானாஸ்.
விடாது அடித்துக்கொண்டிருந்த உப்புப்பிசுபிசுப்பு மிகுந்த கடற்காற்றும், தொடர்ந்த அலைச்சத்தமும், அவ்வப்போது காற்றில் மிதந்து வந்த, எங்கோ இசைக்கப்பட்ட புல்லாங்குழலின் இசையும், பரபரப்பாக வியாபாரத்தில் முனைப்போடிருக்கும் சுண்டல், டீ, ஜோசியக்காரர்களும் மற்றும் போதும்போதுமெனுமளவு குவிந்திருந்த மக்கள் தலைகளுமாயிருந்தது ஞாயிறு பீச்.
ரோகிணிக்கு எதற்கெடுத்தாலும் கேள்வி, என்ன பதில் சொன்னாலும் அதற்கும் ஒரு கேள்வி. இரண்டாம் வகுப்பே படித்தாலும், எட்டாம் வகுப்பு வரை கேட்க வேண்டியவற்றை, தேவைக்கு அதிகமாக இப்போதே கேள்விகளாகக் கேட்டுவிட்டாள்.
மேகத்துக்கு மேகம் வழுக்கியபடி சென்ற விமானத்தை, அது கடலின்பக்கம் சென்று, வானமும் கடலும் தொடும் புள்ளியைத் தொடும் வரை இமை கொட்டாது பார்த்துக்கொண்டிருந்தாள். அது மறைந்ததும்,
“ப்பா... ப்லேனு காணோம்... எங்க போச்சு?”
“தோ அந்த வானத்துக்குள்ள”
“வானம் அங்கியே முடிஞ்சிச்சே.. அப்பறம் எங்க போச்சு?”
“அதுக்கு அந்த பக்கமும் வானமிருக்கும்ல.. அங்க போவும்”
அப்போது ஒரு குதிரை அவர்களைக்கடந்து போக, “ப்பா ப்பா எனக்கு அந்த குர்துரைல போவணும்”
“பாத்தியா.. இப்பதான சொன்னேன்.. குதிரை..”
“சரிப்பா.. குதிரை.. அதுல ஏத்தி உடுங்க.. நானும்போவணும்..”
“இப்ப இருட்டிடுச்சு... இப்ப வேணாம்.. இன்னொரு வாட்டி பீச் வரம்போது போய்க்கலாம்” என்றாள் அம்மா.
“அம்மா... ப்ளீஈஈஈஸ்ம்மா...” எத்தகைய காதையும் உருகவைக்கும் அவளுக்கே உரித்தான கொஞ்சும் கெஞ்சும் மழலைக் குரலில் கேட்டாள் ஹரிணி.
குதிரைக்காரனைக் கூப்பிட எத்தனித்த கணவனிடம், “நைட்டு நேரமாருக்கு, வேணாம். அடுத்த வாரம் சீக்கரமா வந்து போவலாம், சும்மாருங்க” என்றாள்
“காயத்ரிம்மா.. ச்செல்லம்ல... அடுத்த வாரம் கண்டிப்பா கொஞ்சம் சீக்கிரமா வந்து குதுரைல ரவுண்ட் கூட்டிட்டு போறேன்” என்றார் அப்பா.
சோகமாய் உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு, அழுத்தமாய் “குதிரை, குதுரயில்ல” என்றாள்.
”அடிக்களுத” என குமட்டில் வாரியணைத்து முத்தமிட்ட அப்பாவை, “அம்மா பார்ம்மா அப்பா களுத சொல்றாங்க” என்றாள்.
”சரி நேரமாச்சு வா கெளம்புவோம்” என அவர்கள் எழுந்து நடக்க, அப்பா வாங்கிக்கொடுத்த பலூனோடு ஆடிக்கொண்டும் குதித்துக்கொண்டும் ஓடினாள்.
அங்கிருந்த மீன் கடையில் மூவரும் சென்று அமர,
“அம்மா, ஸ்சூப்பரார்க்கு மீன் வாசன”
“ச்சீ.. வாசனயா இது? உவ்வேய்க்.. நாத்தம்ல அடிக்குது” என்றார் அப்பா
“அப்ப அப்பாக்கு வேணாம்ம்மா.. நம்ம மட்டும் ச்சாப்டலாம். அப்பா காசு மட்டும் குடுக்கட்டும்”
“எருமக்குட்டி... அப்பாதான் காசுதரணும்னு யாரு சொல்லிக்குடுத்தா?”
“நீங்கதான அம்மாக்கூட சண்ட போடம்போது சொன்னீங்க, ஒங்களுக்கு காச அல்லிக்கொட்டதான் நா இருக்கேனான்னு”
”பாருங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்கன்னு” என்பதுபோல் அம்மா அப்பாவை முறைக்க,
”சரி.. அப்பாவும் அம்மாவும் இனிமே சண்ட போடமாட்டோம்... என்ன வேணும் சொல்லுங்க.. மீன் சாப்ட்டு எல்லாரும் ப்ரென்ஸாய்ரலாம்”
”ப்பா எனக்கு ரெண்டு மீனு பார்சல் வேனும்”
“எதுக்குடா? என்ன வேணுமோ இங்கயே சாப்புடு. பார்சல் எதுக்கு?”
“ஒன்னு நம்ம டோரா (பூனை)க்கு இன்னொன்னு அண்ணாச்சிக்கு (வாட்ச்மேன்)”
சாப்பிட்டுவிட்டு சாலையை நோக்கி நடக்கும்போது பலூன்களை குறி வைத்து சுடும் கடைக்காரர், “டென் ருபீஸ் சார். பலூன்சூட்டிங் சார்” என அழைக்க, “பலூன் ஷூட் பண்றியாடா சுதாம்மா?”
