Friday, 8 April 2016

பால்யகாலலு சகிலு

படிச்சது - அதாவது ஸ்கூலுக்குப் போனது, ஊத்துக்கோட்டைன்னு ஒரு ஊராட்சி. இப்போ பேரூராட்சியாகி இருக்கலாம். சுமார் ஏழு வருஷம் அங்க படிச்சதால பெரும்பாலான பள்ளிப் பால்யம் அங்கதான் சப்ட்ராக்ட் ஆச்சு.

அப்போ ஊத்துக்கோட்டை ஒரு குட்டியூண்டு, பரபரப்பு, அதிர்வு எதுவுமில்லாத ஒரு ப்ரெட்டியான பீஸ்ஃபுல் ஊர். ஊருக்கு வடக்குலயும் மேற்குலயும் ஆந்திராவ தொட்டுட்டு இருக்குற வித்தியாசமான தமிழக ஆந்திர பார்டர் பிரதேசம். வடக்குல சத்தியவேடு (விஸ்வரூபம் பாக்க மக்கள் படையெடுத்தாங்களே, தட் சேம் ப்லேஸ்). தெற்குல திருவள்ளூர். ஈஸ்ட்டுல பெரியபாளையம். வெஸ்டுல நாகலாபுரம். வெஸ்டோவெஸ்டுல வெங்கிடு ஏடுகொண்டலவாடு. எந்த வீட்டு மொட்டமாடிலருந்து பாத்தாலும் ராமகிரி மலை தெரியும். 2கிமீ தொலைவுல சுருட்டப்பள்ளி கிராமம். (அங்க ஒரு சிவன் கோயில் இருக்கு. ஒலகத்துலயே சிவன் சயன நிலைல இருக்குறது அங்கதான்). அங்க ஒரு குட்டி டேமும் இருக்கு. ஊர ஒட்டி ஆரணி ஆறு ஓடும். கொஞ்சம் தோண்டினாலே நல்ல தண்ணி ஊறும். ஊரச்சுத்தி வயக்காடு. உண்மைலயே சென்னைக்கு மிக அருகில்தான் (62ஆவது கிமீட்டர்ல மெட்ராஸ் முட்டும்). என்னடா திடீர்னு ரியல் எஸ்டேட்ல எறங்கிட்டானோன்னு நெனைக்காதீங்க. நடூ செண்டரான நல்ல எடத்துல இருக்க ஊர். ஏன் அந்த ஊர விட்டுட்டு வந்தோம்னு யோசிக்கிறேன்.

இன்னும் அந்த ஊரப்பத்தின பல டீடைல்கள் சொல்லலாம். மொத்தமா இதுலயே எறக்காம அப்பப்ப சொல்றேன். மெய்ன்ஸ்ட்ரீம்லருந்து கொஞ்சம் ஒரு அஞ்சு ஏழு வருசம் பின் தங்கிய லைஃப் ஸ்டைல் கொண்ட ஊரு அது. நாங்க அங்க இருந்தப்ப மொத்தம் 5 ஸ்கூல் இருந்துது. ஸ்கூல்ல தமிழ்ப் பசங்களுக்கு ஈடா குல்ட்ஸும் இருப்பாங்க. ஸ்கூல்ல தெலுங்கு மொழியும் இருக்கும். செகண்ட் லேங்வேஜா தெலுங்க தேர்ந்தெடுத்த குல்ட்ஸ் தமிழ் பீரியட் வரப்ப காலி பண்ணிட்டு அந்த க்லாசுக்கு போய்டுவாங்க. இந்தி பீரியட் வரப்ப தமிழ்ப்பசங்களும் காலி பண்ணிட்டு தவ்விக்குதிக்கப் பாப்போம், ஆனா இந்தி மிஸ் (ஆக்ச்சுவலி அவங்க செம்ம ஆயா. ஆனாலும் மிஸ்னு கூப்டச்சொல்லி மெட்ரிக்குலேசன் எடிகொயட்) ரௌண்ட் கட்டி ஏக் காவ் மே-ந்னு மேய்க்க ஆரமிச்சுடுவாங்க.

