பூனைகளுடனான என் பந்தங்களை அகழ்வாய்ந்து பார்த்தால் சுமார்
20 வருடங்களுக்கு முன் செல்ல வேண்டி வரும். அப்போது நாங்கள் இருந்த வீட்டிற்கு எப்படியோ
ஒரு பூனை வந்துவிட்டது. வெள்ளையும் சாம்பலும் கலந்த பூனை. வந்த ஓரிரு நாளில் நானும்
அதுவும் மிகவும் நெருங்கி விட்டோம். நாங்கள் இருந்தது மாடி வீடு என்பதால் அப்பூனைக்கு
மண் நோண்டி மலம் கழிக்கும் வசதிகள் இல்லை. வீட்டிலேயே ஒரு இடத்தைத் தேர்வு செய்து கழித்துக்கொண்டிருந்தது.
பள்ளி விட்டு வந்ததிலிருந்து அடுத்த நாள் மீண்டும் பள்ளி செல்லும் வரை அதோடுதான் விளையாட்டு.
வீட்டுப்பாடம், கைகால் சுத்தம் என எதையும்கண்டுகொள்ளாது அதனோடே பொழுது கழிந்தது. என்ன
காரணத்தினாலோ என் அம்மா பூனைக்குட்டி வளர்ப்பதை எதிர்த்தார். கொஞ்ச நாட்களுக்கு எதோவொரு
திருட்டுத்தனம் செய்து பூனையை வீட்டோடு வைத்திருந்தேன். ஒரு கட்டத்தில் அவரின் கண்டிப்பு
அதிகமாக வேண்டாவெறுப்பாக பூனையை வீட்டிற்கு வெளியே தள்ளி கதவைச்சாத்தினேன். அன்றிரவு
முழுவதும் கதவைப்பிராண்டிக்கொண்டும், மியாவ் மியாவ் என அழுதுகொண்டும் (அந்த மியாவ்
நிச்சயம் அழுகைதான். எங்கு வேண்டுமானாலும் சத்தியம் செய்வேன்) இருந்தது. வீட்டிற்குள்
சத்தமின்றி நானும் அதற்குத்துணையாய் அழுதுகொண்டிருந்தேன். எப்போது தூங்கி எப்போது விடிந்தது
எனத்தெரியவில்லை. என் மேல் நம்பிக்கையற்றுப்போன பூனை நீ சாத்திய கதவு எனக்குப்பெரிய
உலகத்தைத்திறந்து விட்டிருக்கிறது என்று கூறி எங்கோ சென்று விட்டிருந்தது. அடுத்தடுத்த
நாட்களில் அந்தப்பூனையை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இன்று வரை நான் செய்த தவறுக்கு
என்னைநேருக்கு நேராய்ப்பார்த்து காறித்துப்பக்கூட அது என் எதிரில் வரவில்லை. உன்னையெல்லாம்
தண்டிப்பதுகூட பெரிய இழுக்கு என நினைத்ததுவோ என்னவோ, last good bye கூட சொல்லாமல் சென்றுவிட்டது.
இதன்பின் வளர்ப்புப்பிராணிகள்மேல் ஒரு ஆர்வம் இல்லாது போய்விட்டது.
பின் வெகுகாலம் கழித்து என் குடும்பம் எங்கள் சொந்த கிராமத்துக்குச்
சென்றதும் அங்கே கோழி, வாத்து முதலியவைகளை வளர்க்கத்துவங்கினார்கள் அவற்றின் மேல் எந்த
ஈடுபாடும் நான் காட்டிக்கொள்ளவில்லை. அவை வளர்க்கப்படும் காரணம் அனைவருக்கும், ஏன்
அந்த கோழிகளுக்கும் முட்டாள் என அழைக்கப்படும் அந்த வாத்துக்கும் கூடத்தெரிந்திருக்கும்.
நாட்டுக்கோழிகளும், போண்டா கோழிகளும், நாட்டு வாத்துக்களும் வீட்டைச்சுற்றி எப்போதும்
எதையாவது கிளறிக்கொண்டும் கொத்திக்கொண்டும் இருந்தன. ஒரு பழைய உயிர் பிரிவதைக்கண்டு
கரையாத மனமும் ஒரு புதிய உயிர் ஜனிப்பதைப்பார்த்தால் கரையுமல்லவா?
