வாழ்க்கை ஒரு தற்செயலா, அபத்தமா, மாயையா, அற்புதமா இப்பிடிலாம் அப்பப்ப தோணும்ல?
ஒரு கத சொல்றேன்.
நா ஸ்கூல் படிக்கிறப்ப முக்கிய பருவத்த (எப்ப செஞ்ச பாவமோ) பாய்ஸ்கூல்ல படிக்க வேண்டி இருந்துது. அது தமிழ் & ஆங்கில மீடியம் கலந்த அரசு எய்டட் பள்ளி. நூற்றாண்டு கடந்த பள்ளி. சமூகத்தின் எல்லா அடுக்குகள்லருந்தும் வர பசங்க அங்கருந்தாங்க. எங்க க்லாஸ்ல கிட்டத்தட்ட 70+ பசங்க இருந்தானுக. எல்லா வகுப்புலயும் நல்லா படிக்கிற பசங்க இருந்தாலும் சில பேர வாத்தியாருக ரூட்டிங் பண்ணுவாங்கல்ல, லைக் இவன் நல்லா படிக்கிற பையன் மட்டுமில்ல, ஸ்டேட் ஃபஸ்ட் வரக்கூடிய பையன், இந்த மாதிரி. அதே மாதிரி ஒருத்தன் இருந்தான் எங்க க்லாஸ்லயும்.
அவம்பேரு வேணாம். ஆளு பாக்க ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் இருக்காங்கல்ல மங்கையர்க்கரசின்னு, (இப்ப சமீபத்துல தேச மங்கையர்க்கரசினு மாத்திருக்காங்க போல). அந்த லேடியோட ஆண் வெர்ஷன் மாதிரி இருப்பான் இவன். கருகருனு சுருட்ட முடி. ஆனா தொளதொளனு இல்லாம மண்டையோட ஒட்டுனாப்ல இருக்கும். கணீர்னு இருக்கும் குரல். நெத்தியில குங்குமமோ நீறோ இல்லாம பாக்கவே முடியாது.
சொல்ல மறந்துட்டேன், எங்க ஸ்கூலோட செவுரு கூட கெட்ட வார்த்த பேசும். அப்பிடியாப்பட்ட ஆம்பியன்சுல இவன் நாயி எருமைனு கூட திட்டி பாத்ததில்ல. அநியாயத்துக்கு நல்லவன். பஸ்ட் மார்க்கும் எடுப்பான். வாத்தி டீச்சர்களுக்கும் செல்லத்தத்துப்பிள்ள மாதிரி. கணீர்ன்ற அவன் வாய்சுல தமிழ் உச்சரிப்ப கேக்கணும். அப்புடி இருக்கும்.
ஸ்கூல்ல எச்செம்லருந்து எல்லா வாத்திகளும் டிக்லேரே பண்ணிட்டாங்க, அவன் ஸ்டேட் பஸ்ட் வந்துருவான், கொறஞ்சது மாவட்ட பஸ்டாவுதுன்னு. இத்தனைக்கும் எங்க ஸ்டேண்டர்டுல மொத்தம் பத்து பண்ணண்டு செக்சன். ஜே,கே செக்சன் வரைக்கும் போவும். அப்பிடி அத்தன செக்சன்லயும் இவன மாதிரி நல்லவன் ஒருவன் வல்லவன் இருவன பாக்க முடியாதுனு வாத்தியார்கள் வாழ்த்திப்பாடுவாங்க.
பொதுவா இப்பிடி ஒரு பையன் இருந்தா மத்தவனுகள்லாம் அவம்மேல காண்டுல இருப்பானுகல்ல, இவம்மேல அந்த மாதிரி யாருக்கும் இருக்காது. ஏன்னா எல்லாருக்கும் ஜெனியூனா ஹெல்ப் பண்ணுவான். வாத்தியாருகளுக்கு பெட்டா இருந்தாலும் அவங்களுக்கு கையாள் வேல பாக்க மாட்டான். நல்லவனா இருப்பான், மத்தவங்களையும் ஒழுங்கா இருக்கச்சொல்லுவான், ஆனா புளுத்திக்கொழந்தை வேலை பாக்க மாட்டான். இதுனாலயே அராத்துகள் அவங்கிட்ட வம்புக்குலாம் போக மாட்டானுக. அவன் அவன் வேலைய பாக்குறான் நாம எதுக்கு தொந்தரவு பண்ணிட்டுன்னு இருந்தானுக. (ஒரு புளுத்தி கொழந்தையும் இருந்துச்சு. அதப்பத்தி ஒருநாள் சொல்றேன்).
