ஒரு சொல்

நமக்கு இருக்குற ஒரு நல்ல குணமா சிலர் சொல்லக்கேட்டது empatheticகா இருக்கறது. எனக்கு இருக்கற கெட்ட குணம்னு நான் நெனைக்குறதும் அதுதான். அந்த குணம் இயல்புல வந்ததுலாம் இல்ல. அதுக்குக் காரணமா இருந்தது நான் படிச்ச, பார்த்த பலர்னாலும் முதல் காரணமா நெனைக்கறது என்னோட அக்கா ஒருத்தங்க. 

Empatheticகா இருக்கறதுக்கான முதல் விதை அவங்கதான் போட்டாங்க. அது எப்பன்னு கூட நெனவிருக்கு. 90களின் பிற்பகுதி. உடன்பிறந்த, ஒண்ணுவிட்ட, தூரத்துன்னு அத்தனை சொந்தங்களும் ஊருக்குப் போயிருந்தோம். Must be some marriage or ramzan or annual vacation. எங்க வீட்டு வாசலுக்கு முன்ன நெறய எடமிருக்கும். ஒரு லாரி, கார் மற்றும் ஒரு மாட்டுக் கொட்டகையளவு அகலம். அங்க கிட்டத்தட்ட 12+ உருப்படிகள் விளாண்டுட்டு இருந்தோம். இப்பிடி கூட்டமா புள்ளைங்க இருந்தாலே அங்க ஐஸ்வண்டிக்காரர் வரது இயற்கை தான? சைக்கிள்ல ஐஸ் வித்துட்டு வந்தார். அப்பல்லாம் கொஞ்சம் வசதியாதான் இருந்தோம். அப்பல்லாம் ஐசும் சீப்பாதான் இருந்துது. ஆகவ குச்சைஸ், பாலைஸ், கப்பைஸ், சேமியா ஐஸுன்னு ரெவ்வெண்டு கைலயும் அள்ளினோம். எங்கூரு வெயிலுக்கு வெல்டிங் நெருப்புல காட்ன மெழுகுவத்தி மாதிரி உருக ஆரமிச்சுது. அத அவசர அவசரமா சாப்ட்டோம். 

பொதுவா ஒரு எடத்துல கும்பலா பசங்க வெளாண்டுட்டு இருந்தா அதப் பாக்க அக்கம் பக்கத்துப் புள்ளைக வரும்ல? நாங்க விளாடுறப்ப அப்டி வந்து பாத்துட்டிருந்துச்சுக மூணு புள்ளைக. வயசுல எங்களலாம் விட சின்னதுகதான். எல்லாரும் ஐசு மொக்கிட்டிருந்ததயும் பாத்துட்டு இருந்துதுக. 

ஐசுக்கு காசு கொணாந்து குடுக்கச் சொல்லி வாசல்லருந்து வீட்டுக்குள்ளருந்த அக்காட்ட சொன்னோம். காசு எடுத்துட்டு வந்த அக்கா, ஐஸ்கார்ட்ட 'அந்தப்புள்ளைங்களுக்கும் ஐஸ் குடுங்கண்ணே'ன்னுச்சு. எங்கக்கா அத சொன்ன அந்த டோன் - அது என்னைக்குமே மறக்காது. சிக்னல்ல, கொழந்தையலாம் வச்சு பிச்ச கேக்கறவங்கட்ட ஒரு இறைஞ்சுதல் tone இருக்கும் நோட் பண்ணிருக்கீங்களா? Usual யாசகத்துக்கும் அவங்க கேக்கற டோனுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கும். எங்கக்கா அதே டோன்ல அந்த மூனு புள்ளைங்களுக்கும் ஐஸ் குடுங்களேன்னு சொல்லி காசு குடுத்துட்டுப் போச்சு (இந்த டோன ஞாபகம் வச்சுக்கோங்க). இவங்களும் கொழந்தைங்கதான, அவங்கள மட்டும் விட்டுட்டு சாப்ட எப்டி மனசு வந்துச்சுன்றாப்ல இருந்துச்சு அந்தக் குரல். எதோ அவங்க பெத்த புள்ளைக்கு கேக்கறாப்ல கேட்டுட்டு போனாங்க.  

