சிலுக்கு சுப்ரமணி

 1


ஒருத்தன் எப்ப ஒரு தலைவன் / influenceசன் ஆகறான்னா, அவங்கிட்ட இருக்க டேட்டா, அவனோட techniques & strategies அப்பறம் அவன் எடுக்கற decisions, முடிவா, அவனோட அந்த மொத்தத் தெறமையினால மத்தவங்களுக்குக் கெடைக்கற பெனிஃபிட்ஸ். 


சாதா சுப்ரமணியா இருந்து, பின்னாள்ல சிலுக்கு சுப்ரமணியான என் க்லாஸ்மேட் எஸ். சுப்ரமணி, இப்ப யோசிச்சுப்பாத்தா ஒரு தலைவனா வாழ்ந்துருக்கான்னு தோணுது. 


சின்ன வயசுல இருந்து ஒரே ஸ்கூல்ல ஒன்னா படிக்கறதுல நெறய நன்மைகள் இருக்குது. ஆனா அந்த நன்மைகள் என்னென்னனு எனக்குத் தெரியாது. ஏன்னா எங்கப்பாவோட வேலையின் காரணமா, ‘இதோ இந்த ஸ்கூல் தான் நம்ம வாழ்க்கையின் திருப்புமுனையாகப் போவுது, இந்த friends தான் இனி வாழ்க்க முழுக்க நம்மகூட வரப்போறவங்க’னு நான் நம்ப ஆரமிச்ச ரெண்டாவது நாள்ல (அதிக பட்சம் மூனே முக்கா நாள்) அப்பா வந்து, “ட்ரான்ஸ்ஃபர் ஆகிருச்சு, வேற ஊருக்குப் போறோம்”னுடுவார். 


‘போறதுதான் போற நீ மட்டும் போயேன்யா, எங்களையும் ஏன் பொதிகளுதையா இழுத்துட்டுப் போற?’ என்ற கேள்விக்கு, ‘ங்கொம்மாளுக்கு எம்மேல இருக்க நம்பிக்க அப்பிடிடா’ என்று அப்பா சொல்லத் தவிர்த்த மைண்ட்வாய்ஸ இப்ப வர கேட்டதில்ல. 


பதிலுக்கு, ‘ங்கொம்மா’ என்று எங்கள் அப்பா அழைக்கும் எங்கள் அம்மா அவர்கள், “ன்னொப்பனப் பத்தி ஒங்களுக்குத் தெரியாதுடா” என்று சத்தமாகவே அடிக்கடி அடிக்கோடிட்டுக் காட்டியபடி இருந்தமையால் அவர்களின் பிரச்சனைகளுக்குள் செல்லாமல், புத்தகம் பைகளை மூட்டை கட்ட ஆரம்பித்திருப்போம் நானும் தம்பியும். 


By the way, இந்தக்கத அவங்களப் பத்தினதில்ல. சிலுக்கு சுப்ரமணியப் பத்தியது. 



ஹைவேய்சில் ரோட் ட்ரிப்ஸ் போறப்ப கவனிச்சிருக்கீங்களா? ஒவ்வொரு டோல்கேட்டுலயும், டீக்கடைகள்லயும், அல்மோஸ்ட் ஒரே set of வண்டிகளத்தான் திரும்பத் திரும்பப் பாப்போம். முன்னப்பின்ன ஆனாலும், மறுக்கா மறுக்கா அவங்களையே பாப்போம். சின்ன வயசுலருந்து ஒரே ஸ்கூல்ல படிக்கிறதும் அப்பிடித்தான், அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டே அரடௌசர் போட்டு சேந்த நாள்லருந்து, எஸ்சல்சி / ப்லஸ்டூ சட்டிபிகேட் வாங்கிட்டுப்போறவரை வருசா வருசம் ஒவ்வொரு குட்டைலயும் ஊறிட்டிருக்கறது ஒரே மட்டைகளோடதான். எல்லா வகுப்புலையும் தனித் தனி குரூப்ஸ் இருக்கும். அந்த குரூப்ஸ் பெரும்பாலும் ஒடையாது, அதே மாதிரி வெளி ஆளும் அவ்ளோ சுளுவா உள்ள சேரவும் ராது. 