கோழிகளில் ஒன்று முட்டையிட்டு 20 நாள் அடை காத்து குஞ்சு பொரித்ததைக் கண்டதும் அதுதான் நடந்தது எனக்கு. கீக்கீக்க்வீக்க்வீ
என சுமார் 10 குஞ்சுகள் எந்நேரமும் கூவிக்கொண்டு தாயின் பின்னாலேயே பிஞ்சு இறக்கைகளை
விரித்தபடி குடுகுடுகுடுவென ஓடியபடி இருக்கும் அவற்றைப்பார்த்தால் கடவுள் சிரிப்பதை
அறியமுடியும்.
அந்தக்கோழிக்குஞ்சுகளின் எளிமை, இனிமை மற்றும் வெகுளித்தனம்
கொஞ்சங்கொஞ்சமாக மெதுவிஷம்போல் என்னை அவற்றின்பால் ஈர்த்தது. நாட்செல்லச்செல்ல என்
ஒரு நாளின் அத்தியாவசியக்கடமைகளுள் அவற்றைப்பராமரிப்பதும் சேர்ந்தது. கம்பு, நொய் என
சைவமும் பூச்சிவட்டை, வேலையற்றுப்போய் மண்ணை நோண்டி மண்புழுவை எடுத்து அசைவமும் கொடுப்பதில்
ஒரு மணி நேர தியான அமைதி கிடைத்தது. உணவைக்கொத்திக்கொண்டே இருக்கும் கோழிக்குஞ்சுகள்
சட்டென ஒரு நொடி விடுப்பெடுத்து புளுக்கென தன் காற்புள்ளி அளவேயான மலத்துகளை கழிந்து
உடனே மீண்டும் அடுத்த கொத்தலுக்கு செல்வதைப்பார்த்தால் நாகேஷின் தேர்ந்த நகைச்சுவை
சீனின் ஃப்ரேம் போல் இருக்கும். பகல் வேளைகளில் ஒரு சிங்கத்தின் சீற்றத்துக்கோ கொடிய
நல்ல பாம்பின் படமெடுத்தலுக்கோ சற்றும் குறையாது சீறி, ஆபத்திலிருந்து தன் குஞ்சுகளைத்
தாய்க்கோழி பார்த்துக்கொண்டது. இருளடைந்ததும் அவைகள் எங்கள் பாதுகாப்பில் வரும்போது
தான் அவற்றுக்குப் பல ஆபத்துகள் நிறைந்திருந்தன. வெரூஉ எனப்படும் பூனைகள் முக்கால்
/ முழுதாய் வளர்ந்த கோழிகளையே கொக்கு மீனை லபக்குவதுபோல் லவட்டிக்கொண்டு போய்விடும்.
கிராம் கணக்கில் இருக்கும் குஞ்சுகள் எம்மாத்திரம்? இரவுகளில் திடீரென்று கோழிகள் கொக்கரிப்பதைக்கேட்டு
எழுந்து சென்று பார்த்தால் சிலபல கோழிக்குஞ்சுகள் காணாமல் போயிருக்கும். சில சமயங்களில்
நாம் விரட்ட விரட்ட நம் கண் முன்னாடியே கோழிக்குஞ்சுகளைக் கவ்விக்கொண்டு வெரூஉக்கள் சுவர் தாண்டிக்கொண்டிருக்கும்.
சில திமிர் பிடித்த பூனைகள் வேண்டுமென்றே நமக்கு முன் துடிக்கத்துடிக்க கோழிக்குஞ்சுகளைக்
கடித்துச் சின்னாபின்னமாக்கும்.
இதையெல்லாம் பார்த்து வெரூஉக்களின் மீது ஆழமான வெறுப்பு உண்டானது.
வெரூஉவைக்கொல்ல பல திட்டங்கள் தீட்டி அவை தோற்றுப்போனதும், இறுதியில் அது கொன்ற கோழிக்கெல்லாம்
பகரமாக ஒரு கல்லடி அல்லது கட்டையடியாவது அதன் மீது விழுந்து விடாதா என்ற வன்மத்தோடு
சுற்றிய நாட்களெல்லாம் உண்டு. வீட்டில் உள்ளோர்கள் தங்களுக்கு மற்றவர் மீது உள்ள பிணக்கு சார் அரசியலை, அவர்
வளர்த்த கோழிகள் மரணிப்பதைக்கண்டு சமன் செய்துகொண்டதாலும், இவருக்கு விருப்பமான கோழியை
நான் ஏன் பாதுகாக்க வேண்டும் என எங்களால் கோழிகளுக்குள்ளேயே எல்லைகள் வகுத்து பராமரிக்கப்பட்டதையும் எப்படியோ அறிந்து கொண்ட வெரூஉக்கு மாதம் முழுவதும் விருந்து கிடைத்ததுதான் மிச்சம்.
