மெல்லிசையே...



- MSVயின் Thrilling Thematic Tunes  relaunch கடந்த ஞாயிறன்று Russian Cultural Auditoriumல் நடந்தது

- நிகழ்வு துவங்குமுன் MSVயின் மெல்லிசைக்கச்சேரி, ஒலிப்பதிவு வீடியோக்களும் எம்மெஸ்வியின் வெள்ளந்தித்தனம் & இசையில் அவருக்கு இருக்கும் மேதைமை குறித்து கண்ணதாசன் பூரிப்புடன் பேசிய ஒலித்துணுக்கும் போடப்பட்டது

- MSVயின் உதவியாளர்களில் ஒருவரான (ஜோசப்) கிருஷ்ணா MSVயைப்போல் மிமிக்ரி & நடித்துக்காட்டியதற்கு கைதட்டலில் அரங்கு அதிர்ந்தது. எம்மெஸ்வியை அணுஅணுவாய்ப் பிரதிபலித்து பின்னியெடுத்துவிட்டார் மனுஷன்.

- அவரை மட்டுமின்றி, டிஎம்மெஸ், எஸ்பீபி போன்றோரையும் மிமிக் செய்து, டிஎம்மெஸ்சுக்கும் எஸ்பீபிக்கும் ஸ்டுடியோவுக்குள் நடந்த கலகல விஷயங்களை அப்படியே நடித்துக்காட்டினார்

- எம்மெஸ்வி 6.30க்கு வந்ததும், கர்ணன் படப்பாட்டோடு நிகழ்வு துவங்கியது

- முதலில் பேசிய இசையமைப்பாளர் ரகுநாதன் டெக்னிகலாக எம்மெஸ்வி செய்த (மோனோ - ஸ்டீரியோ போன்ற பல) புதுமைகளைப்பட்டியலிட்டார். ”எங்கே நிம்மதி” பாடலில் உள்ள Tchaikovsky நுட்பங்களை விளக்கினார். தான் இசை பயின்றது, ஒரு படத்துக்கு இசையமைத்தது, எம்மெஸ்வி புதியவர்களுக்கு வாய்ப்புக்கொடுப்பது, வயது வித்யாசம் பாராது எல்லோரிடமும் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வது போன்ற பல தகவல்களைப்பகிர்ந்து கொண்டார்

- மேற்கண்ட பாரா போல்  சற்று நீண்ட உரையாற்றிய இசையமைப்பாளர் ரகுநாதனை, "ஒருவரை வாழ்த்திப்பேசும் உரையின் முறை யாது" என்ற விளக்கக்குட்டோடு அடுத்து முக்தா ஸ்ரீநிவாசன் பேச வந்தார். அவரது பேச்சில் நகைச்சுவை உணர்வும் வெளிப்படைத் தன்மையும் அம்சமாக இருந்தது

- சினிமாவில் முன்னணி (நடிகர்), பின்னணி (ஏனைய அனைவர்) என இரு வகையிருப்பதையும், பின்னணியில் இருப்பவர்களை இருட்டடிப்பு செய்து அவர்களின் வெளிச்சத்தைப்பிடுங்கி முன்னணியில் இருப்பவர்களுக்கே விழா நடத்துவது குறித்து வருத்தப்பட்டார்

- முக்தா இந்நிகழ்ச்சிக்குக்கிளம்பும்போது, “உங்களுக்கு எப்போது இது போல நிகழ்ச்சி நடத்துவார்கள்” என அவர் மனைவி கேட்டதாகவும், ”அதுக்கெல்லாம் இன்னும் ஆறேழு வருஷம் ஆகும்” என்று பதில் சொன்னதாகவும் நக்கலோடு குறிப்பிட்டார்

- இடையில் அவருக்கு இருமல் வர, விழாக்குழுவினரொருவர் அவருக்குத் தண்ணீர் தர, ”ரொம்ப பேசிட்ட, பேச்ச நிறுத்திக்கோன்னு சொல்றியா” என இவர் கேட்டது செம்ம டைமிங் கலாய். இவர் இன்னும் கொஞ்ச நேரம் பேசினால் நன்றாயிருக்கும் என நினைக்கும்போதே நிறுத்திக்கொண்டார். மனிதரிடம் எக்கச்சக்க கதையிருக்கிறது. ஒரு நாள் சந்தித்துக்கேட்கவேண்டும்


- அடுத்து பேசிய கர்நாடக இசைஞர் மதுரை G.S. மணி அவர்கள் தன் அறுபதாண்டு கர்நாடக இசை ஞானத்துக்கு அடிப்படை எம்மெஸ்வியிடம் பணிபுரிந்த அனுபவமேயென்று கூறி தன் நன்றியைச்செலுத்தினார்

