Pre-view Answers to the Big Questions

அடுத்து எழுதிட்டிருக்க ஒரு கதைக்குத் தேவையா இருந்துச்சுன்னு சில சைண்டிஃபிக் ரெஃபரன்ஸ தேடிச் சுத்திட்டிருந்தப்ப தன்னால வந்தமர்ந்துச்சு சுப. வீ அவர்களோட இந்த வீடியோ. அதுல Brief Answers to the Big Questions புக்கப் பத்தி சொல்லிருந்தாப்டி. மிகு அறிவியலின் வாசல நமக்குத் திறந்து வைத்த, one of the all time favs அறிஞரான ஸ்டீஃபன் ஹாக்கிங் அவர்களின் (கடைசிப்) புத்தகம் அப்டின்றதாலும் அதோட காண்டெண்ட்டே ஒரு மாதிரி invitingகா இருந்ததாலயும் படிக்க எடுத்தேன். பொதுவா எந்த புக்கோ படமோ, அத பாத்துட்டு, சொல்றாப்ல எதும் தோணிச்சுன்னா ஒரு வார்த்த எழுதறது. ஆனா இதுல அவர் பதில் சொல்லிருக்க கேள்விகள் ஒரு மாதிரி படிக்க முந்தியே அதப்பத்தி நம்ம புரிதல் நிலைப்பாடு என்னனு தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சு. 

ஆகவே, அவர் டீல் பண்ணிருக்க இந்தக் கேள்விகளுக்கு எனக்கு தற்போது இருக்க புரிதல்கள வச்சு பதில் சொல்றேன். அதுக்கப்பறம் அவர் என்ன சொல்லிருக்கார்னு பாத்து செக் பண்ணிக்கறேன். இத்தன கேள்விகள்ல, எதோ ஒரு இடத்துல 0.000001% அவர் சொன்னதையே நாமளும் சொல்லிருந்தா, 'பரால்ல நமக்கும் துளி அறிவு இருக்கத்தான் செய்யுது'னு ஒரு செல்ஃப் pat பண்ணிக்கலாம். அல்லேல், 'நீ இன்னும் வளரணும் தம்பின்னு self retro'. 

இதுல இருக்க பத்து கேள்விக்கும் அவர் என்ன பதில் சொல்லிருக்கார்னு தெரியாது (முதல் கேள்வியத்தவிர). இதுல நான் எழுதிருக்கறது அவர் என்ன சொல்லிருக்கக்கூடும்ங்குற கற்பனை இல்ல, இந்தக் கேள்விகள எண்ட்ட கேட்டுருந்தா என்ன சொல்லிருப்பேங்குற பதில்கள் தான். 

இனி, கேள்விகள்: 
Is there a God? 
மனிதர்கள்ல, முதல் முதல்ல கடவுள் அப்டின்றத யார், எப்பிடி define பண்ணிருப்பான்னு யோசிக்கிறேன். ஆழ்ந்து யோசிச்சு, அண்டம் பேரண்டம் இதெல்லாம் நுட்பமா ஆய்ந்து, அதுக்குள்ள ஊடுபாவுறாப்ல கடவுள்னு ஒரு entitiyய மனிதன் படைச்சிருப்பானா(!!) அல்லது, பைக்ல ஹெவி டிராஃபிக்ல ஓட்றப்ப திடீர்னு கட் அடிக்கறாப்ல ஆச்சுன்னா ரிஃப்லக்ஸ் ஆக்‌ஷன்ல ஒரு நொடி கண்ண மூடிப்போம்ல (நா மூடுவேன், அதான் வண்டி ஓட்றதில்ல) அப்டி எதோ ஒரு அதிர்ச்சி / ஆபத்து பொழுதுல அவன மீறி அவன் சொன்ன "Oh God!" தான் தொடக்கமா? 