அந்தப்புள்ளைகளுக்கும் சேத்து காசு குடுத்ததும் ஐஸ்கார் அவங்களுக்கும் குடுத்தார். அதுகளும் ஆசையா வாங்கி சாப்ட்டுச்சுக. நாம இவ்ளோ வாய் பேசறமே, அது ஏன் அவங்களுக்கும் வாங்கிக் குடுக்கணும்னு நமக்கு தோணவே இல்லன்ற கேள்விதான் எனக்கு முதன்முதல் விழுந்த சாட்டையடி. சுரீர்னு இருந்துச்சு. (இது சிலருக்கு இப்ப கேக்கறப்ப க்ரிஞ்சா இருக்கலாம். ஆனா எனக்கு ஒரைச்சது. I'm wired that way).

எங்கக்கா கேட்ட அந்த குரல் தொனி is still haunting me. இப்ப மத்தவங்கமேல கொஞ்சமாச்சும் அனுதாபப்படுறேன்னா அதுக்கு அக்கா ஒரு முக்கிய காரணம் (இல்லன்னா இன்னும் பெரிய ஸ்டோன் ஹார்ட் ஆகிருப்பேன், Just imagine).

~

(அடுத்து கொஞ்சம் மய்யஹாசர்தனமா செல்ஃப் டப்பா நெறயா வரும். பொறுத்துக்கிடுங்க. இல்லன்னா தவிர்த்துக்கிடுங்க)

~

எனக்கு சென்ஸாஃப்யூமர் இருக்குன்னு மொதல்ல கண்டுணர்ந்ததும் அதே அக்காதான். நான் எது சொன்னாலும் எங்கக்கா சிரிக்கும். அல்லது அது சிரிக்கிற மாதிரிதான் நான் எதுவுமே சொல்லுவேன். எங்கக்காவுக்கு சிரிப்ப கன்றோல் பண்ண முடியாது. கண்ணீர் வர சிரிப்பாங்கன்னு சொல்லுவாங்கல்ல, எங்கக்கா அடுத்தவங்களுக்கு கண்ணீர் வராப்ல சிரிக்கும். யெஸ், பக்கத்துல இருக்கவங்கள அடிச்சு சிரிக்கும். ஒரு பனை மரத்த வெட்டினா அது மெதுவா சொய்ங்குன்னு சாயும்ல, சிரிச்சமேனிக்கி அப்டி சாஞ்சு பக்கத்துல இருக்கவங்கள அடிக்கும். வஞ்சகமே இல்லாம சத்த்த்தமா சிரிக்கும். நாங்க இருக்க எடம் கலகலன்னுலாம் இல்ல, கடத்தெரு மாதிரி இருக்கும். ஆனா அத்தனையும் சிரிச்சுட்டு அஸ்தஃபிருல்லானு ஓதிக்கவும் செய்யும். அதிகமா சிரிக்கக்கூடாது அப்பறம் எதாச்சும் கெட்டதா நடந்துரும்ன்னும். Also அக்காவுக்கு பக்தியென்றால் பக்தி அப்படியொரு அதீத பக்தி. சிறு வயதில் எனக்கு அல்லாவின் மேல் பயங்காட்டினது முழுக்க அதைத்தான் சாரும். எப்போது பார்த்தாலும் குரான், எதற்கெடுத்தாலும் ஒரு ஹதீஸ் ரெஃபரன்ஸ். போரடிச்சா நரகக் கதைகள சொல்ல ஆரமிச்சுரும். 

பிற்காலத்துல அக்கா சொல்ற கதைக்கு கௌண்ட்டர் அடிச்சு கேட்டாலும் -  

[அக்கா: அல்லா ரொம்ப சக்தி வாய்ந்தவன்டா

மீ: அப்டியா? எங்க... மேலருந்து ஒரு முட்டைய போடுறேன், இது கீழ ஒடையறதுக்குள்ள அல்லாவ கேச் புடிக்க சொல்லு பாப்போம்

எண்டயர் ஃபேமிலி: அகராதி அகராதி. அஸ்தஃபிருல்லாஹ் சொல்றா] 