- “தமிழன்னை தனக்கொரு ஆகச்சிறந்த குழந்தை வேண்டுமென்ற தேடலில் மலையாளத்திலிருந்து தன்வசம் இவரை இழுத்துக்கொண்டாள்” என்று ஆரம்பித்த புலமைப்பித்தன் பட்டாசு கிளப்பினார். அவ்வப்போது நெகிழ்ச்சியில் அவர் குரல் உடைந்தது

- இசையமைப்பாளர் என்றால் அது எம்மெஸ்வி மட்டுமே. மற்றோரெல்லாம் “மெட்டமைப்பாளர்” என்று வேண்டுமானால் அழைத்துக்கொள்ளுங்கள் என்று ஆரம்பமே அதகளமாக்கினார் முத்துலிங்கம்

- பல தருணங்களில், எழுதிக்கொடுக்கப்பட்ட பாட்டுக்கு எம்மெஸ்வி வெவ்வேறு ட்யூன் போட்டுக்கொடுத்த அனுபவங்களைப் பகிர்ந்தார்

- பாட்டு முதலில் எழுதப்பட்டு, அதற்கு மெட்டமைத்த பின், பல்வேறு காரணங்களால் அந்த ட்யூன் நிராகரிக்கப்பட்டு வேறொரு ட்யூனை(அந்தப்பாடலின் வார்த்தைகள் சரியாக ட்யூனில் அமர வேண்டும், சுவாரசிய ட்யூனாக இருக்க வேண்டும், அந்த சிச்சுவேஷனின் உணர்வைப்பிரதிபலிக்க வேண்டும்) சில நிமிடங்களில் போட்டுக்கொடுப்பாராம்

- உலகம் சுற்றும் வாலிபனுக்கு போட்ட ட்யூன்களின் எண்ணிக்கை 250. ”எல்லாவற்றையும் இப்பவே போட்டுட்டியா? அடுத்த படத்துக்கெல்லாம் என்ன செய்வ?” என்று எம்ஜியார் கிண்டலடித்த செய்தியைச்சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்

- இப்போதிருக்கும் மெட்டமைப்பாளர்கள் யாரும் பாட்டுக்கு மெட்டுப்போட முன்வருவதில்லை என்று அவர் கூறிக்கொண்டிருக்கும்போது, மேடையில் இருந்த எஸ்.ஏ ராஜ்குமார் முத்துலிங்கத்தை அழைத்து அண்ணே நான் அப்படி இல்லை என்பதாக சைகை செய்தார். அதற்கு முத்துலிங்கம், “உன் முதல் படத்துக்கு ரெண்டு பாட்டு எழுதுனேன், ரெண்டுமே மெட்டுக்கு பாட்டுதானே” எனச்சொல்லவும், என்ன காரணமோ தெரியவில்லை, மேடையில் திடீரென பல்புகளின் வெளிச்சம் அதிகரித்தது

-ராஜாவோ, ரஹ்மானோ, எஸ். ஏ ராஜ்குமாரோ (!!!!), யாராயிருந்தாலும் எம்மெஸ்வி போட்டுக்கொடுத்த பாதையில்தான் போகமுடியும் என்று முத்துலிங்கம் சொல்ல, ராஜா, ரஹ்மான் வரிசையில் “இசை வசந்தம்” பெயர் எப்படி வந்தது என சிந்திக்கையில் புரிந்தது, பேசுவது கவிஞரல்லவா, மோனைக்குப்போட்டிருக்கலாமென

- எம்மெஸ்வி ட்யூனை ஏனையோர் ஆட்டையைப்போடுவது பற்றி அவர் பேசும்போது குடுகுடுவென ஓடிச்சென்று “அண்ணே, இது குறித்து பின்னாடி நான் விளக்கம் தர அனுமதிக்கணும்” என்று கங்கை அமரன் லந்து கொடுத்தார்

- அடுத்து மைக் பிடித்த கங்கை அமரன் வழக்கம்போல கலகல சேட்டைகள் செய்து, பின் எம்மெஸ்வியின் எந்தெந்த ட்யூன்களை, எப்படியெல்லாம் தான் திருடியதாக டெக்னிக்கலாக விளக்கினார்