ஒரு கட்டத்தில் வெரூஉவிடம் மொத்தமாய்த்தோற்று, தக்கனத்தப்பிப்பிழைத்த நான்கைந்து கோழிகளையும்
விற்றுவிட்டோம். பூனைகளின்மீதான வன்மம் மட்டும் எனக்குக்குறையவேயில்லை.
வேலை கிடைத்து சென்னை வந்ததும் தங்கியிருந்த அறைக்குப்பக்கத்தில்
ஒரு குடும்பம் இருந்தது. அந்த வீட்டில் ஒரு பூனை வந்துகொண்டிருந்தது. அது அவர்கள் வளர்க்கும்
பூனையல்ல. வேளை தவறாது உணவுக்கு மட்டும் வந்துசெல்லும். ஒரு நாள் காலை நானும் ஒரு பிஸ்கட்டைப்போட்டதும்
உண்டுவிட்டு நன்றி எனச்சொல்லி வாலாட்டவோ, நல்லா இரு என்று துதிக்கையால் ஆசி வழங்கவோ,
பிஸ்கட் நல்லா இருந்தது என மண்டையை ஆட்டவோ செய்யாது வந்த வேலை முடிந்தது என்று திரும்பிச்சென்றது.
அடுத்த நாள் அதே நேரத்திற்கு வந்து இன்று எனக்கு நீ போட வேண்டிய பிஸ்கட் எங்கே அனும்
அதிகாரத்தோடு வாயிலில் அமர்ந்திருந்தது. அதன் தோரணையிலேயே நான் எஜமான். என்னை வளர்க்கும்
அடிமை நீ என்ற அமைப்பு இருந்தது.
காலை உணவோடு பின் இரவு உணவும் சேர்ந்து, பிஸ்கட் பாலாகி, கருவாடாகி, பின்
நான் உண்ணும் எதையும் அதற்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டுமென்பது வரை எழுதப்படாத சட்டம்
உருவானது. நான் இருக்கும் வரை அந்தப்பூனையும் என் வீட்டினுள்ளே இருக்கும். ஆபீசுக்குக்கிளம்பியதும்
விட்டில் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு சன்னல் வழியே வெளிக்கிளம்பிவிடும். இரவு
நான் திரும்பும்போது வாசலிலேயே வந்து வரவேற்று (வரவேற்றதாய்த்தான் நான் நினைப்பேன்.
இரவு சாப்பாடு எங்கேயடா என் அடிமை மனிதா என அது கேட்டது என் காதில் விழாத காரணத்தால்). இரவுணவுண்டபின்
சற்று நேரம் விளையாடியபின், புத்தகத்தைப்படிக்கும் வரை பக்கத்திலேயே அமர்ந்திருக்கும்.
விளக்கணைத்து போர்வையைப்போர்த்திவிட்டால் அதற்குள் வந்து புகுந்து கொள்ளும். மறுநாள்
காலை எழும்வரை ”8” போல் பின்னிக்கிடப்போம் இருவரும்.
கொஞ்ச நாளிலெல்லாம் அதன் வயிறு பெரிதாக, எதோ நானே தாயானதுபோல
அகமகிழ்ந்து கொண்டாடிக்கொண்டிருந்தேன். வலைமனைகளில் மேய்ந்து அதற்குத்தேவையான அத்தனை
வசதிகளையும் செய்து கொடுத்திருந்தேன். திடீரென 3 நாட்களாய் அப்பூனையைக்காணவில்லை. பூனைகளின்
உளவியலைப்படித்ததால், அது தனக்கான இடம்தேடிப்போய்விட்டதென எண்ணி சட்டென அதை மறந்து
புத்தகங்களுக்குள் என்னை மூழ்கடித்துக்கொண்டேன். ஒரு பின்னிரவு நேரத்தில் என் அறைக்குள் எதோ
முணுமுணுப்பு / அழும் குரல் கேட்டது. தூக்கக்கலக்கத்தில் எதுவும் தெரியவில்லை. அடுத்த
நாள் எழுந்து ஆபீசுக்குக்கிளம்பும்போதுதான் கவனித்தேன், இரண்டு குட்டிகளை என் அறைக்குள்
வந்து போட்டுவிட்டு தாய்ப்பூனை எங்கோ சென்றிருக்கிறது. கோடீசுவரப்பெண்ணொருத்தி, தன்
உறவு, உறைவிடம், அந்தஸ்து, பெருமை, வசதி வாய்ப்புகள் என எல்லாவற்றையும் துறந்து, தன்
ஏழைக்காதலனை மட்டும் நம்பி வந்ததைப்போல் உணர்ந்தேன் அந்தக்குட்டிகளை என் அறையில் பார்த்தபோது.
