தாலிloquy



இன்று இதற்கொரு முடிவு எட்டவேண்டும் என்ற நம்பிக்கையோடு பாத்ரூமுக்குள் நுழைந்தேன் நான்.


முந்தின வாக்கியம்நுழைந்தேனிலேயே முடிவு பெற்றிருக்கலாம்தான். அந்தநான்தேவையற்றதே. ஆனால் அந்த நானை இந்த நான் அடுத்த வாக்கியத்தில் விளக்கவிருப்பதால் லீடு கொடுக்க வசதியாக இடம்பெற்றது. 


அந்தநான்என்பது பாத்ரூமுக்குள் நுழைந்த, என்என் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும் நான். இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நான் அல்ல. 


ஏனெனில், இந்தக்கதையின் ஜானரை வைத்து, சிலர் (என் [எழுதிக்கொண்டிருக்கும் நானின் என்] கணக்குப்படி ஏழு பேர்), ‘என்ன பாய் சொந்தக் கதையா?’ என்று இளித்தபடி வருவர். 


அவர்களைப் புறந்தள்ளிவிட்டு பாத்ரூமுக்குள் நுழைக. தயங்காமல் நுழைக. இன்று உள்ளே வேறு எதுவும் செய்வதாய் இல்லை. மனசு சரி இல்லை. 


நான் - ஏதோ ஒரு நான். பெயரா முக்கியம்? ஆம், பெயர் முக்கியம் என்பவர்கள் முரளி, மோகன், ராகவன், ஆனந்த், ஜகன், சேகர், குமரன், ரவி, செந்தில், சங்கர், சரவணன் இப்படி ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்க. 


சற்று சீரிய கூரிய மூளையாயிருந்தால் இப்பெயர்களுக்குள் ஓர் pattern இருப்பதை, அது நைண்டீஸின் மோஸ்ட் காமன் நேம்களைக் குறிப்பதை நீங்கள் இன்னேரம் கண்டுபிடித்திருக்கக் கூடும். கண்டுபிடிக்காதோருக்கு இதோ ஒரு க்ளூ. இப்பெயர்களுக்குள் ஓர் ஒற்றுமை உண்டு (அது குறிப்பிட்ட ஒரு காலத்தைக் குறிப்பது. கண்டுபிடியுங்கள்).


வரலாற்றில் எந்தக் காலக்கட்ட கிட்சுக்குமில்லாத ஒரு பெருந்துயரம் எங்கள் காலக் கிட்சுக்குண்டு. ‘வரலாற்றில் எந்தக் காலக்கட்ட கிட்சுக்குமில்லாத ஒரு பெருந்துயரம் எங்கள் காலக் கிட்சுக்குண்டுஎனக்கூற எல்லாக் காலக் கிட்சுக்கும் ஒரு பாய்ண்ட் உண்டென்றாலும் எங்கள் நைண்டீஸ் கிட்சுக்கு அவை புல்லட் பாய்ண்ட்ஸாக உள்ளது. 


புல்லட் என்றதும் டாகுமெண்டில் வரும் 

  • புள்ளி 
  • வரிசைக்கிரம 
  • பாய்ண்ட் 

என எண்ணாதீர்கள். 


தோட்டா எனப்படும் ரியல் புல்லட் நெஞ்சில் பாய்ந்த பாய்ண்ட்ஸ்கள் அவை. 


ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ‘விடைபெறும் வாழ்க்கை முறை’, ‘மாற்றம் பெறும் வாழ்க்கை முறை’, ‘புதிய வாழ்க்கை முறைஎன்று இருக்கும். 


ஒருவர் ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு மாறிக்கொள்ள, இவைகளுக்கு மத்தியில் ample time இருக்கும். இந்த நைண்டீஸ் பீரியடானது, எது வருகிறது, எது தங்குகிறது, எது விடைபெறுகிறது என்பதையெல்லாம் அறிய முற்படுமுன்னமே புதுப்புதிதாக மாறிவிடுகிறது, பேஜர் முதல் பெட்ரோல் விலை வரை, செல்போன் முதல் செகரடேரியட் வரை. 


வரலாற்றின் ஆகப்பெரும் transition phase இந்த 90s காலக்கட்டம் தான். கடைசியாக இப்பேர்ப்பட்ட transition, மனிதன் சக்கரத்தையும் நெருப்பையும் கண்டுபிடித்தபோது நிகழ்ந்தது. 


