இப்படி ஒரு மீம் சோமீயில் இருக்கிறதே, அதன் காண்டக்ஸ்ட் தெரியுமா? தெரியாவிடில் ஏழுஜியில் பார்த்துக்கொள்ளுங்கள்.
அப்படித்தான் நம் வாழ்வும். நமக்கு படிப்பும் வந்து தொலையுதில்லை, அதற்கான துடிப்பான முயற்சி உழைப்பும் செய்வதில்லை. ஆனால் ஓவர்திங்க் மட்டும் oumuamuaவின் தோற்றம் வரைக்கும் செல்லும்.
ஓவர்திங்கிங் தோழர்களே, நிங்ஙள் ஓவர்திங்ஙர்கள் சரி, பட் ஆர் யூ திஸ் ஓவர்திங்க்கர்ஸ்?
சிறு வயதிலிருந்தே நமக்கு ஓமொர்க் என்பது எட்டிக்காய். என்ன, எப்பிடி எழுத வேண்டும் என்பது தெரியாதது ஒரு புறம். என்னத்தப்போட்டு எழுதிக்கிட்டு எனும் சுயசோம்பல் மறு .
நன்றாக நினைவிருக்கிறது. அது மூனாவதோ மேக்சிமம் நாலாவதோதான் இருக்கக்கூடும். ஏனென்றால் அய்ந்தாவதுக்கு மேலே வேறொரு பில்டிங்கில் வகுப்பறைகள் இருந்தன. அய்ந்து வரை தோ.. கீழே மஞ்சக்கலர் பஸ்கள் தெரிகிறதே, அந்த இடத்தில் கூரை வேயப்பட்ட வகுப்பறைகள் வரிசையாக இருக்கும் அங்கேதான் படித்தோம். எஞ்சியிருக்கும் மண் பாங்கான இடம்தான் ப்லே க்ரௌண்ட். அங்கே விளையாட்டுகள் நடைபெறும். மொத்த பரப்பளவு என்னவென்பதை கீழே மற்றொரு மேப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதெல்லாம் கதையில்லை. மெயின் கதை இப்போதுதான் ஆரம்பிக்கிறது.
ஒருநாள் சிவிக்ஸ் மிஸ் ஒரு ஓம் ஒர்க் கொடுத்தார்கள். அனேகமாக அது வெள்ளிக்கிழமையாய் இருக்குமென நினைக்கிறேன்.
பொதுவாக நம் மீது இன்னொரு குத்தச்சாட்டுகளும் வைக்கப்படும். ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்ததும் தூக்கி வீசப்படும் ஸ்குல்பேக்கானது மறுநாள் பள்ளிக்கு லேட்டாகி, அவதிதொவதியாகப் புறப்படும்போதுதான் தேடுதல்படலம் துவங்கும். டெய்லி வேலையே இப்படி இருக்குமென்றால் வீக்கெண்டில் எப்படி இருக்கும் என்பதை விளக்கத் தேவை இருக்காது. வெள்ளி மாலை பாய்ந்து வந்து வீசிய வேகத்தில் அது வீட்டுக்குள்தான் கிடக்கிறதா என்பதே ஒரு ஆச்சரிய நிகழ்வு.
அப்படித்தான் அன்று சிவிக்ஸ் மிஸ் கொடுத்த ஓமொர்க்கோடு பைக்கட்டு தூக்கிவீசப்பட்டது.
சனி இயர்லி மார்னிங்கா அல்லது ஞாயிறு யர்லி மார்னிங்கா எனத் தெரியவில்லை. சுமார் 2 அல்லது 3 ஏயெம் மணி இருக்கும். திடீரெனத் தூக்கம் கலைந்தது. கலைஞ்சது என்றால் துப்புரவாகத் தூக்கமில்லை. அப்போது வந்தது பாருங்கள் ஓர் உத்வேகம், ஓமொர்க்கெல்லாம் முடித்து பஸ்ட்றேங்க்கெடுத்து முன்னேறிய வகுப்பில் பின்னேறிவிட வேண்டும் என ஏதோ ஒன்று பீறிக்கொண்டு வந்தது.