அப்போது நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தையில் வடிக்கவே முடியாது எனச்சொன்னால் அது
சுத்தப்பொய். அந்த வார்த்தைகளை நான் கண்டுகொண்ட அன்று நிச்சயம் விவரிப்பேன்.
அன்று முழுவதும் ஆபீசில் எண்ணிலடங்கா மகிழ்ச்சியில் ஆழ்ந்தேன்.
அதுவரை இல்லாத அதிசயமாய் ஆறு மணிக்கெல்லாம் ஆபீசிலிருந்து கிளம்பிவிட்டேன். வீடு வந்து
பார்த்த போது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டு குட்டிகளில் ஒன்று மரணித்து, அதை
எறும்புகள் மொய்த்துக்கொண்டிருந்தன. தப்பிய ஒரு குட்டியை பத்திரப்படுத்திவிட்டு இறந்ததை
ஒரு பையில் போட்டு சுற்றி வெகுதூரம் சென்று குப்பைத்தொட்டியில் வீசிவிட்டேன் (புதைக்காமல்
ஏன் குப்பையில் வீசினேன் என்பது இப்போது வரை விளங்கவில்லை). இரவு நான் தூங்கியபின்
அறைக்கு வந்த தாய்ப்பூனை கதறிக்கொண்டே இருந்தது. விழித்து என்னவென்று பார்த்ததில் மீதமிருந்த
அந்த ஒரு குட்டியும் காணவில்லை. சன்னல் வழியே வந்து வேறொரு பூனை (பல பூனைகள் சன்னல்
வழியே வந்து அறையில் இருக்கும் தின்பண்டங்களை உண்ணும்) எதுவும் கொன்று எடுத்துச்சென்றதா
எனப்புரியவில்லை. தாய்ப்பூனை அலறலை மட்டும் நிறுத்தவேயில்லை. குட்டி போட்ட பூனை என்று
சொல்வார்களே, அதை அன்று கண்கூடாகப்பார்த்தேன். எதையோ தேடி இங்குமங்கும் அலைந்துகொண்டே
இருந்தது. மனது கேட்காமல் நானும் அதோடு சேர்ந்து அக்கம் பக்கத்தில் அந்த நள்ளிரவில்
தேடி அலைந்தேன். காரணமேயில்லாமல் கண்ணீர் மட்டும் கொட்டிக்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில்,
எதோ ஒரு எரிச்சல் மிகுதியில் தன் குட்டியைக்கூட பாதுகாக்க தெரியவில்லை, உனக்கெல்லாம்
எதற்கு குட்டி என்று அந்தப்பூனையை வைது விரட்டி விட்டேன். அறைக்குத்திரும்பி போர்வையைப்போர்த்திக்கொண்டு
கண்களையும் காதுகளையும் சிக்கென பொத்திக்கொண்டேன். தூக்கம் வரவில்லை. அந்தப்பூனையின் கதறல்
மட்டும் எங்கு சுற்றினாலும் என் காதில் வந்தே முடிவுற்றது.