நைண்டீஸின் வாழ்க்கையானது, மாற்றத்தை ஏற்று, முன் செல்லும் முன்னங்காலாகவும் இல்லாது, பாரம்பரியத்தில் தங்கி நிற்கும் பின்னங்காலாகவும் இல்லாது, நடுவில் தொங்கிக்கொண்டிருக்கும்சரி விடுங்கள்.


பழம் தின்று கொட்டை போட்டவையிலிருந்து நேற்று முளைத்த டூகே வரைக்கும் நைண்டீஸிடம் ஏளனமாகப் பார்க்கும் ஒரு - (ஏகப்பட்டவையுண்டு, ஆனால் பெருவாரியாக ஒரு) - விடயம் உண்டு. அது - திருமணம். நைண்டீஸைப் பொறுத்தவரை அது திருமணமல்ல, Screwமணம். இதென்னடா இது? சென்னை நான்கு சபாக்காமடி போலிருக்கிறதே என்று காண்டு ஆக வேண்டாம். ட்ரெண்டிங்கில் இருப்பதற்காக இந்தியஸ் ஸ்டாண்டப்புகளை பிஞ்ச் வாட்சிங் செய்துகொண்டிருக்கிறேன். அதன் பாதிப்பாக இருக்கலாம். 


ஏழைகளின் எட்டாக்கனி இந்தத் திருமணம். அதுவும் நைண்டீஸ் கிட்ஸ்களுக்குக் கிட்டாக்கனி இந்தத் திருமணம். வரலாற்றில் எப்போதுமில்லாத அளவுக்கு மேற்றிமோனிகளும், புரோக்கர்களும், குருட்டு டேட்டிங் ஆப்புகளும் உச்சத்திலிருக்கும் காலத்திலும், ஊரெங்கும் தீபாவளி, எனக்கோ nyctalopia எனும் கணக்காக ஆகிவிட்டிருக்கிறது நைண்டீசின் பெரும்பாலானோர் வாழ்க்கை. அதென்ன பெரும்பாலானோர்? let them go to hell. இங்கே நம், அதாவது என் வாழ்க்கையப் பற்றித்தான் பேச்சு. 


உங்களிடத்தில் பேசிக்கொண்டே இருந்ததில் நிறைய தண்ணீரை ஷவரில் வடித்திருக்கிறேன்போல, ஹாலிலிருந்து எச்சரிக்கைச் சத்தம் வருகிறது. அவர்கள் அறிய மாட்டார்கள், பாத்ரூமுக்குள் நான் வடிப்பது ஷவர் நீர் அல்ல, என் சோகத்தை மறைக்கும் cover நீர் என்று. இந்நிலையில், “நான் மழையில் நடப்பதை விரும்புகிறேன், ஏனெனில் நான் அழுவதை யாரும் அறியமாட்டர்என்று சொன்ன நடிகர் சார்லியைக் கோடம்பாக்கம் ஏன் கொண்டாடாமல் விட்டது என்பது புரியவில்லை. என்னதான் பாரீன் நடிகர் என்றாலும் கொண்டாடியிருக்க வேண்டும்.


எல்லாக்காலக்கட்டத்திலும் peer pressure என்பது இருந்ததுதான். இல்லை என்று கூறவில்லை. ஆனால் அது 24/7, வீட்டு கேட்டை ஸ்க்க்ரீச்செனத் திறந்து உட்புகுந்து, உள்ளங்கைப் போன் வரை வந்து என்னேரமும் நம்மை அமுக்கிக் கொண்டிருப்பது வரலாற்றில் புதிது. 


இதுவரை என்னவெல்லாம் கேள்விப்பட்டிருப்போம்? ‘பக்கத்துவீட்டு பையனப்பார், கணக்குல செண்ட்டம் உன்னுது டோட்டலே டூ டிஜிட்’, ‘சித்தப்பா பையனப்பார் அவ்ளோ பெரிய கம்பெனில ஆயிரக்கணக்குல சம்பளத்துல வேலையாம், அதுவு, அம்மாம்பெரிய ஊரு ராம்னாட்டுலயாம்’. நம்ம புதுத்தெரு ராதிகா பொண்ணு செல்வப்பிரியா, கல்யாணமாகி ஒரே மாசத்துல புள்ள பெத்துட்டாளாம், நீயும் இருக்கியே மாசாமாசம் விஸ்பர் வாங்கிட்டுஎன்பதாக, சுற்றுவட்டார ஜாக்ரஃபிக்களிலேயே இந்த கம்பேரிசன் மற்றும் ப்ரெஷர்கள் இருக்கும். 