பப்லிக் எக்சாமுல எல்லாரும் ஃப்லையிங் கலர்சுலயும் நாம மோனொக்ரோம் க்ரேவுலயும் மார்க்கெடுத்து வெளியேற, எல்லாருக்கும் வெவ்வேற வழிகள் பிரிஞ்சிது. நம்ம பய நெனச்ச மார்க் கெடைக்கலன்னு ரீவேல்யூசன் போட்டுருக்காங்கறாப்ல கேள்விப்பட்டேன்.
இன்னோன்னு சொல்ல மறந்துட்டேன், இவனோட வாழ்நாள் லச்சியம் டாக்டராகனுங்கறது. எங்களலாம் க்லாஸ்ல என்னவாகனும்னு லட்சியம்னு கேட்டா பப்லிக்ல பாஸ் பண்றதுன்னு சொல்லுவோம், அவன் கான்ஃபிடண்ட்டா, டாக்டராவறதும்பான்.
இவன்லாம் டௌட்டே இல்லாம டாக்டராகிருவாம்மச்சீ. அவம்மூஞ்சிலியே எழுதி ஒட்டிருக்கு பாரு ஸ்டான்லில சீப் டாக்டராவான்னு என்று சொல்லிக்கொள்வோம்.
இப்படியாப்பட்டவன் சரியான மார்க் வரவில்லை என இம்ப்ரூமெண்ட் எழுதப்போகிறேன் என ஒரு வருடம் இருந்து படித்தான் எனவும் காதுவாக்கில் வந்தது. அப்போதெல்லாம் லேண்ட்லைன் தான். ஆகவே இத்தகைய செய்திகள் எப்போவாவது எங்காவது கேள்விப்பட்டால்தானுண்டு.
படிக்கையில் இப்படி ப்ரேக் எடுத்தெல்லாம் படிக்க முடியும், படிப்பதற்கென்றே ஓரிரு வருடங்களைத் தியாகம் செய்வோரெல்லாம் உண்டென்பதே நமக்கு ஆச்சரியமான தகவல்களாக இருந்தது. இந்த வருடம் இல்லாவிட்டாலும் அடுத்த வருடங்களில் டாக்டராகப்போகிறான், எப்படியும் நம்ம ஏரியாவில் ஒரு கிலினிக் போடாமலா போயிடுவான், அப்போது பார்த்துக்கொள்ளலாம் எனும் அனுபவ முதிர்ச்சியெல்லாம் நமக்கு அப்போது இல்லை. எப்போதும் இல்லை. நம் வாழ்க்கையும் அப்போது ஆசனத்தில் அனல் வைக்கப்பட்டது போலிருந்ததால் பிழைப்புக்காக ஓடிக்கொண்டிருந்தோம். பிறகு அவனை மறந்தே விட்டேன்.
எங்கெங்கோ சுழற்றியடித்து பாலிடெக்னிக், பிறகு இஞ்சினியரிங், பின் ரிசஷன் எனும் மாபெரும் புயல்களெல்லாம் அடித்துத்துவைக்க, பெங்களூரில் பணியைத்துவக்கி, பின் மெற்றாசுக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்து, இங்கே பொட்டி தட்டிக்கொண்டிருக்கையில் ஒரு நாள் லிஃப்டில் எதேச்சையாக அவனைப் பார்த்தேன். மூன்றரை லச்சம் பேர் வேலை செய்த அந்தக் கம்பனியில், அந்த லொகேசனில், மிகச்சரியாக அந்தச் சந்தர்ப்பத்தில் அவனைப் பார்த்தது பேரதிர்ச்சி.
டேய்... நீ எங்க இங்க? என்றேன்.
அவனுக்கு என்னைக்கண்டதும் இன்னும் பேரதிர்ச்சி. இங்கதான் வேல செய்றேன். என்றான்.
