எந்தப்பாடலைக் கேட்டாலும்
எங்கோ
ஏற்கனவே
கேட்டது போல இருக்கிறது.
யாரின் கதையைக் கேட்டாலும்
எங்கோ
ஏற்கனவே
தெரிந்த யாருடைய கதை போல இருக்கிறது.
எந்தச் சேதி கேட்டாலும்
இப்படித்தான் ஒருமுறை
எனச் சொல்ல
ஏற்கனவே நடந்த ஒரு செய்தி இருக்கிறது.
சந்திக்கும் எந்தப் புதிய முகமும்
எங்கோ எப்போதோ
ஏற்கனவே தெரிந்த
பார்த்த பழகிய முகத்தைப் போலவே இருக்கிறது.
பிறப்புகள் மரணங்கள்
திருமணங்கள் மனமுறிவுகள்
முதுகு குத்தல்
கழுத்தறுத்தல்
எதிர்பாரா உதவி
வாராக்கடன்
பெறாக்குழந்தை
காலை
பகல்
மாலை
வரவு
இன்மை
நிலா
நட்டம்
துரோகம்
பயணம்
சூரியன்
துக்கம்
காத்திருப்பு
இரவு
இழப்பு
காரிருள்
உணவு
அழைப்புகள்
நிராகரிப்பு
இயலாமை
அழகியல்
செலவு
நோய்
முதுகுவலி
காமம்
குரோதம்
நினைவுகள்
நேசம்
அன்பு
சுமை
தனிமை
கூட்டம்
விழா
அச்சம்
சவால்
தூக்கம்
கொடுங்கனவு
பகல்கனவு
கனவுகள்
ஏக்கம்
அழுகை
மகிழ்ச்சி
எதுவும் எதுவும் புதிதல்ல,
ஏற்கனவே
எங்கோ
கேட்ட பார்த்த வியந்த நிகழ்ந்த
ஏதோவொன்றாகவே
ஒவ்வொன்றும் இருக்கிறது.
ஆனால்
எங்கு
எப்போது நிகழ்ந்தது என்பது மட்டும்
எத்தனை முயன்றாலும்
நினைவுக்கு வருவதேயில்லை.
மூக்கு நுனிவரை வந்து வராமலேயே போய்விடும்
தும்மல் போல்
எத்தனை முயன்றாலும்
அதற்கு மேல் நினைவுக்கிழுக்க இயலவில்லை.
ஒரு வேளை
இதைத்தான்
வயதாகுதல் என்கிறார்களோ?
Comments
Post a Comment
Pass a comment here...