இருவர்

பண்ணையாரும் பத்மினியும் பார்த்தீர்களா? அந்தப்பண்ணையார் ஜோடியைப்போலவே மிகவும் அன்னியோன்யமான ஒரு ஜோடி.
"என்ன கண்ணு... ஏனுங் மாமா..." என அவர்களின் கொங்குத்தமிழ் இருவரையும் இன்னும் innocently romantic ஆக்கியது. 
நம் இந்தப்பண்ணையாரின் பத்மினியின் பெயர் தமிழ்செல்வி. செல்வியின் அப்பாவித்தனத்துக்கு முன்னால் கமலா காமேஷையெல்லாம் தாராளமாக தீவிரவாதி பட்டியலில் சேர்த்துவிடலாம். அவ்வளவு உலகமகா அப்பிராணி. கோலப்பொடி வாங்குவது முதல் கோவில் லட்சார்ச்சனை செய்வதுவரை கணவரே     முடித்துக்கொடுத்துவிடுவதால் வீட்டிற்கு வெளியே உள்ள உலகத்தை சட்டை செய்யவும் இல்லை, அது குறித்த அனுபவமும் இல்லை. என்ன தேவையென்றாலும் கணவருக்கு செய்யும் ஒரு தொலைபேசி அழைப்பிலேயே வீட்டு வாசலில் கிடைத்தது. இவருக்கு வீட்டைத்தாண்டி ஒரு உலகம் உள்ளதென்றால் அது கணவர், மகள், மகன் மட்டுமே. அன்பாலே அழகான வீடு என அழகிய மெல்லிசைப்பாடலாக வாழ்க்கை சென்றது.

ஒரு காலை, குறிப்பாகச்சொல்லவேண்டுமென்றால் மகன் கல்லூரிக்கு செல்லவிருக்கும் முதல் நாள் காலை, நெஞ்சு வலிக்கிறது என படுத்தவர் வலி முடிந்தும் எழவில்லை. ஒரே நொடியில் மொத்தக்குடும்பத்தையும் ஸ்தம்பிக்கச்செய்துவிட்டு நகர்ந்துவிட்டார். வயது வந்த பெண், இன்னும் தலையெடுக்காத மகன், அடுத்த நாள் காபி போட பால் எங்கு வாங்கவேண்டுமெனக்கூட அறியாத அப்பாவி செல்வி. கணவர் வாங்கிய சில லட்சங்கள் கடனை
திருப்பித்தரச்சொல்லி நெருக்கும் கடன்காரர்கள். ஆறு வருடத்துக்கு முன் இத்தனை பெரிய இடி விழுந்த இந்தக்குடும்பம் என்னவாகியிருக்கும்?

2 நாள் முன் சந்தித்தேன்.

இந்தப்பெண்களுக்கு இக்கட்டான சமயத்தில் எங்கிருந்துதான் சக்தி வருமோ? சுற்றத்தினரின் ஏச்சு பேச்சுக்கள், முட்டுக்கட்டைகள் அத்தனையையும் சமாளித்து, மகனையும் மகளையும் பொறியியல் படிக்கவைத்து, குடும்பத்தை நிலையாக்க வேலைக்குச்சென்று கணவனின் கடனை அடைத்து இன்று தன்னந்தனியாளாய் நின்று மகளின் திருமணத்தை நடத்தவிருக்கிறார். இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் அவரின் வெகுளித்தனம் மிச்சமிருப்பது ஆச்சரியம்.

"யார்கிட்டயும் எந்த உதவியும் எதிர்பாக்கல கண்ணு, நாங்க துணைக்கு இருக்கோம்னு பொய்யாவாச்சும் ஒரு வார்த்த மட்டுந்தான் கேக்குறேன். வெறும் வார்த்தை. ஒரு சப்போட்டுக்கு. மத்த எல்லா வேலையும் நானே பாத்துப்பேன். யார் உண்மையானவங்க, யாரு பொய்யா நடிக்கிறான்னு அவரு ஒடம்ப வீட்டவிட்டு தூக்கிட்டு போறதுக்குள்ளயே புரிஞ்சுடுச்சு. நமக்குன்னு நாம மட்டுந்தாங்கண்ணு. இருக்கறவர மத்தவங்களுக்கு தொந்தரவில்லாம இருக்கணும்" என அவரின் குழந்தைபோன்ற கொங்கு மொழியில் சொல்லி முடித்தார்.

அவரை சந்தித்துவிட்டு கிளம்பும்போது கவித்துமாக இருக்கட்டுமென்று  "கவலப்படாதீங்கம்மா, நாங்க இருக்கோம்" என்றேன். "நல்லவேளை சொன்ன கண்ணு, வாசன் ஐ கேர் போகணும் மறந்து போனேன்" என்று அவர் சொன்னது அக்மார்க் கொங்குக்குசும்பு.
--------+++-------
உங்களுக்கு ஜகதீஷ் தெரியும்தானே? சமூக ஆர்வலர், பல சமுதாயத்தொண்டு & விழிப்புணர்வு செய்து வருபவர். நிறைய வாசிப்பவர். இத்தனை நற்குணங்கள் இருந்தால் கடவுளுக்கு மிகவும் பிடிக்குமல்லவா? அதனால்தானோ என்னவோ இவரைத்தன் Special kid ஆக்கிக்கொண்டார். மனதிலும் அறிவிலும் பலத்தைக்கொடுத்துவிட்டு கழுத்துக்குக்கீழ் உடலை மொத்தமாக முடக்கிவிட்டார்.