எந்த குரூப்புலயும் நாம சேரமுடியாதுன்றது கொஞ்சம் சீக்கிரமாவே எனக்குப் புரிபட்டுடுச்சு. அதனால எல்லாரையும் ஒரு ஆடியன்சாவே பாத்துட்டு நானும் க்லாஸ் / ஸ்கூல் மாறிட்டே இருந்துட்டேன். 


பத்தாங்கிளாஸில் இருக்கப்ப ஒருநாள் (technically night) வந்து, “வேற ஊர் போறோம்”னார். கண்விழித்ததும் கரங்கள் மொபைல் தேடுவதுபோல் ஊர் நகர்வுக்கான அடுத்தக்கட்ட வேலைகள் reflex ஆக்சனில் நடந்தன. 


~ ~ ~


புது ஸ்கூலில் பத்தாவது கொஞ்சம் லேட்டாத் தான் சேந்தேன். நூற்றாண்டு கண்ட, தப்பித் தவறியும் போட்டிகளுக்குக் கூட மாணவிகள் எட்டிப் பார்க்கப் பயப்படுகிற, அக்மார்க், ஆயிரம் சதவீதம் ஆண்கள் மட்டுமே படித்த ஒரு ஆண்கள் மேநிலைப் பள்ளி.


எச்சம் ரூமில் என் செக்சன் எல்லாம் சொன்னதும் அதைத் தேடிக்கண்டுபிடித்து வகுப்புக்குச் சென்றபோது தமிழம்மா வகுப்பை வெளுத்துக் கொண்டிருந்தார். 


“அயம் ந்யூ அட்மிஷன், ஷல்லை கம்மிங் டீச்சர்” என அனுமதி கேட்டபோது, 


“இந்த ஒழுங்கீனங்களே முடியல, இதுல இன்னொன்னா?” என்றார். 


அதையே, “யெஸ்ஸ் கம்மின்” எனும் உத்தரவாய் எடுத்துக்கொண்டு உள்நுழைந்தேன்.


பொதுவா க்லாஸ்ல போர்டுக்குப் parallelலா பெஞ்சுகள் இருக்கும். அந்த ஸ்கூல்ல student pupilation அதிகம்ன்றதால வகுப்பின் ரெண்டு ஓரத்துலயும் போர்டுக்கு perpendicularராவும் பெஞ்சுகள் இருந்தன. அதுல ஒரு பெஞ்சுல இடம் ஒதுக்கப்பட்டேன். 


நான் உள்ள போனப்ப வீக்லி டெஸ்ட் பேப்பர் குடுத்துட்டிருந்தார் தமிழம்மா. முக்காவாசி க்லாஸ் பெய்ல் என்பதால் தன் தகிக்கும் தமிழ்ச் சொற்கோர்வையால் ருத்திரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார்.


திடீர்னு அவங்களுக்கு என்ன தோணுச்சுன்னு தெர்ல, என்னப்பாத்து “தமிழ் படிக்க வருமா?”ன்னு கேட்டாங்க. 


“ம்ம்”னு தலையாட்டுனேன்.


பக்கத்துப் பையண்ட்ட பேசிட்டிருந்த சுப்ரமணிய, சுப்ரமணீனு கொஞ்சம் சத்தமாக் கூப்புட்டு, “இந்தா இவனுக்கு இந்தச் செய்யுள சொல்லிக்குடு”ன்னாங்க.


அப்டிதான் எனக்கு சுப்ரமணி பரிச்சயமானான். அந்த க்லாஸ்ல எனக்கு ஆன முதல் அறிமுகம் அவந்தான். (என்னை டெஸ்க்கில் அமர இடங்கொடுத்த ஒருவனும் அதுவரை ஒரு “எங்கருந்து வர நீ?” கூடக் கேட்கவில்லை. பூராவும் பெய்ல் கேசுகள். அந்தப் பீரியட் எப்போது முடியும் என மௌனமாக தரையை நோக்கி வடக்கிருந்தார்கள்).