ஆனால் இப்போது, மொபைலைத் திறந்தால் போதும், ‘அடடே, இவன் செத்துவிட்டான் என்றல்லவா நினைத்தோம், என்ன இது, checked-in to hollow valley என்று அனிமூன் போட்டோ போட்டிருக்கிறான்?’, ‘இங்க பாரு உமாவ, the best thing ever happened to me was you என்று திருமணமான இரண்டாவது நாளே அஸ்பண்டை டேக் செய்து ஒரு பேஸ்புக் போஸ்ட். அதில் லைக்கிலும் கமெண்டிலும் அவளின் எண்ணற்ற எக்சுகள்’ - இப்படியான ஸ்டேட்டஸ் வடிவில் சும்மா இருக்கும் சுகுமார்களையும் சுரண்டிச் சுரண்டி வலிய வந்து வம்பிழுக்கும் வரலாற்றில் போக்கு வேறு யாருக்கு இருந்திருக்கிறது சொல்லுங்கள்?


நான் சுற்றி வளைத்துப் பேசவில்லை. எனக்குக் கல்யாணம் வேணும். டாட்.


நானும் வீட்டில் எத்தனை எத்தனையோ முறைகளில் சமிக்ஞை கொடுத்துப் பார்த்துவிட்டேன். கேட்கும்போதெல்லாம் சுந்தர் சியைப் பார்த்த வடிவேலுவைப்போல் டேக் டைவர்சன் எடுத்து விடுகிறார்கள்.

 

சொல்லவே கூச்சமாயிருக்கிறது சார். சிறு வயதில், என் அத்தைப் பெண் சேட்டை செய்யும் போதெல்லாம் இப்பிடியே பண்ணிட்டு இருந்தன்னா இவனுக்கு ஒன்ன கட்டி வச்சிடுவோம் பாத்துக்க என்று என்னைக்காட்டி பயமுறுத்துவார்கள். அப்போதெல்லாம் அதைச் சீரியசாக எடுத்துக்கொண்டு நான் க்லௌட் நைனில் பறப்பேன் தெரியுமா? அதிலிருந்து கீழே இறங்கத் தெரியாமல் வானத்திலேயே சுற்றிக்கொண்டிருப்பேன். பிறகு அதே கனவில் ஓமொர்க் செய்யாமல் ஸ்கூல் சென்றதால் கௌரி மிஸ் இடுப்பில் சுரீரெனக் கிள்ளுகையில்தான் க்லௌட் உடைந்து கண்ணீர் மழையாய் நிலத்துக்கு வருவேன். அப்போது மிஸ் என்னை ஆல்ரெடி தரையில் போட்டு புரட்டிக்கொண்டிருப்பார். அதை ட்ரோன் வழியே பார்ப்பவருக்கு எதோ மண்ணில் அப்பளம் பொரிப்பது போன்ற தோற்ற மயக்கத்தைக் கொடுக்கும். 


சேட்டை செய்தால் கட்டி வைத்துவிடுவேன் என்று அவர்கள் சொன்னதை நம்பி அவளை மீண்டும் மீண்டும் ஏதாவது சிக்கலில் மாட்டி விடுவதுண்டு. இப்படியே செய்தால் ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய், என் கையில் தாலியைக் கொடுத்து, ம்ம் கட்றா தாலிய அவ கழுத்துல என்று கட்டி வைத்துவிடுவார்கள் என்றெண்ணியதுண்டு. ஆனால் இதன் பலனாய் சித்ரா என்னை வெறுத்ததுதான் நடந்தது. 


