- Get link
- X
- Other Apps
அண்ணனுக்குப் பெண் பார்க்கப்போகிறோம்.
ஹ.., குறிப்பிட்டுச்சொல்லவேண்டிய அளவுக்கு இதில் அப்படி என்ன சிக்னிஃபிகண்ட் விஷேசம்? இருக்கிறது.
இந்த ‘அண்ணனுக்குப்', ‘பெண்', 'பார்க்கப்போகிறோம்' எனும் ஸ்டேஜை அடைய அவன் எத்தனையெத்தனை பர்முட்டேசன் காம்பினேசன்களில் முட்டி மோதி, முட்டியில் சிராய்ப்பு ஏற்பட்டு களிம்பு தடவியுள்ளான் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.
எழுதினவன் ஏட்டக்கெடுத்தான் ஜோசியக்காரன் ஜோடியக்கெடுத்தான் எனும் கதையாய் அண்ணனுக்கு எக்கச்சக்க அஸ்ட்ராலஜி சிக்கல்கள்.
இவனுக்கு செவ்வாய் தோஷமாம். லேசில் எந்த லேடியும் அமயாதாமாம். ஆக்ச்சுவலி இவன் புடிக்கிற தம்முக்கு இவனுக்கு கருவாய் தோஷம் தான் வரணும். (செவென் mule வயசாவுது இன்னும் அப்பாவுக்கு பயந்துக்கிட்டு திருட்டுதம்மு அடிக்குது நாயி.)
ஒரு முறை அம்மாவிடம், "ஏம்மா அண்ணனுக்கு இன்னும் கல்யாணம் ஆவல?” எனக்கேட்டதற்கு, "அதுக்குலாம் நேரம் வரணும்டா. நேரம் வந்தா எல்லாம் தன்னால நடக்கும்” என்றாள்.
"நேரம் தான் ஆல்ரெடி டிவியிலியே வந்துடுச்சேம்மா” என்றேன்.
ஃபண்டமெண்ட்டல்லி ஷி இஸ் ஒன் ஓல்ட் விமென் என்பதால் அஜ்ஜோக் அவளுக்குப் புரியவில்லை.
"நேரம் வந்தாப் போதும்னா அப்புறம் ஏம்மா ஜோசியம்லாம்?"
“அது.. பொண்ணுக்கும் இவனுக்கும் ஜாதகத்துல பத்துக்கு எட்டு பொருத்தமாச்சும் சரியா இருந்தாதான் அவன் வாழ்க்க நல்லாருக்கும்” என்றாள்.
"எம்மா... சமயங்கள்ல திடீர்னு பாத்தா அண்ணனுக்கும் அப்பாவுக்கும் வித்தியாசமே தெரீல. அண்ணன் ஆல்ரெடி முக்காக்கெழவனாய்ட்டான். பத்து பொருத்தம்லாம் டூ மச். இவன் நெலமைக்கு ஒன்னோ ஒன்னேகாலோ பொருந்துனா போதாதா?"
அந்த நேரம் பார்த்து அங்கே எண்ட்றி கொடுத்தான் அண்ணன்.
அவன் அப்படி ஒரு கிரியேசன். அவனின் கல்யாணப்பேச்சு எங்கெல்லாம் நடக்கிறதோ அந்த இடத்தில் எதேச்சையாக நுழைவதுபோல் நுழைந்து சத்தமில்லாமல் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் ஆகிவிடுவான்.
நடக்கும் எதையும் கண்டுக்காததுபோலவே இருப்பான். ஆனால் காதை அறுத்துப் பேச்சு நடக்கும் இடத்துக்கு நடுவில் வீசியிருப்பான். ஒன்னா நம்பர் FoxBro.
அவன் வந்ததையடுத்து நான், "யம்மா இப்பவே யாரயாச்சும் புடிச்சு கட்டி வச்சுட்டா தேவல. நம்ம வீட்டுக்கு வர பாத்தரம் கழுவற அம்மாவ உத்து உத்துப்பாக்கறான். சுதாரிச்சுக்கோ" என்றதைக்கேட்டு கையில் இருந்த புக்கை என்மேல் வீசினான்.
