ஆவி, பேய், முனி, ஜின் ஆகிய வஸ்துக்களின் மேல் இயல்பிலேயே ஆர்வமிருக்கும் சுகந்தனுக்கு,
அந்த வனத்திலிருக்கும் ஆளரவமற்ற அரண்மனைக்குள் சென்ற பலரில், சிலர் மட்டும் மர்மமுறையில்
மரணமடைவது மிகுந்த ஆர்வத்தைக்கிளறியது. ஒன்று, அந்த மரணங்கள் ஏன், எப்படி ஏற்பட்டன
எனத்தெரிய வேண்டும், அல்லது அங்கே சென்று, மரணத்திற்குத்தப்பித் திரும்பவேண்டும்.
இப்படித்தனக்குள் உறுதிபூண்டு, அங்கே செல்வதற்கென ஒரு தினத்தையும் முடிவுசெய்து,
இத்திட்டத்திற்குச் சரிப்பட்டுவரக்கூடும் எனக்கருதிய தன் நண்பன் ஆனந்தனிடம் பேச, அவனும்
எந்த மறுப்புமின்றி உடனே வரச்சம்மதித்தது சுகந்தனுக்குப் பெரும் நிம்மதி.
அடவி அரண்மனை என்றழைக்கப்படும் அங்கே செல்வதற்கு முன், அது குறித்து இணையத்திலும்
வெளியிலும் கிடைத்த அத்தனைத் துணுக்குகளையும் தேடிப்படித்தனர் இருவரும். அங்கே இதுவரை
சென்றவர்களின் எண்ணிக்கை, நிகழ்ந்த மரணச்செய்திகள், அரண்மனையைச் சுற்றியும் பற்றியும்
கூறப்படும் எச்சரிக்கைகள், கதைகள் முதலிய எதையும் விட்டுவைக்கவில்லை. இருப்பினும், எத்தனை
முயன்றும் அவர்களுக்கு ஒரு விவரம் மட்டும் கிடைக்கவேயில்லை. அந்தப் பேயரண்மனையிலிருந்து
தப்பிப்பிழைத்தவர்களின் பெயர்கள் உட்பட அவர்கள் குறித்த வேறு எந்தத் தகவலும் எங்கு தேடியும்
கிடைக்கவில்லை. அவர்களில் ஒருவரையேனும் கண்டுபிடித்து, சில ரகசியங்களைக்கேட்டறிய
நினைத்த சுகந்தனுக்கு வெற்றி கிட்டவேயில்லை.
சுகந்தனைச் சில கேள்விகள் துளைத்தபடி இருந்தன. அங்கு உண்மையிலேயே பேய் இருப்பின்,
உள்ளே சென்ற அனைவரும் மரணித்திருக்க வேண்டுமே? அது எப்படி சிலர் பிழைக்க, சிலர் மட்டும்
இறக்க முடியும்? இறந்தவர்களின் உயிரைப் பறித்தது எது? இறக்குமளவுக்கு அவர்கள் மட்டும் செய்த
செயல் என்ன? தன்னைக் குழப்பத்தின் ஆழத்தில் மூழ்கச் செய்யும் மர்மத்தை விடுவித்தே
ஆகவேண்டுமென்று சுகந்தன் எடுத்த தீர்க்கமுடிவு அவனை மேலும் சில செயல்கள் செய்ய
உந்தித்தள்ளியது.
அரண்மனையில் நிகழ்ந்த மரணங்களை ஆய்வு செய்கையில், அங்கு (பேயடித்து) இறந்தவர்கள் கத்தி,
சுத்தி, நெருப்பு, நீர் இப்படி எந்த ஆயுதம் இன்றியும், துரத்தித்துரத்தி விரட்டப்பட்டு அல்லது
துடிதுடிக்க வெட்டப்பட்டு இப்படி எந்தச் சித்தரவதை இன்றியும், அமர்ந்த நிலையில்,
அரண்மனையின் தரையில் கண்கள் நிலைகுத்தி நிற்க, உடல் விரைத்து, உயிர் மட்டும் நீக்கப்பட்டு
நிகழ்ந்திருந்தது அவர்களின் மௌனமரணம். யுத்தமின்றி ரத்தமின்றி நடந்த இந்த அத்தனை
மரணங்களிலும் ஒருவித எலி-பூனைத்தனம் இருப்பது தெரிந்தது சுகந்தனுக்கு. அந்த முடிச்சை
அவிழ்க்கும் வெறி எந்நேரமும் அவனை ஆக்கிரமித்தது.