ஒரு சனிக்கிழமை மாலை, தூரதரிசனத் தொலைக்காட்சியில் புள்ளிகளோடும் வரிவரிக் கோடுகளோடும் ஒளிபரப்பப்பட்ட ஒரு படத்தில், மீசை வரையப்பட்ட மேச்சோ மேன் ஒருவன் ச்சப்பியான ஒரு பெண்ணைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு நடந்தான். அவள் புதிதாக நீச்சல் பழகுபவள் போல் இரு கால்களையும் zigzag ஆக அசைத்துக்கொண்டிருந்தாள். பிறகு ஒரு கேமரா அந்த மீசையனைக் க்லோசப்பில் காட்டியது. அது வெயில் சீசன் என்பதன் காரணமா அல்லது அங்கு ஃபேன் எதுவும் இல்லையா, அல்லது ஃபால்ஸ் சீலிங் இல்லாது, வெறும் அஸ்பெஸ்டாஸ் ஓடு போட்ட திரீஃபேஸ் இண்டக்சன் மோட்டர் ரூம் என்பதாலா தெரியவில்லை, அவனுக்கு வியர்த்து ஊற்றியது முகமெல்லாம்.


மறுபக்கம் அந்த ச்சப்பி மில்ஃப், அவளை யாரோ பளார் பளார் எனக் கன்னத்தில் இரு புறமும் அறைவதுபோல் முகத்தை வெட்டி வெட்டித் திருப்பிக்கொண்டிருந்தாள். 


அந்த மீசையன் பிறகு (மூக்கில் கைவைக்காமல்) ப்ராணாயாமா செய்வதுபோல் கண்ணை மூடி மூச்சை இழுத்து விட்டான். பிறகு ஒரு பஞ்சாயத்துக் காட்சி, பின் அந்தப் பெண்ணையே அவனுக்குக் கட்டி வைத்தார்கள். பிறகு அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தனர். இறுதியாக சுபம் போட்டு முடித்த சில நிமிடங்களில் சோபனா ரவி செய்தி வாசிக்கத் துவங்கிவிட்டார். 


அடடே, ஒரு பெண்ணோடு மூச்சுப் பயிற்சியில் இருந்தால் அவளை நமக்குக் கட்டி வைத்துவிடுவார்களா!!! அதன்பின் நாமும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கமுடியுமா? என்ற ஆச்சரியத்தகவலை அறிந்ததையடுத்து, ஓர் ஐடியா முளைத்தது. அதைச் செயல்படுத்தி விடுவது என்ற முடிவுக்கு வந்தேன். 


அப்போது நினைவுக்கு வந்தவர்தான் எதிர்வீட்டு தாட்சாயணி அக்கா. இதயம் பேசுகிறது, கல்கண்டு, ராணி போன்ற புக்குகளை வாராவாரம் கடையிலிருந்து வாங்கி வந்து தருவது, கண்மாய்க்குத் துணி துவைக்கத் துணைக்குப் போவது போன்றவை எனக்கு ஹாபிஸ். அக்காவும் எனக்கு அடிக்கடி சமைத்துக்கொடுத்து, நிறைய கதை சொல்லிப் பேசிப் பழகிய ஒரு ஆல்ரௌண்டர். 



என்னுடைய கணக்கு, தாட்சாயணி அக்காவைக் கல்யாணம் செய்துகொண்டால் எல்லா ஓம் ஒர்க்கும் அவரே செய்து தருவார். டெஸ்டுக்கும் கவலையில்லை, நிறைய தின்பண்டம் ஆக்கித் தருவார், குறிப்பாக அக்காவோடு இருக்கையில் எங்கள் வீட்டில் எனக்கு எதும் வேலை சொல்ல மாட்டார்கள். ரேசன் வாங்கப் போக வேண்டுமென்றாலும் அக்காவே எங்கள் வீட்டு கார்டையும் வாங்கிக் கொண்டு, என்னையும் கூட்டிக் கொண்டு சென்றுவிடும். It’s a Win-Win. ஆங்கிலத்தில் சொல்வதென்றால் one size fits all என்பதான ஒரு சினாரியோ. 


ஒருநாள் பாக்யா வாங்கிக் கொடுக்கையில், பணியாரம் செஞ்சுருக்கேன்டா, சாப்ட்டுப்போ என்றார் தாட்சாயணி அக்கா. (இந்த திரில்லிங்கான இடத்தை, “ஒருமுறை லீவுக்கு சேலத்தில் அத்தை வீட்டுக்குச் செல்லும்போதுஎனும் ஜானரில் சிந்திக்கும் உங்கள் பெர்வெர்டட் புத்தியை உமிழ்கிறேன்). தாட்சாயணி அக்காவின் பணியாரம் எனக்கு மிகவும் பிடிக்குமென்பதால் (மீண்டும் பெர்வெர்சனை உமிழ்கிறேன்) அவர் சொன்னதும் நானும் கிண்ணம் நிறைய பணியாரங்கள் நிரப்பிக் கொண்டு, அவரருகிலமர்ந்து அம்புலிமாமா திருப்பிக் கொண்டிருந்தேன். அதன் அட்டைப் படத்திலிருந்த, வெள்ளப் பேயைத் தோளில் போட்டு, இத்தேப்பெரிய வாள் கொண்டு நடந்த மன்னனைப் பார்த்ததும் மைண்டானது DD-யுடன் மேப்பிங் செய்தது. 


