Thursday, 27 November 2014

நாகராஜண்ணே... நல்லாருக்கியாண்ணே?

"ச்சை என்ன ஒலகமோ என்ன வாழ்க்கையோ. ஏன் பெரும்பாலும் ஏறுக்குமாறாவே நடக்குது? நல்லவனுக்கெல்லாம் சோதனை வருது. அடுத்தவன் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவன் தான் கஷ்டப்படுறான். மனசாலகூட கெட்டது நினைக்காதவனுக்கு எல்லா கெட்டதும் நடக்குது. எங்க திரும்பினாலும் பாவம், கெட்டது, அசிங்கம். இது எல்லாம் இல்லாத, மழை பேஞ்ச அடுத்த நாள் பளிச்சுன்னு இருக்க மர இலைமாதிரி சுத்தமான உலகமே அமையாதா? கடவுளே, என்னை உன் பிரியத்துக்குரியவனா நினைச்சா எனக்கு ஒரு பதில் தருவியா" மனத்தில் நினைத்தான் நாவராஸ் (நாகராஜ்).

எங்கும் தன் ஆட்சியைக்குத்த வைத்திருக்கும் கடவுளாச்சே, மெசேஜ் அனுப்பி ஊதா டிக் வருமுன் வந்து நின்றார், அவன் முன்.

"என்னதாம்ப்பா ஒனக்கு ப்ரச்சன?"

"எல்லா எடத்துலயும் ப்ரச்சன, அதான் என் ப்ரச்சன. என்ன சுத்தி நடக்குற அசிங்கம், அநீதி, எக்ஸ்ப்ளாய்ட்டேஷன் எதையும் என்னால பொறுத்துக்க முடியல. Do something and stop them." படபடவெனப்பேசி முடித்தான்.

"இதெல்லாம் இல்லன்னா சுவாரசியமிருக்காது. சீரியஸ்லி. ப்லீவ் மீ" என்றார் இவர்.

"அதெல்லாம் சால்ஜாப்பு. ஒனக்கு நலந்தானா வாசிக்கத்தெரியாதுன்னு சொல்லு. முடியாதுன்னு வட சுடாத" - அவன்.

"மை சன். பாவம், தீமை எல்லாம் பார்ட் & பார்சல் ஆஃப் லைஃப். மனிதன் பாவம் செய்யணும், எங்கிட்ட சாரி கேக்கணும், அவன நான் மன்னிக்கணும், முடிவுல மஞ்ச கலர் fontல சுபம் போடணும். இதான் டிசைன்"

"என்னங்க இப்டிப்பேசுறீங்களே"

"நீ அறியாததை நாம் அறிகிறோம். நீ பார்க்காததை நாம் பார்க்கிறோம். பொறுமை கொள்"

"இறுதியா கேக்குறேன். பாவமில்லா வாழ்க்கைய ஏற்படுத்துவீங்களா மாட்டீங்களா?"

"மீண்டும் சொல்றேன். அது சரி வராது. அவ்ளோ ஏன், அது உனக்கே ஆபத்தாக்கூட போய் முடியலாம். யோசிச்சுக்கோ"

"சூதுன்னா என்னன்னு எங்களுக்கும் தெரியும். நான் கேட்டத மட்டும் பண்றீங்களா?"

"அதற்குமேல் உன் விருப்பம். பரிசுத்தமான உலகை உன்னிடம் தருகிறேன். இதோ..." என்று கூறி அவர் fade out ஆனார்.

காலை - மாலை - இரவு - மதியம் - முன்னிரவு - பின்னிரவு என 24 * 7 * 365 எவ்வேளையும் எங்கெங்கும் நன்மையும் புண்ணியங்களும் நிறைந்திருந்தன.

அதற்கென்று தீமைகளும் பாவங்களும் முற்றிலுமாய் மறைந்து விட்டனவா என்றால் இல்லை. கட்சிகளின் கூட்டணி முறிந்தாலும் முந்தைய நிலையை உணர்த்தும் சுவர் விளம்பரமோ / ப்லெக்ஸ் போஸ்டரோ காலம் கடந்தும் ஆங்காங்கே பரவலாக எல்லா இடங்களிலும் இருக்குமல்லவா? அதுபோல பாவத்தின் உருவ(க)ங்கள் ஆங்காங்கு மிதந்துகொண்டும் தொங்கிக்கொண்டும் இருந்தன. அதைக் காண்போருக்கு, அது தீங்கு, அதை நெருங்குதல் பாவம் என ஒரு உள்ளுணர்வு உணர்த்த, தங்களை அதைவிட்டும் தவிர்த்து நகர்ந்தபடி இருந்தனர்.