“வேணாம்ப்பா, அந்த அங்க்கல் பாவம் பலூன் ஊதி ஊதி வெச்சுருக்காரு. ஒடச்சா அப்பறம் அழுவ்வாரு” என்று கூறியபடி தலைக்கு மேல் பறந்த விமானத்தை அண்ணாந்து பார்த்தபடி நடந்தாள்.
ஆட்டோ பிடித்து வீடு திரும்பும்போது, சாலையில் சென்ற ஒரு குதிரையைக் காட்டி, “ப்பா குதிரைப்பா” என்றாள். ”அடுத்த வாரம் கண்டிப்பா போலாம்” என்று உறுதியளிக்க, பராக்கு பார்த்துக்கொண்டே தூங்கிப்போனாள்.
அடுத்த நாள் பள்ளியில், முந்தைய தினம் பீச்சில் கண்ட ஒவ்வொரு விஷயத்தையும் நாள் முழுக்க அதே ஆர்வத்தோடு, மீண்டும் மீண்டும் நண்பர்களிடத்தில் கூறி, பேசியதற்காக இரண்டு முறை மிஸ்ஸிடம் திட்டும் வாங்கிக்கொண்டாள் விஜி.
அன்று மாலை வீட்டுக்கு வந்து வகுப்பில் நேற்றைய கதையைக்கூறிய கதையை வரிவிடாமல் அம்மாவிடம் சொன்னாள்.
டாடி இரவு வீடு திரும்பியதும், அதே கதை. அதே சுவாரசியத்தோடு. ”பீச்சை ஏன் கடல்னு சொல்றோம்?” ”கடல் தண்ணி ஏன் உப்பா இருக்கு?(வகுப்பில் சிலர் சொன்னது)” போன்ற அன்றைய தினத்துக்கான கேள்விகளையும் கேட்டுவிட்டு, தூங்கச்செல்லுமுன், கண்டிப்பாக குதிரையில் போகவேண்டும் என்று மீண்டும் ஒரு முறை உறுதி செய்து கொண்டாள்.
மறுநாள் பள்ளிக்குக் கிளம்பும்போது, பிரிஜ்ஜிலிருந்த சாக்லேட்டை மரியம் உண்ண, அப்போது அவள் அம்மா வர, “காலைல என்ன சாக்லேட்டு கேக்குது? வைய்யி.. அம்மாவ கோவப்படுத்துனன்னா அடிப்பேம்ப்பாத்துக்க ” என வைதாள். “அம்மா..ப்ளீஈஈஸ்மா... ஒரே ஒரு கடி மட்டும் கடிச்சுக்குறேன், மீதி சாங்யாலம் சாப்டுறேன்” என்றவாறு ஒரு கடி கடித்து மீதியை பிரிஜ்ஜுக்குள்ளேயே பத்திரப்படுத்தி வைத்தாள்.
அவள் தலையில் உச்சிக்குடுமிகளை இறுக்கி விட்டு,
”மிட்டம் பேப்பர் எப்ப தராங்க?”
“இன்னக்கி”
“பத்தரமா கொண்டு வரணும் என்ன?”
“சரி”
அன்று வகுப்பில் அவளின் மிஸ் mid term test பேப்பர்களைத்தந்தார், இவளின் போட்டியாளினி ஹேமாவைவிட இவள் அதிக மார்க் வாங்கியிருந்ததால் ஆகக்குஷியில் இருந்தாள். அது மட்டுமின்றி மேத்ஸில் நூற்றுக்கு நூறு வாங்கியிருந்ததால் மிஸ் v.v.good என சிகப்புப்பேனாவில் பெரிசாக எழுதியிருந்தததைக்கண்டு அவள் முகம் முழுவதையும் சிரிப்பு மறைத்தது.
முதலில் குறைந்த மதிப்பெண் பேப்பரும் அதற்கு ஒன்றன்பின் ஒன்றாக அதிக மதிப்பெண் பேப்பர்கள் வருமாறு ஒவ்வொரு பேப்பரையும் அடுக்கி வைத்தாள்.
விவிகுட் பேப்பரை மட்டும் தனியே ஒளித்து வைத்துவிட்டு, மற்றவற்றை பையின் முன் பகுதியில், பையைப்பிரித்ததும் தெரிவதுபோல் வைத்தாள் (அம்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவாம்).
மூன்றாம் பீரியடான PTக்காக க்ரௌண்டுக்கு அழைத்துச்செல்ல மிஸ் வருவதற்காக எல்லாக்குழந்தைகளும் அமர்ந்திருக்க, நடுத்தர வயதுள்ள இருவர் யாரையோ தேடி வகுப்புக்குள் வந்தனர். அவர்களை புதியதாய் வந்திருக்கும் சார்கள் என நினைத்து அத்தனைக்குழந்தைகளும் ஒரு சேர, கோரஸாய் “குட் மார்னிங் சாஆஆர்” என்றன.
வந்தவர்களில் ஒருவன், பதிலுக்கு, துப்பாக்கிக் குதிரையை இயக்கினான்.
ட்ட்டட டப் ட்ட்டட டப் ட்ட்டட டப் ட்ட்டட டப் ட்ட்டட டப் ட்ட்டட டப்
Comments
Post a Comment
Pass a comment here...