இல்லன்னா, என்னதான் No Parking போர்டு போட்டுருந்தும் கேட் முன்னால வண்டி நிறுத்திருக்கதப்பாத்து அங்க ஆளே இல்லன்னாலும் "எவண்டா இங்க கொணாந்து வண்டி நிறுத்தினது? அறிவில்ல?"ன்னு பொதுவாத் திட்டுவாங்கல்ல அங்கில்ஸ். அப்பிடி ஒரு இன்மை நிலைலயும் பொதுவா அழைக்க ஆரமிச்சதா கடவுள்?

வானத்துலருந்து அப்டியே திரும்பி மக்கள் பக்கம் பாக்கறேன், நாம இங்க எல்லாத்தையும் பைனரியா பிரிச்சு வச்சிருக்கோம் - Theists, Atheists அப்டின்னு. இதுலயே எனக்கு முரண் இருக்கு. எல்லா Theistsசுமே ஒரு ரீடைல் Atheists தான். Atheists மட்டுந்தான் wholesale Athiests.

ஏன்னா கடவுள் இருக்குன்னு சொல்றவன் கடவுள் இருக்குன்னு சொல்லல. "என்" கடவுள் இருக்குன்னு தான் சொல்றான். மீதிய ஒரு லெவல் கம்மியான கடவுளாக்கூட இல்ல, ஒரு பொருட்டாவே மதிக்கறதில்ல. விட்டா பொளந்துவிட்டுருவானுக. 

ஒருத்தன் எதுவுமே கடவுள் இல்ல, கடவுளத்தவிரன்னு சொல்றான். 

இன்னொருத்தன் எல்லாமே கடவுள்னுறான்.

ஒருத்தன் என் கடவுளத் தவிர வேற எதையுமே ஏத்துக்க மாட்டேன்றான். மறுத்தன் எல்லாக் கடவுளையுமே ஏத்துக்கறேங்கறான். ஏதேனும் ஒரு கருத்தின் பொருட்டால் ஒன்ன நிராகரிக்கறவனக்கூட ஒத்துக்கலாம். ஆனா எல்லாத்தையும் எப்பிடி ஏத்துக்கறாங்கன்றது புரியல. எல்லாத்தையும் ஏத்துக்கறவன் எதையுமே ஏத்துக்கலன்றது நம் நிலைப்பாடு. 

சரி, இப்ப கடவுளுக்கு வருவோம். கடவுள் ஓர் உயிரா, கரண்ட் சாக்கா, கிரீடம் வச்சிருக்குமா, க்லீன் ஷேவ் பண்ணிருப்பாப்டியா, டாட்டூ குத்திருப்பாரா, அனிமல்ஸா, ரேடியோ வேவ்ஸா, வெறும் வாய்டா, வெறும் வாயா, மீசைய முறுக்கிருப்பாரா, ஷிஃபான் சேலை?, தர்பாரி கானடாவா, ஒளிலிழி டைப்ல எதுவுமா, ஏலியன்சா, ஏலோ ஏலோ ஜபக்தாமியா?

எங்க காலேஜ்ல ஃபைனல் இயர் பசங்க வருசா வருசம் ஒரு ப்ராஜக்ட் பண்ணுவானுக, மல்லாட்டைலருந்து பெட்ரோல் கண்டுபுடிக்கிறேன்னு. மல்லாட்டைய இந்த கம்போசிசன்ல, இந்த காம்பௌண்ட்ஸ் எல்லாம் சேத்து பண்ணினோம், அதுல பெட்ரோல் வரல, அதனால இந்த காம்பௌண்ட் மிக்ஸர்ல பெட்ரோல் கண்டுபுடிக்கமுடியாது என்பதை அறிவித்துக் கொள்கிறோம்னு ப்ராஜக்ட முடிப்பானுக. அடுத்த வருசம் ஃபைனல் இயர்ல ஒரு குரூப் அதயே மறுக்கா எடுத்து காம்ப்பௌண்ட்ல ஒரு எலிமண்டோட ரேஷியோ மட்டும் மாத்துவானுக. அதுவும் எரியாது. Hence, இதுவும் பெட்ரோலுக்கானது அல்லனு முடிப்பானுக. இப்டி வருசா வருசம் ஒரு டீம் கெளம்பும்.