ஒரே பிள்ளை. அப்பிள்ளையால் பிறந்த ஆறுமாதத்திலிருந்து நகரக்கூட முடியாது. பொருளாதார நெருக்கடியும் தன் பங்குக்கு சிறப்பாக வேலை காட்டியது. இந்தப்பொருளாதார சுமையை சமாளிக்கும் அளவுக்கு கணவருக்கு அதிக வருமானம் இல்லை. கிரிஜா என்ன செய்தார் தெரியுமா?

ஒரு வேலைக்குச் சேர்ந்தார். மெக்கானிகல் கம்பெனி. குழந்தையை அங்கே ஒரு ட்ரம் மீது படுக்க வைத்துவிட்டு நாள் முழுக்க வேலை. வந்த சம்பளத்தை வைத்து குழந்தைக்கு மருத்துவம், கல்வி. ஜகுவிற்கு ஏற்பட்ட முதுகுத்தண்டு பாதிப்பால் கழுத்தைத்திருப்ப முடியாது. முதுகிற்கு பெல்ட் போட்டு கால்களுக்கு ஷூ அணிவித்து வகுப்பில் அமர்ந்து பாடம் படிக்கும்வரை கொண்டு வந்து விட்டார். ஆறாம் வகுப்பிற்குப்பின் ஜகுவிற்கு உடற்சோதனை தீவிரமாக, இருக்கும் அத்தனை மருத்துவத்தையும் முயன்று, மருத்துவம் தோற்று அதற்கு பலனாய் ஜகு இப்போது bed ridden.

கிரிஜாவின் ஒரு நாள் இப்படி கழிகிறது. காலை 5 மணிக்கு எழுந்து மூன்று வேளைக்கும் உணவு தயாரித்து ஜகுவுக்கு பல் துலக்கி, குளிப்பாட்டி, இயற்கை உபாதைகளை சுத்தம் செய்து, உடை உடுத்தி, உணவு புகட்டி, தான் தயாராகி ஆபிசுக்கு 9மணிக்குச்சென்று மீண்டும் இரவு 9மணிக்குத்திரும்பி வீட்டு வேலைகளை முடித்து, கணவர், ஜகு, பாட்டியின் தேவைகள் நிறைவேற்றி அனைவருக்கும் காஃபி தந்து உறங்க வைத்து அவர் உறங்க 12 ஆகிவிடுகிறது. மீண்டும் அடுத்த நாள் காலை 5.

இவரிடம் உள்ள வியக்கத்தக்க விஷயம் சுறுசுறுப்பு மற்றும் Tonne கணக்கில் கொண்டுள்ள positivity. கவிஞர் வாலியிடம் பேசினால் ஒரு எனர்ஜி வருமென சொல்வார்களே அத்தனை எனர்ஜி இவரிடத்தில். "என்னங்க இவ்ளோ எனர்ஜிடிக்கா இருக்கீங்க, நீங்க இருக்கைல கோயமுத்தூர்ல ஏன் பவர்கட் வருது, உங்க வெரல்லருந்து கரண்ட்டெடுத்தா ஊருக்கே குடுக்கலாமே" என்றதற்கு "போ செல்லம்" என்று கூறி அடுத்த வேலை பார்க்கச்சென்றுவிட்டார்.
இன்னொரு விஷயம் சொல்லியே ஆகவேண்டும். பாற்கடலைக் கடைந்ததில் வந்தது கிரிஜா செய்யும் தேங்காய் சட்னிதான் என்பதை எங்கு வேண்டுமானாலும் வந்து சாட்சி சொல்வேன். டிவைன் ருசி. சமையலை மிகவும் அனுபவித்து ரசனையாகச்செய்கிறார். ஒரு ஓட்டல் ஆரம்பிக்கணும். அதான் லட்சியம் என்கிறார். ஒரு நாள் முழுக்க அவரின் சமையலை உண்ட அனுபவத்தில் சொல்கிறேன். சரவணபவனுக்கு இவரே சரியான போட்டி. Mark my words.

கடந்த வாரயிறுதியை ஆரவாரயிறுதியாக்கிய செல்விக்கும் கிரிஜாவுக்கும் ஸ்பெசல் நன்றி.

டுவிட்டர் மொழியில் சொல்வதென்றால் "ஆயிரம் நூல் படிப்பதைவிட செல்வி, கிரிஜாவிடம் அரை நிமிடம் பேசுவது ஞானம் தரும் என்பான் புத்தன்"

இவர்கள் போன்ற சக்திகள் இல்லையேல், உலகச்சிவம், சவம்.