- சின்ன வயசுல நரகத்தப் பத்தியும் அதுல இருக்க தண்டனைகளப் பத்தியும் கேக்கறப்ப அல்லு தெறித்தது உண்மை. (ஒரு கதை: நரகத்தில் இருக்கும் பாம்பின் மூச்சிலேயே ஏழு ஊர்கள் கருகிப் பொசுங்கி விடும். அத்தனை விஷம் கொண்ட பாம்பு. நாம் பாவம் செய்தால் அந்தப் பாம்புதான் நம்மைக் கொத்தும். இந்தக்கதைய மறக்கவே மாட்டேன். எனக்கு பாம்பு மேல ஒரு அவர்ஷன் வந்ததும் இதனாலதான்னு நெனைக்கிறேன்)

நான் சிரிக்கச் சிரிக்கப் பேசுவதால், "நீ சினிமாக்கு போலாம்லடா?" என்று அக்கா ஒருநாள் கூறினார். சரி, அக்காவே சொல்லிவிட்டாரே என்று அடுத்த நாள் ஸ்கூலுக்குக் கட்டடித்து சினிமாவுக்குப் போய்விட்டு வந்தால் வீட்டில் வெளுத்து விட்டார்கள். பிறகுதான் தெரிந்தது அக்கா மீன் பண்ணின சினிமா என்பது வேறு என்பது. 

போலவே மோட்டிவேசனிலும் அக்காவை மிஞ்ச முடியாது. என்னை பிரபல(அறிஞ)ர் ஒருவரோடு அடிக்கடி ஒப்பிட்டுப் பேசும். அந்த அறிஞர் யார் என்பதைச் சொல்வதும் சேது எக்ஸ்ப்ரஸ் முன் நான் பொளந்து கொண்டு நிற்பதும் ஒன்று என்பதால் அதைச் சொல்வதைத் தவிர்க்கிறேன். ஏற்கனவே எவனோ ஒருவன், போகிற போக்கில் 'நீங்க சுஜாதா மாதிரி எழுதறீங்க ப்ரோ' என்று கூறிவிட்டு சென்றதற்கே, நடு ராத்திரியில் நோட்டிபிகேசனைத் தட்டி, 'அடுத்த சுஜாதா நீதான்னு சொன்னியாமே?' என சம்மந்தமே இல்லாத நம்மை வஞ்சம் தீர்த்தது உலகம். 'நீ 'அவர' மாதிரி பெரிய அறிவாளிடா, நீயும் ஒருநாள் அவர மாதிரி ஆவ பாரேன்' என அடிக்கடி கூறும். (அரைக்கிழமாகியும் இன்னும் சிங்கிலாய் இருப்பதை வைத்துப் பார்த்தால் அக்காவின் அந்த வாக்கு அல்மோஸ்ட் 50% பலித்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன்). 

~

நமக்கிருக்கும் மற்றொரு பிரச்சினை. எதையுமே எதனூடாவது அசோசியேட் செய்து mind map செய்வது. ஒரு பாட்டு கேட்டால், அது போல வேறென்ன பாட்டுகள் உண்டு, அதன் pattern என்ன, இப்படி ஒரு திரி மைண்டுக்குள் ஓட ஆரமித்துவிடும். யாரையும் பார்த்தாலோ, எதையேனும் படித்தாலோ, உண்டாலுமோ கூட. [இதுதான் திரில்லிங்கான எடம். மனத திடப்படுத்திக்கங்க]. நம் ஆப்போசிட் ஜெண்டரைச் சேர்ந்த ப்ரெண்ட் ஒருவர் நம் மேல் வைக்கும் ஒரு பெரும் கம்ப்ளைண்ட்: 'நீ ஏன் என்ட்ட பேசறப்ப எப்பவும் என் முகத்த பாக்கவே மாட்ற? என்பதாகும். (உடனே வக்கிரர்கள் குழும வேண்டாம். பேசுகையில், டேபில், வானம், பூமி இப்பிடி சுத்திலும் பாக்கறயே தவிர முகத்துக்கு முகம் பார்க்க மாட்ற என்பதுதான் ப்ராது. வேறு சில அங்கங்களைப் பார்ப்பதாக அல்ல).