டீச்சர் அவங்கிட்ட என்னயக் கோத்துவிட்டதும், ஒருவேள அவந்தான் க்லாஸ் லீடர் போலனு நெனச்சேன். செய்யுள் சொல்லித்தரளவுக்கு புலமை இருக்கறதப் பாத்து வியக்கவும் வியத்தேன். 


அவன் மொனகிட்டே எங்கிட்ட வந்து, “புக்கு கொணாந்தியா?”


“ம்ம் இருக்கு”


ஒரு செய்யுள எடுத்து ஒவ்வொரு வரியாகப் படிச்சுக்காட்னான்.


“வாழ்ல்க நிரந்தரம் வாழ்ல்க தமில்மொலிம்ம் சொல்லு”

“வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி”


“வாழ்லிய வாழ்லியவே”

“வாழிய வாழியவே”


“வானமலந்தது அநைத்தும் அலந்திடு வன்மொழ்லி வாழ்லியவே”

“வானமளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி வாழியவே”


“ஏல்கடல் வைப்பினுந்த் தன்மனம் வீச்சி இசைகொண்டு வாலியவே”

“ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே”


, ள, ழ, ண, ன, ந சுத்தமாக இல்லை, பேசிக்கலி தமிழே வரல அவனுக்கு. அவன் சொல்லச் சொல்ல நான் திருத்திப் படிச்சுக் காட்னதும், 


“ஒனக்கு தமில் நல்லா வருமா?”


“தமிழ் மட்டுந்தான் வரும்.”


“த்தா அப்றன்னாத்துக்கு என்ன்ன சொல்த்தரசொல்றா பேய்ப்பல்லி? சரி, பீரிட் முடியறவரிக்கும் சொல்த்தர மாரி இருக்கேன். நீயும் படிக்கறமாரியே இரு. இல்லன்னா ரெண்டு பேரையும் திட்டுவா.”



இங்க ரெண்டு விசயத்த சொல்லனும். சுப்ரமணிய எனக்கு செய்யுள் சொல்லித் தரச் சொன்னது எனக்கு கத்துக்குடுக்கணும்னு இல்ல. யார்கூடவோ பேசிட்டிருந்ததால அது அவனுக்கு குடுத்த தண்டன. ஆக்ச்சுவலா சுப்ரமணியே அந்த டெஸ்ட்ல பெய்ல் தான் ஆகிருந்தான். எனக்கும் படிப்பு வராதுன்னு நெனச்சு என்னக்கொண்டு அவன தண்டிக்க நெனச்சிருக்கு அந்த அம்மன் பல் டீச்சர். 


இதுதான் ரெண்டாவது விசயம். சொன்னா க்லீஷேவா இருக்கும். ஆனா உண்மைலயே காலண்டர்ல இருக்க அம்மன் மாதிரியே அழகாவும் அமானுஷ்யமாவும் தெரிஞ்சாங்க அந்தட் டீச்சர். பொடடோ எனும் உருளைக் கிழங்க அவிச்சு தோல் உரிச்சு வெச்சா ஒரு கலர் வருமே. அப்டி ஒரு வெளிர்மஞ்சக்கலர் நிறம். அடர்ரத்த ரெட் ஸ்டிக்கர் பொட்டு. உதட்டோட ரெண்டு ஓரத்துலயும் கொஞ்சமா வெளிநோக்கிய சிங்கப்பல் (அதத்தான் பேய்ப்பல்லுன்னான் சுப்ரமணி). சிரிச்சாங்கன்னா அச்சு அசல் அம்மன் மாதிரியே இருப்பாங்க. ஆனா அவங்களுக்கு சிரிக்கற கொடுப்பினையே குடுக்கல இவனுக. கோபம் தணியாத அம்மனாவே கடேசிவரை இருந்தாங்க. 


Anyways, சுப்ரமணி அறிமுகமானது இப்டித்தான். எல்லாருக்கும் வகுப்புத் தோழர்கள் இருப்பாங்கல்ல? சிலுக்கு சுப்ரமணி வகுப்புக்கே தோழன். ஏன்னா...


Comments

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