நைட்டிரவில் வீட்டில் நைட் லேம்ப் கூட இல்லாத இருட்டு. வீட்டில் எவரடி சிஹப்பு பேட்டரிக்கட்டை போடப்பட்ட டார்ச் லைட் இருந்தது. அதிலிருந்து பால் போன்ற வெண்மையில் (அல்லது மஞ்சள்?) வெளிச்சமடிக்கும். அதை அடித்தபடி சிவிக்ஸ் ஒமொர்க் எழுதினேன்.
ஓமொர்க் ஒன்றும் பெரிதல்ல, இந்திய மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்களை எழுத வேண்டும். மூன்று முறை.
குப்புறப்படுத்துக்கொண்டு, காலை மேல்நோக்கித்தூக்கியபடி, ஒரு கையில் டார்ச்சைப் பிடித்தபடி, மறுகையால் இண்டியன் ஸ்டேட்ஸ் அண்ட் கேபிடல்ஸ் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் இந்தியாவில் 25 ஸ்டேட்ஸ் இருந்ததென நினைவு.
வரிசையாக இருவத்தைந்து ஸ்டேட்டுகளும் அதன் தலைநகரங்களும் எழுதி, அதையே இன்னும் இரண்டு முறை கையாலேயே காப்பி பேஸ்ட் செய்துவிட்டால் முடிந்தது வேலை. அப்படியே நூல் பிடித்து பஸ்ட் ரேங்க் எடுத்துவிடலாம்.
ஒன்று. மாநிலம் - கேப்பிடல்
இரண்டு. மாநிலம் - கேப்பிடல்
மூன்று. மாநிலம் - கேப்பிடல்
இப்படியாக ஒவ்வொன்றாக எழுதப்பட்டுக்கொண்டே வர, பதினெட்டாம் படிக்கு வந்ததும் எங்கிருந்துதான் வந்ததோ அந்த ஏடிஎச்சுடி அல்லது லூசுக்கிறுக்கு. பதினெட்டு ஸ்டேட்டுகள் எழுதிய பின், மீதியை பொறவு எழுதிக்கொள்ளலாம், அதுதான் சாட்டடேசண்டேவே இன்னும் முழியவில்லையே என்ற நன்னம்பிகை.
டார்ச்சி லைட்டை அமத்திவிட்டு அப்படியே உறங்கிப்போனேன்.
திங்கள் காலை ஸ்கூல்பை எங்கோ கிடக்க, சிவிக்ஸ் நோட் எங்கோ மறைய, ஒருவழியாய் மிதிவிழுவதற்குள் எடுத்துக்கூட்டி பள்ளிக்குச்சென்றாயிற்று.
அனேகமாக அது இரண்டாவது அல்லது மூன்றாவது பீரிடாக இருக்கக்கூடும். ஏனெனில் சூரிய லக்கினத்தை வைத்துப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.
சிவிக்சுக்கு ஒரு பெரிய மிஸ் வருவார்கள். நாலனா சைசில் ஸ்டிக்கர் பொட்டு. ஆந்திராக்காரர் என நினைக்கிறேன். சாயலும் மொழியும் அவ்வப்போது அப்படி இருக்கும். நீண்ட ஒற்றை ஜடை போட்டுக்கொண்டு வருவார். மிஸ் பேரென்னவென்பதை மறந்து விட்டேன். பாலச்சந்தர் படங்களில் கீதா என ஒரு நடிகை வருவாரல்லவா, அவர் முகத்தில் ஓர் ஈர்க்கும் மேக்னெட் இருக்குமே, அதைக் கழித்துவிட்டால் இவர் முகம் வரும். நிறம் கீதா நிறமல்ல. கருப்புமல்ல. ஒரு மாதிரி செந்நிறம். இல்லை கீதாவை அழித்து விடுங்கள். வரவு நல்ல உறவில் விசுவுக்கு ஒய்ஃபாக வருவாரல்லவா? அந்த நடிகை. ஆனா புஷ்டியாக இல்லாமல் கொஞ்சம் நன்றாக உசரமாக, ஓங்கு தாங்காக வளர்ந்திருந்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரி இந்த மிஸ் இருப்பார் என வைத்துக்கொள்ளுங்கள்.