அக்கா எனதருகே  மல்லாக்கப் படுத்து, செய்னை பல்லால் கடித்தவாறு பாக்யா கேள்வி பதில் படித்துக் கொண்டிருந்தாள். அவ்வப்போதுக்லூகுலூ க்லூகுலுஎன்று எதையோ படித்துச் சிரித்தாள். 


சரி, இதுதான் சமயம் என்று நினைத்தபடி, அக்காவின் முகத்திற்கு அருகில் சென்று பூம்பூம் மாடு போல், ஆனால் சுலோவாக (infinity வடிவில்) தலையாட்டியபடியும், ஜல்லிக்கட்டு காளைபோல் மூச்சைச் சப்தமாக புஷ் புஷ்எனவும் புஷ்ஷிக்கொண்டிருந்தேன். அல்மோஸ்ட் கச்சிதமாக அந்த மோட்டார் ரூம் மீசைக்காரன்போல்தான் செயல்பட்டேன்.


என்னடா பண்ற? என்று சிரித்தபடி கேட்ட அக்காவிடம், ‘ஒங்கள கல்யாணம் பண்றதுக்காகத்தான்என்று கூறி, முகத்தை இன்னும் கிட்டே கொண்டு போய், இப்டி பண்ணாத்தான் ஒங்கள எனக்குக் கட்டி வெப்பாங்க என்றேன்.


<பவா செல்லத்துரை வாய்ஸ் ON>


நண்பர்களே,


கட்டி வைத்தார்கள் நண்பர்களே. கட்டித்தான் வைத்தார்கள்.


கட்டி கட்டியாய் உடலெல்லாம் ஆகும்வரை, வை வை என்று வைத்தார்கள்.


அங்கு மட்டும் அது நானாக இல்லாமல் ஒரு துணியாக இருந்திருந்தால், வெள்ளாவி வைத்து வெளுத்ததுபோல் நான் வெளுத்திருந்திருப்பேன். ஒரு பெண்ணாக இருந்திருந்தால் டாப்சீ பன்னுவாக ஆகியிருப்பேன். 


உங்கள் வீட்டு அடியில்லை எங்கள் வீட்டு அடியில்லை நண்பர்களே. தீபாவளிக்கு வாங்கிய மிச்ச மீதி வெடியை கார்த்திகையன்று மொத்தமாக வெடித்துத் தீர்த்து விடும் ஒரு முஸ்தீபு தெரியுமே பொறுக்கி பசங்களிடத்தில், அப்படி ஒரு முனைப்புமிக்க அடி நண்பர்களே. 


அத்தனை அடிகளுக்குள்ளும் எனக்குள் தொக்கி இருந்த ஒரே கேள்வி, அந்தப் படத்தில் இப்டி அந்த மீசக்கார நண்பனையும் அடிக்கறாப்ல காட்டிருந்தா நா வேற ப்லான் போட்டிருப்பேனே, ஸ்க்ரிப்ட் ரைட்டர் ஏன் அந்த சீனை எழுதவில்லை, அல்லது எழுதி சூட் செய்யப்பட்ட அந்தச் சீனைக் கத்தரிக்க அந்த எடிட்டரை உந்தியது எது? விடையில்லா வெளி என்பார்களே, அந்த வெளியில் நான் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். வலிபொறுக்காது சரீரத்தைச் சரித்துக் கொண்டிருந்தேன்.


<பவா செல்லத்துரை வாய்ஸ் OFF>


பிறகு என்னுடைய உலகமே மாறியது.


பழைய ஸ்கூலிலிருந்து நிறுத்தி விட்டு புதிய ஸ்கூலில் சேர்த்தார்கள். இத்தனைக்கும் பழசு புதுசு இரண்டுமே பாய்ஸ் ஸ்கூல்தான்.