அடுத்த சில நாட்கள் அந்தப்பூனை என் அறைக்கு வரவேயில்லை. பிறந்த
மகவைப்பறிகொடுத்த துக்கத்தைப் பரஸ்பரம் பங்குபோட்டுக்கொள்ளக்கூட ஆளில்லாமல் அதுவும், என் மடியில் மிகச்சமீபமாய் நிகழ்ந்த அந்தப் புதிய உயிர்களின் மரணத்தின் அதிர்ச்சியிலிருந்து
மீள முடியாமல் நானும் சுற்றிக்கொண்டிருந்தோம். ஒரு வாரம் கழித்து மீண்டும் தாய்ப்பூனை
என் அறைக்கு வந்தது. என்னை மன்னித்திருக்கிறதா என அதன் கண்களில் பார்த்தேன். உன் வழக்குகளைப்பார்க்க
நான் இங்கு வரவில்லை. என் பாலும் ரொட்டித்துண்டும் எங்கே என்பதை மட்டும் அந்தக் கண்கள்
கேட்டன, அதே அதிகாரத்தொணியுடன். கடையில் வாங்கி அதற்கு அளித்துவிட்டு வாய்விட்டு மன்னிப்பு
கேட்டு வந்தேன். அதன் குட்டிகளை பலி கொடுத்ததற்காக.
அன்று மாலை அறைக்குத்திரும்பும்போது வாசலில் வந்து வரவேற்றது
பூனை. போனது போகட்டும், இனி மீண்டும் உனக்கு நான் எனக்கு நீ என இருப்போம் வா எனக்கூறிக்கொண்டே
அறையைத்திறந்தேன். தன் ஒரு குட்டியைக் கொன்றதற்கு என்னை மன்னித்திருந்தது அந்தப்பூனை.
ஆமாம். தப்பிப்பிழைத்த அந்த மற்றொரு பூனைக்குட்டி மீண்டும் என் அறைக்குள். ஒரு பொருள்
புதிதாய்க்கிடைப்பதைவிட, தொலைந்தபின் மீண்டும் கிடைப்பதுவே அதிக இன்பம் தரும். அதை வர்ணிக்க
உண்மையிலேயே வார்த்தைகள் இல்லை. இந்த இரண்டாம் சந்தர்ப்பத்தையாவது ஒழுங்காகப் பயன்படுத்தவேண்டுமென்று
அந்தப்பூனைக்குட்டிக்கான எல்லாப் பாதுகாப்பும் செய்து வைத்தேன். முதல்முறை இறந்து போன
பூனைக்குட்டியை நான் வீசிவிட்டதால், காணாமல் போன அந்தக்குட்டிக்கு என் அறையில் ஏதோ ஆபத்தென்று கருதிய தாய்ப்பூனை,
அந்த இரவே என் அறைக்கு வந்து நான் தூங்கிக்கொண்டிருக்கும்போதே மற்றொரு குட்டியை பத்திரமான
ஒரு இடத்திற்கு மாற்றல் செய்திருக்கிறது. பின் தன் ஆற்றாமையையும் ஆத்திரத்தையும் கொட்டித்தீர்க்கும்
வண்ணம் என்னை எழுப்பி எங்கடா தொலைத்த என் பிள்ளையை என அதன் மொழியில் அசிங்க அசிங்கமாய்த்திட்டியிருக்கிறது.
இதை அறியாத நான் மற்றொரு குட்டியையும் காணாதுதான் தவிக்கிறது என்றெண்ணி வீட்டைச்சுற்றி
அலைந்திருக்கிறேன். ஒரு வேளை காணாமல் போன குட்டியைத்தான் காட்டப்போகிறான் போல இந்த
சோம்பேறி மடையன் என அந்தத்தாய்ப்பூனையும் சேர்ந்து சுற்றியிருக்கிறது. இது அத்தனையும்
புரிய வந்தபொழுது அந்தப்பூனை ஒரு யானையாய் என் முன் பிரம்மாண்டமாய்த் தெரிந்தது. நான் அதன்
முன் சிற்றெறும்பின் காலில் ஒட்டிய மண் துகளாய்ச் சிறுத்துப்போனேன்.
நமக்கு விதிக்கப்பட்டது இந்த ஒரு குட்டிதான் என தாய்ப்பூனையும்
நானும் ஒரு கட்டத்தில் சமாதானம் ஆனோம். இதுவரை பூனை, கோழி என்றே படித்தது உங்களுக்கு
அயற்சியைத்தந்திருக்கும். அதுபோலவே எனக்கும் தோன்றியதால் புதிதாய்ப்பிறந்த இந்தக் குட்டிக்கு
என்ன பெயர் வைக்கலாம் என என் இனிய இணைய நட்பு வட்டாரத்தில் கேட்டேன். பல பெயர்கள் வந்தன.