"புக்குப்படிக்கிறவனுக்கு இங்க என்ன வேல, பாரும்மா உண்மையச்சொன்னா கோவம் வருது" என மேலும் கோர்த்து விட்டேன். அதில் நமக்கொரு ஜாப் சாடிஸ்பேக்சன்.
எங்களைப்பெற்ற தாய் மகராசி எதையோ நினைத்துப் பெருமூச்சு விட்டாள்.
"சரிம்மா மேரேஜ் ஆறதுல வேற என்னதான் ப்ரச்சன இவனுக்கு?"
"நம்ம ஆளுங்கள்லயே நல்ல பொண்ணா அமையணும்லடா.. கெடைக்கமாட்டுதே” என்றாள்.
"ஒங்களுக்கு பலிஜா நாயுடுவேதான் வேணுமா? ஏன் இந்த கம்மவால்லாம் நம்மவா இல்லியா?"
"ம்மா.. வரவர இவன் பேச்சுல ஐயர் பாஷ ஜாஸ்தி வருது பாரு. எனக்கென்னமோ எங்கயோ போய் தயிர்சாதம் மாவடு சாப்புடுறான்னு தோணுது. எனக்கு முந்தி இவன் கல்யாணம் பண்ணப்போறாம்பாரு" என பழிக்குப்பழியாக மிஸ்ஸுக்கிட்ட மாட்டி விட்டான் தட் ஸில்லி கை.
“யம்மா.. இவன் ஜாடைல ஒரு கொழந்தயவே பாத்தேன் தெரு மொனைல.. இவங்கூட அத ஆசையா தடவிக்குடுத்து அன்னிக்கு சாக்லேட் குடுத்திட்டிருந்தான்.. இதெல்லாம் நா வெளிய சொன்னா சோத்துல நீ வெசம் வெச்சிருவன்னுதான் சொல்லல..” என நான் சொன்னதும் அம்மாவுக்கு நிஜமாகவே அண்ணன் மேல் கொஞ்சம் பயம் வந்துவிட்டது.
இப்படி எதாவது கல்யாண கான்வர்சேஷன் தினத்துக்கொன்றாக வீட்டில் நடந்துவிடும்.
~~~
ஜாதி, உள்வட்டம், குலம், குட்டை, ஜாதகம், வயது, ஏனைய பொருத்தம் எனப்பல கட்டங்களைத்தாண்டினாலும், தி ப்ரின்சஸ் இஸ் இன் அனதர் கேஸில் எனும் மெசேஜையே கண்டு நொந்திருந்த என் சூப்பர் மேரியோண்ணனுக்கு திடீரென எல்லாம் பொருந்தி வந்த ஒரு பொண்ணும் அவரைப்பார்க்க ஒரு புதனும் கிடைத்தது.
விசாரித்தவரை, என்னுடைய வுட்பி அண்ணிக்கு ஒரு தங்கையுமுண்டாம். அவள் நல்ல பீசாக இருக்கணும் முருகா என மனமுருக வேண்டிக்கொண்டேன்.
அந்தச்சுபயோக சுபதினத்தில் ஒரு கால்டாக்சி பிடித்து குடும்பமாய்ச் சென்றோம்.
அப்பா முன் சீட்டில் அமர்ந்து கொண்டார். தனக்கு ஜன்னல் சீட் வேண்டுமென்று அடம்பிடித்து அண்ணன் அப்பாவுக்குப்பின் சீட்டில் அமர்ந்துகொண்டான்.
"இன்னும் கார்ட்டூன் நெட்வொர்க்கயே தாண்டாதவனுக்கெல்லாம் கல்யாணம் நடக்குறது பாரதத் திருநாட்லதான் அமையும்" என்று நொந்துகொண்டு நான் நடுவில் அமர, அம்மா மற்றொரு ஜன்னல் சீட்டை எடுத்துக்கொண்டாள் ( கார், பஸ்ஸில் போனாள் அவளுக்கு வாந்தி வரும்.)