சரி உருவ டீடைலிங் நமக்கெதற்கு? விசயத்துக்கு வருவோம். மிஸ்சு வந்து ஓமொர்க் நோட்டை தனது டேபிலில் வைக்கச் சொன்னார்கள். எல்லோரும் சென்று ஒன்றன் மேல் ஒன்றாக வைக்க, ஒரு வன் மட்டும் ஒன்றன் மேலில்லாமல் நடுவில் சொருகிவிட்டு வந்தான். வீரன்.
சிறு பிள்ளைகள் பசும்பிஞ்சுகள் தங்களுழைப்பைச்செலுத்தியோமொர்க்கையெழுதியெடுத்துக்கொண்டு வந்தால் நல்ல குடும்பத்துப் பெண்மணி என்ன செய்ய வேண்டும்? ஸ்டாஃப் ரூமுக்குக் கொண்டு சென்று, திருத்தி, மறுநாள் திரும்பக் கொணர்ந்து பாராட்டுப்பத்திரம் வாசிக்கலாம் தானே? அதுதானே முறை?
ஆனால் இந்த அம்மாள் என்ன செய்தார் தெரியுமா? நோட்டை வரிசையாகத் திறந்து மூன்று பேஜுக்கு மூன்று டிக்குடுத்தி, நோட்டினரின் பெயர் சொல்லி அழைத்து அங்கேயே டெலிவிரியிட்டுக்கொண்டிருந்தார்.
இம்மதுரைக்காஞ்சியின் காட்சியைக் கண்டதுமே வீரனுக்கு ஆய் அடைத்துக்கொண்டது. உடம்பை இரும்பாக்குதலின் தாத்பரியங்கள் குறித்த சிந்தையில் ஆழ்ந்தான்.
அவன் நோட்டை எடுத்து ஒரு பேஜுக்கு டிக்கடித்த அட்டீச்சர் பெண்டிர், சினம் கொண்டு, முன்பக்கத்தைத் திருப்பி வீரனின் நாமகரணத்தைத் தன் இரு கருவிழிகளால் படித்து கருவிழியைச் செவ்விழியாக்கி, வீரனின் பெயரை நமோஸ்துதை செய்து, செல்லக்கோபத்துடன், "மீதி எங்க?" எனக்கேட்டார்.
இங்கே மீதி என்பது 25 ஸ்டேட்ஸில் 18 மட்டும் எழுதப்பட்டு மிச்சம் விடப்பட்டிருந்த மீதியா, அல்லது திரீ டைம்ஸ் ஓமொர்க்கில் ஒன் டைம்ஸ் மட்டும் (ஆக்ச்சுவலி முக்கா டைம்ஸ்) எழுதப்பட்டிருந்த (அதாவது எழுதாமல் விடப்பட்டிருந்த) அந்த மீதி எங்கே என அவர் கேட்க, ரயில்நிலையங்களில் திடீர் செய்ன் பறிப்பு ஏற்பட்டால் அதிர்ந்து போய் நிற்பார்களே வயதானவர்கள், அது போல கையறுநிலையைக் கண்களில் திரட்டி, எழுதி வச்சிருந்தது எப்புடி எவாபொரேட் ஆச்சு என்பது போன்ற ஆச்சரிய அதிர்ச்சியோடு கண் கொட்டாமல் மிஸ்ஸைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
என்னவாயிற்று மீதி ஓமொர்க் என அவர் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும், பெரியவர்களிடம் பதிலுக்கு பதில் பேசுவது அவர்களுக்குச் செய்யும் மரியாதைக்குறைவு எனும் உயர் ரக கொள்கை கொண்டவனாக அமைதி காத்துக்கொண்டே நின்றிருந்தேன்.
மரியாதை நிமித்தம் நான் காத்த அமைதியை அவர் ஒத்துழையாமை என்பதாகப் புரிந்து கொண்டு கருப்பனே வெளியேறு எனக் கேட்டுக்கொண்டார். மூத்தோர் சொல்லை கிஞ்சித்தும் மறுக்காத நான், மறுவார்த்தை பேசாமல் வகுப்பை விட்டு அவுட்ஸ்டாண்டிங் செய்தேன்.