அப்ப நா எதோ ஒரு க்லாஸ் போயிட்டிருந்த சமயம். வெவரம்னா, இதான் வெவரம்னு புரிய ஆரமிச்சிருந்த பருவம். வழக்கம்போல ஹோம் ஒர்க் எழுதாததால, ஹிஸ்டிரி வாத்தி பொளபொளன்னு பொளந்து முடிச்சு எங்கள முட்டி போட வெச்சிருந்த டைம். திடுதிப்னு வராண்டாவுல சலசலப்பு. எச்செம், ஒரு அம்மாப்பா, ரெண்டு பொண்ணுங்க வந்திட்டிருந்தாங்க. அதுல ஒரு பொண்ணு எங்க வயசுல. பொண்ணுங்க ரெண்டும் கலர்கலரா ட்ரெஸ் போட்டு ஜிகுஜிகுன்னு இருந்துச்சுங்க. சேம் ஏஜ்ட் கேல்ஸ் முன்னாடி எப்டி நீல்டௌன் போட்டுட்டு இருக்குறதுன்னு ஷையாகி சட்டுன்னு எழுந்து நின்னுட்டோம். நாங்க எதோ மினிஸ்டர்ஸ் போலவும், எச்சம் எதோ சியெம் போலவும், அவரு வந்ததும் மரியாத நிமித்தமா நாங்க எழுந்தது போலவும் சிட்சிட்ங்குறமாதிரி கையாலயே சைகை காமிச்சார். “சிட்டிங்லருந்து ஸ்டேண்டிங்குக்கு வந்த மாதிரி உக்காருங்குறான். முட்டிப்போட்டுட்டு இருந்தோம்யா யோவ்”னு மனசுல நெனச்சுக்கிட்டோம். அப்ப ஒடனே ஒரு டௌட் வந்துடுச்சு. உக்காருன்னு சொல்றாரே, புது அட்மிசன் வந்த மகிழ்ச்சியில நம்மள உண்மைலயே உக்காரச்சொல்றாரா, இல்ல நீல்டௌன கண்டினியூ பண்ணச்சொல்றாரான்னு ஒரே கொழப்பம். ஆனா நல்ல வேளையா அதுக்குள்ள அவங்க எங்களக்கடந்து க்லாசுக்குள்ள போய்ட்டதால க்லாஸ் பசங்க எல்லாரும் அவங்களுக்கு standing oviation குடுக்க, நாங்களும் ovulationல கலந்துக்கிட்டோம்.

எல்லாரும் வரிசயா க்லாசுக்குள்ள போக, நாங்க முட்டில ஒட்டிருந்த மணலத்தொடச்சு விட்டுட்டிருந்தோம். முட்டில மணல் குத்தி ஒரே அரிப்பு. “டேய் மாட்டுக்கார வேலா (எஸ்டீடி வாத்தி), ஒனக்கு இருக்குதுடா ஒரு நாளைக்கு"ன்னு மனசுக்குள்ள கறுவிக்கிட்டோம். அந்த வாத்திக்கு அந்தப்பேரு வெச்சதுக்குப் பின்னால ஒரு ரேஷனல் திங்கிங் லாஜிக் இருக்கு. அவர் வீட்ல நாலு எரும மாடு இருந்துது (ஆமா, அவர சேக்காம). லீவ் நாட்கள்ல அவர்தான் அதுகள மேய்க்க கொண்டு போவாரு. அதனால அந்தப்பேரு வெச்சாச்சு. முட்டி போட்டுட்டிருந்த நல்லவர் நாங்க நால்வரும் புதுசா வந்த அந்தப்பொண்ணயே பாத்துட்டு இருந்தோம்.