அது டவேரா ஜாதிக்கார். பின் பக்க சீட்டில் அத்தையும் மாமாவும் பாட்டியும்.
அமைதியாக வண்டி சென்று கொண்டிருந்தது.
"ஏண்டா, ரோஜா படத்துல வராப்ல எனக்கு மாப்ளையோட தம்பியத்தான் புடிச்சிருக்குன்னு பொண்ணு சொல்லிட்டா என்னடா பண்ணுவ?" என்றேன் அண்ணனைச்சுரண்டி.
"அந்தக் காவாய வச்சுட்டு சும்மா இர்ரா. நீ கண்டதையும் பேசி எதும் கவுத்து உட்றாத. மூடிட்டு கம்முனு இரு” என்றான்.
"தட் பயம் வாண்டட் மகனே"
கார் பெண்ணின் வீட்டை அடைந்தது.
காரை விட்டு இறங்குமுன் அண்ணன் ஒரு முறை தலையை வாரிக்கொண்டான்.
"டேய், அடுத்த மாசம் இலையுதிர்காலம் காணப்போற கூந்தல எத்தன தடவடா தடவிக்குடுப்ப.. எறங்கு எறங்கு"
வாசலுக்கே வந்து வரவேற்றனர் எங்கள் வுட்பி இன் லாஸ்.
அண்ணியையும் அன்னார்தம் தங்கையையும் தவிர பலதரப்பட்ட கருப்பு வெள்ளைத்தலைகள் வாசலில் வணக்கம் வைத்தன.
அப்பாவும் மாமாவும் முன்னே நடக்க, அம்மா அத்தை பாட்டி பின்னே நடக்க, நானும் அண்ணனும் பேக் பெஞ்சராகச் சென்றோம்.
உள்ளே நுழையுமுன் “போட்டுருக்க சர்ட் என்னுது, ஆனா மாப்ள இவர்தாங்க" என்று அண்ணனைக்காட்டி நான் சொன்னது அப்பாவை காண்டேத்தியிருக்கும்போல, முறைத்துவைத்தார்.
ஹால் கொஞ்சம் விசாலமாகவே இருந்தது. அலமாரியில் எக்கச்சக்க ட்ராபிகள். சேர்களிலும், தரையிலும், ஹாலை அலங்கரித்த பொருட்களிலும் மற்றும் இண்டு இடுக்கிலும் நிலவிய அசாத்திய பளிச் எங்கள் வருகைக்காகவே பிரத்யேகமாக முந்தின தினம் சுத்தம் செய்யப்பட்டது என்பதை உ.க.நெ.கனியாகக்காட்டியது.
அண்ணன் தலையைக்குனிந்து தன் உள்ளங்கையை விரித்து வைத்து ஹான்ஸ் கசக்குபவன் போல் கட்டை விரலால் தேய்த்து எதோ ஆராய்ச்சியிலிருந்தான்.
"என்னடா வெக்கமா?" என்றேன்.. அதற்கே கோபப்பட்டு உச்சுக்கொட்டியவன், "இனிமே ஒனக்கு அந்தக்கை தேவப்படாதுல்ல" என நான் உண்மையில் சொல்ல நினைத்ததைச் சொல்லியிருந்தால் நிச்சயம் அங்கே கைகலப்பு நடந்திருக்கும்.
சற்று நேரம் எதேதோ பேசிக்கொண்டிருந்தனர் இருவீட்டாரும். எத்தனையோ கிலோமீட்டர் சுற்றி வந்தால் அவர்களும் இவர்களும் கொஞ்ச தூரத்து உறவினர் வருமாம். அதையெல்லாம் பேசிக்கொண்டே இழுத்தபடியிருந்ததால் பொறுமையிழந்து, “சரி.. பொண்ண வரச்சொல்லுங்க" என்றேன்.