இதுதான் நாம கடவுள கண்டுபுடிக்கறதுக்கும் பண்ற வேலை. மொதல்ல அது எப்பிடின்னு தெரிஞ்சாத்தான டெஸ்டர் எடுத்துட்டு போறதா இல்ல பாரகான் செருப்பு போட்டு போணுமான்னு தெரிய. என்ன எதுன்னே தெரியாம, இருக்கு அல்லது இல்லைனு எத வச்சு சொல்ல முடியும்? 'இந்த வகைல' பரிசோதித்ததில், 'நாம் வரையறுத்த' கடவுள் இல்லை என்பது தெரிகிறதுன்னுதான முடிக்க முடியும்?

இங்க கடவுள் குறித்தே முப்பத்து முக்கோடி + 4296 + 3 + 1 வெவ்வேறு கருத்துக்கள் இருக்கே. உண்மைல பாக்கப்போனா ஏதியிஸ்ட்கள் கடவுள் உண்டா இல்லையான்னு ஆத்திகர்களோட மேட போட்டு விவாதிக்கக் கூடாது. ஒவ்வொரு மதத்தச் சார்ந்த ஆத்திகர்களுக்கும் மேட போட்டு அவங்கவங்க கடவுட் கொள்கை மற்றும் மாற்று மதக் கடவுட் கொள்கையப் பத்திப் பேச விடணும். இப்டி பேச விட்டாலே போதும், இவனுத அவன் கிழிப்பான், அவனுத இவன் கிழிப்பான். ஏதியிஸ்ட்சோட வேல எளிதா முடிஞ்சுடும். ஐடியா இல்லாத boys.

Ironically, எனக்கு ஆத்திகர்கள் பேசப் பேச கடவுள் மேல அவநம்பிக்கையும், நாத்திகர்கள் பேசப் பேச கடவுள் மேல நம்பிக்கையும் வருது.

சரி, இப்ப back to the question, கடவுள் இருக்கா இல்லையா? சுஜாதா தன்னோட அந்திமக்காலத்துல இந்தக் கேள்விக்கு ஒரு பதில் அளித்திருப்பார், கடவுள் உண்டு, கடவுள்கள் இல்லைன்னு. இன்றைய முதிர்ச்சி மற்றும் புரிதல வச்சு நம்ம நிலைப்பாடும் இதுதான். ஓர் அமீபாவையும், ஆன்றோமீடாவையும் கனக்ட் செய்யும் ஓர் ஆலினால் கடவுள் - உண்டு.

How did it all begin? 

தெரியல. It just happened.

Is there other intelligent life in the universe? 

இதுல முதல்ல கவனிக்க வேண்டிய சொற்கள், 'other' - 'intelligent' - 'life' - ஆனாலும் இந்த மனுசப்பயலுக்கு இருக்கும் அதுப்பு இருக்கிறதே அதுப்பு. First of all, எது intelligence என்று சொல்ல இவன் யார்? Intelligence என்பதை வரையறுப்பது எது? 

ஒரு தேனீக்கு இருக்கும் அறிவு, நுட்பம் நமக்கிருக்கிறதா? ஒரு எறும்புக்கு இருக்கும் பலம் நமக்கிருக்கிறதா? எதை வைத்து நம்மை நாமே intelligents என்று கூறிக்கொள்கிறோம்? (சுற்றுப்)புறத்திலிருப்பதை எல்லாம் தன் அரிப்புக்கும் வாழ்க்கைக்கும் சிதைத்து, அழித்து, உருக்குலைத்து, இறுதியில் தனக்குமில்லாமல் அடுத்த உயிரினங்களுக்குமில்லாமல், ஓசோனில் ஓட்டை போட்டு, தன் பேராசை மற்றும் அகங்காரத்தால் தன் கண் முன்னாலேயே சக மனிதர்களும் ஏனைய உயிர்களும் இறப்பதையும், கொல்லப்படுவதையும் கண்டும் காணாமலும், எங்கெல்லாம் முடிகிறதோ, அங்கே தன் கரத்தாலேயே சக மனிதனைக் கொல்லவும் தயங்காத இந்த மனித இனத்தை 'intelligent life' என்ற அடைமொழியோட அழைப்பதற்கு நம்மை நாமே துப்பிக்கொள்ளலாம்.