அரண்மனைக்குச் செல்ல அரசு தடை உத்தரவிட்டிருக்கும் நிலையில், பகலைவிட இரவில் செல்வதே
பிரச்சினைகளற்றது எனக்கருதி, முன்பே முடிவு செய்த தினத்தன்று நள்ளிரவுக்குச்சற்றுமுன் அந்த
அரண்மனை வனத்துக்குள் புகுந்தனர். இவர்களின் முடிவை அறிய, அன்றைய அம்புலியும்
வழக்கத்தைவிட அதிக ஒளிவீசியது. அந்த வெண்ணிரவை இரவு எனக்கூறுவது சரியன்று. அது ஓர்
இரவல் பகல். இரவின், நிலவின் அதீத ஒளியில் அப்பெருவனம் வேறு நிறம் பூசியிருந்தது.
வனங்கள், அவற்றின் குணங்கள் குறித்து, புத்தகங்களில் படித்து, கற்பனைகளில் வளர்க்கும் வனம்
வேறு, இயற்கை வளர்த்தெடுக்கும் வனம் என்பது வேறு. மனிதக்கூட்டங்களுக்குள் இருக்கும்
பல்வேறு இனங்களும், பிரிவுகளும், பிரத்தியேக பண்புகளும் வனங்களுக்கும் உண்டு. வனம்
நிலத்தின் கடல். அது ஆழம் மிகுந்தது. ஆபத்துகள் நிறைந்தது. வெளிப்பூச்சுக்கு அதில் வெறும் பச்சை
மரங்கள் மட்டும் தெரியக்கூடும். அது தனக்குள் புதைத்திருக்கும் மர்மங்களையும் ஆச்சரியங்களையும்
எந்த வீரிய கற்பனையும் எட்டுவதரிது. அத்தகைய ஒரு கடுவனத்திற்குள் புகுந்து, அந்த
அரண்மனையை அடைந்தனர் இருவரும்.
நிலவின் ஒளிர்தலை உள்ளிழுத்து, தன்னுள் முழுவதும் ஒளிரும்படி கட்டமைக்கப்பட்டிருந்தது அந்தக்
கட்டடம். வகுப்பு முடிந்த தம்மை, அழைத்துச்செல்லப் பள்ளிக்கு வந்த தந்தையைக் கண்டதும், தங்கள்
இரு கரங்களையும் விரிக்கும் குழந்தைகளை ஒத்து, நிலவின் ஒளியை வரவேற்க, தனது
கதவுக்கரங்களைத் திறந்துவைத்திருந்தது அவ்வரண்சூழ்மனை. அந்த அரண்மனைக்குள் நிலவின்
வெண்வெள்ளம் ஊடுருவிச்சென்றது என்பதைவிட, அத்திங்களின் வழியே ஒற்றைக்கண்களிரண்டு
அவ்வரண்மனையின்மேல் எந்நேரமும் நிலைகுத்தி இருந்தது எனக்கூறுவதே சரி.
சுகந்தனும் ஆனந்தனும் அங்கே வரிசையிலமைந்த அறைகளுக்குள் புகுந்து, பேயைத் தேடினர்.
அரண்மனையை அடைந்ததிலிருந்து சுகந்தனிடம் ஒரு பரபரப்பு தெரிந்தது. இதை ஆனந்தன்
கவனிக்கவில்லை. ஆனந்தனுக்கு முன்னரே, குறிப்பிட்ட ஒன்றைக் கண்டுபிடித்துவிடவேண்டும்
எனும் அவசரம் சுகந்தனிடம் இருந்தது. அதையும் ஆனந்தன் அறியவில்லை. ஆனந்தனுக்கு அங்கே
இருப்பவற்றைத் தனது யூடூப் சேனலுக்கென புகைப்படம் எடுத்துப்பதிவதிலேயே கவனமிருந்தது.