"நம்மவர்", ஒவ்வொரு முட்டுச்சந்தையும், அவென்யுவையும், க்ராஸ் ஸ்ட்ரீட்டையும் சுற்றிச்சுற்றி வளைந்து "சொர்க்கம் என்பது நமக்கு, சுபிக்ஷம் உள்ள வீதிதான்" என்று பாடிக்கொண்டே வந்தார்.

மனத்தால் கூட தவறு செய்யாத மனிதர்களைக்கண்டபோது மிக்க சந்த்தோஷம் அடைந்தார் நம் அதிசயப்பிறவி. ஒரு பூ உதிர்வதிலிருந்து, புலி உறுமுவதுவரை அனைத்தும் எப்போதும்போல் தங்கள் வேலையை ஒழுங்காகச்செய்தன.

~ ~ ~
சில நாட்களுக்குப் பின்
~ ~ ~

நாட்கள் ஆக ஆக, எல்லாமே ஏதோ ஒரு சுழலுக்குள் சிக்கியது போல உணர்ந்தான் நாவராஸ். மிக முக்கியமாக மனிதர்களின் நடவடிக்கை செயற்கைத்தனமாக, பெண்டுலம் போல, வண்டியின் ஸ்டியரிங் போல, இயக்கமிருந்தாலும் அதில் எந்த முன்னேற்றமும் இருப்பதாய்த் தோன்றவில்லை.

There was movement. But no Improvement.

ஒரு கட்டத்தில், சலிக்கத்துவங்கிய இந்த வாழ்க்கை முறை குறித்து  சிலரிடம் பேசிய பின், அவர்கள்  தந்த பதிலினால் இன்னும்  எரிச்சலைடய ஆரம்பித்தான் அவன்.

"ஒரு விலங்கோ பறவையோ இல்ல வேற எந்த ஜீவராசியோ சுதந்திரமா இருக்கிற மாதிரி நீங்கள் இல்ல, அது உங்களுக்குப்புரியுதா?" என்று சற்று காட்டமாய் ஒருவரிடம் கேட்டதற்கு, "உன் எண்ணம் தவறானது, தீங்கானது. உடனே நீ இதற்காக கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுத் திருந்திவிடு. அவர் உன்னை நிச்சயம் மன்னிப்பார்" என்றார்.

தன் பேச்சை ஏற்காததால், காண்டிலிருந்த அவனுக்கு, அவர்கள் பொறுமையாக, நிறுத்தி, நிதானித்து, அட்சர சுத்த மொழியில் பதில் சொன்னது அடிக்கிற எலெக்ட்ரிக் ஷாக்கில் நீர் ஊற்றியதுபோல் இன்னும் எரிய வைத்தது.

ஒன்றாய் இணைக்கப்பட்ட, தொடர்ந்து சுற்றும் நூற்றுக்கணக்கான பல்சக்கரங்களுக்குள் சிக்கிய எலியாய்த் தன்னை உணர்ந்த அவன், இதிலிருந்து எப்படியேனும் தப்பித்து பாம்புபோல் நழுவிச்செல்ல வேண்டும் எனக்கங்கணம் கட்டினான்.

அங்கு வருபவர்களிடம் மீண்டும் மீண்டும் அவர்களின் நிலையை எடுத்துக்கூறி, அவர்கள் வாழ வேண்டிய சிறந்த வாழ்க்கையை அவர்கள் தவற விடுவதாகவும், அவர்கள் ஒரு மாயைக்குள் சிக்கியுள்ளதாகவும் எடுத்துக்கூறினான். யாரும் அவன் பேச்சைக்கேட்கவில்லை.

இப்போது மனிதர்கள் தீங்கு செய்யவில்லை என்பதைவிடத் தன் வார்த்தையை மதிப்பதில்லை என்ற அகங்கார உணர்வு அவனுக்குள் மேலோங்கியது. இவர்கள் தவறு செய்யாமல் இருப்பதற்குக் காரணமே தான் தான் என்பதை அறியாது, ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற அக்மார்க்கினராய்த் தங்களை பாவித்து, இவனை விரோதியாய்க் கருதியது, கோபத்தின் உச்சிக்கும் ரெண்டு இன்ச் மேலே அவனைக் கொண்டுபோனது.