இது அவர்களைச் சற்று ஜெர்க் ஆக்கியிருக்க வேண்டும்.
சின்னவன் எப்பவுமே இப்புடிதான் துடுக்காப்பேசுவான். மூத்தவன் ரொம்ப சாது என்றாள் எங்கள் அன்னை ஓர் ஆலயம்.
அப்போதுதான் எனக்கு ஒரு பேருண்மை விளங்கியது. என்னை வில்லனாகக்காட்டினால் என் அண்ணன் அன்னப்போஸ்டில் ஈரோவாகிடலாம். பண்டமும் எளிதாக விற்றுவிடும் என இருகோடுகள் பிலாசபி யூஸ் செய்திருக்கிறாள் தாய்க்குலம். என்ன ஒரு வில்லத்தனம். அந்த நேரத்தில் அவள் ஒரு மீசை வைத்த பொன்னம்பலமாகவே எனக்குத்தெரிந்தாள்.
(குறிப்பு: பொன்னம்பலத்துக்கு மீசையே இல்லையே என வாசகர்கள் வினவலாம். பொன்னம்பலத்துக்கு மீசை இல்லைதான். மறுப்பதற்கில்லை. ஆனால் எங்கள் அம்மாவுக்கு உண்டு. அது ஒரு தனிக்கதை. பிறகு சொல்கிறேன்)
அப்போது ஒரு வழியாக அண்ணியார் வெளிப்பட்டார். கையில் ஒரு ட்ரேவோடு. அதில் சிறு சிறு தட்டுகள் இருந்தன.
அவற்றில் பாம்பே மிக்சரும் ஒரு சுவிட்டும் தட்டுக்கொன்றாய் வைக்கப்பட்டிருந்தது.
"என்னடா, ஆரம்பமே மிச்சர் சாப்ட சொல்றாங்க. எனக்கு இது ஏதோ சிக்னலாட்டம் தெரியுதே" என அண்ணனிடம் கிசுகிசுத்தேன்.
முதன் முதலாய் கன்னிசாமி ஒருவன் பதினெட்டு படி தாண்டி ஐய்யப்பனைப் பார்த்த பரவசத்தில் இருப்பது போல அவன் பவரச நிலையிலிருந்தான்.
அண்ணியிடமிருந்து சுவிட் காரத்தை வாங்கியவன் “தேங்ஸ்" என்றவாறு மிக்சரை டீப்பாயில் வைத்தான்.
பின்னாலேயே ஒரு ஆண்ட்டி தட்டில் காப்பி கொண்டுவந்தார்.
"டேய், மொதல்ல வந்தது ட்ரையல்ஸ்.. அவங்க பொண்ணில்லயாம். இப்ப வருது பார்.. இதான் ஆல் ரியல்ஸ்.. இதாம்பொண்ணாம்” என இவனுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னேன்.
பல்லைக்கடித்தவாறு, "செத்துடுவடா நீ” என்றான்.
நான் அவனைக் கண்டுக்காததுபோல், "மிச்சர் சாப்டுங்க மாப்ள” எனச் சற்று உரக்கக்கூறி மெதுவாக தட்டை அவன் பக்கம் நகட்டி வைத்தேன்.
அண்ணியார் மெலிதாகச் சிரித்து வைத்தார். "சும்மா தொண தொணன்னு பேசாத" என்பதுபோல் அம்மாவும் அப்பாவும் முறைத்தனர். நல்லதுக்கே காலமில்லை என்று நான் காப்பியுள் உதட்டை ஊறப்போட்டேன்.
அண்ணன் அம்மாவைப்பார்த்து எதோ சங்கேதமாய்க் கண்ணாலேயே சொல்ல அவள் அப்பாவிடம் அந்த சங்கேதத்தைக்கடத்தினாள்.
"பையனும் பொண்ணும் தனியாப்பேசிப்பாக்கட்டுமே" என்று பொதுவில் கூறி அவர் அதை அசங்கேதப்படுத்தினார்.