ஒரு அறையிலிருந்து அடுத்த அறைக்குச்செல்ல, அறைகளுக்கு மத்தியில் சங்கிலிக்கதவுகள்
இணைக்கப்பட்டிருந்தன. அந்தக்கதவுகள் வழியே மேலும்மேலும் உள்புகமுடிந்தது. அப்படிச்
செல்லச்செல்ல, திறம்பட வேயப்பட்ட ஒரு சிக்கல்மிகு வலைக்குள் அவர்கள் சிக்குவதை இருவருமே
உணரவில்லை. ஆனந்தன் இதை அறியவில்லை என்பதில் பெருவியப்பில்லை. சுகந்தனும்
அறியவில்லை என்பதுவே விதி.
துவக்கத்தில் அவர்கள் கண்ட அறைகளில் எதுவுமே கிடைக்கவில்லை. பேய் இருந்த/இருக்கும் சுவடே
அங்கில்லை. வெறும் குப்பைக்கூளங்கள். ஓவியங்கள். ஒட்டடைகள். விரிசல் சுவர்கள். இடிந்த
மேற்கூரைகள். அடர்வனத்திற்குள் இருந்தும் எங்கும் பூச்சிபட்டைகள் இல்லை. செடி, புல், பூண்டு
எதுவும் இல்லை. அத்தனை அறைகளிலும் நிலவின் முழுமை. ஒரு வகையில், அந்த ஒளியின் மூலம்
அவர்கள் குறிப்பிட்ட ஓர் அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
அத்தனை தேடியும் அதுவரை எதுவும் கிட்டவில்லை என்றதும், இந்த அரண்மனைப்பேய்க்கதையும்
விஷமிகள் கிளப்பிவிட்ட புரளி என நினைக்கிறேன் என்று இருவரும் தத்தமது மனத்திற்குள் ஒருசேர
நினைத்த அந்தக்கணம், அதுவரை பேரமைதி நிலவிவந்த அவ்வரண்மனைக்குள் ஒரு திடீர் விசும்பல்,
முனகல், குழந்தைப்பூனையின் அழுகை. அதைக்கேட்டதும் இருவருக்கும் சட்டென வியர்த்து,
உடலெங்கும் திகில். இருப்பினும் இருவரும் அதை வெளிப்படுத்தவில்லை.
சத்தம் வந்த அறைக்குச்சென்றும் சந்தேகப்படும்படி அங்கு ஏதும் கிடைக்கவில்லை. உண்மையில்,
தேடுமளவிற்கு அந்த அறையில் எதுவுமே இல்லை, அறையின் நட்டநடுவில் விரிக்கப்பட்ட நிலையில்
இருந்த ஒரே ஒரு புத்தகத்தைத்தவிர. அந்த அறைக்குள் நுழைந்தவுடனேயே நுழைபவர்களின் கண்கள்
அப்புத்தகத்தின்மேல் படும்படி திட்டமிட்டு வைக்கப்பட்டிருந்ததை சுகந்தனுடைய மதி உணர்த்தியது.
அந்தப்புத்தகத்திடம் நெருங்குவதைத்தவிர்த்து, அவ்வறையில் வேறு எதுவும்
தட்டுப்படக்கூடுமென்றெண்ணி, சுகந்தன் அறையின் மூலைகளின் பக்கம் தேடிய அதே சமயம்,
‘இந்தப்புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறது?’ என தனக்குள் பேசியபடி அதை ஆனந்தன்
எடுத்துப்படிக்க ஆரம்பிக்க,
“டேய்!!!! அவசரப்பட்டுட்டியே, அத ஏன் படிச்ச?” என சுகந்தன் அதிர்ந்து கேட்க, “இல்ல இதுல
என்ன இருக்குனு தெரிஞ்சிக்க ஒரு ஆர்வம்...” என ஆனந்தன் இழுக்க, சுகந்தனின் குரலில் மேலும்
ஆத்திரம்.