இந்தளவு பில்டப் உடுக்கறேனே, அப்ப அந்தப்பொண்ணு செம்மயா இருக்கும்னு திங்கிடாதீங்க. அவள்ட்ட பச்சக்குன்னு கவர்ந்த மொதல் விஷயம், அவளோட பேரு. அதுவரைக்கும் மலர்விழி, பாரதி, ஜமுனா, கலைவாணி, நித்யா இப்டியே சௌத் இண்டீஸ்த்தனமா பேரு பொழங்கிக்கிட்டிருந்த எங்க க்ளாசுக்கு, அவளோட பேரே ரொம்பப் புதுமையா இருந்துச்சு. நாங்க பாத்த Near to Modern பேருன்னா சரண்யா & அபிராமிதான். அப்புறம் ரெண்டு மூணு ப்ரியாக்கள் (தெருவுக்கு நாலு ப்ரியா கெடக்குதுக). இப்ப உங்களுக்கு அது ரொம்ப இத்துப்போன பேரா இருக்கலாம், அப்ப எங்களுக்கு அது கெத்தா தெரிஞ்சுது. அவ பேரு- ரேஷ்மா. ஆளு கருப்புன்னு சொல்லிட முடியாது, ரொம்பக்கருப்புன்னும் சொல்லிட முடியாது. இது ரெண்டுக்கும் இடைப்பட்ட பச்சை திராவிடக்கருப்பு. கருப்ப மறைக்கவோ, அழகக்கூட்டவோ, இல்ல என்ன எழவக்கூட்டவோ, மூஞ்சி முழுக்க பௌடர அப்பிட்டு வருவா. இப்ப கேமரா வாங்குனவன்லாம் கேவி ஆனந்துன்னு சொல்லிட்டு சுத்திட்டு இருக்கானுங்களே, அவனுங்க போட்டாப்புடிச்சு ஃபில்டர்ல ப்லாக்&ஒய்ட் சேத்தா ஒரு ஷேடு வருமே, அப்டி ஒரு டார்க் ஃபேஸ்ல க்ரே ஷேடோட வருவா. இதுல கண்ணுக்கு மையி வேற. ஆனாலும் அழகி. ஒரு கலை இருக்கும் அவகிட்ட. அரைகிராம் பேரழகி என்றாலும் மிகையாகாது.

அந்தப்பொண்ணுக்கு ஒரு தங்கச்சி. அவளும் அல்மோஸ்ட் இதே ஒப்பனைகளோட வருவா. ஆனா அவ சின்ன க்ளாஸ். இதுக்கெல்லாம் காரணம் யார்னு ரேஷ்மாவோட அம்மாவப்பாத்தா தெரிஞ்சுடும். ஒரு படத்துல சத்யராஜ் லேடிஸ் வேஷம் போட்டு வருவாரே, மாமன் மகள்னு நெனைக்குறேன்.  அதோட டிட்டோ. என்ன ஒன்னு, சத்யராஜ் ஒய்ட். இவங்க ப்லாக். ஆஜானுபாகுவா இருப்பாங்க. எப்பவும் ரெண்டு காதுலயும் ஈஃபில் டவர் மாதிரி டொலக்டொலக்னு பெரீய்ய கம்மல், அதே கிலோக்கணக்கு பௌடர், கண்மை, லிஸ்ப்டிக்னு ஒரு நடமாடும் அந்நேச்சுரல்ஸ் ஸ்பா & சலூனா இருந்தாங்க. குட்டி பதினாறடி பாயும்னு முன்னமே தெரிஞ்சு தாய் எட்டாத அடி ஆல்ரெடி பாஞ்சு வெச்சிருந்தாங்க.

உருவகேலில இவ்ளோ நேரம் ஈடிபட்டிருந்ததுக்காக உள்ளம் உருக, ரேஷுட்டயும் & ரேஷு மம்மிட்டயும் மன்னிப்புக்கேட்டுக்கொண்டு… இப்ப ஏன் ரேஷ்மாவப்பத்தி சொல்றேன்னா, எங்களுக்குப் பல புது விஷயங்கள அறிமுகப்படுத்தினதே ரேஷு & ஃபேம்லிதான்.

ஸ்கூல்ல மதிய நேரத்துல கொஞ்சப் பசங்க சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போயிடுவாங்க. மீதிப்பேரு டிஃபன் பாக்ஸ்ல எடுத்துட்டு வருவாங்க. மிச்சமீதி கொஞ்ச சிலர் தூக்குச்சட்டில சாப்பாடு எடுத்துட்டுப்போவோம். ரேஷ்மாவோட அம்மா டெய்லி மதியம் அவளுக்கு வீட்லருந்து ஃப்ரெஷ்ஷா சாப்பாடு கொண்டுவருவாங்க (யெஸ், இம்மியளவும் குறையாத மேக்கப்போட). அதுல என்னன்னா, சாப்பாடு எடுத்துட்டு வர்ரதுமில்லாம ரெண்டு பேருக்கும் ஊட்டி வேற விடுவாங்க. அப்டி ஒரு நாள் அவங்க வித்தியாசமான ஒரு சாப்பாடு கொண்டுவந்தாங்க. 