பொண்ணுக்குத்தகப்பனார் "சரி" என்றார்.
அப்போது அங்கே இருந்த ஒருவர், "தனியா எப்புடி அனுப்ப என்று கூறி, அனூஊஊ... (பெண்ணின் தங்கை), நீ கூடப்போம்மா" என்று கூறி அனுப்பி வைத்தார்.
அற்புதம்!
அவர்கள் சைடு ஒரு கிறுக்கன் இருந்தால், பதிலுக்கு நம் புறமும் ஒருவர் இருக்கவேண்டும்தானே. அதுதானே உலக நியதியும் படைப்பும் சாராம்சமும்.
எங்கள் தாய் மாமன், “அப்ப நம்ம சைடுலருந்து நம்ம தம்பியையும் (யா இட்ஸ் மீ) கூட அனுப்புங்க" என்றார்.
சிறப்பு. சீர்மிகு சிறப்பு!
"நல்லா சேந்துருக்கீங்கடா செட்டு" என நினைத்துக்கொண்டேன்.
என் மாமன் கிறுக்கன் என்றாலும், நல்லது செய்த கிறுக்கன். ஆதலால் யாராவது ஸ்பான்ஸர் செய்தால் ரென்ரூபாய்க்கு ஒரு ஸ்டிக்கர் வாங்கி "இவன் நல்லவண்டா” என அவர் நெற்றியில் ஒட்ட வேண்டும்போல் இருந்தது.
மொட்டைமாடி. பெயர்தான் மொட்டைமாடியே தவிர ஆங்காங்கே முடி முளைத்தாற்போல் செடி கொடிகள் இருந்தன. சிலுசிலுவென இல்லாவிட்டாலும் உலர்ந்த, தொடர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது.
என் அண்ணன், அண்ணியிடம் MLMமுக்கு ஆள் சேர்ப்பவன் போல ப்ரைன்வாஷ் செய்துகொண்டிருந்தான்.
நானும் அனுவும் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்தோம். ஆள் சற்றுத் தாட்டியாக, மூன்று சுழி ணு போட்டு அணுவென்றே விளிக்கலாம்போலிருந்தாள்.
"உங்க பேரென்ன?" - பட்சி கேட்டது.
“ஜீவ ராகவன். ஜீரான்னு எல்லாரும் கூப்டுவாங்க” என்றேன்.
“இனிப்பீங்களோ?”என்றாள்.
"ஏன் நக்கிப்பாருங்களேன்" எனச் சொல்ல வாயெடுத்தவன், வந்த இடத்தில் செக்ஷுவல் அராஸ்மெண்ட் கேஸ் வேண்டாமென்று அடக்கிக்கொண்டேன்.
"உங்க பேரென்ன? கோங்குரான்னு சொல்லிடாதீங்க. ஹெஹெஹெ"ன்றேன்
"இதயெல்லாம் ஜோக்னு நீ நெனைக்குறியா?” என்பதுபோல அவள் ஒரு பார்வை பார்த்து, "அனு. அனுப்பமா" என்றாள்.
"உங்கள நான் எப்டி கூப்புடுறது? சின்ன அண்ணின்னா?" அடுத்த நோ பாலைப் போட்டேன்.
மீண்டும் ஒரு “எந்த ஜூலருந்துடா ஒன்னப் புடிச்சாங்க” என்பதுபோல் ஒரு பார்வை. “அனுன்னே கூப்டுங்க” என்றாள்.
ஹாட்ரிக் நோ பால் வாங்க வேண்டாமே எனக்கருதி கவனத்தைத்திருப்பி, சுற்றுமுற்றும் உள்ள செடிகளைப்பார்த்துக்கொண்டிருந்தேன்.
“அடுத்து என்ன, செடியெல்லாம் ஏன் பச்சையா இருக்குன்னு கேக்கப்போறீங்களா?” எனச்சொல்லி சிரிக்க ஆரமித்துவிட்டாள்.