வீட்டிற்கு எந்தச் சொந்தக்காரன் வந்தாலும் பேச வேறு எதுவும் இல்லாமல் awkward silence வரும்போதெல்லாம் என் கதையை ஆரம்பித்து விடுவர். 


முதலில் அச்சச்சோஅப்பிடியா (shock smiley) என்று கேட்டவர்கள், பின் சிரிக்க ஆரமித்தனர். பின் கைகொட்டி சிரித்தனர், பின் என்னைக் கொட்டிக் கொட்டிச் சிரித்தனர். கண்டிக்கிறான்களாம் கண்டாரோலிகள். 


இதற்கிடையே தாட்சாயணி அக்காவுக்குக் கல்யாணம் நடந்தது. அதற்கும் எல்லோரும் சேர்ந்து, ’என்னடா உன் ஆளுக்கு கல்யாணமாமே?’ என்று பகடி செய்தனர்.


திருமணம் முடிந்து, மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்ல அம்பாசடர் காரில் ஏறுமுன், தூரத்தில் நின்றுகொண்டிருந்த என்னிடம் வந்து, இனிமே சமத்தா இருக்கணும் என்று கூறி, என் தலையைச் சிலுப்பி விட்டு, மாலையும் கழுத்துமாக தாட்சாயணி அக்கா விடைபெற்றார் என்று கூறுவேன் என்றுதானே நினைக்கிறீர்கள்? அப்படியெல்லாம் ஒரு எழவும் நடக்கவில்லை. 


ஏதோ வரதட்சணைக் குளறுபடிபோல, கல்யாணத்தன்றே தாம்தூம் என தாட்சாயணி அக்கா வீட்டில் களேபரம், அடிதடி. படங்களில் யாரையோ அடிக்க ரவுடிகள் கார் சேசிங்கில் செல்வார்களே, அதுபோல் காரில் ஏறிச்சென்றனர் தாட்சாயணியக்காவும் அவரின்லா குடும்பத்தினரும். 


காலம் கடந்தது.


நாட்டில் பீயெம்கள் இறந்தனர்.


சீயெம்கள் மாறினர்.


இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை மாறியது.


டிரெண்டிங்கில் இருக்கும் மியூசிக் டைரக்டர் மாறினார்.


டீமேட் ஷேர்கள் வந்தன. 


ஹீரோயின்கள் மாறினர்.


ஹீரோக்கள் அந்த ஹீரோயின்களின் இடுப்பைக் கிள்ளினர்.


ஹீரோயின் நடிகைகள் மதர் நடிகைகளாக மாறினர்.


மதர் நடிகைகளின் மகள் நடிகைகள் ஹீரோயின்களாக மாறினர்.


ஹீரோக்கள் அந்த மகள் ஹீரோயின்களின் இடுப்பையும் கிள்ளியபடி தொடர்ந்தனர்.


சேனல்கள் மாறியது.


செய்திகள் மாறியது.


நாங்களும் வேறூர் மாற்றலானோம்.


இதோ, இன்று இது நான்காவது ஊரில் ஐந்தாவது வீடு. (அது ஒரு சொல் நயத்துக்காக சொன்னது, இது நான்காவது ஊரில் ஏழாவது வீடு).


என் நண்பர்களுக்கு, நண்பர்களின் தம்பிகளுக்கு, தம்பிகளின் நண்பர்களுக்கு என எல்லோருக்கும் திருமணம் முடிந்தது. எனக்கு எப்போம்மா கல்யாணம் எனக்கேட்டதற்கு, முதலில் செட்டில் ஆகிக்கடா என்ற பதில் வந்தது. 


இன்னேரம் முருகப் பெருமானாய் இருந்திருந்தால், அன்னையே, செட்டில் என்றால் என்ன? எனக்கேட்டிருப்பேன்.

நான் பெருமானல்லன், வெறும் சிறுமானென்பதாலும் செட்டில் பற்றிக் கேட்டால் செவிட்டில் விழக்கூடும் என்பதாலும், சரி, செட்டிலாகிப்போம் என்பதில் செட்டிலானேன். 


வாடகை வீடு சொந்த ஃப்லாட் ஆனது, கட்டிய டாக்ஸ், ஔஸ் லோன் வடிவில் டாக்ஸ் சேவிங் ஆனது. வீட்டில் தேவையற்ற அனைத்துப் பொருட்களும் சேர்ந்தது.