”தப்புப்பண்ணிட்ட தப்புப்பண்ணிட்ட தப்புப்பண்ணிட்ட” - சுகந்தன்.
“புக்க எடுத்து படிச்சதுல என்ன தப்பிருக்கு?” - ஆனந்தன்.
“உங்கிட்ட ஒரு விஷயம் மறைச்சுட்டேன். இங்க பல பேர் வந்தும் அதுல சிலர் மட்டும் செத்ததுல ஒரு
ரகசியம் இருக்குனு என் மனசு உறுத்திட்டே இருந்துது. அது என்னனு தேடினதுல சித்தர் எழுதின ஒரு
ஓலைச்சுவடி கிடைச்சது.”
ஆவியெனுஞ் சர்ப்பந்தனை அனுதினமும் அலைந்தலைந்து
ஓடிஓடித் தேடிஓடி அளைக்குவந்த ஆத்மமே
கட்செவிக்குச் செவியும்மில்லை
கடந்துசெல்ல ஊன்தடியும்மில்லை
ஆவிபேய்க்குத் துன்பம் என்ன
இடுப்பின்கீழ் துடுப்புகள் இல்லை
ஆவிக்கும் அகடூரிக்கும் இரண்டுக்கும் ஒற்றுமையென்ன
பகலிரவில் நடந்துலவ இருவர்க்கும்துணை யெழுத்தில்லை
ஆவியென்ன அரவமென்ன கதையென்ன விதையென்ன
ஆதிமுதல அந்தம்முடிய கண்டஅண்ட யுகங்களென்ன
உடல்கருவி நடைபழக்கி நீகடந்த ஜென்மம் எத்தனை
அவைஇன்றி இவைகடந்த புனர்பிறவி எத்தனையெத்தனை
செவிதிறந்து கேள்செய்தி கூறுகின்றேன் பித்தனடியேன்
மதிதிறப்பின் கண்டடைய கதைப்பேனே கதைப்பேயை
“அந்த ஓலைல இருந்தத படிச்சப்ப, அந்தப் பேய், இங்க ஒரு கதையில இருக்குனு தெரிஞ்சுகிட்டேன்.
அந்தக்கதை எந்த புக்குல இருக்குதுனு அந்த ஓலைல இல்ல. அந்தக் கதைய எப்புடி
கண்டுபுடிக்கறதுன்ற குறிப்பு மட்டும் இருந்துது. அந்தக்கதை எதுன்னு இதுக்கு முன்ன இங்க வந்த
ஒருத்தருமே கண்டுபுடிக்கல. கண்டுபுடிச்சவங்க இங்கருந்து திரும்பல. கண்டவர் விண்டிலர் விண்டவர்
கண்டிலர். அந்தக்கதைய படிக்கறவங்களுக்கு மரணம் சம்பவிக்குது. இந்த ரூமுக்கு வந்ததும்,
இதுவரைக்கும் இருந்த புதிர் விலகி விடை கிடைச்சிடுச்சு. இந்த புக்குல பேய் இல்ல, அதுல இருக்குற
கதை. அதுவே பேய்! அதுவே பேய்!” எனப் பித்துப்பிடித்துப் பேசிய சுகந்தனை ஆனந்தன்
இடைமறித்து,
“டேய்டேய், நிறுத்து ஒரு நிமிஷம். இதுக்கு முன்ன எத்தன ரூம்ல புக்குங்க கெடந்தது? அது எப்பிடி
இந்த புக்குல இருக்கற இந்தக்கதைய பேய்னு உருட்டுற, எதுக்கு இப்பிடி நடிக்கிற?” எனக்
கெக்கலித்துக் கேலிபேசிய ஆனந்தனை, உச்சக்கட்ட எரிச்சலுடன், “உனக்குப்புரியல. நீ இத படிக்க
ஆரமிச்சிட்ட, இனி நிறுத்தறது ஆபத்து. மேல படி” எனக்கூற,
‘இவன் ஏன் திடீரென இத்தனைக்கடும்பேச்சு பேசவேண்டும்’ என்ற குழப்பமிகுதியில்,