அதுவரைக்கும் எங்களப்பொறுத்தவர, ஜொரம் வந்தா மாடர்ன் ப்ரெட், அம்ம போட்டா எளனி, தாகம் எடுத்தா கொழாத்தண்ணி. இதுதான் கஸ்டம்ஸ் & கல்ச்சரா இருந்துச்சு அந்தக் குற்றூருக்கு. அவங்கம்மா ஒரு நாள் அவளுக்கு ப்ரெட்ல என்னமோ பண்ணி, அதுவும் மத்தியான சாப்பாட்டுக்குக் கொண்டு வந்தாங்க. அது என்னன்னு கேட்டதுக்கு “ப்ரெடாம்லேட்” அப்டின்னு சொன்னாங்க. “அந்த மாதிரி” பண்ண முட்டைக்குப் பேரு ஆம்லேட்டுங்குறதே செத்துப்போன எங்க தாத்தா மேல (இது அம்மாவோட அப்பா. அப்பாவோட அப்பா இன்னும் இருக்காரு.) சத்தியமா சொல்றேன், அப்பதான் தெரியும். அதுவரைக்கும் எங்க வம்சத்துல அதுக்குப்பேரு  “பொர்ச்சமுட்ட”. ப்ரெட்டையும் முட்டையையும் அஜுர நேரத்துல சாப்பாடா சாப்புடுற ஒரு ஜாதி இருக்குன்னே அவளப்பாத்துதான் தெரிஞ்சது. அப்புறம் டிசைனா இருக்குற வாட்டர்கேன்லதான் தண்ணி குடிப்பா. சில சமயம் பிஸ்லரித்தண்ணி. வெளிய இங்லிஸ் மீடியம்னு சொல்லிட்டு சுத்தினாலும் அல்மோஸ்ட் ஊர்நாட்டு வாழ்க்க வாழ்ந்த எங்களுக்கு ரேஷ்மா&கோ செஞ்சது, அவளோட ஸ்டைல் எல்லாமே புதுசா தெரிஞ்சது. நம்பினா நம்புங்க, முகத்துல ரெண்டு பக்கமும் கர்லி ஹேர் விட்டுட்டு வருவா (ஸ்கூலுக்கு!!) . கருப்பா இருந்தாலும் அவளோட இந்த ஸ்டைல்லாம் பாக்குறப்ப Aweந்னு இருக்கும். அல்லது அதுவரைக்கும் வேப்பெண்ணத்தலைகளயே பாத்துக் கடுத்ததால அவ ரொம்ப அழகாத்தெரிஞ்சாளான்னும் தெரியல (ரிலேட்டிவிட்டி!). 

ஊத்துக்கோட்டைல ஆரம்பத்துல இருந்தது ரெண்டே கொட்டாய். ஓரியண்டல், வேல் டாக்கீஸ். (Talkies காலத்து Doggiesசா நீன்னு கேட்டுடாதீங்க. நான் சின்ன வயசா இருக்கறச்சே ரஹ்மான்லாம் ஃபீல்டுக்கு வந்துட்டார். அயம் யங் ஒன்லி). அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ஏவிஎம் தியேட்டர்னு ஒன்னு வந்துது. அப்புறம் அதுக்கு பக்கத்துலயே குமாரி தியேட்டர் (அந்த ஊர்லயே பெரிய தேட்டர்). பொன்னுமணி, காயகல்பம், எங்க வீட்டு வேலன், இப்டியாப்பட்ட படங்களுக்குதான் எங்ககிட்ட ரீச் இருந்துது.