மேலும், இங்கே universe என்று கூறப்படுவது ஒட்டு மொத்த universe அல்ல. Observable universe என்று கூறுவார்கள். அதாவது நம்மால் காண முடிந்த அண்ட எல்லை. கடற்கரையில் நின்று பார்த்தால், வெகுதூரத்தில், horizonனில் பூமியும் வானமும் முத்தமிடுவதைக் காண முடியுமே, அது போன்ற ஒரு எல்லை. அதற்கு அப்பாலும் பூமியும் வானமும் இருக்கும்தானே? அது போலவே இந்த அண்டமும், இதுவரை நம்மிடமிருந்த அறிவியல் சக்தியையெல்லாம் கொண்டு நம்மால் அடைய முடிந்த ஒரு துளி. அதற்கு அப்பாலும் வானமிருக்கிறது, கடல் இருக்கிறது, ஓர் அண்டமிருக்கிறது. அதை இன்னும் நம்மால் அடைய முடியவில்லை. பூமியைச் சுற்றி முடிக்கப்போகிறேன் என்று கூறிப் புறப்பட்ட ஊரும் நத்தையாய் இருக்கிறோம்.

லைஃப் அப்டிங்கறது என்ன? உயிரா? கைகால் இருக்கணுமா? பெரிய கண்ணு? ஏதேனும் இயக்கம் இருக்கணுமா? கிள்ளினா வலி தெரியணுமா? ஒளிரும் சூரியன்லயும், கல்லாகுற மரத்துலயும், மணலாகுற கூழாங்கல்லுலயும் (தத்துவார்த்த ரீதியில் இல்ல, அறிவியல் பூர்வமாவே ஓர் உயிர் இருக்கறதாதான் பாக்கறேன்). ஆக, நாம வரையறுத்துருக்க so called 'other' 'intelligent' 'life' அச்சு அசலா இருக்க வாய்ப்பிருக்கான்னு தெர்ல, ஆனா வெவ்வேற உயிரிகள் இருக்க நிச்சயம் வாய்ப்புண்டு. யாருக்குத் தெரியும், அதுக டெய்லி வந்து நம்ம காதுலயேகூட கக்கா போய்ட்டிருக்கலாம். நாம உணரலன்றதுக்காக இல்லவே இல்லேன்னு ஆகிடுமா என்ன? 

Can we predict the future? 

The future அப்டின்னு எத சொல்றாங்கனு ஒரு முடிவுக்கு வரணும். இந்த உலகம் மொத்தமும் ஒரே விதியிலதான் இயங்கிட்டிருக்கு. அத்தனை பேருக்கும் விதிகள் சமம். ஒரு கத்தியக்கொண்டு கொழந்தைய அறுத்தாலும் கோமாதாவ அறுத்தாலும் ரெண்டுக்கும் ரத்தம் வரும், செத்துப்போகும். இப்பிடி எல்லாத்துக்குமே ஒரு வினை - விளைவு சொல்லலாம்.

Predict பண்றதுனு இவங்க கேக்கறது என்னது? ஃப்யூச்சர்ல கார்கள் எப்பிடி இருக்கும், பயணம் எப்பிடி மாறும், லைஃப்ஸ்டைல்ல ஏற்படப்போகும் மாற்றங்களா?