ஆக்ச்சுவலாக என்னவென்றால், மேற்குறிப்பிட்ட ப்ரெண்டானவர் அச்சு அசல் அக்கா ஜாடையிலேயே இருப்பார். எனக்கு இவரைப் பார்க்கும்போதெல்லாம் அக்கா ஞாபகம் தான் வரும். அதுவும் பாவம் செய்தால் பாம்பு, அதன் மூச்சுக்காத்துல ஏழூரு பஸ்பம் போன்ற நரகக்கதைகளும். இந்த லச்சணக்கூந்தலில் நான் எங்கே அவரை கண்ணுக்குக் கண் நோக்கி காதலாகி கசிந்துருகி காஃபி டேட்டுக்குப் போக? 

'நல்லா நோட் பண்ணிட்டேன். மத்தவங்க எல்லாரையும் கண்ணப் பாத்து பேசுற. எண்ட்ட மட்டுந்தான் இப்டி இருக்க' என்று ஸ்டேட்டிஸ்டிக்கல் தாக்குதல் வேறு. இந்த நொடி வரை அதற்கு இதுதான் காரணம் என்று அவரிடத்தில் சொன்னதில்லை. இதன் காரணமாகவே ரெண்டொருமுறை மொபைல் ப்லாக்குகள் வரை போனது என்று கருதுகிறேன். 

காதலோடு பார்க்கும் அவ்விரு ஒளிமிகு கண்களை, பதிலுக்குக் காதலோடு பார்த்து, ஹஸ்கி சன்னக்குரலில், "ஒன்னப்பாத்தா எங்கக்கா யாவகம் வருது" என்று கூறினால் செருப்பாலடிக்கமாட்டார்கள் அந்த ஃப்ரெண்டானவர்கள்? இது நமக்கிருக்கும் டிஃபக்ட் தான். சீக்கிரம் கம் ஓவர் செய்ய வேண்டும். (பைதவே, இந்த ஜானரில் ஒரு பலாப்பழக் கதை சொல்லவா? ஒரு அங்கவையிடம், ஒன்னப்பாத்தா எங்க பெரியப்பா மாதிரியே இருக்கு எனக்கூறி மாத்து வாங்கின வரலாறெல்லாம் நம் வீட்டு பரண்மேல் கிடக்கிறது)

~

சரி விசயத்துக்கு வருவோம். எங்கக்கா எங்க மொத்தக் குடும்பத்துக்கும் ஒரு lucky charm. பரந்து விரிந்த எங்க ஃபேமிலி ட்ரீ முழுதும் ஒருவர் கூட மிஸ்ஸாகாமல் பங்கேற்ற ஒரே / இறுதித் திருமணம் எங்கக்காவுடையதுதான். மீதி அனைத்திலும் பலரோ பல குடும்பங்களோ மிஸ்ஸாகியிருக்கிறது, அல்லது துண்டித்தும் கொண்டிருக்கிறது. (மணப்பெண்ணுடைய தோப்பனாரே கோபித்துக்கொண்டு வராமல் நடந்த திருமணங்களும் இதில் அடக்கம்). எல்லாருக்குமே நல்லது நெனைக்கக்கூடிய ஆள் எங்கக்கா. வஞ்சகமே இருக்காது. ஏமாளியும். சட்டுனு ஏமாத்திரலாம். கோவமும் சுரீர்னு வரும். ஆனா என்னலாம் இதுவரைக்கும் திட்டினதுகூட இல்ல. 

~

எப்ப கல்யாணம்னு வயசுக்கு வந்த பொண்ணுகள்ட்ட கேக்கறதும், எப்ப கொழந்தன்னு கல்யாணம் ஆனவங்கள கேட்டு டார்ச்சர் பண்றதும், எப்ப ஆன்சைட்னு ஐடில சேந்தவன கேக்கறதும் நம் சமூகத்தில் புரையோடிப்போன கலாஹ்ச்சாரம் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்ல. நம்மூர்ல ஐடில ஈசியா வேல வாங்கிர்லாம். ஆனா ஆன்சைட் போறதுலாம் சினிமா சக்சஸ் ஃபார்முலா மாதிரி. அந்த கோல்டன் ரூல் எவனுக்குமே தெரியாது. பேசிக் க்ராமர் கூட இல்லாம ஆயரத்தெட்டு மிஸ்டேக்கோட அஃபிஷியல் மெய்ல் அனுப்பிட்டு இருப்பான். ஆனா அவன் அட்லாண்டாவுல இருப்பான். நாம ஒரு பாராவுல கோலன் எப்ப வரணும், செமி கோலன் எப்ப வரணுங்கறது வரை ரூல்ஸ் படிச்சு வச்சிருப்போம். ஆனா சோழிங்கநல்லூர் CDC 5, tower 8, floor 4, 112th cubicleல உக்காந்துருப்போம். 

