இறைவா! போற்றி! போற்றி!!

ஒற்றைச்சூரியனில்
ஒவ்வொரு வேளையில்
ஒவ்வொரு நிறம் அடித்த
அவன் மா ஓவியனா?

கீச்சிலிருந்து கர்ஜனைவரை
பீச்சிலிருந்து கல்லறைவரை
ஒவ்வொரு ஒலி தந்த
அவன் இசை வித்தகனா?

மூச்சும் எச்சிலும்
ஒரே தொண்டை கொண்டே எடுத்து
சரியாய்ப்பிரிக்கும் 
அவன் மகா மருத்துவனா?

கலை நுணுக்கமென்றால்
நுணுக்கத்திற்கெல்லாம்
நுண்ணுணுக்கம்

அறிவியலென்றால்
எம் அறிவு இயலா அளவில்
இயல் இயக்கம்

எங்கள் பிரம்மாண்டமெல்லாம்
உன் முன்
அதி நுண்
எனச்சுருங்கும்
அகண்ட பிரம்மாண்டமே
வரையறை செய்ய முடியா
ஒற்றை இருப்பே,
எங்கள் சக்தியெல்லாம்
சேர்த்து உன் சக்தியின்
எல்லையைப் பட்டியலிட்டு
முடிக்கும் அப்புள்ளி,
உன் அளவிலா சக்தியின்
துவக்கப்புள்ளி கூட ஆகா.
ஆகா!
இறைவா!
போற்றி! போற்றி!!

Comments

  1. இயற்கையும் , அதன் பரிணாம வளர்ச்சியும் உங்கள் பார்வையில் இப்படி ஒரு கவி. நல்லா இருக்குங்க

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...