வாழ்க்கையில் எத்தனையெத்தனையோ வாட்ஸ்களில், வண்ணங்களில் பலப்பல பல்புகள் வாங்கியிருந்தாலும் இவ்வளவு க்லோஸ் டிஸ்டன்ஸில் வாங்குவது இதுவே முதல்முறை என்பதால் என்ன ரியாக்ஷன் காட்டுவதென்றும் தெரியவில்லை.
"முருகா, எனக்குக் கல்யாணமே ஆகலன்னாலும் பரவால்ல, இவளோ, இவள மாதிரியோ ஒரு பொண்டாட்டி மட்டும் அமஞ்சுடக்கூடாது” என சடுதியில் ஒரு மனுவை மனசுக்குள் போட்டுவைத்தேன்.
"எங்க படிச்சீங்க?"
“ஸ்டெல்லா”
“ஓ.. ஸ்டெல்லா மேரிஸா” நல்ல காலேஜ் என அவளோடு சமாதானத்துக்குட்பட்டேன்.
“அது மேரிஸ் இல்ல. மாரிஸ்” என்றாள்.
“லேடிஸோ, லேடிஸ் காலேஜோ அவ்ளோ பழக்கமில்லீங்க” என்றேன்.
“தெரியுது” என்றாள்.
"இதுக்குமேல இங்கருந்தா இவ டிப்ரசனாக்கி உட்டுருவாபோல" என மனதுக்குள் நினைத்து, “டேய்.. போதும்டா, கல்யாணத்தன்னைக்கு பேச கொஞ்சம் மிச்சம் வை” என அண்ணன் மீது பாய்ந்தேன்.
“சரிங்க, போலாம்” என அண்ணனிடம் கூறினார் அண்ணி (அவர்களின் பாடி லேங்வேஜ் அவர் அண்ணியாகிவிட்டார் எனக்காட்டியது).
விட்டால் போதுமென்று விறுவிறுவென்று நான் பெருமுச்சோடு கூடிய உஃப்ஃப்ஃபோடு கீழிறங்கிப்போனேன்.
அண்ணன் முகத்தில் அப்படியொரு பிரகாசம்.
மீண்டும் இரு குடும்பத்தினரும் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, எனக்கு எதுவும் காதில் விழவில்லை. "வந்த எடத்துல ஆம்பளன்னு கூட பரிதாபம் பாக்காம நம்மள கலாய்ச்சிட்டாளே” என்ற நினைப்பே சுழற்றியடித்தது. ஆனால் இது எதையும் காட்டாமல் cool gagaவாக இருந்தேன். வெறும் பல்லைக்கடித்தால் வெளியே தெரிந்துவிடுமென்று மிச்சரை எடுத்து வாயில் போட்டு அவளை நினைத்து நறநறத்தேன்.
இருவீட்டாரும் கல்யாணத்துக்குச் சம்மதம் தெரிவிக்க, புறப்படத்தயாரானோம்.
வீட்டுக்கு வெளியே வந்து காரில் ஏறினோம். அதே சீட். அதே பொசிசன். அண்ணி எங்கும் தென்படுகிறாரா என அண்ணன் சூசகமாக எட்டிப்பார்த்துக் கொள்வதாய் நினைத்து அப்பட்டமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான்.
வண்டி இஞ்சின் ஸ்டார்ட் ஆனதும் கதவருகே இரண்டு புதிய தலைகள் தென்பட்டன.
அவற்றில் ஒரு தலை சற்று கூர்ந்து பார்த்து வண்டிக்குள் எதையோ தேடியது.
இங்கே இருக்கிறேன் என்பதுபோல் நான் அனிச்சையாக அசைந்தேன்.
என்னைக்கண்டதும், மில்லிமீட்டரளவில் சற்று மலர்ந்தன அவ்விரு கண்களும்.
சடாரென முருகனிடம், இதுக்கு முன்ன அனுப்புன மனுவ கொஞ்சம் ஹோல்டுல வைப்பா முருகா என நான் மற்றொரு மனுச்செய்யவும், கார் புறப்படவும்...