Cause and Effect விதிப்படி, இன்னின்னது நடந்தா இன்னின்னது கெடைக்கும்னு எளிதா சொல்லிட முடியும்தான். எடுத்துக்காட்டாக, அறிவியலுக்காகவும் கண்டுபிடிப்புகளுக்காகவும் நேரம், முயற்சி, பணம் முதலியன செலவிட்டா அதில் முன்னேற்றங்கள் வரும். மாறாக, எந்த விலங்கின் மூத்திரம் குடித்தால் முப்போகம் விளையும்னு செலவிட்டா என்னாகும்னு சொல்லிப் புரிய வேண்டியதில்ல.

Prediction என்பது கடந்தகால தரவுகள வச்சும், நிகழ்கால அமைப்புகள வச்சும், எதிர்கால எதிர்பார்ப்புகள்னு ஓரளவுக்கு வரையறுக்கலாம். ஆனா இதுல நாம கவனிக்க வேண்டியது, future predictionல நாம பண்றது - நாம இதுவரை சேத்துவச்சிருக்க, நமக்கிருக்கும் அறிவ வச்சு, தற்போதிருக்கும் அனுபவத்தால, கற்பனையின் உதவியால் நாளையை யூகிக்கிறது. போன வருசம் கொரனா வரும், எல்லாரும் வீட்டுக்குள்ள இருப்போம்னு யாரும் எதிர்பாத்திருக்க மாட்டோம். போலவே, 90கள்ல இணையம் வரும்னும், 2000த்தில் மொபைலில் இத்தகைய அசுர வீச்சும் யூகித்திருக்கமுடியா ஒன்று. இந்த historical data வச்சு பாக்கறப்ப ஒவ்வொரு நூற்றாண்டும் ஒரு பெரிய, யாருமே யூகித்திராத, எதிர்பாராத ஆச்சரியத்தையும் மாற்றத்தையும் தந்துட்டேதான் இருந்திருக்கு.

அதனால, வரும் காலத்த (மிகச்சிறிதா) ஓரளவு யூகிக்கலாமே ஒழிய முழுசா வரையறுக்கவே முடியாது. யாரு கண்டா, அடுத்த அஞ்சு வருசத்துல 'குறிப்பிட்ட' சில நாடுகள், கற்காலத்துக்கே திரும்பற எல்லா சாத்தியக்கூறுகளும் தெரியத்தான் செய்யிது. இதெல்லம் சொல்லிட்டா இருக்க முடியும்? 

What is inside a black hole? 

What's inside a black holeனு எனக்குத் தெரியல, who knows, there may be a white hole. 

Is time travel possible?

பயணம் அப்டின்னு சொல்றதால ஒரு நேனோ கார் போன்ற ஜிகுஜிகு டைம் மிசின்ல ஏறி, எதோ டூர் போறாப்லதான் நம்மளோட  கற்பன போகுது. அதுக்கு ஏத்த மாதிரி, All-lywood படங்களும் ஈரோவும் நண்பனும் டைம் டிராவல் பண்ணி ஜெயமாலினியோட சிக் வெர்ஷன பாக்க போறாப்லயும், இல்லன்னா தன்னோட எம்டன் அப்பன பொறக்க விடாம பண்ண தாத்தாவுக்கே காண்டம் வாங்கிக் குடுக்கறாப்லயும் சீன்கள் அமச்சு நம்மளோட சிந்தனைய ஒரே டைமென்சன்ல வச்சிருக்காங்க.

Yes - Time, Distance and Speed are relative. ஒன்னத் திருகுனா இன்னொன்னு தன்னால திருகும்தான், there is no question about that. ஆனா டைம் டிராவல் அப்டிங்குறது இந்த t = d/s மூலமே சாத்தியப்படுமா?

காலப் பயணம் அப்டின்னு சொல்லாம, கால நகர்வுன்னு கொஞ்சம் யோசிப்போம். காலத்த நகர்த்த முடியுமா? சாதாரணமா ஒரு பயணத்துல இரண்டு புள்ளிகளுக்கு நடுவுல நாம நகர்வோம் (source and destination). இதுல பாக்க வேண்டிய விசயம், நாம நகர்ந்தா, நம்மளச் சுத்தி இருக்கற புறம் நகராது, ஆனா நாம நகர்ந்ததின் பொருட்டால், நமைச் சுற்றிய புறத்தின் வேறொரு பாய்ண்ட்டுக்கு (some point towards destination) நாம போறோம்.