சரி இப்போது கேட்போம் என ஒவ்வொரு புது வருடப்பிறப்பிற்கும், பிறகு ஒவ்வொரு புதுப்பட ரிலீசுக்கும் கேட்கும் போதெல்லாம் நேரம் வரும்போது செய்வோம் என்ற பதிலே கிடைத்தது.


ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய், இந்த முறை அத்தைதான் இதற்குச் சரியான நபர் எனத் தேர்ந்தெடுத்தேன். (மீண்டும் சேலம் அத்தை வீட்டில் இருந்தபோது எனும் மோடுக்குச் செல்வோருக்கு மீண்டும் துப்பான்கள்).


அத்தையைப் பற்றிச் சொல்ல வேண்டும். பெயரளவில்தான் அவர் பெண். மர்மதேசத்தில் ஒரு கிழவி வருமே. அப்படியே அக்கிழவியின் ஜெராக்ஸ். அத்தையின் தாட்பூட் குரலாகட்டும், எதையும் மிடுக்கென உடைத்துப் பேசும் தொனியாகட்டும், அத்தை ஒன்று சொன்னால், குடும்பம் மொத்தத்திற்கும் அது பிடிக்காவிட்டாலும், சொன்னதை வேத வாக்காக எடுத்துச் செய்வர். 


அத்தை எதையும் பட்டு பட்டென்று அவருக்கு அந்தக் கண நேரத்தில் தோன்றியதை முடிவெடுப்பார். அதற்கு லாஜிகல் காரணமோ வேறேதுவுமோ இருக்காது. அது நல்லதோ கெட்டதோ, சொன்னதைச் செய்வார். ஒரு முறை சொல்லிவிட்டால் தன் பேச்சைத் தானே கேட்காத ஒரு லேடி ஜோசஃப் விஜய் அத்தை. 


அத்தையின் கணவர் இறந்ததும், அவரின் ஓட்டல் தொழிலை ஒத்தை ஆளாக மேய்த்து, இன்று லட்சாதிபதியாகத் திகழ்கிறார். மறுதிருமணம் செய்துகொள்வதாகக் கேட்டு வந்த வரனிடம், மாவாட்டும் உரலை வைத்து ஒரு அடல்ஸ் ஒன்லி உதாரணம் சொல்லி மறுத்தனுப்பினார். அந்த எக்சாம்பில் இப்போதும் ஈரம் காயாத மாவாக எங்கள் அனைவர் காதிலும் அப்பியிருக்கிறது என்றால் அது மிகையாகாது. தான் ஒருத்தியாக இருந்து இன்று ஒரு சமையல் சாம்ராஜ்ஜியத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.


இதன் காரணமாகவே அத்தை சொல் பைபிளானது. எல்லாம் அத்தையின் கத்தைப் பணம் செய்யும் வித்தை. 


அத்தையைப் பொறுத்தவரை எதையும் குறையில்லாது முழுமையாகச் செய்ய வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் படுசுத்தமாக இருக்க வேண்டும். சின்ன குறையிருந்தாலும் கொந்தளித்துவிடுவார்.


ஒவ்வொரு முறை அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போதும், என்னடா.. எப்ப ஒனக்கு கல்யாணம்? என்று கேட்பார். நான் ஏதும் சொல்லுமுன் எவராவது உள்ளே புகுந்து டாப்பிக்கை மாற்றி விடுவர். அல்லது டிவியில் ப்ரேக்கிங் நியூசுக்குப் பிறந்த மீவிடியாமவன்கள் டமால் டுமால் மீசீக்கைப் போட்டு அத்தையின் கவனம் வேறெதிலோ போய்விடும்.


இன்று குளித்து முடித்தபின், நாமே நேரே அத்தையிடம் போய், ‘ஏன் இன்னும் இவன் கல்யாணத்த தள்ளிப்போடுறீங்கனு நீயே வந்து கேளத்த, இன்ன தேதிக்குள்ள கல்யாணம் பண்ணி வைங்கனு கண்டிசனாச் சொல்லு, நீ சொன்னாதான் இனி கேப்பாங்க’ எனச் சொல்லலாம் என்பது என் திட்டம். அத்தை சொல்லிவிட்டால் தலையை அடகு வைத்தாவது நடத்தி விடுவர். 


எனது ஷவரின் உஷ்ஷ்ஷ்ஷை மீறி ஹாலிலிருந்து ஒரு கணீர்க்குரல் கேட்டது. 