அதில் ஆகப்பிடித்தது அண்ணன் ரவிக்குமார் எம்ஜிஆர் அவர்கள் கூறிய பெயர். எதை மனதில்
வைத்து அப்பெயரை அவர் கூறினார் என்று தெரியவில்லை. ஆனால் இந்தக்குட்டி பிறந்து, அதன்பின்
நடந்த பல ஆபத்துக்களையும் தாண்டிப்பிழைத்த Lucky Cat இதுவெனப்பட்டதால் அவர் கூறிய பெயரையே
வைத்துவிட்டேன். அது – லக்ஸி (Luck-C alias Luxy)
லக்சியும் அவளின் குட்டீஸும் |
அருமை
ReplyDeleteஎன்ன ஒரு சரளமான நடை. அபாரம். ருசித்து ரசித்தேன்.
ReplyDeleteநீர் எதுவேண்டுமானாலும் எழுதுமைய்யா. லாண்டரிக்கு போடும் லிஸ்டை கூட போடுமையா. எழுத்தாற்றல் உமக்கு கைவந்த கலை. இறைவன் கொடுத்த வரம்.
நன்றி வாழ்க வளர்க. -- உம் ரசிகர்களில் ஒரு ரசிகன் :)
அருமை..நன்றி வாழ்க வளர்க
ReplyDeleteBashir pola iruku.
ReplyDeleteலக்சிக்குக் குழந்தைகள் பிறந்து அவை சந்தோஷமாக வாழ்ந்தது பகுதி 2ல் வருமா?
ReplyDeleteamas32
என்ன ஒரு எழுத்துநடை... ஆவ்சம் ஆவ்சம்
ReplyDelete..
வழக்கமான நகைச்சுவை பதிவிலிருந்து ஒரு மாறுபட்ட பீலிங்கி.... :)
ReplyDeleteawesome :-)
ReplyDeleteஅருைமையான எழுத்துநைடை
ReplyDeleteஅட லக்ஸிக்குப் பின்னாடி இவ்ளோ சூப்பர் கதை இருக்கா...
ReplyDelete@ முரளிகண்ணன் : நன்றிண்ணே
ReplyDelete@ chinnapiyan10 : சுஜாதா வீட்டு லான்ட்ரி சீட்டு அளவுக்கு என்னுது சுவாரசியம் இருக்காதுங்களே ;-) தங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
@ ENIYAVEL : பஷீர் இமயமலை. நான் கெணத்துத்தவளை. தங்கள் அன்புக்கு நனி மிகு நன்றி
@ amas32 : இப்போதைக்கு எதும் ஐடியா இல்ல. பாக்கலாம்மா.
@ ரவிக்குமார் எம்ஜிஆர்: சொன்னது பூனையளவு. சொல்லாதது சேனையளவு. சாரு ஸ்டைல்ல சொல்லணும்னா சிலபல உள்ளொளி தரிசனங்கள லக்சி எனக்குக் குடுத்திருக்கா
@Soundra Pandian @poovidhazhnandhini @ pearl @ஜெ.பாண்டியன் @ராம்குமார் - அமுதன் : தங்கள் அனைவரின் வருகைக்கும் அன்புக்கும் மிக்க நன்றி
"எனக்கு நீ போட வேண்டிய பிஸ்கட் எங்கே அனும் அதிகாரத்தோடு வாயிலில் அமர்ந்திருந்தது. அதன் தோரணையிலேயே நான் எஜமான். என்னை வளர்க்கும் அடிமை நீ என்ற அமைப்பு இருந்தது."
ReplyDeleteArumaiyana varigal
நன்றிங்க கலீல். உண்மைலயே பூனைகள் அதுக்கு சாப்பாடு போடுறவங்கள அடிமையாத்தான் நெனைக்கும். நாய்ங்க தான் எஜமானா பாக்கும்.
Deleteரமலான் குறித்து இன்னொரு நாள் எழுதுவோம்.
மிக்க நன்றி :-)
Enna muthalib, Ramalan pathi pathive illa?
ReplyDeleteWonderful..
ReplyDeleteThank you :-)
DeleteSEMA SEMA SEMA
ReplyDeleteலக்ஸி லக்கி தான்..பாதுகாப்பான இடம் அமைந்ததற்க்கு ..சூப்பர்..:)
ReplyDeleteARUMAI!!!
ReplyDeleteமிக அருமை. இப்போ Luxy எப்படி இருக்கு ? :)
ReplyDeleteநல்லாருக்கு. ஆனா எங்கிட்ட இல்ல.
Delete