ஒரு graphல X axisல நடக்கும் நகர்வு இது. இது ரெண்டு physical locationனுக்குள்ள உள்ள நகர்வு.

இப்ப அடுத்து இப்பிடி யோசிங்க, நாம ஒரு டைரக்சன்ல நகருறோம், நம்மச் சுத்தி இருக்கற புறமும் அதே டைரக்சன்ல, அதே வேகத்துல நகருது, இப்ப எவ்ளோ தூரம், எவ்ளோ நேரம் பயணிச்சாலும், at the end of the trip, ரெண்டு பேரும் அதே பாய்ண்ட்ல தான் இருப்போம். 

டைம் என்பது physical location அல்ல, அது ஒரு dimension. காலப் பயணம்ங்குறது X & Y axis இல்லாம, மூனாவதா Z axisச கிழிச்சுட்டு போறது. பேரே இல்லாத ஊருக்குப் போக, வாயே இல்லாதவன், காதே இல்லாதவண்ட்ட வழி கேட்டு கண்ணே இல்லாதவன வழித்தொணைக்கு கூட்டிட்டுப்போற கத.

அறிவியல் கூற்றுப்படி, ஒரு துகள எடுத்து, அதோட வேகத்த கூட்டிக்கிட்டே போனா (அந்தத் துகளின்) நேரம் குறையும், கூட்டிட்டே போயி ஒளியின் வேகத்த தொட்டா, அந்தத் துகளின் டைம் பூச்சியமாகும். இதன் அடிப்படைல, ஒளிய விட இன்னும் அதிகம் போனா டைம் நெகடிவ்ல, அதாவது ரிவர்ஸ்ல போகக்கூடும்னு "ஒரு சின்ன கற்பன.meme" சொல்லுது அறிவியல் உலகம்.

ஆனா அதுல பாருங்க, இதெல்லாம் பருமனே இல்லாத ஒளித்துகல வச்சுத்தான் பண்ண முடியும், பருப்பொருள்கிட்ட நம்ம பருப்பு வேகாது. ஏன்னா ஒரு சின்ன குண்டூசிய ஒளியோட வேகத்துல அனுப்ப அண்டம் அளவுக்கு பவர் தேவ. And இதுக்கெல்லாம் மீறி, ஒளியோட வேகத்த மிஞ்சி எதாலயுமே போக முடியாது. தற்போதைய நிலையில் அது ஒரு மூத்திர சந்து அல்லது dead end. அது விதி.

And ஒரு ஆள் (ஒளிப்)புயல் வேகத்துல போயிட்டிருக்கப்ப சுத்தி என்ன நடக்குது என்னனு பாக்க முடியுமா, observe பண்ற நினைவோட அவரால இருக்க முடியுமான்னும் யோசிங்க. 

ஆக, தற்போதும் எப்போதும், time travel is not feasible and not possible.

Will we survive on Earth? 

வழக்கம்போல, இதில் 'we' என்பது யார் என்பதை விளங்க வேண்டும். உலகம் மொத்தமும் இருக்கும் மனிதர்களா? ஆம் என்றால், இல்லை என்பதே பதில். நம் கண் முன்னே தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் உயிரோடு அடித்தும், எரித்தும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் செய்திகள எந்த மனச்சஞ்சலமும் இல்லாம எச்சில் தொட்டு திருப்பிக்கொண்டுதானே இருக்கிறோம்?

ஆகவே, அத்தனை பேரின் survivalலும் இங்கு சாத்தியமில்லை. அதை மனிதனே விரும்புவதுமில்லை.