ஏவிஎம்ல தேவர்மகன் ரிலீஸ். செம்ம கூட்டம், ஔஸ் ஃபுல்லா ஓடுது ஷோ. எங்க வீட்ல அப்பாரு கமல் விசிறி. தாத்தாரு சிவாஜி ஏசி. அதனால குடும்ப சகிதமா படத்துக்குப் போனோம். தோரணம், கட்டௌட்லாம் வெச்சு தேட்டரே திருவிழாக்கோலம். நைட்ஷோக்குப் போனோம். அப்பாரு டிக்கட் எடுக்கப் போனவரு விறுவிறுன்னு ரிட்டன் வந்தாரு. மூஞ்சி கொஞ்சம் கடுகடுன்னு இருந்தாரு. சரி டிக்கெட் கெடைக்கல போலருக்குன்னு நெனச்சா, தாத்தாகிட்ட எதயோ குசுகுசுன்னு பேசினாரு. இப்ப கடுகடு தாத்தா மூஞ்சிக்கும் போயிடுச்சு. அது மேட்டர் என்னன்னா, எங்க அம்மாவோட அம்மா வீட்டு சைடு மக்களும் படத்துக்கு வந்துருக்குதுங்க. இவிங்யளுக்கும் அவிங்யளுக்கும் ஜென்மப்பக. “அதெப்டி அவனுங்க போற படத்துக்கு நாமளும் போக?” அப்டின்னு சொல்லி அங்கருந்து கெளம்பிட்டானுங்க. (அடேய்! உங்க போட்டிப்பகைக்கு வேற சப்ஜெக்டே கெடைக்கலியாடா???). தேட்டர் வரைக்கும் வந்துட்டு இவனுங்களுக்காக திரும்பிப் போய்ட்டோம்னு பிற்காலத்துல வரலாற்றாய்வாளர்கள் பக்கம் பக்கமா தீசிஸ் எழுதுவாங்கன்னு நெனச்சு, பக்கத்து குமாரி தேட்டர்ல ரஜினிப்படம். பாண்டியன்னு நெனைக்குறேன். சம்மந்தாருக்கு ஏட்டிக்கிப்போட்டியா சம்மந்தா சம்மந்தமில்லாம பண்றேன்னு அங்க கொண்டாந்து உட்டுட்டானுங்க. தலயெழுத்தேன்னு அன்னிக்கு குஸ்பு உய்யாலாலான்னு உய்வித்ததத்தான் பாக்க முடிஞ்சது. ஏன் சொல்றேன்னா, அட்லீஸ்ட் தே.மகன் போயிருந்தாலாச்சும் அதுல மௌத் கிஸ் இருக்குதாம். அதலாம் கத்துக்கிட்டுப்போயி ஹே பேப், அயம் ஆல்சோ ஒன் கட்டிங் எட்ஜ் டெக்நாலஜி கை ஒன்லி ரேஷ்மாட்ட சீன் போட்டிருக்கலாம். ஆனாலும் நாங்கள்லாம் இப்டி இஞ்சீ ஈ..டூப்..ப..ழ..கீனு பாடிட்டிருந்தப்ப அப்பவே ரேஷ்மா இங்லிஷ் பாட்டுலாம் பாடுவா. அதயிம் பேஏஏஏன்னு பாத்துட்டு இருப்போம். அப்புறம் பொண்ணுங்க பேண்ட் ஷர்ட் (அதுவும் ஜீன்ஸ்) போடுவாங்கன்னு அவளப்பாத்துதான் தெரிஞ்சது. வாக்மேன் அப்டின்னு ஒரு வஸ்து இருக்குறதும் அவதான் செங்கை எம்ஜியார் மாவட்டத்துக்கு அறிமுகப்படுத்தினா.

அவ தெலுங்குதான் ஆனாலும் தமிழ் க்ளாஸ் படிச்சா. ஸ்டைல் காட்டுவா ஆனா பிகு பண்ணதில்ல. எல்லார்கிட்டயும் நல்லா பேசுவா. க்ளாசுல இருந்த சிலபல வேப்பெண்ணக்கலயங்களுக்கு இவளப்புடிக்காது. திச் கர்ல்ச் ஆர் வெரி வெரி ஜெலஸ் யு க்நோ. ரேஷ்மா படிப்பில் குட்டி குட்டி ரேங்க்லாம் எடுக்காம, பதினஞ்சு, இருவதுன்னு நல்லா பெரிய ரேங்காதான் எடுப்பா. அதுவும் அவளுக்கு நல்லா எடுப்பாத்தான் இருக்கும். நாங்க ஆல்பாஸ் பண்ணாலே அது ஆல் இந்தியா ரேடியோல வர்ர மாதிரியான அரிய நிகழ்வா இருந்ததால அந்த சப்ஜெக்டுக்குள்ள நாம போக வேணாம். முழுப்பரிச்ச லீவு முடிஞ்சு அடுத்த போனப்ப அவ ஸ்கூலுக்கு வரல. அவங்க ஊர காலி பண்ணிட்டுப்போய்ட்டாங்கன்னு சொன்னாங்க. என்ன காரணம்னு தெரியல. ஒரே ஒரு வருஷம் மட்டும்தான் எங்களோட இருந்தா. அதுக்கப்புறம் அவளோட எந்தத் தகவலும் இல்ல. 

இதெல்லாம் இப்ப ஏன் சொல்றேன்? தோணிச்சு.


AddThis