எப்பிடி கல்யாணம் பண்ணவங்க ஆறே மாசத்துல புள்ள பெக்கலன்னா அந்த தம்பதிக்கு கொட்டையும், கர்பப்பையும் இல்லன்னு சமூகம் தீர்மானிச்சுருமோ அதே மாதிரி ஐடில சேந்ததும் ஆன்சைட் போவலன்னா அவன் ஒரு டம்மிபீஸ்னு எழுதிருவானுக. ஆனா ஒரு விசா ஸ்டாம்பிங் வாங்க ஒவ்வொருத்தனும் எப்பிடி AKயால தண்ணி குடிக்கணும்னு பலருக்குத் தெரியறதில்ல.

நான் ஐடியில சேந்துருந்தாலும், வெளிநாடு விருப்பமெல்லாம் இல்லாம, நம்ம நாட்டுல ஒழச்சு நம்ம நாட்டுக்கே காசெல்லாம் குடுப்போம்னு ஒரு தவமா வாழ்ந்துட்டு இருந்தேன். கிபி ரெண்டாயிரத்து பதினாலுவாக்குல தேசிய அளவுல நாடு பிரகாசிச்ச காரணத்தினால அந்த ஜூன் மாசமே பாஸ்போட்ட தூசி தட்டி வெளிநாட்டுக்குப் போற எல்லா வேலையும் செய்ய ஆரமிச்சேன். ஆனா நம்ம லக்குதான் ஊரறிஞ்சதாச்சே. நெட்ல படம் டௌன்லோட க்லிக் பண்ணா, ஃபைல் டௌன்லோடுக்கு முந்தி வைரஸ் டௌன்லோடாகறாப்ல நாம எங்கல்லாம் முட்றமோ கரெக்டா அந்த வாரத்துல அல்லது மிஞ்சிப்போனா அடுத்த வாரத்துல ஒரு ஆப்புச் செய்தி அவ்வந்த respective நாட்லருந்து வந்துரும். போகவே கூடாதுன்னு இருந்த அமேரிக்கால இருந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அமீரகம், மொரீசியஸ், சிங்கப்பூர், மலேயா நேபாளம்னு நான் ஆன்சைட் தேடாத எடமே இல்ல. ஒரு ஸ்டடியாவே பண்ணிப்பாத்தேன், ஒரு நாட்ட தேர்ந்தெடுத்து அந்த நாட்டு வேலையெல்லாம் அப்லை பண்ண ஆரமிச்சா ஒரு வாரத்துல அந்த நாட்டு migrant policyல நாம போக முடியாத மாதிரி ஒரு மாற்றம் வந்துரும் (like நமக்கு க்ரஷ் இருக்க பொண்ணுகளுக்குலாம் ஒடனே கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுற மாதிரி). 

இதுல அதிகப்படியா முயன்றது கனடாவுக்குத் தான் (கனடாவப்பத்தி தனியாவே எழுதணும். "பல" விசயங்கள் சொல்லவேண்டி இருக்கு. ஏகப்பட்ட ஸ்கேமுகள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் உண்டு).