அத்தை


அடடே, மனுகுடுக்க நெனச்ச கவர்னர் வீட்டு பாத்ரூமுக்களயே எட்டிப்பாத்தாப்ல என்ன ஒரு அதிஷ்ட தினம்டா யப்பா எனக் குஷி குதூகலித்தது. எப்படியும் பேச்சோடு பேச்சாக, எப்படா கல்யாணம் என்று இன்றும் அத்தை கேட்கும். அப்போது, மனதிலிருப்பதைக் கொட்டி வெடித்து விடுவது என்று முடிவெடுத்தேன். 


விறுவிறுவெனக் குளித்து முடித்து, அவசர அவசரமாக பெர்முடாசையும் பனியனையும் மாட்டியபடி நான் ஹாலுக்குச் செல்லும்போதே அத்தை என் திருமணம் குறித்த பேச்சை ஆரம்பித்திருந்தது போல் தெரிந்தது. என்னை அவர் விசாரிக்கும் குரலும், அரை மணி நேரமாய் நான் குளித்துக் கொண்டிருக்கும் கம்ப்லைண்ட்டுக் குரலும் கேட்டது. 


“நம்ம குமார் இருக்கானே அவனுக்கு ஒரு கல்யாணத்த…” என்று கூறிக் கொண்டிருக்கும்போதே,த்த..வாங்கத்த என்று நான் சீனுக்குள் நுழைந்தேன்.


அத்தை என்னைப்பார்த்து எதோ சொல்ல ஆரமித்தவர், அடேஎன்னதிது? என்றார். 


என்னத்த? என்றேன். 


ஏண்டா அரமணி நேரமா குளிச்சனு ங்கொம்மா சொல்றா, காது முழுக்க நொரையோட வந்து நிக்கற. இவ்ளோ பெருசா வளந்துருக்க, இன்னம் ஒனக்கு ஒழுங்கா சோப்புப் போக குளிக்கக் கூட தெரியலியா? இந்த லச்சணத்துல நா ஒனக்கு கல்யாணம் பேசலாம்னு வந்தம்பாரு, என்ன ஒதைக்கணும். நல்லா பெத்து வச்சுருக்கம்மா புள்ள, சூத்துக்கழுவத் தெரியாத புள்ள. மொதல்ல இவன குளிக்க பழகச் சொல்லு, கல்யாணம்லாம் அப்பறம் பேசிக்கலாம். நாலஞ்சு வருசம் போட்டும்“ - 


<பவா mode ON> 


நண்பர்களே, மேற்சொன்ன வாக்கியத் தொடர்களை அத்தை பனிரெண்டு நொடிகளுக்குள் சொல்லிஃப் ஃபுல்ஸ்டாப் வைத்து, நிப்பையும் உடைத்துவிட்டு விறுவிறுவென்று, அவளுக்கென்றே அத்தனை நேரம் காத்திருந்த நீல நிற ஆட்டோ ஏறிச் சென்றுவிட்டாள். அந்தநாலஞ்சு வருசம் போட்டும்’ எனும் வாக்கியம் என் மனத்திற்குள் மீண்டும் மீண்டும் எதிரொலித்து மறைய ஒரு வாழ்நாளாகலாம். 


சற்று நேரத்தில் அங்கிருந்த அனைவரும் கலைந்தனர். என் வாழ்க்கை அங்கே கீழே குலைந்து கிடந்தது.


அப்போது காதிலிருந்த ஒரு நுரை பபுல், ‘டொப்என்ற சப்தத்தோடு உடைந்தது.

Comments

  1. இது உங்க கதையா இல்ல வேற யாரோடது அது ஆனா 90s பசங்க பாதி பேர்க்கு மேல் இன்னும் என் பிரண்ட்ஸ்க்கு கல்யாணம் ஆகல எங்க பசங்களோட பேசும் போது சொல்வாங்க நம்ம செட் சரியான சாபம் பிடிச்சதுனு ஆனா எல்லாத்துக்கும் ஒரு குடும்ப பிரச்சினை காரணமா இருக்கு பொண்ணு கிடைக்காத தால் இல்லனு நினைக்கிறேன் சரி விதியேனு இருக்கானுங்க எப்படியோ உங்க ரைட்டப் எப்பவும் போல நைட்ஸ்��

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