நம்மளப்புடிச்ச சனி சும்மா உடுமா? வேற யார்லாம் ஓமொர்க் முடிக்கல எனக் கேட்க இதற்கென்றே பெற்றுப்போடப்பட்டதுபோலிருந்த இருவர் எழுந்து நின்றார்கள். (ஆல் க்யால்ஸ் எழுதிட்டு வந்துருக்குதுகள். ஒன்லி பாய்ஸ் தி கல்ப்ரிட்ஸ்). அவம்கள் இருவரையும் சேர்த்து வெளியனுப்பி, நண்பர்களே இதுதான் முக்கியக் கட்டம். அங்கே இங்கே திரும்பி கதையின் உச்சக்கட்ட உச்சுக்கொட்டும் நிகழ்வைத் தவர விட்டுவிடாதீர்கள். பாருங்கள் இருக்கும் படபடப்பில் தவற என்பதற்குப்பதில் தவறாக தவர என்று எழுதியிருக்கிறேன் போன செண்டன்சில். ஆகவே தவற விட்டுவிடாதீர்கள்.
காலைல பத்தர பதினோரு மணி இருக்கும். வெயிலு பிரிக்கிது. ஆத்துலேந்து மணல் கொணாந்து வகுப்பறையச் சுத்தி கொட்டி வச்சிருந்தானுக. இந்த முண்ட எங்க மூனு பேரையும் நீல் டௌன், அதாவது முட்டி போட உட்டா ப்ரென்ஸ். கால் டௌசர் போட்டுட்டு மூனாது படிக்கிற புள்ளைக வெறும் முட்டியில மணல்ல முட்டி போட்டா எப்பிடி வலிக்கும்னு யோசிச்சுப்பாருங்க. இப்பக்கூட எனக்கு முட்டி அரிக்கிது அத நெனச்சா.
மொதல்ல ஒன்னும் தெரியாது. ஒரு எட்டு செகண்ட் போனதும் சுருக்குனு வலிக்க ஆரமிக்கும் முனங்கால் முழுக்க. மணல்துகள் குத்தி முட்டி வலிக்கிதேனு தொடைய ஒசத்தி மணல தட்டி விட்டு மறுக்கா முட்டிய மணல்ல பொதைப்போம். அப்ப இதுக்கு முன்ன மணல் குத்தி இருந்த எடமெல்லாம் அரிக்க ஆரமிக்கும். புதுசா மணல் குத்துற எடம்லாம் வலிக்க ஆரம்பிக்கும். இப்பிடி கலந்து கட்ட வேதனை வரும் மக்களே. அதெல்லாம் சொல்லி மாளாது.
அப்பப்ப கையக்கொண்டி மணல தொடைக்கிறோம்னு ரெண்டு கையவும் ஏசுநாதர கூப்புடுறாப்ல மேல தூக்க சொல்லிட்டா அடுத்து.
பார்வ சொழட்டுது. வெயில் சுரீர்னு பொளக்குது. கால் வலி. ஒடம்பெல்லாம் வேர்வை ஓடுது. என்ன பண்றதுன்னே தெரியல.
அப்பத்தான் சகோதர சகோதரிகளே, சொல்றதுக்கு முன்ன, தன் நெத்தியிலருந்து வழியற வேர்வை சொட்டு சொட்டா மணலுக்குள் விதைந்து மறைந்து போறத பாத்துட்டே இருந்த வீரன், கூட நீல்டௌன் போட்டுட்டிருந்த சகா ஒருத்தனிடம் வீரன் சொன்னான், நம்மகிட்டருந்து சொட்டற வேர்வைலாம் மண்ல கொட்டி இந்த க்ரௌண்ட் ஃபுல்லா வேர்வத் தண்ணியாகி அந்த தண்ணியில சிவிக்ஸ் மிஸ் உழுந்து நீச்சல் தெரியாம அடிச்சுட்டு போய்ட்டாங்கன்னா செம்மயா இருக்கும்ல?
Comments
Post a Comment
Pass a comment here...