தான் இவர்களுக்கு எப்பேர்ப்பட்ட நன்மை செய்திருக்கிறோம் என்பதைப் புரிய வைக்க, ஒரு பெண்ணின் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருந்த ஒருவனைப்பிடித்து, "தோ பார்... அவ ஒன்ன மதிக்கணும்னா இந்த லேகியத்த சாப்புடு.  அதுக்கப்புறம் ஒன்ன சுத்தி சுத்தி வருவா" என்றதற்கு,

"அது தவறன்றோ, இதை உண்பது தவறென்று உள்ளுணர்வு உணர்த்துகிறதே" எனப்பதிலுரைக்க,

"டேய், உன் உள்ளுணர்வுல பெட்ரோல் ஊத்த... கம்முனாட்டி. அவ ஒன்ன மதிக்காததுக்கு காரணமே ஒன்ன அவ ஆம்பலையா பாக்கல, அவகூட சேந்து ஒரு புள்ளைய பெத்துப்போடு. சரியாகும். அதுக்குதான் இந்த லேகியம். ம்ம்" என்றான்.

"ஆனாலும் இதைப்புசிக்கக்கூடாதென்று கீழே டிஸ்கி போடப்பட்டிருக்கிறதே" என்றான் அந்த அம்பிரெமோ.

"அட முகேஷ் மூஞ்சா, கவர்மெண்ட்டு வருமானத்துலயே லீடிங்ல இருக்கற வஸ்த்துவுக்குக்கீழ என்ன போட்ருக்கு தெரியுமா? அதக்குடிச்சா ஊருக்கே ஊஊஊன்னு சங்கூதும்னு.  நான் உன் நல்லதுக்குதான் செய்வேன். இந்தா சாப்பிடு" என்று அதை வாயில் திணிக்கத்துணிந்தான்.

இதுவரை எட்ட நின்று பேசிக்கொண்டிருந்த நாவராஸுக்குத் தைரியம் வரக்காரணம், சுத்த மொழி பேசிய அம்பிரெமோ "டிஸ்கி" என்ற மொழிக்கலப்பை உபயோகித்ததே.

He is weak. He is falling.

இத்தனை முயற்சிக்குப்பின்னும் "எதற்கும் அவ(ங்க)கிட்ட ஒரு வார்த்தை கேட்கிறேன்" எனக்கூறியதும், எங்கே தன் ஆசையில் மண் விழுந்திடுமோ என பயந்த அவன், "சரி நானே பேசுறேன் வா" என்று அவளிடம் சென்றான்.

"இங்க பாரும்மா. இந்த ஆளு ரொம்ப நாளா உன் பின்னால சுத்திட்டு இருக்கறத பாக்குறேன். இவன் அப்புடியே இருக்கான், நீ மட்டும் வயசாய்ட்டு போற, பாக்கறவங்க இந்தம்மா அவன் அக்காவான்னு கேக்குறாங்க" என்று முதல் விதை தூவினான்.

"கடவுளே!!! அப்படியா தெரியிறேன். நான் அப்பவே நெனச்சேன், என்னடா இந்த ஆளு இப்பல்லாம் ரொம்ப மினுக்கறாரேன்னு, இதுக்கு இப்போ என்னாங்க செய்யணும்?"

"அதோ அங்க இருக்குற லேகியத்த சாப்டுங்க. அரிய வகை மூலிகைல செஞ்சது. ரெண்டுபேரும் எப்பவும் சிக்குன்னு இருப்பீங்க" எனக்கூறி முடிக்கவும் உடனே அங்கே அவள் விரைந்து சென்று, அதை உண்டு மகிழ்ந்து, தன் அம்பிக்கும் உண்ணக்கொடுத்தாள்.

அப்பொழுது அங்கே கடவுளின் கட்டளை வந்தது.

"அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;

உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்."

~ ~ ~
Later

அவரவர் செல்ல வேண்டிய இடத்துக்குச்சென்றதும், கடவுள் நாகராஜிடம் வந்து, "நான் அப்பவே சொன்னேன்" என்றார்.

"இப்ப ஏன் இவர் V.K. ராமசாமி வாய்சுல பேசறார் என சிந்தித்தபடியே நரகில் வீழ்ந்தான் சாத்தான்
~ ~ ~

பின், தேவன் வானத்தையும் பூமியையும் (மீண்டும்)சிருஷ்டித்தார்.

1 comment :

  1. ரொம்ப வெண் முரசு படிக்காதீங்க :-)

    நல்லாருக்கு ஆனா கொஞ்சம் லெங்க்தியா இருக்கு :-)

    amas32

    ReplyDelete

Pass a comment here...

AddThis