Comments

  1. சூப்பர்ப்.. சட்டென என் அம்மாவை ஞாபகப்படுத்தி விட்டது உங்கள் பதிவு.

    ReplyDelete
  2. அருமை நண்பரே...

    ReplyDelete
  3. இந்த மாதிரி வாழ்க்கையில் நம்பிக்கையோடு போராடி ஜெயிக்கும் அனைத்து மகளிருக்கும் இது சமர்ப்பணம். மிகவும் நல்ல பதிவு - கொஞ்சம் உணர்ச்சிமிக்க தலைப்பால் கொஞ்சம் உங்க நகைச்சுவை உணர்வை கம்மியா வெளிப்படுத்தி இருக்கீங்க - இருந்தாலும் அந்த "நாங்க இருக்கோம்" "வாசன் ஐ கேர்" ரொம்பவே பிரமாதம் - ஆமாம் உங்களுக்கு கமலா காமேஷ் சாதுன்னு யார் சொன்னது.
    இப்படி வாரம் ஒரு முறை பதிவு இடவும் - ஒரூ வருடத்தில் புத்தகமாகவே போட்டுடலாம் :)
    என் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். இவங்கள சந்திச்சதுலருந்து கிலோ கணக்குல பூஸ்ட் சாப்ட்ட மாதிரி இருக்கு. வாரத்துக்கொன்று எழுத முயல்கிறேன். கமலா காமேஷ் உண்மைலயே பரம சாது இல்லியா? புதிய செய்தி

      Delete
  4. Awesome.. I felt this four years ago... :D

    ReplyDelete
  5. அட்டகாசம். :)))

    ReplyDelete
  6. தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பதிவு.நன்றாக பிறக்கும் குழந்தைகளையே சில காரணங்களால் குப்பை தொட்டியிலும்,காப்பகங்களிலும் போட்டுவிட்டு போகும் இக்காலத்தில் இப்படியும் சிலர் இருப்பதால்தான் மழை அவ்வப்போது பொழிகிறது.

    ReplyDelete
  7. Thanks for this post. Nice to know star achievers among the so called 'ordinary women'. Good style of writing

    ReplyDelete
  8. Thanks for this post. Nice to know star achievers among the so called 'ordinary women'. Good style of writing

    ReplyDelete
  9. Muthalib, pl check your clock. It seems to follow US-CST

    ReplyDelete
  10. அனுபவங்களின் கோவையே வாழ்க்கை என்பதை கோவை போய் அறிந்து வந்திருக்கிறீர்கள், வாழ்த்துகள்!

    amas32

    ReplyDelete

  11. http://sagakalvi.blogspot.in/2014/07/pdf_25.html

    ஞான நூல்கள் - PDF
    மெய் ஞானம் என்றால் என்ன?
    இறைவன் திருவடி எங்கு உள்ளது?
    ஞானம் பெற வழி என்ன?
    வினை திரை எங்கு உள்ளது?
    வினை நம் உடலில் எங்கு உள்ளது?
    வள்ளல் பெருமான் செய்த தவம் என்ன?
    ஏன் கண் திறந்து தவம் செய்ய வேண்டும்?
    சும்மா இரு - இந்த ஞான சாதனை எப்படி செய்வது?
    மனம் எங்கு உள்ளது?

    ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா எழுதிய ஞான நூற்களை படித்து தெளிவு பெறவும்

    திருஅருட்பாமாலை 3 -- PDF
    திருஅருட்பாமாலை 2 -- PDF
    திருவாசக மாலை -- PDF
    திருஅருட்பாமாலை 1 -- PDF
    ஞானக்கடல் பீர் முகமது -- PDF
    மூவர் உணர்ந்த முக்கண் -- PDF
    ஞானம் பெற விழி -- PDF
    மந்திர மணிமாலை(திருமந்திரம்) -- PDF
    கண்மணிமாலை -- PDF
    அருள் மணிமாலை -- PDF
    சாகாக்கல்வி - PDF
    வள்ளல் யார் - PDF
    உலக குரு – வள்ளலார் - PDF
    திருஅருட்பா நாலாஞ்சாறு
    சனாதன தர்மம்
    பரம பதம் - எட்டு எழுத்து மந்திரம் அ
    ஜோதி ஐக்கு அந்தாதி
    அகர உகர மாலை
    ஞான மணிமாலை
    ஆன்மநேய ஒருமைப்பாடு
    ஜீவகாருண்யம்
    ஸ்ரீ பகவதி அந்தாதி
    அஷ்டமணிமாலை
    திருஅருட்பா தேன்

    ReplyDelete
  12. "இவர்கள் போன்ற சக்திகள் இல்லையேல், உலகச்சிவம், சவம்."

    நச்.......

    இப்படி பல பெண்கள் உண்டுங்க... அநேகமாக அணைத்து குடும்பங்களின் அச்சாணி , ஆணி வேர் பெண்கள் தான்.

    வெறும் சிரிப்பு மட்டும் இல்லாமல் நன்கு சிந்திக்க
    உற்சாகம் கொடுக்கும் பதிவும் இருக்கு உங்க கிட்ட

    அருமை

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...