எத்தகைய சூழலிலும் 'ஒரு குறிப்பிட்ட' இனம் மட்டும் தங்களைத் தற்காத்துக்கொள்ளும். ஏனையோருக்கு \_|_/ தான்.

இதே கேள்வியை வேறொரு வகையில் அணுகினால், அவனவன் வா-வையும், சூ-வையும் மூடிக்கொண்டு, தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருந்தால், அத்தனை பேருக்கும் வாழ வழிவிட்டு பூத்துக் குலுங்கும் பூமி எனும் பியூமி ஹசனமல்லி. 

Should we colonise space? 

இங்கு அறுத்துத் தள்ளியது போதாதென்று அடுத்து ஸ்பேசில் அறுத்து ஆணி அடித்து போட்டோ மாட்டப்போகிறானாம்.

மனிதனின் பேராசையும் ஆளுகை வெறியும் எத்தனை முத்திப்போயுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டே இத்தகைய எண்ணங்கள் மனிதனுக்குத் தோன்றுவது.

உலகை அடிமைப் படுத்தியாயிற்று, ஆனாலும் அதிகார வெறி போகவில்லை, இன்னும் இன்னும் வேண்டும் என்று அதிகாரப் பசி அவனைத் துரத்துகிறது. அதற்குத் தீனியாக, எல்லையில்லா விண்வெளியிலும் தன் ஆட்சியை நிறுவ முற்படுகிறான். அதற்குத் துணையாக அத்தனைக் கோட்பாடுகளையும் கூட்டுச் சேர்த்துக்கொள்கிறான்.

அறுக்க மாட்டாதவனுக்கு அம்பத்தெட்டு அருவாளாம் என்ற சொலவடை தான் நினைவுக்கு வருகிறது.

Will Artificial Intelligence outsmart us? 

Outsmart என்பதன் பொருள் என்ன? நம்மை அவை அறிவில் முந்துவதா?

ஒரு ஓட்டப்பந்தயப் போட்டி நடக்கின்றது என வையுங்கள். அதில் ஒருவர் மற்றொருவரை முந்த, அவர் வேகமாக ஓட வேண்டும் என்பது இல்லை. ஒருவரின் வேகம் குறைந்தாலுமே அவரை மறுவர் முந்தி விட முடியும்.

ஆகவே, AI என்பது நம்மைவிடப் பெரும் அறிவு பெறுமா என்று சொல்ல முடியாது. ஆனால் நாம் நாளடைவில் முட்டாளாகிவிடுவோம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதே மிகப் பிரகாசமாகத் தெரிகிறது. எப்படி என்று கேட்டீர்களெனில், சாரி, இது அறிவியல் பதிவு, அரசியல் பதிவல்ல. 

எப்பேர்ப்பட்ட ஆபத்தான மிசினாக இருந்தாலும், அதன் plugகைப் புடுங்கி விட்டால் அது நின்றுவிடும் என்பதும், யாருக்கும் ஆபத்து விளைவிக்காது என்பதும் மிசின் விதியில் உள்ளது. ஆனால், அந்தப் plugகை இன்ன தருணத்தில் புடுங்கி விட வேண்டும் எனும் அறிவு நமக்கு மங்கி விட்டால்? சுத்தம் ஸ்ருதிலயம்.

ஆக, இதற்கான பதில், அவை அறிவில் நம்மை முந்தாது, நாம் முட்டாள்தனத்தில் முந்தி விடுவோம்.

How do we shape the future? 

Set your priorities right. Do not harm self / others. Mind your fucking own business. 

இதைக் கல்வெட்டில் வெட்டி, தினமும் பூசித்துப் பாலோ செய்து வந்தால் எப்பிடியாப்பட்ட ஷேப்பில் வேண்டுமோ அப்பிடியாப்பட்ட சிக்ஸ் பேக் ஷேப்பில் பியூச்சரை அமைத்துக்கொள்ளலாம்.

~ ~ ~




Comments

  1. மகிழ்ச்சி.படிச்சிட்டு அடுத்து எழுதுங்க.

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...