- பின், வரிசையாக பல எம்மெஸ்வியின் பாடல்களைப்பாடி,  ”இவையெல்லாம் அண்ணாவிடமிருந்து திருடப்பட்டு மற்ற இசையமைப்பாளர்களால் வெவ்வேறு படத்தில் பயன்படுத்தப்பட்டவை, எவையென்று நான் சொல்லுவது சரியல்ல, நீங்களே யூகியுங்கள்” என்று அத்தனை இசை லவட்டல் பூனைகளையும் வெளிக்கொணர்ந்தார்

- கிருஷ்ணா, முக்தா, முத்துலிங்கம், கங்கை அமரன் ஆகியோர்களின் பேச்சுக்காகவே இந்த நிகழ்வின் வீடியோ கிடைத்தால் வாங்கிப்பாருங்கள். சுவாரசியத்துக்கு நான் கேரண்டி

- திடீரென மேடையேறிய ஒய்.ஜி மகேந்திரன் எம்மெஸ்விக்கு சால்வை அணிவித்து சாஷ்டாங்கமாய் அவர் காலில் விழுந்து ஆசிபெற்றார், மேடையை விட்டு இறங்குமுன், “இனிமேலாச்சும் கொஞ்சம் இசை வரும் எனக்கு” என்று கூறியது அக்மார்க் ஒய்ஜி டச்.

- பின் மைக் பிடித்த எஸ் ஏ ராஜ்குமார், நான் அதிக நேரம் எடுக்க விரும்பவில்லை என்று கூறி ”எம்மெஸ்விக்கு எதுவும் தெரியாது என்கிறார்கள், அது தவறு. இவருக்கு எல்லாம் தெரியும். இவர்நீடுழி வாழட்டும்” என ஆங்கிலத்தில் சுருக்கமாக முடித்து எல்லோர் வயிற்றிலும் லாலாலா வார்த்தார்

-  இறுதியாக 9 மணிக்கு மைக்கை ஏந்திய எம்மெஸ்வி, ”வந்திருந்து சிறப்பித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி” என்று முடித்துக்கொண்டார். 

- இந்த வயதில் 6.30லிருந்து 9 மணி வரை அவரை ஒரே இடத்தில் அமர வைத்ததே அவருக்கு வதையாய் இருந்திருக்கும் எனத்தோன்றியது

- அனைவருமே பொதுவாக சொன்ன ஒன்று, இசையைத்தவிர எம்மெஸ்விக்கு வேறு உலகமே தெரியாது, கிடையாது (பாரதியாரை யார் அவர் எனக்கேட்ட அதே எம்மெஸ்வி, ரஷ்ய ம்யூசியத்தில் Tchaikovskyயின் இசையை அங்கிருந்த பியானோவில் அரை மணி நேரம் வாசித்து அங்கிருந்தவர்களை வாயடைக்க வைத்தவர்)
- இவ்வயதிலும், பேச்சாளர் யாரேனும் அவரைப்பாராட்டினாலோ, ரசிகர்கள் கைதட்டினாலோ, எழுந்து எழுந்து கும்பிடுகிறார்.

- வயதானவர்கள் அடைவது இரண்டாம் குழந்தைப்பருவம் என எங்கோ படித்திருக்கிறேன். எம்மெஸ்வியைப்பொறுத்தவரை அவரின் உடல் மூப்படைந்துள்ளதே தவிர உள்ளம் இன்னும் 3 வயதுக்குழந்தைதான்.

- அற்புதமான ஞாயிறு மாலையாய் கடந்த வாரம் அமைந்தது. இதைக்காண உதவிய ஜிரா அண்ணனுக்கும், நிகழ்வில் பல அரிய செய்திகளைப்பகிர்ந்து கொண்ட வீரு & மோகன் சாருக்கும் கோடானுகோடி நன்றி

எம்மெஸ்வியின் அதிகாரப்பூர்வ இணையதளம்: - msvtimes.com






Comments

  1. மெல்லிசை மன்னரின் இசைரசிகர்களின் சார்பில் நன்றி பல.

    நிகழ்ச்சிக்குச் செல்ல முடியாத சூழலில் இந்தப் பதிவு தரும் தகவல்கள் நிகழ்ச்சிக்குச் சென்ற மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.

    இரண்டு மணி நேரம் அவரை உட்கார வைத்ததும் வதைதான். என்ன செய்வது. அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பலருக்கு.

    மறுபடியும் நன்றி பல.

    ReplyDelete
  2. MSV'in பக்குவம், குழந்தை குணங்கள் அநேகம் பேருக்கு பிடிக்கும் னு நிறைய பேர் சொல்லி கேட்டிருக்கிறேன். இந்த பதிவிலும் இன்னும் சில விஷயம் தெரிஞ்சுகிட்டேன் .

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