ஆச்சா? ஐயெல்ட்ஸ் ரெண்டு தடவ, வேலை தேடுதல், ஹையர் ஸ்டடீஸ்னு எல்லாப்பக்கமும் உருண்டாச்சு. ஏழு வருசம் ஓடினதுதான் மிச்சம். ஒண்ணும் பெயரல. இதுல ஒவ்வொரு வருசமும் நமக்கு வயசு ஏற ஏற ஸ்கோர் கொறையும், கனடா போற வாய்ப்பு தூரமாகிட்டே போவும். இதுக்கு இடையில ரெகுலர் வேலைய விட்டுட்டு ரிமோட் வேலைல சேந்தேன். அது ஒரு பக்கம் ஓடிட்டு இருந்துது. ஒரு கட்டத்துல கனடாவுக்குப் போறதுக்கான என் பக்கம் இருந்த அத்தனை வேலையவும் ஒன்னு விடாம முடிச்சு விட்டேன். இதுக்கு மேல கவர்மண்ட்டும், கடவுளும் நம்மள அலேக்காத் தூக்கிட்டுப்போய் கனடா பார்டர்ல விட்டாத்தான் உண்டுங்கறாப்ல. ஒவ்வொரு வாரமும் draw நடந்துதான்னும், நம்ம ஸ்கோருக்கு எதும் வாய்ப்பிருக்கான்னும் பாத்துட்டே இருந்தேன். கொஞ்சங்கூட சாத்தியமாகறாப்ல தெரியல. ஐயெல்ட்ஸ் ரெண்டாவது அட்டெம்ப்ட்லாம் கனவு கூட இங்லிஸ்ல மட்டுமே வர அளவுக்கு ரெண்டு மாசம் ஒரு extreme ஸோனுக்குப் போயி ப்ரிப்பேர் பண்ணேன். அதுவே mentally exhaustingகா இருந்துச்சு. ஸ்கோரும் நல்லாவே வந்துச்சு. இப்படியெல்லாம் போயிட்டிருந்தப்பதான் வந்தார் விநாயக் மஹாதேவ் கொரனா. ரீசண்ட்டா ஒரு வீடியோ வந்துச்சே. ரோட்ல அம்மாம்பெரிய யானையே தெரிஞ்சாலும் ஒரு ஆக்டிவா பொளந்துட்டு போயி நடூல உடுமே. அந்த மாதிரி நம்ம கனடா கனவுல வந்து ஏத்துச்சு கொரனா. எப்ப முடியும், எது என்னாகும்னு ஒரு க்லூவும் இல்ல. 

லாக்டௌன்லாம் முடிஞ்சு கடையெல்லாம் தொறக்க ஆரமிச்சாங்கல்ல, அப்ப ஒருநாள் அக்கா திடீர்னு நைட்டு எட்டு மணி போல வீட்டுக்கு வந்துச்சு. சில நூறு கிலோமீட்டர் பயணப்பட்டு வந்துச்சு. நான் பாத்துட்டிருந்த வேலைல நமக்கு US timezoneல வேலைங்குறதால, சாந்திரம் வேல ஆரமிச்சு அக்க வந்தப்ப Scrum retro போயிட்டிருந்துச்சு. கிட்டத்தட்ட பத்து வருசம் கழிச்சு அக்காவ பாத்தது ஒருபக்கம், திடீர்னு எதுக்கு வந்துருக்காங்கன்னு ஒரு பக்கம். மீட்டிங்க் எப்பிடி பாதில கட் பண்றதுன்னு ஒருபக்கம். கொஞ்ச நேரத்துல வரேன்னு மீட்டிங்க ம்யூட்ல போட்டுட்டு வண்ட்டேன். 

அக்கா மகளுக்கு கல்யாணமாம். பத்திரிகை குடுக்க வந்துருந்தாங்க. நேத்துதான் அக்கா கல்யாணத்துல வழியனுப்பறப்ப அழுதாப்ல இருந்துது, அதுக்குள்ள அவங்க பொண்ணுக்கு கல்யாணங்கறத நம்ப முடியல. அப்பறம் பழைய கதைங்கல்லாம் பேசிட்டிருக்கப்ப, அக்கா திடீர்னு, 'நீ ஏண்டா இன்னும் வெளிநாட்டுக்கு போகவே இல்ல?'ன்னுச்சு. (முன்ன ஒரு சிக்னல் யாசகர் டோன் சொன்னேனே ஞாபகம் இருக்கா? அதே டோன்ல). யார் யாரோலாம் போறாங்க, நீ ஏண்டா இன்னும் போவாம இருக்க? - இது அடுத்து. அதே இறைஞ்சல் டோன். 