"நீ மெடிசின் தான ட்ரை பண்றதா கேள்விப்பட்டேன், அப்பறம் எப்பிடிடா இங்க?"
"மெடிசின் ட்ரை பண்ணேண்டா, கெடைக்கல. அதான் இஞ்சினியரிங் படிச்சு இங்க வேலைக்கி சேந்துட்டேன்"
அவன் குரலில் வருத்தமோ ஏக்கமோவெல்லாம் இல்லை. May be அன்னேரத்திற்குப் பழகிப்போயிருக்கும். இதுதான் ரியாலிட்டி என ஏற்றுக்கொண்டிருக்கக்கூடும்.
"என்னடா இவ்ளோ நல்லா படிச்ச டாப்பர் நீயும் இங்கதான் இருக்க, ஒன்னுக்கும் ஒதவாத நானும் இங்கதான் இருக்கேன். லைஃப் எவ்̀ளோ காமடியானது பாரேன்"
(நக்கலாகவெல்லாம் சொல்லவில்லை. உண்மையிலேயே வாழ்க்கையின் அபத்தத்தைத்தான்...)
அவனும் அந்த லொகேசன்லதான் வேல பாக்கறான்னு தெரிஞ்சதும் சரி ஃப்ரீயாருக்கப்ப பாக்கலாம்னு விடைபெற்றாச்சு. அதுக்கப்பறம் இன்னொருக்கா அலுவலள் ஒருத்தியோட மாலை தேநீர் நடைபயின்றப்ப ஒருக்கா அவன சந்திக்க நேர்ந்தது. லேடிசோட இருந்ததால மரியாதை நிமித்தமா ஹாய்ஹலோ மட்டும் சொல்லிட்டு வெலகிட்டான். அவன் டேலண்டுக்கு அடுத்த ஆறு மாசத்துல ஆன்சைட் போயிருக்கக்கூடும். நானும் வேற கம்பனி மாறி, பின் வெவ்வேற கம்பனி மாறி மாறி ஒரு தசாப்தம் உருண்டோடிருச்சு. அப்பறம் சமீபத்துல லிங்க்ட்ன்ல சர்டிபிகேட் முடிச்சதா பீத்தறதுக்கு ஒரு போஸ்ட் போட்டதப்பாத்து, கனெக்சன்லருந்த ஸ்கூல் ப்ரெண்டு லைனுக்கு வந்தான். ப்ரொபைல பாத்து அயல்நாட்டுல இருக்கறதப் பாத்து அவனும் ஆச்சரிய அதிர்ச்சி அடஞ்சுருக்கக்கூடும், இவன் எப்பிடி?? அப்பிடின்னு.
பொதுவா ஸ்கூல் பத்தியும் நண்பர்கள் பத்தியும் பேசிட்டிருந்தோம். ஸ்கூல் ப்ரென்ஸ் வாட்சப் இருக்கு சேத்து உடவா என்றான். இருக்குற பழைய குரூப்புகளயே எல்லாத்தையும் ம்யூட்ல போட்டுருக்கேன். எதாச்சும் தொடர்பு வேணும்னா ஒம்மூலமா கேட்டுக்கறேன், இப்ப எதும் வேணாம் என்றேன்.
அதன் பின் வகுப்பு பிரபலங்களைப்பற்றிப் பேச்சு வரும்போது இவனை ஆபிசில் பல வருடங்களுக்கு முன் சந்தித்ததைப் பற்றிச் சொன்னேன். அவன் செத்துட்டான் தெரியாதா ஒனக்கு என்றான் இவன். பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பே ஏதோ ஒரு நோயினால் இறந்து விட்டதாகவும், மேலும் இரண்டு வகுப்பு நண்பர்களும் இறந்ததைப் பற்றியும் சொன்னான்.
சத்தியமாக, வாழ்க்கை ஒரு புதிர்தான்.
PS: ஒரு காலத்தில் நெடுநாளைய நட்பு தொடர்பு கொண்டால் அவனுக்கோ யாருக்கோ கல்யாணம் என்று பொருள். பின், குழந்தை குட்டி என்பதாக இருந்தது. இப்போதெல்லாம் இறப்புச் செய்திகள்தான் வருகிறது. வயதாகிவிட்டது. எல்லார்க்கும்.
Comments
Post a Comment
Pass a comment here...