அப்புத்தகத்தின் முதல் பத்தியைப் படிக்கத்துவங்கியதும் ஆனந்தனுக்கு அவர்கள் இருவரும் சுழலில்
சிக்கியது புரிந்தது. அந்தக்கதை இப்படி ஆரம்பித்தது…
“ஆவி, பேய், முனி, ஜின் ஆகிய வஸ்துக்களின் மேல் இயல்பிலேயே ஆர்வமிருக்கும் சுகந்தனுக்கு,
அந்த வனத்திலிருக்கும் ஆளரவமற்ற அரண்மனைக்குள் சென்ற பலரில், சிலர் மட்டும் மர்மமுறையில்
மரணமடைவது மிகுந்த ஆர்வத்தைக்கிளறியது. ஒன்று, அந்த மரணங்கள் ஏன், எப்படி ஏற்பட்டன
எனத்தெரிய வேண்டும், அல்லது அங்கே சென்று, மரணத்திற்குத்தப்பித் திரும்பவேண்டும்.
இப்படித்தனக்குள் உறுதிபூண்டு, அங்கே செல்வதற்கென ஒரு தினத்தையும் முடிவுசெய்து,
இத்திட்டத்திற்குச் சரிப்பட்டுவரக்கூடும் எனக்கருதிய தன் நண்பன் ஆனந்தனிடம் பேச, அவனும்
எந்த மறுப்புமின்றி உடனே வரச்சம்மதித்தது சுகந்தனுக்குப் பெரும் நிம்மதி.”
ஆனந்தன் படிப்பதை நிறுத்தி, “இது என்ன நம்ம கதை வருது? எனக்கு முன்னயே இங்க வந்து
திருகுவேலை செஞ்சுருப்பனு உன் மேல சந்தேகம் வருது. நீ அப்டி செய்யலனே வைய்யி,
இந்தக்கதைய பேய்னு எதவச்சு நம்பறது?”
“பேய்க்கதையப்பத்தின குறிப்பு ஓலைல இருந்துதே.”
“என்னது?”
“நமக்கு ஒடம்புல இருக்கற ஒரு உறுப்பு பேய்க்கு இருக்கறதில்லனு கேள்விப்பட்டுக்கல்ல?”
“ம்ம்”
“அந்த உறுப்பக்குறிக்கற துணையெழுத்து இந்தக்கதையிலயும் எங்கயும் இல்ல. கதைய நீ மேல படி
தெரியும். இந்தக்கதைல அந்தத் துணையெழுத்த கண்டுபிடி.”
“ஏன் கண்டுபுடிக்கணும்?“
“அத கண்டுபுடிச்சதும் உனக்கு மரணம் இல்லை. பேய் உன்ன விட்டுடும். கண்டுபுடிக்கற வரை நீ
பேயின் பிடியில். கதைய படிச்சுட்டே இரு” எனக்கூறி அவனை அங்கேயே விட்டுவிட்டு விலகிய
சுகந்தனை அடிக்க முற்பட்ட ஆனந்தன், தன்னுடலை அங்கிருந்து அசைக்கமுடியவில்லை என
உணர்ந்ததும், தன்னை இதில் சிக்க வைத்த சுகந்தன் மீது ஆத்திரமும் அழுகையும் முட்டி வந்தது. பின்
அங்கிருந்து முதலில் உயிர்தப்புவதே முக்கியம் என்றுணர்ந்து, அவன் உதடு அந்த மந்திர
எழுத்தைத்தேடி, பேய்க்கதையைப் படிக்க ஆரம்பித்தது.
கானல் சிறுகதைப் போட்டி 2024ல் ஆயிரம் ரூபாய்கள் பரிசு வாங்கித்தந்த கதை. Drop a comment when you 'see' it.
Comments
Post a Comment
Pass a comment here...