யார் யாரோலாம் போறாங்கன்னு அக்கா கேட்டது மத்தவங்கள மட்டமா நெனச்சுலாம் இல்ல. நம்ம தம்பி, அவன் வெளிநாட்டுக்கு போனான்னா நல்லாருப்பானே, ஏன் அவனுக்கு மட்டும் நல்லது நடக்க மாட்டுதுங்குற ஒரு தூய ஏக்கத்துலதான். இருவது வருசங்களுக்கு முந்தி, யார்னே தெரியாத புள்ளைகளுக்கு ஐஸ் குடுக்கச்சொல்லி ஒரு கனிவு காட்டுச்சே, அந்த முமண்ட் சட்டுனு என் மைண்ட்ல flash ஆச்சு. கொஞ்சம் விட்டா அழுதுடுமோன்னு இருந்துச்சு. அதோட குரல்ல அவ்ளோ வருத்தம். அவங்களப் பொருத்தவரை வெளிநாடுதான் ஒருத்தனோட உச்சபட்ச வெற்றி, வாழ்க்கையவே மாத்திப்போடுற கேம் சேஞ்சர். நம்ம தம்பியும் போய்ட்டான்னா கர சேந்துடுவான்னு ஏக்க+நம்பிக்கை. 

எனக்கு எங்கக்காக்கு எப்பிடி புரிய வெக்கறதுன்னு தெர்ல. 'எக்கா, வெளிநாட்டுக்கு போனா சம்பாதிக்கறத விட இங்க அதிகமாதான் சம்பாதிக்கிறேன்னு வெளிப்படையாவும் சொல்ல முடியல (கூட எங்கண்ணன் வந்துருந்தான், சட்டுனு கைமாத்தா கடன் கேட்டுருவான்). ஏழு வருசமா எல்லா முயற்சியும் பண்ணிட்டு தான் இருக்கேன், எதுவும் வெளங்கலன்னு சொன்னா மனசு வருத்தப்படுமோன்னு அதையும் சொல்லல. அக்காக்கு ஐடி பத்திலாம் புரியாது. அதனால என் மீட்டிங்க காமிச்சு. இங்க பாரு, இதுல  பூராம் வெள்ளக்காரனா இருக்கானா? எவனாச்சும் ஒருத்தன் இந்தியன் இருக்கானா? அந்த கம்பெனில வேல செய்ற ஒரே இந்தியன் நாந்தான். நா வெள்ளக்காரன் கம்பெனில வீட்லருந்தே வேல செய்றேன். ரொம்ப சந்தோசமா இருக்கேன். நல்லா காசு வருது. உக்கார கூட மாட்டேன், படுத்துக்கிட்டேதான் வேல பாப்பேன். நீ எதும் வருத்தப்படாதன்னு தேறுதல் சொல்லி அனுப்பி விட்டேன். போறப்ப 'சீக்ரம் போயிருவ'ன்னு சொல்லிட்டுத்தான் போச்சு. 

அத சமாதானம் பண்ணி அனுப்பி வச்சதும், 'நீ ஏண்டா இன்னும் போகவே இல்ல'ன்னு அது இறைஞ்சுன சத்தம் மட்டும் கேட்டுட்டே இருந்துச்சு. அது எனக்கு மட்டுமில்ல இயற்கைக்கும் கேட்டுருச்சு போல. எங்கக்கா அப்டி கேட்டதுலருந்து ரெண்டாவது மாசம் (technically less than two months), ஒரு புது வேல கெடச்சு வெளிநாட்டுக்கு வந்துட்டேன். 

மெய்வருத்தங்கள் கூலி தரவே தராது எனும் நிலைவரும்போது, தெய்வத்தால் ஆகும். 

ஏழு வருசமா எத்தனையோ முயற்சி செய்து, சில நண்பர்கள் உதவி, முட்டி மோதியும் நடக்காத ஒன்னு, ஒலகமே ஒடுங்கிக் கெடந்த கொரனா டைம்ல, எந்தத் தடையும் சிக்கலுமில்லாம, மீனு கைலருந்து வழுக்கி விழறாப்ல வந்தது இந்த ஆஃபர். (touchwood).

இது கெடச்சதுக்கு logical காரணம் எத்தனையோ இருக்கலாம். ஆனா இது நடந்ததுக்கு காரணம்னு நான் நம்பறது, அக்கா சொன்ன அந்த ஒரு சொல். 

Comments

  1. வாழ்த்துக்கள் boss.

    ReplyDelete
  2. அந்த அக்கா மட்டும் இல்ல இந்த அக்காவும் உனக்கு ஒரு நல்லது நடக்கணும்னு நெனச்சேன். நடந்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